பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம் அறிந்து ஓட்டுப்போடு

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு விஜயம் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அர்ச்சனை செய்வதற்காக ராகுலின் கோத்திரத்தை கேட்டார் பூசாரி.
பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம் அறிந்து ஓட்டுப்போடு

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கோவிலுக்கு விஜயம் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அர்ச்சனை செய்வதற்காக ராகுலின் கோத்திரத்தை கேட்டார் பூசாரி. “என்னுடைய கோத்திரம் “தத்தாத்ரேயா”. நான் காஷ்மீர் பிராமணன்', என்று சொன்னார் ராகுல் காந்தி. இத்தனை காலம் பாஜக இந்துத்வ அரசியல் செய்கிறது. மதத்தை அரசியலுடன் சேர்க்ககூடாது', என்றெல்லாம் விமர்சனம் செய்த ராகுல் காந்தி தான் ஒரு பிராமணன் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி அதை பத்திரிக்கைச் செய்தியாக மாற்றியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேர்தலுக்காக ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்குகிறார். இதையே பாஜக செய்தால் அது மதவாத அரசியல். ‘பிராமணர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக கோத்திர அரசியலை கையிலெடுத்திருக்கிறார் ராகுல்காந்தி', என்பது ஒரு தரப்பின் கருத்து. அது உண்மையோ என்ற சந்தேகமும் நமக்கு எழுகிறது. இதை மேலும் வலுப்படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.

“காங்கிரஸ் மென்மையான ஹிந்துத்வா கொள்கைகளை கடைபிடிக்கிறது. மதச்சார்பின்மை கொள்கைகளை சமரசம் செய்துகொண்டுள்ளது. மதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்', என்று அவர் பேசியிருக்கிறார். ஹிந்துத்வா தவறு என்றால் மென்மையான ஹிந்துத்வாவும் தவறுதான்.

“நான் மதச்சார்பற்றவன். ஜாதிகள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை', என்று பேச வேண்டிய, மதச்சார்பற்ற கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும், ஒரு கட்சியின் தலைவர், ‘தான் பிராமணன், என்று பேசி அதை உலகறியச் செய்திருப்பது, தமிழகத்திற்கு ஆச்சர்யமான விஷயம். இவர் அடுத்த கட்சியை மதவாதக் கட்சி என்று சொல்வது அதைவிட ஆச்சர்யமானது.

“அவர் கோத்திரம் “தத்தாத்ரேயா”. அவர் காஷ்மீர் பிராமணர். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சஞ்ஜய் காந்தி, மேனகா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர்கள் இங்கு வந்து தரிசனம் செய்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் இதே கோத்திரத்தை சொன்னார்கள். எங்களிடம் அதற்கான ஆதாரக் குறிப்பு இருக்கிறது', என்று கோவிலின் பூசாரி தினானாத் கவுல் தெரிவித்தார். ‘ஒரு முறை ராஜீவ் காந்தி வந்தபோது அவரும் தன்னுடைய கோத்திரம் ‘தத்தாத்ரேயா' என்று சொல்லியிருக்கிறார். ‘தத்தாத்ரேய' கோத்திரத்தை சேர்ந்தவர்கள் ‘கவுல்' என்ற உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். ‘கவுல்' என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்', என்று ஒரு விளக்கத்தை அளித்தார் அவர். ஆனால், ராகுல் காந்தியைத் தவிர அவர் வம்சத்தவர்கள் வேறு யாரும் தாங்கள் சார்ந்த ‘தத்தாத்ரேய' கோத்திரத்தை வெளிச்சம்போட்டு காட்டியதில்லை. அதை அவர்கள் அவசியமாக கருதவில்லை.

தொடர்ந்து படிக்கும் முன் கோத்திர அமைப்பைப் பற்றியும் அது தொடர்பான சில அடிப்படை விஷயஙகளை தெரிந்துகொள்வோம்.

இவர் இந்த வம்சத்தை சார்ந்தவர் என்பதைச் சொல்வதுதான் “கோத்திரம்”. சாதாரணமாக கோவிலில் அர்ச்சனை செய்யும் போதும், திருமணத்தின் போதும் கோத்திரம் அதிகம் பயன்படுகிறது. “கோத்திரம்” என்பது இவர்கள் எந்த முனிவர்களுடைய வழியில் வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் அடையாளம். இந்துக்கள் எல்லாமே ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு. கோத்திரம் தெரியாதவர்கள் “சிவ கோத்திரம், விஷ்ணு கோத்திரம்” என்று தங்களைச் சொல்லிக் கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

பெண்கள் திருமணம் செய்துகொண்ட பின் கணவனுடைய வம்சத்தை சார்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அந்த வம்ச சந்ததிகளை விருத்தி செய்பவர்கள் என்பதால் கணவனுடைய கோத்திரத்தை சார்ந்தவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

ஆண்கள் கோத்திரம் திருமணத்தால் மாறுவதில்லை. அதே நேரத்தில், ஒரு ஆண் மற்றொரு குடும்பத்திற்கு ஸ்வீகாரம் அளிக்கப்பட்டால், அந்த ஸ்வீகார வம்சத்து வாரீசாக மாறிவிடுவார். சேர்ந்த குடும்பத்து கோத்திரமே அவருடையதாகிறது.

மற்றொரு முக்கியமான விஷயம் ஒரு குடும்பத்தில் ஒரே மகன் மட்டுமே இருக்கிறார் என்றால், அவரை யாரும் தத்து எடுத்துக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஸ்வீகாரங்கள் சாஸ்திரப்படி செல்லத்தக்கதல்ல.

ஆண் வாரிசு இல்லாமல், பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில், அந்த பெண்ணின் திருமணத்திற்கு பிறகு அவரின் தந்தையுடன் அவர் சார்ந்த கோத்திரம் முடிவுக்கு வருகிறது.

ராகுல் காந்தியின் பரம்பரையைப் பொறுத்தவரை, மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் தத்தாத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஜவஹர்லால் நேருவின் புதல்வி இந்திரா காந்தி அம்மையார் பார்ஸி இனத்தைச் சேர்ந்த  பெரோஸ் காந்தி அவர்களை திருமணம் செய்தார். இந்து முறைப்படி திருமணம் நடந்தாலும், பார்ஸி இனத்தில் கோத்திரமெல்லாம் கிடையாது என்பதாலும், ஒரே பெண்ணாக இந்திரா காந்தி இருந்ததாலும், நேரு குடும்பத்தின் கோத்திரம் அவரோடு முடிவுக்கு வந்துவிட்டது.

தொடர்ந்து படிக்கும் முன் இந்தக் குட்டிக்கதையை படிப்போம்:

ஆண் வாரிசு இல்லாத ஒரு அரசன். தன் மகளுக்கு தகுந்த மணமகனை திருமணம் செய்து வைத்தான். தனக்குப் பிறகு மருமகனே ‘நாட்டின் அரசன்', என்றும் அறிவித்தான். ஒரு நாள் திடீரென்று அரசன் நோய்வாய்ப்பட்டான். மகளை அழைத்தான். பக்கத்தில் சாதுவும் இருந்தார்.

‘மகளே! இன்னும் சற்று நேரத்தில் இறந்துவிடுவேன். அதோ அந்த அறையில் ஒரு பெட்டி இருக்கிறது. அது மந்திரசக்தி வாய்ந்தது. அதில் நம்முடைய பரம்பரை நகைகளும், ஆபரணங்களும், வைர, வைடூரியங்களும் இருக்கிறது. அந்தப் பெட்டியை என் தந்தைக்கு என் தாத்தா கொடுத்தார். என் தந்தை எனக்கு அந்தப் பெட்டியைக் கொடுத்தார். இது பரம்பரையாக வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் ஆபரணப் பெட்டி. இதை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இதை உபயோகிக்கும் முன் இரண்டு நிபந்தனைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நிபந்தனை ஒன்று, இந்தப் பெட்டியில் இருக்கும் ஆபரணங்களை விற்கவோ, அடகு வைக்கவோ கூடாது. தேவைப்பட்டபோது அணிந்து கொள்ளலாம்.

நிபந்தனை இரண்டு, நமது பரம்பரை வாரிசுகளைத் தவிர மற்றவர்கள் பெட்டியைத் திறந்தால், ஆபரணங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு அது நமக்குப் பயன்படாது', என்று சொல்லிவிட்டு இறந்து போனான் அரசன். செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்கப்பட்டன. மருமகன், அரசனானான். மகள், அரசியானாள்.

அரசிக்கு ஆபரணப் பெட்டியை திறந்து நகைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. பெட்டி வைக்கப்பட்ட அறைக்குச் சென்றாள். பெட்டியைத் திறந்தாள். அதிர்ச்சியடைந்தாள். காரணம், ‘பெட்டி காலியாக இருந்தது'. உடனே சாதுவை அழைத்தாள்.

‘சாதுவே! என்ன இது? பெட்டி காலியாக இருக்கிறதே!' தந்தையார் சொன்ன இரண்டு நிபந்தனைகளையும் மீறவில்லை. ஆனால், ஆபரணங்கள் மறைந்துவிட்டதே!' என்று கேட்டாள். யோசித்தார் சாது!

‘அரசியே! முதல் நிபந்தனை மீறப்படவில்லை அது எனக்குத் தெரியும். ஆனால், இரண்டாவது நிபந்தனை மீறப்பட்டிருக்கலாம்!' என்றார் சாது.

அரசிக்கு புரியவில்லை. சாது மீண்டும் பேசினார்.

‘அரசியே! இது அரசனின் பரம்பரை ஆபரணங்கள். பரம்பரை வாரிசுகள் மட்டுமே அனுபவிக்க முடியும். நீங்கள் அவரின் மகள். திருமணத்திற்குப் பிறகு உங்கள் கணவரின் பரம்பரையில் இணைந்துவிடுகிறீர்கள்', என்றார் சாது.

‘என் தந்தையின் ராஜ்ஜியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படியென்றால், அவரின் வாரிசும் நான் தானே?' என்றாள் அரசி,

‘அரசியே! உங்கள் பேச்சை மறுக்கமுடியாது. ஆனால், இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. அரசையும், ஆட்சியையும் அனுபவிப்பதால், நீங்கள் அவரின் அரசியல் வாரிசு என்பதும், பெட்டியை திறந்தவுடன் ஆபரணங்கள் மறைந்து போனதால் நீங்கள் அவரின் பரம்பரை வாரிசல்ல என்பதும் தெளிவாகிறது. அரசியல் வாரிசுக்கும், பரம்பரை வாரிசுக்கும் உள்ள வித்தியாசம், உங்கள் ஆட்சிக்கும், பெட்டிக்குள் இருந்த ஆபரணங்களுக்குமுள்ள வித்தியாசமே!', என்றார் சாது.

‘என்ன கண்றாவி இது. எதுவுமே புரியலையே', என்று வெறுப்பாக கேட்டாள் அரசி

‘இதை புரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்திருந்தால், பெட்டியை திறந்திருக்கவே மாட்டீர்கள்', என்றார் சாது.

‘இந்தக் கதையெல்லாம் வேண்டாம். இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கு என்ன வழி? அதைச் சொல்லுங்கள்', என்று கேட்டாள் அரசி.

‘நீங்கள் பெட்டியைத் திறந்தது, ஆபரணங்கள் மறைந்து போனது ஆகியவை நம் இருவருக்கு மட்டுமே தெரியும். ஆகையால், இந்தப் பெட்டியை அதே அறையில் வைத்து மூடுங்கள். ஆபரண பெட்டியைப் பற்றியும், அதிலிருப்பதாக சொல்லப்பட்ட ஆபரணங்கள் பற்றியும் மக்களுக்கு தெரிவியுங்கள். ஆனால், அதில் தற்போது ஆபரணங்கள் இல்லை என்பதை ரகசியமாக வைத்திருங்கள். பிறகு அந்த அறையைச் சுற்றி நிறைய காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்துங்கள்', என்றார் சாது.

‘இதுவும் எனக்குப் புரியவில்லை. ஆபரணங்கள் இல்லாத பெட்டிக்கு எதற்கு காவல்? அப்படி காவலுக்கு ஆட்களை நிறுத்தினால், ஆபரணங்கள் மீண்டும் கிடைக்குமா' என்று கேட்டாள் அரசி.

‘அது ஆபரண பெட்டிக்கான காவல் அல்ல, நீங்கள்தான் அரச பரம்பரையின் வாரிசு என்பதை உணர்த்துவதற்கான காவல்', என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

காலிப் பெட்டியைச் சுற்றி காவலுக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டனர். அரசி விஷயத்தை புரிந்து செயல்பட்டாளா அல்லது சாது சொன்னதற்காக செய்தாளா என்பது நமக்குத் தெரியவேண்டியதில்லை. புரிந்துகொள்ள வேண்டிய ஒரே விஷயம், பரம்பரை உரிமையும், அரசியல் உரிமையும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால், சேர்ந்திருக்கவில்லை என்பதுதான் அது.

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது இதுதான். தான் ஒரு காஷ்மீர் பிராமணன், தத்தாத்ரேயர் கோத்திரத்தை சேர்ந்தவன் என்று சொல்வதற்கு ராகுல் காந்திக்கு கருத்துரிமை உண்டு. ஆனால், வரையறுக்கப்பட்ட சாஸ்திரப்படி அது சரியானதல்ல. அவர் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டுமே, அதை ஏன் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம். சமீபத்திய சட்டீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது வீரத் தியாகி சாவர்க்கர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி.

“பிரிட்டிஷ்காரர்கள் முன் கைகட்டி, மண்டியிட்டு, மன்னிப்புக் கேட்டு விடுதலை பெற்றார் சாவர்க்கர். நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை சொல்லித்தர வேண்டாம்', என்று பேசினார்.

‘என்ன பிதற்றல் இது'. இவரின் பேச்சைத் தொடர்ந்து சாவர்க்கரின் பேரன் அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் மட்டுமே சுதந்திர போராட்ட தியாகிகளா? மற்றவர்கள் தியாகம் மதிக்கப்படக் கூடாதா? சாவர்க்கரைப் பற்றி தமிழகத்தில் அதிகம் தெரியாமல் இருக்கலாம். அந்தமான் சிறையில் 14 ஆண்டுகள் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். பிரிட்டிஷ்காரர்களோடு சாவர்க்கருக்கு எந்த சொந்தப் பிரச்னையும் கிடையாது. அவரின் போராட்டங்கள் எல்லாமே இந்திய விடுதலைக்காகத்தான். சாவர்க்கரை விடுங்கள், நம்ம ஊர் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு காங்கிரஸ் என்ன செய்தது? காங்கிரஸ் சாராத தியாகிகளின் தியாகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன, கொச்சைப்படுத்தப்படுகின்றன. ஆகையால், தியாகத்தை கொச்சைப்படுத்தும் தலைவரின் பேச்சில் குறை கண்டுபிடித்தால் என்ன தவறு?

பிராமணராகிய ராகுல் காந்தியை தமிழகத்தைச் சேர்ந்த திராவிட போராளிகள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது பார்ப்பன எதிர்ப்பு என்பது தமிழகத்துக்கு மட்டுமே, தேசியத்திற்கு இல்லை என்று புதிதாக ஒரு சித்தாந்தம் சொல்லப் போகிறார்களா? அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம் அறிந்து ஓட்டுப்போடு என்று புதிய பரிணாமத்தில் பயணிக்கப்போகிறார்களா?

“இந்துக்களுக்கென்று ஒரு வாக்கு வங்கி உருவானால், காங்கிரஸ்காரர்கள் சட்டைக்கு மேலே பூணூலை அணிவார்கள்', என்ற வீரத் தியாகி சாவர்க்கர் சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது. மொத்தத்தில், தேர்தலை மனத்தில் கொண்டு கோவில் கோவிலாக காவி உடையில் அலையும் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை மத அரசியலை நியாயப்படுத்திவிட்டது.

சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com