குழந்தைகளை மையமாக வைத்து மனதைப் பதறச் செய்த இரு வேறு சம்பவங்கள்! (காணொளி இணைப்பு)

நேற்றும், நேற்று முன் தினமும் தமிழகத்திலும், பெங்களூரிலுமாக 5 வயதுக்குட்பட்ட இரு குழந்தைகளை மையமாக வைத்து நிகழ்ந்துள்ள இரு சம்பவங்கள் பல பெற்றோர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன.
குழந்தைகளை மையமாக வைத்து மனதைப் பதறச் செய்த இரு வேறு சம்பவங்கள்! (காணொளி இணைப்பு)

நேற்றும், நேற்று முன் தினமும் தமிழகத்திலும், பெங்களூரிலுமாக 5 வயதுக்குட்பட்ட இரு குழந்தைகளை மையமாக வைத்து நிகழ்ந்துள்ள இரு சம்பவங்கள் பல பெற்றோர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. இரண்டு சம்பவங்களிலுமே குழந்தைகளின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. முதல் சம்பவத்தில் அகப்பட்டுக் கொண்ட குழந்தையை இன்னமும் மீட்கமுடியவில்லை. இரண்டாம் சம்பவத்தில் அகப்பட்டுக் கொண்ட குழந்தையோ விதிவசத்தால் பத்திரமாக ஒரு சிறு கீறல் கூட இன்றி மீட்கப் பட்டு விட்டது. இதில் குழந்தை மீட்கப்பட்டதை நினைத்து சந்தோசப் படுவதா அல்லது மீட்கப்பட முடியாத குழந்தையை நினைத்து மனம் பதறிக் கொண்டே இருப்பதா? என இச்செய்தியை அறிய நேர்ந்தவர்கள் குழப்பத்துள் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் நிகழ்ந்த முதல் சம்பவம்...

நாமக்கல் அருகே மோகனூர் காவிரி ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது அமர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறிவிழுந்த சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

சிறுவனை தடுப்புச்சுவரில் அமர வைத்து செல்ஃபி எடுக்க முயன்ற அவரது தந்தையிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் எல்.ஜி.பி. நகரைச் சேர்ந்தவர் பாபு. பங்குச்சந்தை முகவர். இவரது மனைவி சோபா. இத் தம்பதியின் மகன் தன்வந்த் (4).

கரூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை பாபு தனது மகனை காரில் மோகனூர்-வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்துக்கு அழைத்துச் சென்றார். ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைக் காண வந்தார்.

அப்போது பாலத்தின் கிழக்குப்புறத்தில் பாலத் தடுப்புச் சுவரின் (24-ஆவது இணைப்பு தூண்) மீது மகன் தன்வந்தை அமர வைத்து, அவனை இடது கையால் பிடித்தபடி பாபு செல்ஃபி எடுத்ததாகத் தெரிகிறது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவன் தன்வந்த் நிலை தடுமாறி காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் மோகனூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிறுவனைத் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். 

காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் சீறிபாய்ந்து வருவதால் தன்வந்த் அதிக தூரம் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சுமார் 15 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள மாயனூர் கதவணைப் பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு, வருவாய், காவல் துறையினர், மீனவர்கள் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவந்தூர் ஆற்றில் சுமார் 20 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் இப்போது ஏற்பட்டுள்ள சுழலில் சிக்கி சிறுவன் மணலில் புதையுண்டிருக்கவும் வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாபுவை மோகனூர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்ஃபி மோகம்:

தன்வந்துக்கு திங்கள்கிழமை 5-ஆவது பிறந்த நாள் என்பதால், பெற்றோர் அவரை பரமத்திவேலூர் காவிரி பாலத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை மகனை காரில் பள்ளிக்கு பாபு அழைத்துச் சென்றார். அப்போது பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு காவிரி ஆற்றைக் காண வேண்டும் என சிறுவன் அடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மகனை மோகனூர் காவிரி ஆற்றுப் பாலத்துக்கு பாபு அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தைகளை எங்கு அழைத்துச் சென்றாலும் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளின் செயல்களை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது. குழந்தைகள் சிறிது நேரம் மட்டும்தான் அழுவார்கள். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடுவார்கள் என மருத்துவர் பி. ரங்கநாதன் தெரிவித்தார்.

பெங்களூரில் நிகழ்ந்த இரண்டாம் சம்பவம்...

கர்நாடகாவின் மேலமங்கலம் சூலூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பெங்களூரு நகருக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது. கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். வாகனத்தின் பெட்ரோல் டாங்கின் மீது அமர்த்தப் பட்டிருந்த குழந்தை கீழே நழுவாமல் அப்படியே இருக்க வாகனம் மேலும் 300 மீட்டர் தூரம் ஓடி தானே இயக்கத்தை இழந்து சாலையோரம் இருந்த புல்வெளியில் சாய அதிலிருந்த குழந்தை காயங்களின்று புல்வெளியில் விழுந்தது. இதை அந்தப் பகுதியில் அப்போது அதே சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மக்கள் கண்கூடாகக் கண்டு பதற் ஓடிச் சென்று புல்வெளியில் விழுந்த குழந்தையை மீட்டனர். குழந்தையின் பெற்றோரும் சிறுகாயங்களுடன் தப்பியதால் அவர்களுக்கு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாகக் குழந்தை தப்பிய காட்சி காணொளியாக...

இந்த இரு சம்பவங்களுமே காணொலியாக அல்ல வெறுமே செவி வழிச் செய்தியாகக் கேட்க வாய்ப்பவர்களைகூட மனம் பதறச் செய்யக்கூடியவை. ஏனெனில், இந்த இரண்டு சம்பவங்களிலுமே குழந்தைகல் மீது நாம் குற்றம் காண முடியாது. ஏனென்றால் குழந்தைகளுக்கு விபரீதத்தின் பலன் என்ன என்பது குறித்தெல்லாம் தெரியாது. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுத் தான். முதல் சம்பவத்தில் குழந்தை காவிரி ஆற்றின் வெள்ளத்தைக் காணும் ஆசையில் அடம்பிடித்ததால் தான், தந்தை குழந்தையை ஆற்றுப் பாலத்துக்கு அழைத்துச் சென்று செல்பி எடுக்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது சம்பவத்தில் குழந்தையை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது அதிக விரைவு கூடாது. அதிலும் முன்னால் சென்ற வாகனத்தில் விரைவுடன் சென்ற மஞ்சுநாத்தின் பைக் மோதியதால் தான் வண்டி நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பெற்றோர் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கையில் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.

இந்த இரு சம்பவங்களுமே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான எச்சரிக்கை மணிகள் என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பில் குழந்தைகளின் ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும், அடம்பிடித்தலுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் தர வேண்டும்? எவையெல்லாம் விபரீதம் என்று ஒதுக்க வேண்டும் என்று முதலில் பெற்றோர்கள் அறிய வேண்டும். அதோடு குழந்தைகள் பெற்றோருடன் இருக்கையில் அவர்களை மையப்படுத்தியே நாம் அனைத்தையும் திட்டமிட வேண்டும். அவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அழித்து அதைச் சுற்றி பெற்றோர்களின் நடவடிக்கைகள் நிதானப்பட வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் பதறித் துடிக்க வேண்டியதாகி விடும்.

எல்லாவற்றையும் தாண்டி விதி வலியது என்பதையும் இந்த இரு காணொளிகளையும் காண நேர்பவர்களுக்குப் புரியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com