இது தலைமுறைகளை சிதைந்துப் போகச் செய்யும் கொடூரமான சமூகநோய்! நவீன கொத்தடிமைகள்!

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976 இந்தியாவில் அமலுக்கு வந்து 42 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில்
இது தலைமுறைகளை சிதைந்துப் போகச் செய்யும் கொடூரமான சமூகநோய்! நவீன கொத்தடிமைகள்!

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976 இந்தியாவில் அமலுக்கு வந்து 42 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில், மேற்படி அந்த சட்டத்தின் விதிகள் சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா? இந்தியாவில் கொத்தடிமை முறை எந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறித்த விவாதத்தை தொடங்க வேண்டியது மிக மிக அவசரமான ஒன்றாக உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) தனது ஆய்வு அறிக்கையில் 4 கோடி கொத்தடிமைகள் இந்தியாவில் துன்ப விளிம்புகளுக்குள் சிக்கி சிதலமாகிக் கொண்டிருப்பதாகவும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களே அதிகமாக பாதிப்படைந்துள்ளதாகவும், பெண்கள், குழந்தைகளின் நிலை கொடூரம் கோரதாண்டவம் நிறைந்ததாகவும் குறிப்பிடுகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பூதக்கண்ணாடியில் சிக்கும் இந்த கொத்தடிமைகள் பற்றிய புள்ளிவிவரங்கள் சிலரின் மாயகண்ணாடிகளில் மட்டும் சிக்குவதில்லை என்பது ஆச்சரியமான ஒன்றுதான். மாநில அரசுகள் எப்போதுமே எங்கள் மாநிலத்தில் கொத்தடிமைகளே கிடையாது என திரிபுரத்துவமான அறிக்கைகளை தாக்கல் செய்கின்றன. இந்த பழுதான வாதங்களின் அடிப்படை காரணம் 'கொத்தடிமை குறித்த முழுமையான வரைவிலக்கணம் (Definition) அவர்களது அறிவு கண்களுக்கு மிகவும் தூரமாகிப்போனதே ஆகும். 1983-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 'கொத்தடிமை" குறித்த உண்மை நிலை தெரியாமல் மாநில அரசுகள் கொத்தடிமைகள் இங்கு இல்லை என மறுப்பு அறிக்கைகள் தாக்கல் செய்யக்கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதன் தானோ, தனது மூதாதையரோ அல்லது தனது பிள்ளைகளோ யாராவது வாங்கிய கடனுக்காகவோ அல்லது முன்பணத்திற்காகவோ (Advance)) குறைந்தபட்ச கூலியை பெறும் உரிமையை தாமாகவே முன்வந்து இழந்து அல்லது வேறு எங்கும் சுதந்திரமாக வேலை பார்க்கும் உரிமையை இழந்து தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து எங்கும் சுதந்திரமாக செல்லக்கூடிய உரிமையை இழந்து அல்லது தான் உற்பத்தி செய்யும் பொருளை தனது விருப்பப்படி சந்தைப்படுத்தும் உரிமையை இழந்து ஒரு குறிப்பிட்ட நபருக்காக வேலை செய்வதே கொத்தடிமை தொழில்முறை என இது சார்ந்த சட்டம் திட்டவட்டமாக வரையறுத்து கூறுகிறது.

அடிமைத்தனம் (Slave) என்றவுடன் நம் நினைவுக்கு வருவது விலங்கால் பூட்டப்பட்டு கிடக்கும் மனிதர்கள்தான். சங்கிலியாக பூட்டப்பட்டு எங்கும் தப்பி செல்ல முடியாதபடி மிருகங்களைப்போல சித்திரவதைக்குட்படுத்தி வேலைவாங்கும் கொடூரமான முறைதான் அடிமைமுறை. இந்த பாலபாடங்களையும் பழைய கணக்கீடுகளையும், அளவீடுகளையும் வைத்து நவீன காலத்திலும் கொத்தடிமைகளை கண்டறிய முற்படுவோர் இறுதியில் 'இங்கு யாரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப்படுவதில்லை", யாரையும் மிருகங்களைப்போல அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதில்லை. ஆகவே இங்கு கொத்தடிமைகள் இல்லை எனும் மூளித்தனமான முடிவுகளுக்குள் முடங்கிவிடுகிறார்கள். ஆனால் நவீன உலகத்தில் 'கொத்தடிமை"எனும் குறித்த விளக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை கொத்தடிமைகளை மீட்கும் பொறுப்பு அதிகாரிகளாக அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் R.D.O. தாசில்தார், கலெக்டர் போன்றோர் நிச்சயமாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

நமது நாட்டில் இன்று பரவிக்கிடக்கும் கொத்தடிமை முறையை மறுதலித்து பேசி திரியும் சிலர் அதற்காக கூறும் காரணங்களில் ஒன்றுகூட சட்டப்படியோ, உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தல் படியோ ஏற்புடையதாக இல்லை. பழங்குடி மக்கள் அரிசி ஆலைகள், கல்குவாரிகளில், செங்கல் சூலைகளில் முன்பணம் பெற்று வேலை செய்கிறார்கள் என்பதை ஏற்று கொள்ளுபவர்கள் கூட அப்படி அந்த முன்பணத்தை இவர்கள் தாமாகவே முன்வந்து பெறுவதால் இவர்கள் கொத்தடிமைகள் கிடையாது எனும் விதண்டாவாதத்தை முன்னிறுத்துகிறார்கள்.

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் முன்பணம் கொடுத்து அந்த முன்பணத்திற்காக அடிமையாக்கி வேலை வாங்குவதே தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது 'முன்பணம்’ என்பதை மேற்படி சட்டம் விளக்கும்போது இது எழுத்து வடிவிலான ஆதாரங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்கிறது உச்சநீதிமன்றம் இதைப்பற்றி கூறும்போது பாதிக்கப்பட்ட கொத்தடிமைகளிடம் சென்று கொத்தடிமை முன்பணம் வாங்கினதற்கான அத்தாட்சிகளை காட்டு என கேட்பது கேலிக்கூத்தானது என குறிப்பிடுகிறது. தாமாகவே சென்று முன்பணம் பெற்று கொத்தடிமையானாலும், கொத்தடிமை முன்பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லாவிடினும் பாதிக்கப்பட்ட நபரை மீட்பது குறிப்பிட்ட அரசு அதிகாரிகளின் கடமை என உச்சநீதிமன்றம் கோடிட்டு காட்டுகிறது.

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் 15-வது பிரிவு 11, ஒரு கொத்தடிமை தான் முன்பணத்திற்காகவே வேலை பார்க்கிறேன் என முன்வந்து சொன்னால் அந்த முன்பணம் சட்டவிரோத கொத்தடிமை முன்பணம் இல்லை என்று நிரூபிக்க வேண்டியது (Burden of Proof) குற்றம் சாட்டப்பட்டவரே (Accused) அன்றி பாதிக்கப்பட்டவர் இல்லை (Victim) என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு அதிகாரிகள் கொத்தடிமைகளை கண்டறியும்போது வழக்கமான குற்றவியல் பொதுவிதிகளின்படி இருசாரரையும் விசாரணைக்குட்படுத்தும் (Adversary Proceeding)  கொத்தடிமை கண்டறியும் முறைகளுக்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற அறிவுறுத்தியுள்ளது. ஆகவே கொத்தடிமைகளை கண்டறியும் விசாரணையின்போது பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே விசாரித்து அதிகாரி முடிவெடுக்க வேண்டும். தவிர இந்த குற்றத்தில் ஈடுபடுவோரை கொத்தடிமைகளை மீட்கும் கண்டறிதலுக்கு (Identification) உட்படுத்த வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.

தற்காலத்தில் கொத்தடிமையாக வேலை செய்பவர்கள் வெளியே நடமாடுகிறார்கள். குடும்பத்தில் ஒருவரை அடையாளமாக வைத்துவிட்டு மற்றவர்கள் வெளியே சென்று பொருட்கள் வாங்க முடியும். அனுமதி பெற்ற சொந்த ஊருக்கும் செல்ல முடியும் ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் திரும்பி வராவிட்டால் அடியாட்கள் அனுப்பி தேடி கண்டுபிடித்து அவர்களை திரும்பி கொண்டுவந்து அதற்கு ஆன செலவையும் அவர்களின் முன்பணத்தோடு சேர்த்துவிடுவார்கள். கட்டாயப்படுத்துதல் (Force) என்பது நவீனப்படுத்தப்பட்டுள்ளது கட்டிவைத்து வேலை வாங்காமலே, அவிழ்த்துவிடப்பட்டு ஒருவித பயஉணர்வை உருவாக்கி எங்கும் தப்பியோடி விடாதபடி கொத்தடிமைகளை கட்டுப்படுத்தி வேலைவாங்கும் ஒரு புதிரான முறையை நவீன காலத்தில் கொத்தடிமை முறையில் நாம் காணலாம். இதை தான் சில அதிகாரிகள், பாருங்கள் அவர்கள் வெளியே எல்லாம் செல்ல முடிகிறது. ஆகவே எப்படி நாங்கள் இவர்களை கொத்தடிமைகளாக கருத முடியும் என கைவிரிப்பார்கள்.

உச்சநீதிமன்றம் இது குறித்து குறிப்பிடும் போது ஒரு மனிதன் தனது குடும்பத்தை பராமரிக்க போதிய வசதியில்லாமல் மிக குறைந்த கூலிக்காக மற்றவர்களிடம் வேலை செய்ய ஒப்புக்கொண்டாலும் இந்த நிலையை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலிக்கு குறைவாக யாராவது ஆட்களை வேலைக்கு வைத்தால் அதில் ஒருவித மனரீதியான அடக்குமுறை, அழுத்தம், கட்டாயம் (Force) இருக்கிறது என நாம் கருத வேண்டும். ஆகவே இப்படி குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்வதையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்காக தான் (Force) எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறது.

இன்றைக்கும் அரிசி ஆலைகளில், செங்கல் சூலைகளில் கல்குவாரிகளில் குடும்பத்தில் 3 பேர் வேலை செய்தால் 3 பேருக்கு சேர்ந்து வாரத்திற்கு 100ரூ கூலி என கூறி பின் அதில் 50 ரூபாயை முன்பணத்தின் வட்டி என பிடித்துக்கொண்டு 50 ரூபாய்தான் கூலியாக கொடுக்கிறார்கள். இந்த ஏழை கொத்தடிமைகளும் யாராவது எவ்வளவு சம்பளம் என கேட்டால் 100 ரூபாய் என சொல்லுவார்கள் ஆனால் அது 3 பேருக்கு 1 வாரத்திற்கான கூலியாகும். அதிலும் 50 ரூபாயை பிடித்துக்கொண்டு 50 ரூபாய் தான் கையில் கொடுப்பார்கள். ஆக ஒருவருக்கு 1 நாளைக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகத்தான் கூலி கிடைக்கிறது. 20 மணி நேரம் வேலை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். தலைமுறை, தலைமுறையாக யாரோ, என்றோ, வாங்கின கடனுக்கான அந்த கடனின் பெயரை சொல்லி பொய்க்கணக்கு போட்டு 50,000/- ரூபாய் தரவேண்டியுள்ளது. வெளியே போனால் போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவோம் என மிரட்டி வேலை வாங்குவது கொத்தடிமை தொழில்முறைக்குள் வராது என ஒற்றைவரியில் மறுதலிப்பது கொடூரத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்ல வேண்டும்

கொத்தடிமைகளை மீட்பதற்கு எந்த ஒரு முறையான வழிமுறைகளும் தேவையில்லை எந்த முறையையும் நாம் உபயோகப்படுத்தலாம். கொத்தடிமைகளை மீட்கும் அதிகாரிகளோ RDO, கலெக்டருக்கு அந்த பணியை செய்வதில் விஜிலன்ஸ் கமிட்டி எந்த வகையிலும் குறுக்கு சால் ஒட்ட முடியாது கொத்தடிமைகளை கண்டறிவது முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் கூறுகிறது.

அரிசி ஆலைகள், செங்கல் சூலைகள், கல்குவாரிகள் என அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொத்தடிமைகள் நவீன முறையில் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் கவனிப்பாரின்றி அதிகார வர்க்கத்தின் கண்களுக்கு மறைக்கப்பட்டு பல கோடூரங்களை தாங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். அச்சப்படுத்தி உடல்ரீதியாக பலவீனப்படுத்தி நவீன யுக்தி முறையில் கட்டாயப்படுத்தி தலைமுறை தலைமுறைகளாக அடிமைப்படுத்தி வேலை செய்யும் இந்த கொடூர முறையை விளங்கிக் கொள்ள கூட நாம் முன்வராமல் வேடிக்கைப் பார்ப்பது கன்று ஈனப்போகும் மானின் பின்னால் அதன் குட்டிக்காக காத்திருக்கும் ஓநாய் போல நமது நாட்டின் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி முன்பண ஆசையை காட்டி தலைமுறை தலைமுறைகளை அபகரித்துச் செல்லும் சிலருக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் சமூக அவலத்தின் பிரதிவாதிகளாகவே நாம் கருதப்படுவோம்.

இந்தியாவின் கிராமப்புறங்களே இதற்கு சாட்சி. கொத்தடிமைத் தொழில்முறையை ஒரு சாதாரண தொழிலாளர் பிரச்னையாகப் பார்க்கக்கூடாது இது தலைமுறைகளை சிதைந்துப் போகச்செய்யும் கொடூரமான சமூகநோய் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களை கண்டுகொள்ள யாருமில்லை. வளர்ந்துவரும் 21-ம் நூற்றாண்டில் எரியும் விளக்கொளிக்குள் கூர்ந்து பார்த்தால் தெரியும் கருப்பு புள்ளிபோல மேலோட்டமாக பார்த்தால் தெரியாத சமூக அவலம்தான் கொத்தடிமை முறை. இந்த கொடூர முறையை மாற்றி சமூகத்தை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு என இந்த நாளில் உறுதி எடுப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com