குடகு பகுதியில் மனிதனால் உருவாக்கப்படும் மிகப்பெரிய பேரிடர் காத்திருக்கிறது: எச்சரிக்கும் நிபுணர்கள்

குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. 1994-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தென் மேற்கு பருவமழை சீற்றத்துடன் இருப்பது மக்களை நிலைகுலைய செய்துள்ளது.
குடகு பகுதியில் மனிதனால் உருவாக்கப்படும் மிகப்பெரிய பேரிடர் காத்திருக்கிறது: எச்சரிக்கும் நிபுணர்கள்


பெங்களூரு: குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. 1994-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தென் மேற்கு பருவமழை சீற்றத்துடன் இருப்பது மக்களை நிலைகுலைய செய்துள்ளது.

குடகு மாவட்டத்தில் நிலப்பரப்பில் கர்நாடக அரசால் மேற்கொள்ளப்பட்ட சில பல மாற்றங்கள் மக்களால் வரவேற்கப்பட்டாலும், அதனை இயற்கை ஏற்றுக் கொள்ளவில்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குடகு மாவட்டத்தின் மலைப் பகுதியில் காய்கறி பயிரிடுவது போன்ற ஒரு சில விஷயங்கள் கூட, கன மழையின் போது கடுமையான நிலச்சரிவுக்குக் காரணங்களாகியுள்ளன.

இது பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனம் மற்றும் மலைப்பகுதியை மாற்றும் திட்டத்தை மாநில அரசு தற்போது தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை புவியியல் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மிகத் தாமதமாகவே மாநில அரசு புரிந்து கொண்டுள்ளது. வனப்பகுதிகளை அழித்து காய்கறி சாகுபடி செய்வதும், நிலப்பகுதியை கட்டடங்களாக மாற்றுவதும் இந்த இயற்கை வளம் கொஞ்சும் மலைப் பகுதியை மனிதனால் ஏற்படுத்தப்படும் பேரிடருக்கு உந்தித் தள்ளுகிறது என்பதே நிதர்சனம்.

கர்நாடகத்தின் தென் மேற்கு பகுதியில் மலை, குன்று, ஆறு, குளம், குட்டை, தாவரம், விலங்குகள் போன்ற இயற்கை வளங்களோடு செழிப்பாக காட்சி தந்த குடகு மாவட்டம், 4,102 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் வைரமாக ஒளிர்ந்துகொண்டிருந்த குடகு மாவட்டத்தில் 5.48 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகத்தின் 30 மாவட்டங்களில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம் குடகு ஆகும். 

இந்த மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் காசர்கோடு, தென்மேற்கில் கண்ணூர், தெற்கில் வயநாடு, வடக்கில் ஹாசன், வடமேற்கில் தென்கன்னட மாவட்டங்களால் சூழ்ந்துள்ளது. 

இந்த மாவட்டத்தில் வேளாண்மைதான் பிரதானத் தொழிலாக உள்ளது. அரிசி, காபி, நறுமணப்பொருள்கள்தான் இங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. 

இயற்கை தொட்டிலாக விளங்கும் குடகு மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகி, இயற்கைக் காடுகளில் கட்டடக் காடுகள் பெருகிவிட்டன. இதனால் இயற்கை வளம் குன்றி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

குடகு மாவட்டத்தில் மலையைக் குடைந்து இருப்புப் பாதை அமைத்து ரயில் சேவையைத் தொடங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல்வியலாளர் சுந்தர் முத்தன்னா இதுபற்றி கூறுகையில், இனியாவது, இருக்கும் நிலப்பரப்பில் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் வீடுகளை மட்டும் கட்டிக் கொள்ள அனுமதிக்கும் அரசு, சொகுசு விடுதிகள், பங்களாக்கள் கட்ட அனுமதிக்காது என்று எதிர்பார்க்கலாம். குடகுப் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் சொகுசு பங்களாக்கள் கட்ட அனுமதி வழங்கினால், முதலீட்டாளர்கள் வேளாண் நிலங்களையும், தேயிலைத் தோட்டங்களையும் கூட சொகுசு பங்களாக்களாக மாற்றிவிடுகிறார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சி செய்யப்படும் இதுபோன்ற அத்துமீறல்களால் நிலத்தின் நிலைத்தன்மையையே அது இழந்துவிடுகிறது.

புவியியல் துறை நிபுணர் சீதாராமன் கூறுகையில், குடகு மாவட்டத்தின் மலைப் பிரதேச நிலப்பகுதியில் செய்யப்படும் எந்த மாற்றமும் நிலச்சரிவுக்கே வித்திடும் என்று தெரிவித்துள்ளார்.

புவியியல் மாற்றத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட மாற்றமே, குடகுப் பகுதியில் வீடுகள் எல்லாம் நிலச்சரிவில் சரியக் காரணமாக அமைந்து விட்டது. காய்கறி சாகுபடிக்காக நிலத்தை சரிவு நிலையில் மாற்றியதால், மழை பெய்யும் போது அந்த சரிவுப் பகுதியில் அதிகப்படியான நீர் பாய்ந்தோடி, அப்பகுதியில் உள்ள திடப்பொருள், உப்பு, பாறைகளை அடித்துச் செல்வதால் நிலம் பலவீனமடைந்து நிலச்சரிவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

1994-ஆம் ஆண்டுக்குப் பின்னர்... கர்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு மின்சாரம் கொண்டுசெல்ல மிகப் பெரிய மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன நடமாட்டத்தின் அடர்த்துக்கு ஏற்ப சாலைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

மழைச்சாரலில் குடையைப் பிடித்து ஒய்யாரமாக நடந்துவந்த மக்களை, கடந்த ஒரு மாதகாலமாக பெய்த காட்டுமழை வீட்டுக்குள் அடைத்துவிட்டது. 1994-ஆம் ஆண்டுக்கு பிறகு தென்மேற்கு பருவ மழை மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள். 

குடகு மாவட்டத்தின் வரலாற்றில் இதுவரை காணாத மழையின் கோபக்கனலை மக்கள் அனுபவித்துவருகிறார்கள்.

தொடர்மழையின் காரணமாக மலையடிவாரங்களில் மண்சரிவு ஏற்பட்டு சொத்து மற்றும் உயிரிழப்புகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அடுத்தசில நாள்களில் மழையின் வீச்சு குறையலாம் என்றாலும், அதுவிட்டு சென்றிருக்கும் அழிவு மக்கள் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, 1986-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 18-ஆம் வரையிலான காலக்கட்டத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் வழக்கத்தைவிட இரண்டரை மடங்கு மழை பெய்துள்ளது. 
 

நிகழாண்டில் வழக்கத்தைவிட 83 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. 2007-ஆம் ஆண்டில் 108 சதவீத மழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்திருந்தது. 1994-ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழைப்பொழிவு அதிகமாக உள்ளது. 

1994-இல் வழக்கத்தைவிட 56 சதவீதம் அதிகமாக இருந்த தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுநாள்வரை 41 சதவீதமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாக குடகு மாவட்டத்தில் 2100மிமீ மழை பெய்யும். நிகழாண்டில் இது 4196 மி.மீ. மழை பெய்துள்ளது.

மலைப் பகுதிகளில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களை அமைப்பது, மழை நீரால் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவே. அதையே குடகு முழுவதும் மேற்கொள்ள வேண்டுமே தவிர மாற்ற விஷயங்களைத் தவிர்ப்பதே சாலச்சிறந்தது என்பது நிபுணர்களின் கூற்று.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com