பெண்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் பற்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்!

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற தேசமாக இந்தியாவை தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை
பெண்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் பற்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்!

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற தேசமாக இந்தியாவை தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை தனது ஆய்வறிக்கையில் கடந்த மாதம் குறிப்பிட்டது. இந்த அறிக்கை தேசத்தையே சற்று அதிர்ச்சி அடையச் செய்தது. இந்தியா பெண்களைப் போற்றும் தேசம் என ஒரு சாராரும்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களைப்  பட்டியலிட்டு மற்றொரு சாராரும் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து யுத்தமே நடத்துகின்றனர். இந்த அறிக்கைக்கு இந்திய அரசும், அரசியல் தலைவர்களும் கூட  மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

'இந்த கருத்து கணிப்பில் வெறும் 19 குறிப்பிட்ட நகரங்களில் 20 பேரிடம் மட்டுமே கருத்துக் கேட்கப்பட்டிருகிறது. எனவே ஆய்வறிக்கையின் நம்பகத் தன்மையே கேள்விக்குரியது',  என்பது அவர்களது வாதம். நம் நாட்டின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பார்த்தால் இது அர்த்தமற்றது, புறந்தள்ளத்தக்கது. அரசு நிறைவேற்றும் பெண்களுக்கான திட்டங்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இந்த ஆய்வறிக்கையில் இல்லை' என்கிறது அரசு.

பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறை, பொருளாதார வாய்ப்புகள், ஆரோக்கியம், பெண்ணடிமைத்தனம், பண்பாட்டு வழக்கங்கள் என பல அம்சங்களை இந்த ஆய்வில் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட ஆய்வு வல்லுநர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டதாகவும், மேற்சொன்ன எல்லா அம்சங்களிலும் இந்தியாவில் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளாமல் ஒட்டுமொத்தமாக இந்த அறிக்கையை புறந்தள்ளிவிட முடியாது.  அதே நேரத்தில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் தற்போதைய அவசியம்.

நிர்பயா வழக்குக்குப் பின் புதிய சட்டம் பெண்கள் பாதுகாப்புக்கென ஏற்பட்டுள்ளது. தற்போது. பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்துப் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்ய முன்வந்துள்ளனர். பெண்களுக்குப் பணியிடத்தில் பாலியல் வன்முறைகள் நிகழும் பொழுது அவர்களை பாதுகாக்கவென 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 'பணியிடத்தில் பாலியல் வன்முறை சட்டம் - 2013. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான காரணம், 1997-ஆம் ஆண்டு விசாகா வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அரசுக்கு வழங்கிய அறிவுரை. அப்போது தான் பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பதும் மனித உரிமை மீறல் என அறிவித்தது உச்சநீதி மன்றம். இத்தகைய வன்முறைகளிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் தேவை என்றும் அதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகே அரசு இது குறித்த சட்டத்தை இயற்றியது.இந்த சட்டம் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை வரை வழங்க வகை செய்கிறது. இது பற்றி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, 'ஒவ்வொரு சட்டமும் பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்தம் மற்றும் உயிர் தியாகத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் தண்டனை கிடைப்பது எளிதாயில்லை, சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தொய்வு இருக்கிறது' என்கிறார்.

கல்வி தொடங்கி திருமணம், பிள்ளை பெற்றுக் கொள்வது வரை அனைத்து நிலைகளிலும் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதற்காக மகளைத் தந்தையே கொடூரமாய் கொலை செய்த வழக்கு உத்தரப்பிரதேச காசிப்பூரில் நிகழ்ந்ததும், தமிழகத்தில் சங்கர் கொலைவழக்கு, விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டதற்காக தந்தையே கூலிப்படை உதவியுடன் மகளை அவளின் கணவரை கொலை செய்ய முயன்றதும். சமீபத்திய நிகழ்வுகள். இன்னும் படித்த குடும்பங்களிலும் கூட இத்தகைய வன்முறைகள் நிகழவே செய்கின்றன. தன்னை விரும்புவதாகக் கூறும் ஒருவரை ஒரு பெண் நிராகரிக்கும்போது,  ஆசிட் வீச்சு, கொலை என நிகழ்வதும் கூட வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. 

கல்வி கிடைப்பது தான் பொருளாதாரப் பாதுகாப்பின், வளர்ச்சியின் அடிப்படை. சமமான கல்வியை இந்திய அரசியலமைப்பு பெண்களுக்கு வழங்கியுள்ளது என்றாலும் அதன் நடைமுறை, தடைகள், என பலவற்றிலும் இருக்கும் பிரச்னைகளை மறுத்துவிட முடியாது. அடிப்படைக் கல்வி, உயர்கல்வி,மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் என்று ஒவ்வொரு நிலையிலும் பெண்களின் விகிதம் குறைந்துகொண்டே போகிறது என்பதே எல்லா நிலைகளிலும் தடைகள் இருப்பதை உணர்த்துகிறது. பள்ளி இறுதி வகுப்பில் பெரும் எண்ணிக்கையிலும், அதிக பட்ச மதிப்பெண்களும் பெற்றுத் தேறும் பெண்களின் விகிதம் படிப்படியாகக் குறைந்து உயர் பதவிகளில் அருகிப் போகிறது.

வாக்குரிமை, சொத்துரிமை, சம உரிமை என அரசியலமைப்பும், சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாக இருக்கின்றன  மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 விழுக்காடு உள்ள பெண்கள் முயன்றால் பெண்கள் விரும்பும், அவர்களுக்கு சாதகமான அரசையே உருவாக்கிக் கொள்ளும் சாத்தியம் உள்ளது என்றாலும் சமூக மனநிலை பெண்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இந்த மனநிலை பெண் குழந்தைகளே வேண்டாமெனும் முடிவை நோக்கி நகர்த்துகிறது. 

'சிசுக் கொலைகளும், கருவிலேயே பெண் குழந்தைகளைக் கலைத்து விடும் போக்கும் இதன் விளைவுகளே. ஆண்டுக்கு ஆண்டு பாலியல் பலாத்காரங்களில் சிக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. குழந்தைகள் விஷயத்தில் குற்றவாளிகள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் இப்படியே இருக்கின்றனர். கத்துவா போன்ற சம்பவங்கள், ஹாசினி கொலைவழக்கு, இன்னும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சென்னையைச் சேர்ந்த 12 வயது மாற்றுத் திறனாளி சிறுமியின் மீதான 17 பேரின் கூட்டு பலாத்காரம் என்று எண்ணற்ற வழக்குகளைச் சொல்ல முடியும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் லட்சக்கணக்கில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டாலும் சிறுமிகள் மீதான வன்கொடுமை வழக்குகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டுமெனும் விதி இருந்த போதிலும் 30 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

கட்டற்ற சுதந்திரமும், சமூக வலைத்தளங்கள், இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாச செய்திகளும், படங்களும், அவற்றை  அனைவரின் கைகளுக்கும் வெகு எளிதாய்க் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பமும் பெருகும் குற்றங்களுக்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன என்றாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.

எப்படிப் பார்த்தாலும், பெண்களின் மீதான வன்முறை வழக்குகளுக்கு நியாயம் வழங்கும் சட்டங்களை விட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்குரிய சட்டங்கள், சூழல், சமூக அமைப்பு, மனநிலை ஆகியன தேவை என்பதற்கான எச்சரிக்கை மணியை இந்த ஆய்வறிக்கை எழுப்புகிறது.

ஆனிராஜா
பொதுச் செயலாளர், இந்திய மாதர் தேசிய சமேளனம்.

இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும் பொழுது உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு ஜாதியம்தான்  காரணம்.  தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாலியல் வன்முறை என்பது மட்டுமல்லாமல் அதனைத் தாண்டி வேறு சில பிரச்னைகளும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன. பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துக் காணப்படுவதும் ஏறத்தாழ இதே மாநிலங்களில் தான்.

இந்தியாவில் தான் கட்டாயத் திருமணங்களும், விரும்பிய வாழ்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இயலாத நிலையும் தொடர்கதையாக எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளது. ஜாதியக் கட்டமைப்புகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிக அளவில் இங்கே கையாள்கின்றன. ஆணவக் கொலைகளும், கெளரவக் கொலைகளும் இதனை உறுதி செய்கின்றன.

அர்ச்சனா கல்பாத்தி 
முதன்மை செயல் அதிகாரி, ஏஜிஎஸ் சினிமா.

ஆண்களைத் தலைமையாகக் கொண்ட சமூக அமைப்பே இந்த பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமாக இருக்கிறது. இங்குள்ள சமய, சமூக அமைப்பு பெண் தெய்வங்கள் இருப்பதாகக் கொண்டாடும் அதே நேரத்தில் உரிமையற்றவர்களாகவும் பெண்களை வைத்துள்ளது ஆண், பெண் சமத்துவம் என்பது குழந்தை நிலையிலிருந்தே இங்கே சாத்தியமற்றதாக இருக்கிறது. பெண் தனது ஆரோக்கியத்தில் செலுத்தும் கவனம் கூட சுயநலமாகவே பார்க்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது .

கோகுல இந்திரா
தமிழக முன்னாள் அமைச்சர்.

மகளிர் காவல் நிலையங்கள், பாதுகாப்பு மையங்கள் என்று அரசும் பல விதங்களில் இதற்கு நடவடிக்கை எடுக்கிறது என்றாலும் தனிநபர் வக்கிரங்களால் அதிகரிக்கும் இத்தகைய குற்றங்களுக்கு சமூகம் பொறுப்பேற்று குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஆண் பெண் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம்.

வானதி ஸ்ரீனிவாசன்
துணைத்தலைவர், தமிழக பாஜக.

பெண்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் பற்றி புகார் அளிக்க முன்வருவது அவர்கள் மனதில் நீதிக்கான நம்பிக்கையை அரசும், சட்டங்களும் ஏற்படுத்தித் தந்துள்ளதற்கான அடையாளங்கள். பெண்கள் முன்னேறுவதற்கு பல விதங்களிலும் அரசு முயல்கிறது என்றாலும் சமூக அமைப்பின் பிடியிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான செயல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com