ஒரு புத்தகத்தை எப்படி அணுக வேண்டும்? உலகப் புத்தக தினப் பதிவு!

இன்று (23 ஏப்ரல்) சர்வதேச புத்தக தினம். புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
ஒரு புத்தகத்தை எப்படி அணுக வேண்டும்? உலகப் புத்தக தினப் பதிவு!

இன்று (23 ஏப்ரல்) உலகப் புத்தக தினம். புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னுடைய அறையின் எல்லா மூலையிலும், என்னுடைய மூளையின் எல்லா இடுக்குகளிலும் நிறைந்துள்ளன புத்தகங்கள். அது என்னுடைய வாழ்க்கையை அனுதினமும் பயனுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் என்னை உயர்த்தும் ஓர் ஏணியாகவும் உள்ளது என்றால் மிகையில்லை.

புத்தகம் படிக்காதவர்கள் புத்தகம் படிப்பவர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். எப்படி இவ்வளவு பெரிய புத்தகங்களை எல்லாம் படிக்கறீங்க? எனக்கு ரெண்டு பக்கத்துக்கு மேல் படித்தால் தூக்கம் வரும்’ இப்படி சொல்பவர்களை ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவேன். அவரவர் அனுபவத்தில் கண்டடையாத வரையில் எதுவொன்றும் அறிவுரையே. 

முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில் இருந்த என்னுடைய புத்தகங்களின் எண்ணிக்கையை நூற்றுக்கணக்காக மாற்றிக் கொண்டேன். படித்து முடித்த புத்தகங்களை தேவைப்பட்டவர்களுக்கும், அலுவலக நண்பர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டேன். என்னுடைய அலமாரியின் ஓரத்தில் அலங்காரமாக இருப்பதற்காக ஒரு புத்தகம் ஓயாமல் அங்கே உறங்கிக் கொண்டிருக்கக் கூடாது. படித்து முடித்தபின் இனி நமக்கும் அதற்கும் உறவுவெதுமில்லை எனும் ஒரு நிலை வரும் போது புத்தகத்தின் பயணத்துக்குத் தடை போடக் கூடாது எனும் எண்ணம் ஐந்து வருடங்களுக்கு முன் தோன்றிவிட்டது. தவிர அறிவு என்பது பகிர்தலின் வழிதான் பெருகும். அறையை அடைத்து புத்தகங்களை அடுக்கி வைப்பதை விட அணையாத ஜோதியாய் அதை பலருக்கு பகிர்ந்தளிப்பதே நியாயமான செயல் என்று முடிவு செய்தேன். படித்த புத்தகங்கள் என்னிடமிருந்து விடுதலை பெற்று இன்னொரு கரங்களில் இடம்பெற்றிருப்பதைப் பார்ப்பது மகிழ்வான அனுபவம். 

என்னிடம் அரிதாக உள்ள புத்தகங்களை பொக்கிஷமென பாதுகாக்கிறேன். அவற்றை எளிதில் என்னால் பிரிய முடியாது. வெயில் மழை படாது, தூசி தும்பு ஒட்டாது அவை என்னுடைய மர அலமாரியில் வாசனை திரவியங்களுக்கு நடுவே பத்திரமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். அப்புத்தகத்தில் நான் அடிக்கோடிட்டு வைத்துள்ள வரிகள் எல்லாம் கனவுகளில் தோன்றி மலர் இதழ்களாக என் மீது பொழிந்து கொண்டிருக்கும். எனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் எவை என்று என்னிடம் கேட்கப்பட்ட போது, பிடித்தவை பிடிக்காதவை என்பதெல்லாம் வாசிப்பின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் சொல்வது. நானும் அப்போது ஒரு பட்டியல் வைத்திருந்தேன். ஆனால் எனக்குள் சிறிய மாற்றம் ஏற்படுத்தும் எந்த எழுத்தும் எனக்கு பிடித்தமானதே. சில சமயம் நாளிதழில் செய்தித் துளியாகக் கூட அது இருக்கலாம். தமிழ் புனைவுலகில் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களுள் சிலர் மெளனி, நகுலன், பிரமிள், சார்வாகன், எம்.வி.வெங்கட்ராமன், ஜெயமோகன் உள்ளிட்ட இன்னும் சிலர்.  இவர்கள் எழுதியவற்றில் ஒரு வரியை எடுத்துக் கொண்டு சில சமயம் நாள் முழுவதும் நீங்கள் சிந்திக்க முடியும். முடிவற்ற வான்வெளியில் உங்களை மிதக்கவிடக் கூட வல்லமை இவர்கள் எழுத்துக்களுக்கு உண்டு.

புத்தகங்களை நேசிப்பதும், புத்தகங்களைத் தேடுவதும், புத்தகங்களுடன் வசிப்பதும் என் மனத்துக்கு நெருக்கமானவை. கன்னிமரா நூலகத்தில் என் பதின் வயதிலிருந்து அங்கத்தினராக உள்ளேன். அந்த பழமையான கட்டிடங்களில் மழை காலங்களில் மணிக்கணக்காக நான் செலவிட்ட பொழுதுகள் எனதிந்த வாழ்வில் பொற்கணங்கள். இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கையை எனை வாழச் செய்கின்றன புனைவுகள். பெயர் தெரியாத நிலவெளிகளில் நீள் பயணம் செய்ய வைக்கின்றன. வாழ்க்கையின் அலுப்பை நீக்கி, புத்துணர்வை அளிக்க வல்லது புத்தகங்களே. புத்தக வாசிப்பின் நீட்சியாக நான் பெற்றது என்னை சுய அலசல் செய்வித்துக் கொள்ளும் ஒப்பற்ற ஒரு பயிற்சி. இந்த பிரபஞ்சத்தில் எத்தனை சிறிய துகளாக இருக்கும் நமக்கேன் இத்தனை தன்னகங்காரம் என்பதை உணர வைத்தது புத்தகங்களே. சமையல் முதல் தியானம் வரை கற்றுத் தெளிந்த கணங்கள் பலவுண்டு. ஒவ்வொரு புத்தகமும் ஒரு ஞானாசிரியனாக என் முன் பரந்து விரிந்த ஓருலகத்தை அறிமுகப்படுத்தியபடி உள்ளது. என்னுடைய பயண வெளிகளில் நான் கண்டடைவது பெரும்பாலும் சொல்லில் அடங்கா பரவச உணர்வு. 

ஒரு புத்தகத்தை எப்படி அணுக வேண்டும் என்றே நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. கிழந்த புத்தகங்கள், ஓரம் மடங்கிய புத்தகங்கள், பேனா மையால் அடிக்கோடிட்டப் பட்ட வரிகள் இவற்றைப் பார்க்கும் போது என் மனத்துக்குள் இனம் தெரியாத வலி ஏற்படும். அந்த புத்தகத்தை எழுதியவர் இரவு பகல் பார்த்திருக்க மாட்டார், ஒரு புத்தகம் எழுத பத்து புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், பயணங்கள் செய்திருக்க வேண்டும். உடல் வலி, சோர்வு என எதையும் பொருட்படுத்தாமல் தானே எழுதியிருப்பார். ஒரு முடிவற்ற அறிவு தேடலின் விளைவாக தான் அறிந்ததை பிறர் அறியத் தான் எழுதிச் செல்கிறார்கள். எனவே புத்தகங்களை வன்முறையுடன் அணுகாதீர்கள். புத்தகங்களில் குறிப்பு எழுதவோ அடிக்கோடிட வேண்டும் என்றாலோ பென்சிலைப் பயன்படுத்துங்கள். அவற்றில் ஒரு குழந்தைமை உள்ளதென அறிக. மலரினும் மென்மையாக அணுகுங்கள். நம்மை எந்த அளவுக்கு நாம் நினைத்து மதிக்கிறோமோ அதைவிட பன்மடங்கு ஒரு புத்தகத்தை நாம் மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கற்று சேகரித்து, படித்துத் தேடிய அறிவையெல்லாம் உதிர்த்து, எனக்கொன்றும் தெரியாது எனும் நிலையே ஞானம். அந்த ஞானத்தின் முதல் படியில் நிற்க நம்மில் எத்தனை பேருக்கு ஆசை உள்ளது?

குழந்தைகளை அலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்றவற்றிலிருந்து திசை மாற்றி, புத்தகங்களின் பக்கம் கவனத்தைத் திருப்பச் செய்யுங்கள். ஒரு புத்தகம் தரும் அனுபவம் மின் இயந்திரங்களால் தர இயலாது. அவை புற உலகம் சார்ந்தது. புத்தகம் படிக்கும் போது நீங்கள் அகமாக சிந்திக்கிறீர்கள். உங்கள் உள்ளிருக்கும் நீங்களை நீங்களே உணரும் தருணங்கள் வாசிப்பில் சாத்தியமாகிறது. குழந்தைகளுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் நல்லதொரு மாற்றம் அவர்களுக்குள் ஏற்படும். நாளைய சமூகம் சிக்கலின்றி இயங்க இன்றைய குழந்தைகளுக்கு வாசிப்புப் பயிற்சி கட்டாயம் தேவை. சில பெற்றோர்கள் படிப்பு கெடும் என்று பிள்ளைகளின் படிப்பு ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள். குழந்தைகள் பாட நூல்களை படிக்கட்டும். ஆனால் அதையும் சேர்த்து மற்ற புத்தகங்களை படிக்க விடுங்கள். அவர்களின் பெயர்களை நூலகத்தில் பதிவு செய்யுங்கள். புனைவு, அபுனைவு உள்ளிட்ட பிற நூல்களே வாழ்க்கையை கற்றுத் தருகின்றன. நுண்மையான வாசிப்பு தான் அறிவைப் பெருக்கும், உங்கள் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்த்தெடுக்கும்.

நீங்கள் ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்குங்கள். அது உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உங்களுக்கான பாதையில் எல்லாம் ஒளியூட்டும். இதை புத்தகங்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. உங்கள் அகம் மலர, உங்கள் புத்தி சமன்நிலை அடைய நல்ல புத்தகங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நீண்ட கால புத்தக வாசிப்பே எனக்கு வேலை ஏற்படுத்தித் தந்தது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். எழுதப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து சித்திரக் கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தி, நான் வளர வளர அதற்கேற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தந்த என் பெற்றோர்களும் புத்தக விரும்பிகள். என் வளர் இளம் பருவம் முழுவதும் அவர்கள் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள், மற்றும் வாங்கித் தந்த புத்தகங்களுடன் தான் கழிந்தன.

தோட்டத்தில் ஓரத்தில் எனக்குப் பிடித்த கொய்யா மரக்கிளையில் கயிற்று ஊஞ்சல் கட்டி, அதில் சிறிய தலையணை வைத்து, அதில் அமர்ந்து நான் படித்த புத்தகங்கள் இன்றளவும் என் நினைவை விட்டு நீங்காதவை. எழுத்துக்களுடன் ஏற்பட்டுவிட்ட ஒருவித பந்தம் லயமாக இசையாக என்னுள் உருக்கொண்டு என்னை பத்திரிகை துறைப் படிப்பைத் தேர்ந்தெடுக்கச் செய்தது. முதுகலை முடித்தபின் எனக்குப் பிடித்த பத்திரிகை பணியை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். தற்போது எழுதாத நாட்கள் இல்லை, படிக்காத பொழுதுகள் இல்லை. எவ்வளவு மூச்சு விடுகிறோம் என்று ஒருவருக்கு அலுக்குமா என்ன? போலவே தான் வாசிப்பும் எனக்கு. வாழ்வின் இறுதி கணம் வரை படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இந்த புத்தக தினத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள ஆசை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com