ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: எனக்கு மெரினாவில் இடம் கிடைக்குமா?

மரியாதைக்குறிய முதுபெரும் தலைவரின் மரணத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக முடங்கிப் போயிருந்த தமிழகம் மெதுவாக இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: எனக்கு மெரினாவில் இடம் கிடைக்குமா?

மரியாதைக்குறிய முதுபெரும் தலைவரின் மரணத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக முடங்கிப் போயிருந்த தமிழகம் மெதுவாக இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் போராட்டங்கள் இல்லை, வன்முறை இல்லை, கோஷங்கள் இல்லை. மொத்தத்தில் தமிழகமே தனது இயல்பை முடக்கிக் கொண்டது. இது மறைந்த அந்த தலைவருக்கு கொடுக்கும் மரியாதை. மெரினாவில் அவருக்கு இடமளித்தது ஏற்புடையதே.

மறைந்த தலைவரின் உடல் அடக்கத்தில் சட்ட சிக்கல் எழுப்பப்பட்டது. ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து நள்ளிரவில் அவசர வழக்காக இந்தப் பிரச்னை விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கின் வாதங்கள் நமக்கு பல விஷயங்களை உணர்த்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, மெரினாவில் இடம் பிடிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

இதைத் தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு நாடு. அந்த நாட்டிற்குள் வித்தியாசமான விலங்கு ஒன்று நுழைந்தது. அந்த விலங்கிற்கு யானைக்கு இருப்பது போல ஒரு துதிக்கையும், காண்டாமிருகத்தைப் போல ஒற்றைக் கொம்பும், உடலின் ஒரு பக்கத்தில் புலியைப் போல மஞ்சள், கருப்பு கலந்த வரிகளும், மற்றொரு பக்கத்தில் புள்ளிமான்களைப் போல புள்ளிகள் காணப்பட்டது. பன்றியைப் போல கருப்பு நிறத்தில் ஒரு வாலும் அதற்கு இருந்தது. அதுமட்டுமில்லாமல், கழுதையைப் போல பின்னால் வருபவர்களையெல்லாம் உதைத்துக் கொண்டிருந்தது அந்த விலங்கு.

‘இந்த மிருகத்திற்கு துதிக்கை இருக்கிறது. ஆகையால் இது யானை', என்றார் ஒருவர். ‘இல்லை! இது காண்டா மிருகம்', என்றார் மற்றொருவர். ‘இது பின்னங்கால்களால் உதைக்கிறது. ஆகையால், இது கழுதை', என்றார் மற்றொருவர்.

இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விலங்கின் பெயரைச் சென்னார்கள். அதே நேரத்தில், ஒருவர் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரச்னை அரசனிடம் சென்றது. அரசன் மந்திரியை அழைத்தார்.

‘மந்திரியாரே! நீங்கள்தான் இந்த நாட்டில் அதிபுத்திசாலி. உங்களால் மட்டுமே இது என்ன விலங்கு என்று சொல்ல முடியும். ஆகவே இது என்ன விலங்கு என்று சொல்லுங்கள்', என்று ஆணையிட்டார்.

விலங்கு இருக்கும் இடத்துக்கு அரசனோடு மந்திரியும் உடன் சென்றார். மந்திரியார் என்ன சொல்வார் என்பதைக் கேட்க மக்களும் ஆர்வத்தோடு திரண்டிருந்தார்கள்.

விலங்கைச் சுற்றி மூன்று முறை வலம்வந்தார் மந்திரி.

‘அரசே! கண்டுபிடித்துவிட்டேன்!' என்று உரத்த குரலில் சொன்னார் மந்திரி.

மகிழ்ந்து போனார் அரசர். மீண்டும் பேசினார் மந்திரி.

‘அரசே! இந்த விலங்கு ஒரு . . . . . . மாடு', என்றார் மந்திரி.

‘அதெப்படி?' என்று கேட்டார் அரசர்.

‘அரசே! இந்த விலங்கை மூன்று முறை வலம் வந்தேன். அதன் பின்புறத்தை கடக்கும் போது ‘பொத்'தென்று சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தேன். ‘சாணி' கீழே கிடந்தது. மாடுதானே சாணி போடும்', என்றார் மந்திரி.

அரசருக்கு மகிழ்ச்சி.

‘பார்த்தீர்களா மக்களே! நம் மந்திரி புத்திசாலி என நிரூபித்துவிட்டார். இனி இந்த விலங்கை ‘மாடு', என்றே அழைப்போம்', என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த சிறுவன் தன் கையிலிருந்த காசை மாட்டின் துதிக்கையில் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்ட மாடு தன் துதிக்கையால் சிறுவனின் தலையில் ஆசீர்வாதம் செய்தது.

மெரினாவில் உடலடக்கம் செய்வதற்கு இது நாள்வரை பின்பற்றப்பட்ட விதிமுறைகள் இந்தக் கதையில் வரும் விலங்கைப் போன்றதுதான். ‘இதுதான் விதி. இதன் அடிப்படையிலேயே இத்தனை வருடங்களாக உடலடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது' என்று தெளிவான எந்த வரைமுறையும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஒரு விதிமுறை இருப்பது போன்ற ஒரு மாயை மட்டுமே நம் சிந்தனைகளை கட்டிப் போட்டிருக்கிறது என்பது வழக்கின் போது நடந்த வாதங்கள் நமக்கு உணர்த்துகிறது.

துதிக்கையை பார்க்கின்றவன் அதை யானை என்று சொல்லும் போது அந்தக் கருத்தில் உடன்பாடில்லாதவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்களின் கருத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அரசரின் குரலாக மந்திரி சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மற்றவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு எதிராக பொதுநல வழக்கு நிலுவையில் இருக்கிறது', என்று அரசு தரப்பு சொன்னபோது சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக விசாரணைக்கு வந்து தங்களது மனுக்களை திரும்பப்பெற்றார்கள். இவையெல்லாம் ‘பொதுநல வழக்குகள்' என்றுதானே தொடரப்பட்டது! தங்களின் சொந்த நலனுக்காக அவற்றை திரும்பப்பெறுவது சரியா? ‘இவர்கள் சரியாக வழக்கை கொண்டு செல்வார்கள், மெரினாவில் உடலடக்கம் பற்றிய விதிகளில் இருக்கும் குழப்பங்களுக்கு இந்த வழக்குகள் ஒரு தீர்வை கொடுக்கும்', என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நினைப்பு பொய்யாய்போனது. ‘சுய நலத்தின் அடிப்படையிலோ, அல்லது தனிப்பட்ட வெறுப்பிலோ தொடரப்பட்ட வழக்கே ‘பொது நல வழக்கு' என்ற பெயரில் இத்தனை மாதங்கள் நடைபெற்று வந்திருக்கிறது என்று நமக்குப் புரிகிறது.

‘கடற்கரையில் எந்த சமாதியும் இருக்கக்கூடாது' என்பதுதான் எங்கள் கோரிக்கை. இது தொடர்பான வழக்கை வாபஸ் பெற மாட்டோம். ஆனால், திமுக தலைவர் உடல் கடற்கரையில் அடக்கம் செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை', என்று மற்றொரு தரப்பு சொல்லியது.

முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜ் போன்றவர்களின் சித்தாந்தம் வேறு திராவிட இயக்க சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட அவர்களின் நினைவிடப் பகுதியின் மத்தியில் திராவிட சித்தாந்தம் கொண்ட கருணாநிதி உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அண்ணாத்துரையின் கொள்கையைப் பின்பற்றியவர் கலைஞர், அதனால்தான், அண்ணாதுரை நினைவிடப் பகுதியில் இடம் கேட்கிறோம்', என்று திமுக தரப்பு வாதிட்டது.

அண்ணாதுரை நினைவிடம் அமைந்திருக்கும் பகுதி 22.09.1968ல் உடல்களை அடக்கம் செய்வதற்கான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது', என்று திமுக தரப்பு வாதிட்டது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தலையிட அதிகாரமில்லை. மாநில அரசுக்கு சொந்தமான இடத்தில் முன்னாள் முதல்வர்களை அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மறைந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி, மாநில அரசே முடிவெடுக்கலாம்', என்று திமுக தரப்பு வாதிட்டது.

முன்னாள் முதல்வர்கள் காமராஜ், ஜானகி ஆகியோரின் நினைவிட விவகாரத்தில் கருணாநிதி கடைப்பிடித்த நிலைப்பாட்டை பின்பற்றியே தமிழக அரசு இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது' இது அரசு தரப்பு.

‘மத்திய அரசின் நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர்களை மெரினாவில் புதைக்கலாம் என்று மரபு ஏதுவும் இல்லையே? எனவே மெரினாவில் முதல்வர்களை மட்டுமே அடக்கம் செய்யலாம் என்று எப்படி முவெடுக்க முடியும்', என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்த வாதங்களிலிருந்து நாம் புரிந்துகொண்டது இவைதான்.

22.09.1968ன் அறிவிப்பின் படி அண்ணாத்துரை நினைவிடம் உடல்கள் அடக்கம் செய்வதற்கான பகுதி.

அண்ணாத்துரை நினைவிட பகுதி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நபரின் முக்கியத்துவத்தை கருதி, மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம். அதாவது, மாநில அரசு யாரை முக்கியம் என்று கருதுகிறார்களோ, அவருக்கு இடம் ஒதுக்கலாம். அப்படிப் பார்த்தால், இந்த ஆட்சியின் பார்வையில் ஒருவருக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைத்தால், அதை எதிர் தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஆட்சி மாறும் போது முக்கியத்துவமும் மாறுமே!

‘கடற்கரையில் உடலடக்கம் செய்து கொள்ளலாம், ஆனால் சமாதி இருக்கக்கூடாது', என்று சொல்கிறார்களா இவர்கள்?

அப்படியென்றால் அந்த இடம் உடலடக்கம் செய்யப்படும் பகுதியே தவிர இவர்களுக்குத்தான் என்பதை எந்த அரசாணையும் வலியுறுத்தவில்லை', என்பது நமக்குப் புரிகிறது.

மெரினாவில் உடல் அடக்கம் செய்வதற்கு, ஒருவர் இறக்கும் போது முதல்வராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அடிப்படையில் கோரிக்கைகளை யாராவது மறுத்திருந்தால் அது சட்டத்துக்கு புறம்பானது.

‘மத்திய அரசின் நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது.

முதல்வர்களை மெரினாவில் புதைக்கலாம் என்று மரபு ஏதும் இல்லை.

மெரினாவில் முதல்வர்களை மட்டுமே அடக்கம் செய்யலாம் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

முதலமைச்சர் பதவியிலேயே இருந்தாலும் அவர் திராவிட கட்சிகளில் இல்லாவிட்டால் அவர்களுக்கு மெரினாவில் இடம் கிடைக்குமா என்பதில் தெளிவில்லை.

‘மாற்று சித்தாந்தம் கொண்ட ஒருதரப்பின் நினைவிடப் பகுதியின் மத்தியில் மற்றொரு சித்தாந்தம் கொண்டவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க முடியாது', என்று வாதிடுவது சரியா? மகாபாரத போரில் இறந்த வீரர்களின் குடும்பத்தார்கள் அவர்களை நினைத்து வருந்தினார்கள். அவர்கள் வியாசரை அணுகி தங்களின் வருத்தத்தை தெரிவித்தார்கள். அடுத்த நாள் கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் சென்றார் வியாசர். இறந்து போனவர்களின் பெயரைச் சொல்லி அழைத்தார். ஒவ்வொருவரும் கடலிலிருந்து மீண்டும் உயிருடன் வெளியே வந்தனர். தங்கள் குடும்பத்தினருடன் இணைந்தனர். இதில் துரியோதனன், கர்ணன் மற்றும் பாண்டவர் தரப்பில் போரிட்டு மடிந்த வீரர்களும் அடக்கம். அப்படி வந்த வீரர்களிடம் துவேஷம் இல்லை. எல்லோரும் நண்பர்களாக ஒரு தினத்தை முடித்துக் கொண்டு அடுத்த தினம் வந்த வழியே திரும்பச் சென்றார்கள். இந்த சம்பவம் நமக்கு உணர்த்தும் விஷயம் இதுதான், கொள்கை, கோட்பாடு எல்லாம் உயிருடன் இருப்பவர்களுக்கே. உயிர் பிரிந்தபின் விரோதங்கள் நிலைப்பதில்லை. எனவே நினைவிடங்களுக்கு அவை பொறுந்தாது.

மெரினாவில் அடக்கம் செய்வதற்கான விதிகளில் தெளிவில்லாததால், யார் வேண்டுமானாலும் இடம் பெறுவதற்கு சட்டப்பூர்வமாக முயற்சிக்கலாம். மெரினா என்பது பொது இடம். எனக்குப் பிடித்த தலைவருடன் நான் புதைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் நினைப்பதில் எப்படி தவறாகும்?

அரசுக்கு சொந்தமான ஒரு நிலத்தை எப்படி திராவிடர்களுக்கென்று ஒதுக்க முடியும்? எந்த விண்ணப்பத்தை எழுதினாலும் அதில் “தேசியம், மதம், சாதி” ஆகியவற்றைப் பற்றி மட்டும் குறிப்பிடும் வகையில் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ‘திராவிடம்' என்ற வார்த்தையை எழுதுவதற்கு ஏதும் இடமிருக்கிறதா? ஒரு விண்ணப்பத்தில் எழுத முடியாத விஷயத்தை எப்படி சட்டப்பூர்வமாக்க முடியும்? யார் திராவிடர், யார் திராவிடரல்லாதோர் என்று முடிவெடுப்பது யார்? இதைப் பற்றி முடிவெடுப்பதற்கு சட்ட அமைப்பு ஏதாவது இருக்கிறதா? இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

உயிருடன் இருக்கும் ஒருவர் ‘தான் மெரினாவில் புதைக்கப்பட வேண்டும்' அரசிடம் விண்ணப்பித்தால், அரசு எந்த அடிப்படையில் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கும்?

எந்த விதியும் தெளிவாக இல்லாத நிலையில், விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமானால், உலகின் மிக நீளமான இடுகாடு நம்ம மெரினாவாகத்தான் இருக்கும். ஒருவேளை மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், உலகின் மிக நீளமான சமத்துவமில்லாத இடுகாடு நம்ம மெரினாவாக இருக்கும்.

ஆகையால், ஆட்சியாளர்கள் மெரினா விவகாரத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தெளிவான சட்ட விதியை ஏற்படுத்திக் கொடுங்கள். அப்படியில்லையென்றால், சந்தனப்பெட்டியில் உறங்காவிட்டாலும் சாதாரணமாய் உறங்க எங்களைப் போன்ற சாமானியர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com