கழகப் பயணத்தில் கலைஞர் கருணாநிதி கடந்து வந்த பிரதான சர்ச்சைகள்...

1970 ஆம் ஆண்டில் திமுக அரசு வீராணம் திட்டத்தில் அரங்கேற்றியிருந்த நூதனமான ஊழல்களை, ‘விஞ்ஞான ஊழல்’ எனக் குறிப்பிட்டு அம்பலப்படுத்தினார் நீதிபதி சர்க்காரியா.
கழகப் பயணத்தில் கலைஞர் கருணாநிதி கடந்து வந்த பிரதான சர்ச்சைகள்...

சர்க்காரியா கமிஷன்...

இந்திரா காந்தி 1976 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கருணாநிதி அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார். அதில் வீராணம் திட்டத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு செய்த ஊழல்கள் குறித்து விசாரித்து அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன.

அந்த விசாரணை அறிக்கையில் சர்க்காரியா, 1970 ஆம் ஆண்டில் திமுக அரசு வீராணம் திட்டத்தில் அரங்கேற்றியிருந்த நூதனமான ஊழல்களை, ‘விஞ்ஞான ஊழல்’ எனக் குறிப்பிட்டு அம்பலப்படுத்தினார் நீதிபதி சர்க்காரியா. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, வீராணம் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனக்கு சகாயமானவர்களுக்கு வழங்கினார் என்பது தான் சர்க்காரியா கமிஷனின் குற்றச்சாட்டு. கருணாநிதி வீராணம் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை தனது மருமகன் முரசொலி மாறனின் நண்பர்களான சத்யநாராயணா சகோதரர்களுக்கு சாதகமாக ஒதுக்கித் தந்தார். இதற்கு பிரதியுபகாரமாக முரசொலி கட்டிடத்தை நிர்மாணிக்க ரூ59,202 அளிக்கப்பட்டதை மாறனே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதனால்...ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது எம்.கருணாநிதிக்கு எதிராக சர்க்காரி கமிஷனின் கண்டுபிடிப்புகள் அடிப்படையில் சிபிஐ வழக்குகளை தாக்கல் செய்தது, ஆயினும் சர்க்காரியா கமிஷனில் சமர்பிக்கப் பட்ட அறிக்கைக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் அந்த ஊழலில் இருந்து கருணாநிதி விடுவிக்கப்பட்டார். பின்னர் 1980 இல் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

ஜெயின் கமிஷன்...

ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், விபிசிங்,சந்திரசேகர், அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, வைகோ, உள்ளிட்ட பலரும் அளித்த சாட்சியம் சுமார் ஐயாயிரம் பக்கங்களும், பதினேழு பாகங்களும் கொண்ட அறிக்கையாக இருந்தது. அந்த அறிக்கை 1981 முதல் 1991 வரையிலான காலகட்டத்தின் அரசியல் நிலைமைகளைப் பதிவு செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்திய அமைதி காக்கும் படை இந்தியா திரும்பி வந்தபோது வரவேற்பு அளிக்கப்பட்டது/ அந்த நிகழ்ச்சியை கருணாநிதி புறக்கணித்தார். இதனை புலிகள் வரவேற்றனர். கருணாநிதிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுக்கள் நடந்தன. அதனால் தமிழகத்தில் புலிகல் இயங்குவதற்கு ஊக்கம் பெற்றனர். இதன் விளைவுகள் எதிர்பார்க்கப் படாமல் இருக்கலாம். ஆனால், அவை படுகொலைக்கு இடமளிப்பதாக அமைந்து விட்டன. 1989 ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு புலிகளின் நடவடிக்கைகள் படிப்படியாக விரிவடைந்தன. திமுக எம்.பி வை.கோபாலசாமி ரகசியமாக இலங்கை சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசி திரும்பினார்.’
முக்கியமாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஆழமான ரகசிய உறவு இல்லாமல் இருந்தால் ராஜீவ் படுகொலை நடைபெற்றிருக்க இயலாது என்பது தான் ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையின் பிரதான அம்சம்.

இடைக்கால அறிக்கை என்பது திமுகவை அவமதித்து, இழிவு ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் திட்டமிட்டுச் செய்த சதித்திட்டம் என்று கூறப்பட்டு இந்த ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டு சர்ச்சையிலிருந்தும் கருணாநிதி வெளியில் வந்தார்.

ராமர் பால சர்ச்சை...

2007 ஆம் ஆண்டில் ராமர் பாலம் தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்? என்று கூறியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள், ஈரோட்டில் ஒரு விழாவுக்குத் தலைமையேற்றுப் பேசிக் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைக்கும் குள்ளநரிகளில் சில கூறுகின்றன, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதன், அவன் பெயர் ராமனாம் அவன் கட்டிய பாலம் ராமர் பாலமாம். அந்தப் பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாது  என்கிறார்கள்... அந்த ராமன் எந்தப் பொறியியல் கல்லூரிக்குச் சென்று படித்து விட்டு வந்து இந்தப் பாலத்தைக் கட்டினான்? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டார். கருணாநிதியின் இந்த கருத்தை ஒட்டி தமிழகத்தில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மாபெரும் சர்ச்சை வெடித்து கலவரம் மூண்டது.

கருணாநிதியின் இந்த பேச்சை அடுத்து விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரும், பிஜேபியின் முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமரை பற்றி இழிவாக பேசிய கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டித்து கொண்டு வருபவருக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று சொன்னதாக கூறி திமுக பொருளாளரும், மாநில மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி திமுகவினரை தூண்டும் வகையில், பிஜேபிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகம் முன்பு திமுகவினர் இன்று காலையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக செய்திகள் பரவியது.

இதையடுத்து பிஜேபி அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெரு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு அந்த தெருவுக்குள் நுழையாதவாறு தடுப்புகளை அமைத்திருந்தனர்.

ஆனால் அமைச்சர் பரிதி இளம்வழுதி, திமுக வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன், தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், சைதை கிட்டு, செங்கை சிவம், வி.எஸ்.பாபு எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், இந்திரகுமாரி உட்பட சுமார் ஆயிரம் பேர் தெற்கு போக் சாலையில் வைத்திருந்த தடுப்புகளை தாண்டி போலீசாரையும் மீறி பிஜேபி அலுவலகத்திற்கு முன்பாக கூடினார்கள்.

அத்வானிக்கு எதிராகவும், ராமவிலாஸ் வேதாந்திக்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய அவர்கள் வேதாந்தியின் உருவ பொம்மை யையும் எரித்தனர். திமுகவினரின் இந்த ஆர்ப் பாட்டத்தை எதிர்த்த பிஜேபியின் முன்னாள் தலைவர் கே.என்.லட்சு மணன், மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், நிர்வாகி கள் ராஜசிம்மன், லட்சுமி சுரேஷ், ரமேஷ் உள்ளிட்டோரை போலீசார் அலுவலகத்திற்கு உள்ளே செல்லு மாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் உள்ளே சென்றனர்.

அவர்கள் உள்ளே சென்றதும் திமுகவினர் பெரிய கற்களை எடுத்தும், உருட்டுக் கட்டைகளை கொண்டும் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அங்கு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இதில் சில பத்திரிகையாளர்களின் வாகனங் களும் சேதமடைந்தன. அலுவலகத் தில் இருந்த கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது.

திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தாததுடன், வேடிக்கை பார்த்ததாக பிஜேபியினர் தெரிவித்தனர். திமுகவினரின் இந்த வன்முறையால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல காணப்பட்டது. தி.நகரில் பெரும் பதட்டமும் நிலவியது.

சேது சமுத்திர பந்த் சர்ச்சை...

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கலைஞர்  கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஆகஸ்டு 4 2008 அன்று மாநிலம் தழுவிய ‘பந்த்’ அறிவித்தது. இதை எதிர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக. அதையொட்டி வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிக்காவிடில் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி பரிந்துரைக்கவிருப்பதாக உச்சநீதிமன்றம் எச்சரித்தது. ஆனாலும் முன்னரே திட்டமிட்டவாறு அக்டோபர் 1 அன்று ’சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பந்த் நடத்தி முடித்தது கலைஞர் தலைமையிலான மாநில அரசு.

கருணாநிதியின் யார் ‘இந்து’? கேள்வி குறித்த சர்ச்சை!

2002 அக்டோபர் 24 ஆம் நாள் நடைபெற்ற சிறுபான்மையினருக்கான மீட்டிங்கில் ‘யார் இந்து? நல்ல மனிதர்கள் சொல்லக்கூடும் ‘இந்து’ என்றால் திருடன் என்று!’ என்றார் கருணாநிதி. இந்துக்களின் மனம் புண்படும் விதமான மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மீது சென்னை காவல்துறை 2002 ஆண்டு நவம்பர் எஃப் ஐ ஆர் பதிவு செய்தது. சிறுபான்மையினரை திருப்திப் படுத்தி அவர்களது வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில் கருணாநிதி இந்துக்களை அவமதிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆயினும் தனது கருத்து குறித்து கருணாநிதி எவ்வித மன்னிப்பும் கோரவில்லை.

2003 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்களை டெஸ்மா சட்டம் கொண்டு பணியிடை நீக்கம் செய்து மோசமாகத் தண்டித்தார். அப்போது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் அரசுக்கு எதிராகத் தூண்டும் வண்ணம் கருணாநிதி தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சிபிஐ தரப்பு எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டது.

இறந்தும் இடஒதுக்கீட்டு சர்ச்சை...

கருணாநிதி இந்தியாவில் முதுபெரும் மூத்த அரசியல்வாதி. இன்று அவரது மறைவை ஒட்டி மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலத் தலைவர்களும் தங்களது இரங்கல் செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படியான நேரத்தில் கருணாநிதியின் பூத உடலை கோபாலபுரம் வீட்டில் வைத்துக்கொண்டு அவரது நினைவிடத்தை உறுதி செய்ய கழகத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் எடப்பாடி தலைமையிலான மாநில அரசிடம் போராடிக் கொண்டிருந்தனர்.

நேற்று கலைஞர் மறைந்த நிலையில் எடப்பாடி தலைமையிலான அரசு, கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி மறுத்திருந்தது. மெரினாவில்  ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதைக் காரணம் காட்டி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக அரசு அனுமதி மறுப்பதாக திமுக உடன்பிறப்புகள் முதல் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் வரை பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தார்கள்.

இன்று காலையில் அதற்கான தீர்ப்பு சற்று முன் வெளியானது. உயர்நீதிமன்ற ஆணைப்படி கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மறைந்த முதல்வரும் திமுக முன்னோடியுமான அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்கச் சொல்லி தீர்ப்பு வெளியானது. தங்களது தானைத் தலைவரை இழந்து வாடிய நிலையிலும் தொண்டர்களின் வயிற்றில் பால் வார்த்த செய்தியாக இத்தீர்ப்பு தற்போது மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. 

தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக போராட்ட நாயகனாகவே உடன்பிறப்புகள் மனதிலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மனதிலும் இடம்பெற்ற கலைஞர் கருணாநிதி, தாம் இறந்த பின்னரும் கூட தமக்கான உரிமையைப் பெற்றுக் கொண்டு ஒரு வெற்றி வீரராகவே தம் மனம் கவர்ந்த அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் விதைக்கப் படவிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com