மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? முழுவதும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

"வாழ்க்கை என்பது நம்மால் உருவாக்கப்படுவது'  என்று  நம்பும் பெங்களூரைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் வசந்தா வைகுந்த்(60)  
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? முழுவதும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

'வாழ்க்கை என்பது நம்மால் உருவாக்கப்படுவது'  என்று  நம்பும் பெங்களூரைச் சேர்ந்த பரத நாட்டிய கலைஞர் வசந்தா வைகுந்த்(60) 'வாழ்க்கையின் அழகை பாதுகாக்க வேண்டுமெனில், மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்ற கலையை கற்று, பிற விஷயங்களுடன் கை கோர்த்து உங்கள் வெற்றிப் பாதையில் நடைபோடுங்கள்' என்கிறார். 

பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட வசந்தா, நம்மை சுற்றியுள்ள ஒளியிலிருந்து அமைதியை கொண்டு வர ஆரோக்கியமான உடலும், நடனமும் சரிசமமான அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையினரை பெரிதும் பாதித்துள்ள தாம்பத்திய உறவு முறைகள், நடுத்தர வயது பிரச்னை, ஒய்வு பெற்ற பின் ஏற்படும் மனக் குழப்பங்கள், கல்வி, வேலை, நவீன தொழில்நுட்ப பாதிப்புகள், சமூக வலைதளங்களால் ஏற்பட்டுள்ள தனிமை, அவசர வாழ்க்கை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண 'லைப் அண்ட் லிவ்விங்' என்ற ஆரோக்கிய இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

இரண்டாண்டுகளில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட கவுன்சிலிங் கூட்டங்களையும், 50-க்கும் மேற்பட்ட டாக்  ஷோக்களையும் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகளில் இவர் நடத்தியதால், டெல்லியில் உள்ள 'மகளிர் பொருளாதார பொது மன்றம்' கலை மற்றும் குணப்படுத்துதலுக்காக இவரது சேவையை பாராட்டி கடந்த மே மாதம் 'உமன் ஆப் எக்சலன்ஸ்' விருது அளித்துள்ளது.

மேலும்,  'லைப்  அண்ட்  லிவ்விங்' ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களிடையே கருத்தரங்கம், நேர்காணல் ஆகியவைகளை நடத்தி, சுற்றுச்சூழல் மாறுதல்களுக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த கருத்துகளை பதிவு செய்ய இந்த இணையதளத்தை மேடையாக பயன்படுத்தவும் வாய்ப்பளித்துள்ளார். இதனால் வசந்தாவின் இணையதளத்தை மிக சிறந்ததென கூகுள் தேர்வு செய்துள்ளது.

வாழ்க்கை உங்கள்  கையில் என்பதுதான் இவரது தாரக மந்திரம்.  'உங்களால் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை எனில் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். அதற்குரிய பதில் கிடைக்கும்’ என்று கூறும் வசந்தா,  கடந்த 30 ஆண்டுகளாக இந்திய ஆன்மிக சமய நூல்களை படித்து வருகிறார். 

இன்றைய உலகில் நடைமுறைக்கு தேவையான கருத்துகள் அதில் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் உலகில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் இளைஞர்கள் மனதில் நிறைந்திருப்பதால், உடனடியான மாற்றம் இன்றைய மனித சமுதாயத்திற்கு தேவைப்படுகிறது. காலத்தால் அழியாத நம்முடைய சமய நூல்கள் மூலம் இதை துரிதமாக மாற்ற முடியும்' என்று கூறும் வசந்தா, நீண்ட  காலமாக பரத நாட்டியத்தில் காட்டிய ஈடுபாட்டை தற்போது சமூகத்தின் மீது திருப்பியுள்ளார். 'உறவு முறைகள், தாம்பத்யம், நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நம் சமூகத்தில் அனைத்து பிரிவுகளிலும் ஏமாற்றத்தை தருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பிலும் வித்தியாசமான மனிதர்களை அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவர்கள் சொல்வதை கவனமுடன் கேட்டு, நம்பிக்கை அளிக்கும் வகையில்  பதிலளிக்கிறேன்.

பெரும்பாலோர் குழப்பமடைந்து இது போன்ற சூழ்நிலையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர். சுதந்திரமான வாழ்க்கையில் பொறுப்பு முக்கியம், ஆன்மிக கூட்டங்களுக்குச் செல்லவோ, சுயமாக  குணப்படுத்தும் முறைகளை கற்றுணரவோ அவசர வாழ்க்கை காரணமாக மக்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. நாங்கள் நடத்தும்  சுவாச பயிற்சி கலை, கலந்துரையாடல், தியானம், திறமையான வாழ்க்கைக்கான நிகழ்ச்சிகள் போன்றவைகளை உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே அறியலாம். 

நம்முடைய பண்டைய கால பகவத்கீதை, வேதாந்தம், புராணம், உபநிஷத் போன்ற இதிகாசங்களை அறிந்து கொள்ள காலநேரம் தேவையில்லை. சாதாரண சூழ்நிலையிலேயே கற்றுணர முடியும். தர்மம் செய்வதைவிட இரக்கம் காட்டுவது தான் இன்றைய சமூகத்தில் தேவை'  என்று கூறும் வசந்தா, ஓமன் நாட்டு பத்திரிகையொன்றில் 'லைப் அண்ட் லிவ்விங்'  என்ற தலைப்பில் எழுதிவரும் கட்டுரை மிகவும் பிரபலமாகியிருப்பதால், மேலும் மக்கள் பிரச்னைக்கு உதவ முன் வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com