லெக் ஃபைட்டுக்குப் பெயர் போன விஜயகாந்தை இப்படிப் பார்க்க நேர்ந்தால் விரோதிக்கும் மனம் துணுக்குறலாம்!

விஜயகாந்த் என்ற பிம்பம் இருக்கிறது. அதில் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் பழைய சுறுசுறுப்பான விஜயகாந்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றுள்ள நிஜ விஜயகாந்த்தின் நிலை?!
லெக் ஃபைட்டுக்குப் பெயர் போன விஜயகாந்தை இப்படிப் பார்க்க நேர்ந்தால் விரோதிக்கும் மனம் துணுக்குறலாம்!

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமான சமயத்தில் நடிகரும், தேமுதிக  தலைவருமான விஜயகாந்த் சென்னையில் இல்லை. அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். நேற்று சிகிச்சை முடிவுற்று அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதை அடுத்து உடனடியாக மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடம் சென்று அவருக்குத் தனது அஞ்சலியை செலுத்த விரும்பினார். அதன்படி நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் சகிதம் கலைஞர் நினைவிடத்துக்கு வருகை தந்து மலர் தூவி கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. 

விஜயகாந்தின் தள்ளாமை...

ஆனால், இந்தச் செய்திகளில் இடம்பெறத் தவறியதும் ஒன்று உண்டு. அது விஜயகாந்தின் தள்ளாமை. கேப்டன் என்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜயகாந்த் திரைப்படங்களில் அவரது லெக் ஃபைட்டுக்காக பலராலும் விரும்பப் பட்டவர். இன்றைய இளைய நடிகர்கள் பலருக்கும் சண்டைக்காட்சிகளில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். நடிகர் சங்கக் கடன்களை அடைத்து முத்தமிழ் காவலர் என்ற பெயரில் கலைஞருக்கு பவள விழா எடுத்த போது நடிகரும் அன்றைய நடிகர் சங்கத் தலைவருமாயிருந்த விஜயகாந்தின் பரபரப்பான செயல்பாடுகளைத் தொலைக்காட்சிகள் வாயிலாகக் காணாதோர் யார்? தனக்கிருந்த மக்கள் செல்வாக்கைக் கண்டு தன்னாலும் ஒரு அரசியல் கட்சியைத் திறம் பட நடத்த முடியும் என்று துணிந்து கட்சி ஆரம்பித்து 2006 ல் முதல்முறையாக விருத்தாச்சலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக ஜெயித்து தனியொரு ஆளாக சட்டமன்றம் சென்றவர் விஜயகாந்த். கட்சி தொடங்கி ஒரு தேர்தல் காண்பதற்குள்ளாக மாநில அளவில் தமிழகத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற மூன்றாவது பெரிய கட்சியாகத் தனது கட்சியை மக்கள் முன் நிலை நிறுத்தியவர் விஜயகாந்த்.

2006 தேர்தலுக்கு அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் யார் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடையேயும் கடுமையான போட்டி நிலவியமை புலனாய்வு ஊடகங்கள் காட்டிய கண்கூடான உண்மைகள். அப்போது தனது ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக இடிக்கப்பட்டதன் காரணமாக திமுக மீது ஆற்ற முடியாத கோபத்தில் இருந்த விஜயகாந்த் தரப்பு அந்தத் தேர்தலில் கலைஞரைப் புறக்கணித்து ஜெயலலிதாவுடன் கை கோர்த்தது. 

தனது அரசியல் வாழ்வில் விஜயகாந்த் எடுத்த தவறான முடிவுகளின் தொடக்கம் அதிலிருந்து தான் ஆரம்பித்தது என்கிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் இடையிலான காரசார வாக்குவாதம்...

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து ஜெயித்து சட்டமன்றம் சென்ற விஜயகாந்துக்கு நாட்கள் செல்லச் செல்ல கூட்டணியில் முக்கியத்துவம் குறைந்தது. ஜெயலலிதாவின் ஆதிக்கப் போக்கை சகித்துக் கொள்ள முடியாத விஜயகாந்த் மின் கட்டண உயர்வு குறித்து சட்டமன்றத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு விவாதத்தில் கையை உயர்த்தியும், நாக்கைத் துருத்தியும் பேசி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இத்தனைக்கும் விஜயகாந்த் அன்று சபையில் பேசியது ஊரறிந்த உண்மைகளைத் தான். ஆயினும் அதை அவர் வெளிப்படுத்திய பாங்கு அருவருக்கத்தக்க விதத்தில் இருந்ததாக அன்று ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சபையில் இருந்த அதிமுகவினர் விஜயகாந்தின் நிஜமான எதிர்ப்பைக்கூட ‘ இது சினிமா இல்லை... இது சினிமா இல்லை’ என்று கேலி செய்தார்கள்.

இப்படியாக இரு கட்சி உறவுச் சமநிலை ஆட்டம் கண்டது. அன்று சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்பு ஜெயலலிதா தேமுதிக உடனான கூட்டணியை முற்றிலும் முறித்துக் கொள்ளும் விதமாக சில வார்த்தைகள் பேசினார். அதிலிருந்து தெரிய வந்தது. 2012 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்துடனான கூட்டணியில் தனக்கு கிஞ்சித்தும் விருப்பமிருந்ததில்லை என்றும் தனது கட்சிக்காரர்களைத் திருப்தி செய்வதற்காக மட்டுமே தான் தேமுதிகவுடன் அத்தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டதாகவும் இப்போது அந்தக் கூட்டணி முறிந்தாலும் அதனால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றும் அவர் கூறினார். மேலும் தங்களுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் 41 தொகுதிகளில் தேமுதிக வென்றதே தவிர அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வென்றிருக்க முடியாது, எங்களுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே இன்று அவர் எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் என்றும் அவர் பேசினார்.

‘தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால் அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருந்திருப்பதைப் பார்க்கும் போது இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன்.... உள்ளபடியே அதற்காக நான் வருத்தப் படுகிறேன். வெட்கப்படுகிறேன்’

- என்றெல்லாம் ஜெயலலிதா அன்று பேசியது அவைக்குறிப்பில் பதிவானதோ இல்லையோ தமிழக மக்களின் மனதில் நன்றாகவே பதிவாகி இருக்கக் கூடும்.

இப்படிப் பரபரப்பாக தமிழக ஊடகங்களுக்கு தனது அரசியல் வாழ்க்கையில் தீனியிட்டுக் கொண்டிருந்த விஜயகாந்த்... தமிழகத்தில் தனக்கு முன்பே கட்சி ஆரம்பித்து பல லட்சக்கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றிருந்த பா.ம.க மற்றும் மதிமுகவை தமிழக அரசியலில் தனக்குப் பின் தான் இவர்கள் எல்லாம் எனச் சில காலம் ஓரம்கட்டி வைத்தார். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அந்த முக்கியத்துவமும் பறிபோனது. 

காரணம் விஜயகாந்தின் வெள்ளந்தித் தனமானதும் அப்பட்டமானதுமான அரசியல் வியூகத்தால் அல்ல. தமிழக அரசியலில் கேப்டனின் பின்னடைவுக்கான பிரதான காரணம் அவரது உடல்நலக் கோளாறுகளே!

கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டியும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டியும் விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்திருந்தீர்கள் எனில் உங்களுக்கு அது புரியலாம்.

தன்னிலை மறந்த குழறலான பேச்சு, ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக் கொள்ள முடியாததான உரையாடல்கள், கட்சிக்காரர்களையும் தொண்டர்களையும் ஏக வசனத்தில் விளித்து பொது மக்கள் முன்னிலையிலேயே ஒரு ஜமீந்தார் தோரணையில் விஜயகாந்த் நடந்து கொண்ட முறைகள் இவையெல்லாம் சாதாரண பொதுஜனத்துக்கு கேலுக்குரியதாகவும், நகைச்சுவையாகவுமே மனதில் பதிந்தது.

இதில் செய்தியாளர்களைப் பார்த்து ‘தூ’ எனத் துப்பி மேலும் தன்னைத் தானே கோமாளியாகச் சித்தரித்துக் கொள்ள இடமும் கொடுத்தார் கேப்டன்.

இதில் கேப்டனுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்தை விட பேச்சாற்றலும், நுண்ணறிவும் இவருக்கு அதிகம் என்றெண்ணி வியக்கத்தக்க அளவில் இருக்கிறது அவரது கட்டுக்கோப்பான தேர்தல் பிரச்சாரங்களும், ஊடக நேர்காணல்களும். அவரது பேச்சில் எங்கும் குழப்பமில்லை. ஆனால், அதற்காக கேப்டனைத் தாண்டி அவர் கேப்டன் ரசிகர்களின் மனதில் பதிவாரா என்றால்? இல்லை என்றே சொல்ல வேண்டும். மக்கள் விஜயகாந்திடம் ரசித்தது அவரது ஊழலை எதிர்க்கும் அஞ்சா நெஞ்சத் தனமான தைரியத்தையும், புள்ளி விவரங்களை யோசிக்காமல் மடமடவென எடுத்து வைத்து அசரடிக்கும் வாதத் திறமையையும் தான். ஆனல் இன்றைய விஜயகாந்திடம் அவை எவையும் இல்லை.

விஜயகாந்த் என்ற பிம்பம் இருக்கிறது. அதில் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் பழைய சுறுசுறுப்பான விஜயகாந்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றுள்ள நிஜ விஜயகாந்த்தின் நிலை... நேற்று கலைஞர் நினைவிடத்தில் கண்டோமே அப்படித்தான் நிற்கவும், நடக்கவும் மனைவி மற்றும் மைத்துனரின் துணையைத் தேடும் விதமாகத் தான் இருக்கிறது.

பரிபூரணமாக பழைய பன்னீர்செல்வமாக மீள்வாரா விஜயகாந்த்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com