அமெரிக்காவின் அடாவடித்தனம்: உலக நாடுகளின் பெரிய அண்ணாவாக மாறுமா சீனா..!

உலகநாடுகள் எல்லாமும் ஒன்றுக் கொன்று வளர்ச்சியை தேடி பயணித்துக் கொண்டு இருந்தாலும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் பல்வேறு நட்புறவுகளையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
அமெரிக்காவின் அடாவடித்தனம்: உலக நாடுகளின் பெரிய அண்ணாவாக மாறுமா சீனா..!

உலகநாடுகள் எல்லாமும் ஒன்றுக் கொன்று வளர்ச்சியை தேடி பயணித்துக் கொண்டு இருந்தாலும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் பல்வேறு நட்புறவுகளையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் நாம் பார்க்கும் செய்திகளின் மூலம் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கிடையே வர்த்தகப் போர் ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அமெரிக்காவின் சில அதிரடி நடவடிக்கைகள்தான். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைகள் மூலம் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையையே அமெரிக்கா இழந்து வருகிறது என்றாலும் மிகையில்லை. பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை மூலம் 12 நாடுகள் இணைந்து உருவாக்கிய டி.பி.பி எனப்படும் பசிபிக் பெருங்கடலில் கடந்த கூட்டாளியுள்ள உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையில், உலகளவில் உருவாக்கப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையிலிருந்தும் அமெரிக்கா விலகியது. 

2015ஆம் ஆண்டு ஜூலை திங்கள் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் உருவாக்கிய ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா சீர்குலைத்தது. இப்படியாக சர்வதேச நாடுகளுடன் பல்வேறு கருத்து மோதலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அமெரிக்கா சீனாவையும் சீண்டி பார்க்கும் வகையில் அந்நாட்டுக்கு எதிராக வர்த்தகப் போர் தொடுத்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை அதிகரிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் இந்நடவடிக்கைகள் அதன் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளன. 

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை ஒரு நம்பமுடியாத வணிகப் பங்காளியாகக் கருதினால், சீன அரசாங்கத்திற்கு ஏற்கத்தக்க வகையில் சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும். இதனால் சர்வதேச அளவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.  எனவே தற்போதைய சூழலில் உலகம் எதிர்கொள்ளும் மிகமுக்கிய கேள்வி சீனா என்ன செய்யப் போகிறது? அதன் தலைவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? என்பதுதான்..!

என்றாலும் சீனாவைப் பொறுத்தவரை, ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சியை ஆதரிக்கிறது. சீன அதிபர்  டாவோஸ் நகரில் 2017 ல் முன்வைத்த திட்டத்தின்படி சீனா வெளிப்படையான உலகளாவிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு உறுதிபூண்டிருக்கிறது. அதிபர் ஜி-ஜின்பிங் மற்றும் அவரது வட்டம் வெளிப்படையாக உலகளாவிய வர்த்தக அமைப்பு தகர்க்க விரும்பவில்லை. ஆனால் மற்ற அம்சங்களில், சீனா தனித் தன்மையுடன்   உலகமயமாக்கலில் இருந்து வேறுபடுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நடைமுறையுடன் ஒப்பிடுகையில், சீனா இருதரப்பு மற்றும் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் பல பன்முக பேச்சுவார்த்தை சுற்றுகளில் குறைவாகவே நம்பியுள்ளது.

2002 இல், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் சட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்த இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்குப் பின்னர் 12 கூடுதல் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் தொடர்ந்து சீனா இருதரப்பு உடன்படிக்கைகளை வலியுறுத்தி வருவதனால் உலக வர்த்தக அமைப்பில் அதன் பங்களிப்பு குறைந்து காணப்படுகிறது. சீனா ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி சீனாவை தலைமையாகக் கொண்டு அதன் அண்டை நாடுளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்பட விரும்புகிறது. பின்னர் அதன் வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்ய பிற இடங்களில் அரசு சீன மையங்களை விரிவுப்படுத்தலாம். அந்த செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜின் லக்யூன் தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை, உலக வங்கிக்கு ஒரு பிராந்திய மாற்றாக அதிகாரிகள் நிறுவியுள்ளனர்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சவால் விடும் வகையில் சீன மக்கள் வங்கியானது 30 க்கும் மேற்பட்ட மத்திய வங்கிகளுக்கு 500 பில்லியன் டாலர் பண்டம் மாற்று முறையில் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு சீனாவின் அபிவிருத்தி வங்கியும் தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியும் பாகிஸ்தானுக்கு 900 மில்லியன் டாலர் அவசர கால உதவிக்கு வழங்கியுள்ளன. எனினும் நிதி உதவி செய்யும் போது யோசித்து செய்ய வேண்டும். அல்லது தாமதப்படுத்தி செய்யலாம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் வளர்ச்சிக்கு சீனா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் என்றாலும் தனியார் சொத்துக்களின் விதிமுறைகள் சீனாவின் சோசலிச அமைப்புமுறையிலேயே தொடரும். எனவே, அமெரிக்க தலைமையிலான சர்வதேச ஆட்சியை விட சீனாவின் அறிவார்ந்த சொத்துரிமை பாதுகாப்பு பலவீனமாக இருக்கும். சீன அரசு, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அதன் மானியங்கள் மற்றும் பிறவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைக்க விரும்புகிறது. 

2025-ல் நாட்டின் உயர் தொழில்நுட்ப திறன்களை ஊக்குவிக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேலும் சீனா தனது நிதி முறையை இறுக்கமாக கட்டுப்படுத்தவும், அதே போல் மூலதன வரவு மற்றும் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி பராமரிக்கவும் முயல்கிறது. சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு இன்னும் பரிவு காட்டியுள்ள நிலையில், சீனா தலைமையிலான சர்வதேச ஆட்சி மேலும் அதிகரிக்க  வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, சர்வதேச நிதிமுறையில் வியாபாரம் செய்ய முயலும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகள் ஏற்படலாம் என தெரிகிறது. 

- பெய்ஜிங்கில் இருந்து திருமலை சோமு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com