அண்ணா பல்கலையின் அடுத்த பூதம்.. மாணவர் சேர்க்கை இடங்கள் பணத்துக்கு விற்பனையா?

பணம் கொடுத்து மதிப்பெண் பெறும் முறைகேடு ஏற்கனவே வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை இடங்கள் விற்பனையானது அம்பலமாகியுள்ளது.
அண்ணா பல்கலையின் அடுத்த பூதம்.. மாணவர் சேர்க்கை இடங்கள் பணத்துக்கு விற்பனையா?

சென்னை: பணம் கொடுத்து மதிப்பெண் பெறும் முறைகேடு ஏற்கனவே வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை இடங்கள் விற்பனையானது அம்பலமாகியுள்ளது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்க்கை பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியானது. ஆனால் அந்த பட்டியலில் இல்லாத 60 பேர்களின் பட்டியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பட்டியலில் இடம்பிடித்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் பின்பக்க வாசல் வழியாக நுழைந்தவர்களாகவே பார்க்கப்படுகிறது.

டிப்ளமோ மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேருவதற்கான விதிகள் இல்லாத நிலையில் இவர்கள் யாரும் பல்கலையின் விதிப்படி சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் இந்த 60 மாணவர்களும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 200க்கு 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் எஞ்ஜினியரிங், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினியரிங் போன்ற படிப்புகளில் சேர்ந்திருப்பதுதான் சந்தேகத்தை உறுதி படுத்துகிறது.

மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பும், நடந்த பின்பும் பொறியியல் சேர்க்கை இடங்களைப் பிடித்த மாணவர்களின் பட்டியல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் பெரிய தொகைக்கு விற்பனையாவதை நம்பத் தகுந்த வட்டாரங்களே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.

அதோடு, வருகைப் பதிவேட்டில்  முதல்கட்டமாக வெளியான மாணவர் சேர்க்கைக்கும், கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் பதிவுக்கும் இடையே இருக்கும் வேறுபாடே முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்கிறது.

அதாவது, சுரங்கம் தொடர்பான படிப்பில் சேர்ந்த மாணவர்களின் முதல் பட்டியலில் 23 பெயர்கள் இருந்தன. தற்போது இருக்கும் பட்டியலில் 28 மாணவர்கள் உள்ளனர். வருகைப் பதிவேட்டில் அல்ஃபாபெட் ஆர்டரில் பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த வருகைப் பதிவில் 23வது பெயர் ஆங்கில எழுத்து டியில் ஆரம்பித்தால், 24வது பெயர் ஆங்கில எழுத்து ஏவில் ஆரம்பித்திருக்கிறது. எனவே, முறைகேடு நடந்திருப்பது மட்டுமே இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்படி நடந்தது என்பதெல்லாம் விசாரணை நடத்தப்பட்டால்தான் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com