திராவிட அரசியலில் தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரப் பகிர்வு உண்டா?

வைகோவின் செயல்பாட்டுக்கும் பா.ரஞ்சித்தின் பேச்சுக்கும் பல்வேறு அமைப்புகளிலிருந்து எதிர்ப்பு வந்தது மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திராவிட அரசியலில் தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரப் பகிர்வு உண்டா?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று திராவிட அரசியலில் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரப் பகிர்வு உண்டா? என்ற கேள்வி எழுப்பியபோது அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் அம்பேத்கர் நினைவு நிகழ்ச்சியில், “ஆணவக் கொலைகள் நடக்கும்போது பெரிய கட்சிகள் யாவும் மௌனமாகவே இருக்கின்றன, அந்தக் கட்சியில் உள்ள தனித்தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய் திறப்பதே இல்லை, பெரிய கட்சிகளின் தலைமைக்கு பயப்பட வேண்டிய சூழ்நிலையிலேயே தனி தொகுதி   பிரதிநிதிகள் இருக்கின்றனர், எனவே தமிழகத்தில் உள்ள 7 மக்களவைத் தனி தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல்கட்சிகள் தங்களுக்குள் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு போட்டியிட வேண்டும். நாங்கள் எல்லோரும் 7 தொகுதிகளிலும் கடுமையாக வெற்றிக்காக உழைப்போம், தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை இருக்கிறது“, என்ற பொருள் பட பேசினார்.

மேற்படி இரண்டு நிகழ்வுகளுக்கும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. வைகோவின் செயல்பாட்டுக்கும் பா.ரஞ்சித்தின் பேச்சுக்கும் பல்வேறு அமைப்புகளிலிருந்து எதிர்ப்பு வந்தது மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய சுட்டுரை கருத்துக் கணிப்பில் ரஞ்சித் பேசியது சாதியவாதம் என்று பெரும்பான்மையோர் தெரிவித்திருப்பதாக அறிவித்தது.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் திராவிட அரசியலில் தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழ வேண்டிய தேவை உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 44 தொகுதிகள் பட்டியல் வகுப்பினருக்காகவும் 2 தொகுதிகள் பழங்குடி வகுப்பினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் 7 மக்களவைத் தொகுதிகள் பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஒதுக்கீடுகள் யாவும் மேம்போக்காகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரப் பகிர்வு என்று தோன்றலாம். ஆனால் மேற்படி தொகுதிகளில் தேர்வு செய்யப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சட்டமன்ற மக்களவை உறுப்பினர்கள் பொதுமக்களுக்கான பிரதிநிதிகளாகவே செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கான சிக்கல்கள் வரும்போது தங்கள் தலைமை சொல்படியே செயல்படுகின்றனரே தவிர தாழ்த்தப்பட்டோரின் உரிமை சார்ந்த கேள்வி நேரங்களில் மௌனமாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.

மேற்படி உண்மைக்குப் பின்வரும் சான்றுகளைச் சொல்லலாம்.

அம்பேத்கர் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்வுகளில் கூட தலைமைக்குக் கட்டுப்பட்டே விழாக்களில் பங்கேற்கின்றனர். துண்டறிக்கைகளிலும் சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் அம்பேத்கர் சிறுமைபடுத்தப்பட்டு அவர் சார்ந்த கட்சிகளின் தலைமையையே பெருமைப்படுத்துகின்றனர். தங்களின் பெயரைக் கூட விழா அழைப்பிதழ்களில் முன்னிலைப்படுத்திக் கொள்ள அச்சப்படுகின்றனர்.

ஆணவக் கொலைகள் நடக்கும்போது  தங்களின் குரலை உயர்த்திக் கொடுப்பது இல்லை.  இந்தச் சூழல்களில் ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கக் கூடத் தயங்குகின்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை மானிய சட்டமன்ற நாடாளுமன்ற விவாதங்களில் கூட தாழ்த்தப்பட்டோர் உரிமை சார்ந்த வினாக்களை எழுப்புவதில்லை.

தாழ்த்தப்பட்டோர் துணைதிட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி யாவும் செலவு செய்யப்படாமல் பல்லாயிரம் கோடி திருப்பி அனுப்பப்படுகிறது. திமுக ஆட்சியில்   அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிகள் யாவும் தாழ்த்தப்பட்டோர் நிதியிலிருந்தே எடுத்துச் செலவிடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள காவல்துறை கட்டடங்களும் ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதிகளும் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே எடுத்துச் செலவு செய்யப்பட்டுள்ளன. (குறிப்புதவி- முன்னாள் விடுதலைச்சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை அவர்களின் சட்டமன்ற உரை அவைக் குறிப்பு)

சென்னையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் தேவையான பணியாளர்களோ அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்களோ இல்லை என்ற குற்றச்சாட்டு இன்றும் உள்ளது. இந்த ஆணையம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகளின் போது தனித்துச் செயல்பட முடியாது. அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிகிறதே தவிர, நேரடையாக பாதிப்பு ஏற்படுத்திய ஆதிக்க ஜாதியினரை விசாரணைக்கு அழைக்கும் அதிகாரம் இல்லாமல் இருக்கிறது. ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே தாழ்த்தப்பட்டோரின் ஆணையம் செயல்பட வேண்டிய சூழலை எதிர்க்க முடியாமல் தனித்தொகுதி பிரதிநிதிகள் இருக்கின்றனர்.

திறமைகள் இருந்தும் உதவிகளும் முறையான பயிற்சிகளும் கிடைக்காததால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பல விளையாட்டு வீரர்கள் அடுத்தகட்டத்திற்கு நகர முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் விளையாட்டுச் சங்க அதிகாரப் பதவிகளில் தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவதில்லை என்பதுதான். இங்கு அதிகாரப் பதவிகளைக் கேட்கிற உரிமைக்குரல் எழுப்பவும் தயங்குகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறையில் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் நிதியிலிருந்து தாழ்த்தப்பட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சி, ஊக்கப்படுத்தல் போன்ற திட்டங்களுக்காக நிதி ஒதுக்கலாம் என்ற கோரிக்கை வைக்கவும் தயங்குகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் உள்ள 23 பதவிகளில் ஒன்று கூட தாழ்த்தப்பட்டவருக்கு இல்லை என்பது பற்றியும் இவர்களுக்குக் கவலையில்லை.

ஆதிக்க ஜாதியினருக்கும் சிறுபான்மையினருக்கும் சொந்தமாக அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் இருப்பது போல் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் 1 சதவிகிதம் கூட தமிழகத்தில் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் பிற ஆதிக்க ஜாதியினருக்குக் கை மாறியிருக்கிற சூழலில் அவற்றை மீட்டெடுக்க எவ்வித சட்டம் இயற்றச் சொல்வதற்கும் தனி தொகுதி பிரதிநிதிகள் தயாராக இல்லை.

திராவிடக் கட்சிகளின் அதிகாரப் பதவிகளாகக் கருதப்படும் மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் போன்ற பதவிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பதவிகள் வழங்கப்படுவதில்லை.

திராவிடக் கட்சிகள் அமைக்கும் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் மிக்க துறைகள் வழங்கப்படாதது மட்டுமின்றி, ஓரிரண்டு துறைகளே ஒதுக்கப்படுகின்றன. மாநிலங்களவை உறுப்பினர் தேர்வுகளிலும் தாழ்த்தப்பட்டோர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

தனி தொகுதிகளின் நகர, ஒன்றிய, மாவட்டப் பதவிகள் கூட தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் தன் சொல்லை கேட்பவரையே தனி தொகுதி வேட்பாளர்களாகப் பரிந்துரைக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது.  அம்பேத்கரியம் பேசுபவர்களுக்கு அதிகாரப்பதவிகளைத் தங்கள் கட்சிகளில் வழங்கப்படுவதில்லை. தனி தொகுதி வேட்பாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் அந்த வேட்பாளரைத் தீர்மானிப்பது கட்சித் தலைமையே.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கட்சிகளிலுமே தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரப் பகிர்வு இல்லை என்பதே உண்மை. அரசியல் கட்சிகளின் அதிகாரப் பதவிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற தேர்தல் சீர்திருத்தத்திற்குக் குரல் கொடுக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காக்கின்றனர்.

தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுகிறதா என்ற கேள்வியை வைகோ அவர்களிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் எழுப்பிய கேள்வி என்பது மாயையே. ஏனெனில் எவ்விதமான அரசியல் அதிகாரமும் இல்லாத மதிமுக பொதுச் செயலாளரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதை விட எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் போன்றோரிடம் கேட்டிருக்க வேண்டும். இதனால் இந்தக் கேள்வியின் ஆழமும் பொருளும் திசைதிருப்பப்பட்டு வைகோ மீதான எதிர்ப்புச் சிந்தனையாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகளின் வன்னியரசே காரணமாகிப் போனார். விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வைக்கப்போகும் பெரிய திராவிடக்கட்சியிடம், தங்கள் கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரப் பதவிகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளனவா? குறைந்தபட்சம் 19 சதவிகிதமாவது? என்று வன்னியரசு இந்தக் கேள்வியை எழுப்பி பதிலைப் பெறுவாரா என்று தெரியவில்லை.

ஆர் கே நகரில் அஇதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தோற்கடித்த டிடிவி தினகரன் தமிழகத்தின் முதல்வராகத் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நியமிக்கலாம் என்று கூறியது கூட அதிமுகவைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் திட்டமே தவிர, தாழ்த்தப்பட்ட ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் எண்ணத்தினால் அல்ல. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் முதலிலிருந்தே இந்தக் கருத்தைச் சொல்லியிருக்க வேண்டும். அருந்ததியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிடிவி தினகரன் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவிற்கும் அருந்ததியர்கள் விசுவசாமாக இருந்தது போல் இனியும் எங்களுக்காக அந்த நிலை தொடர வேண்டும் என்று கூறுகிறார். அதாவது அச்சமூகத்தினர் தொடர்ந்து நன்றிக்கடன் பட்டவர்களே என்று நினைப்பது அடிமைத்தனத்தை நிலைநிறுத்தும் முயற்சியே தவிர அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் எண்ணத்தினால் அல்ல.

இரட்டை வாக்குரிமை என்பது அண்ணல் அம்பேத்கரின் கோரிக்கையாக இருந்தது. தாழ்த்தப்பட்டோரின் மக்கள் பிரதிநிதியைத் தாழ்த்தப்பட்டோரே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் இரட்டை வாக்குரிமை முறையின் அடிப்படை நோக்கம். இந்தக் கோரிக்கையானது இந்துக்களைப் பிரித்துவிட வேண்டும் என்று கூறி 1932 ல் காந்தியடிகள் பூனாவில் உள்ள எரவாடியில் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை அண்ணல் அம்பேத்கர் கைவிட்டுத் தனி தொகுதி முறைக்கு பூனா ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டார்.

இதே இரட்டை வாக்குரிமை முறை வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைச்சிறுத்தைகள் போராட்டம் நடத்தியது. ஆனால் இன்றோ ரஞ்சித் பேச்சுக்கு எதிராகக் கருத்தைத் தெரிவிக்கிறது. இந்தக் கொள்கைப் பிறழ்ச்சிக்குக் காரணம் பெரிய கட்சியோடு கூட்டணி வேண்டுமே என்ற அச்சமே காரணம் என்று தோன்றுகிறது.

ரஞ்சித்தின் கோபம் என்பது தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான போராட்டத்தின் இன்னொரு வடிவமாகவே கருதப்பட வேண்டியதே. இப்போதைக்கு இருக்கும் தேர்தல் முறையை மனதில் கொண்டு தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளை ஒருங்கிணைக்க குரல் கொடுத்திருக்கிறார். அவரின் குரல் ஏற்கப்படுமா? புறக்கணிப்படுமா? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் இது போன்ற வித்தியாசமான போராட்டக் குரல்களைப் பேசவே கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகளே தடுப்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

ரஞ்சித் பேசியது குறித்துத் தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தனியரசு அவர்கள் வன்னியர் ஓட்டு அன்னியர்க்கு இல்லை, முதலியார் ஓட்டு முதலியாருக்கே கொங்குவேளாளர் ஓட்டு கொங்கு வேளாளருக்கே என்று பேசுவதற்கும் ரஞ்சித் பேசுவதற்கும் வித்தியாசம் இல்லை என்று கூறுகிறார்.

ஆனால் தனியரசு கூறுவது போல் எந்த ஜாதிப் பெயரையும் குறிப்பிட்டு ரஞ்சித் பேசிவிடவில்லை. எஸ்சி எஸ்டி என்பது ஜாதி அடையாளமோ பெருமையோ அல்ல. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஏற்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தொகுப்பு, எவ்விடத்திலும் ரஞ்சித் தனது ஜாதிப் பெயரையோ ஜாதி அடையாளத்தையோ வெளிபடுத்தவேயில்லை.  

எஸ்சி எஸ்டி என்ற சொல்லோ தலித் என்ற மராட்டியச் சொல்லோ, தாழ்த்தப்பட்டோர் என்ற ஒடுக்கப்பட்ட அடையாளச் சொல்லோ ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிப்பிடுவது அல்ல. சுயஜாதி ஒருங்கிணைப்பைப் பேசுவதற்கும் ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எஸ்சிஎஸ்டி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தைத் மறைத்து மறுத்து ரஞ்சித்தின் பேச்சை ஜாதியவாதம் என்பது திட்டமிட்ட உரிமைச் சுரண்டல்.  

திராவிட அரசியலைச் சீர்குலைக்க தமிழ்த்தேசியத்தைச் சீமான் கையில் எடுத்ததைப் போல் அம்பேத்கரியத்தை ரஞ்சித் கையில் எடுத்திருக்கிறார். என்றும் ரஞ்சித்தின் நோக்கம் என்பது திராவிட அரசியலின் நிலைத் தன்மையை உடைத்தெறியும் செயல் என்று சில பெரியார் போர்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

தாழ்த்தப்பட்டோரின் சுயமரியாதை, முன்னேற்றம் ஆகியவற்றிற்காகப் பெரியார் உழைத்ததை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் ஆதிக்க ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு அதன் வலிமையை உணர்பவர்கள் தங்கள் குரலை உயர்த்தும்போது, தங்களுக்கான போராட்ட முறைகளைத் தேர்வு செய்யும்போது அது தேவையற்றது, மிகையானது என்றும் திராவிட அரசியலைச் சீர்குலைக்கவே தாழ்த்தப்பட்டோரியம் பேசப்படுகிறது என்றும் பெரியார் போர்வையாளர்கள் கூறுவது ஒருவகையான அடக்குமுறை தான்.

இரட்டை வாக்குரிமை கோரிக்கையின் போது காந்தியடிகள் பட்டினிப் போராட்டம் நடத்திய நிலையில். ரஷ்யாவில் இருந்த பெரியார்,  “தாழ்த்தப்பட்டோரின் உரிமையே முதன்மையானது அதை விட்டுக் கொடுக்காதீர்கள் தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகளைத் தாழ்த்தப்பட்டோரை தேர்வு செய்யக் கோருவது நியாயமான உரிமை, ஆதிக்க ஜாதியினரால் தேர்வு செய்யப்படுபவர் அடிமையாகவே இருப்பார்“, என்ற பொருள்பட அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “தாழ்த்தப்பட்டோரை அனைவரும் மதிக்க வேண்டும் என்றால் சாதாரண கான்ஸ்டபிள் முதல் சப் இன்இஸ்பெக்டர் வரை தாழ்த்தப்பட்டவரை குறைந்தது இருபது ஆண்டுகள் பணியில் நியமிக்க வேண்டும்“ என்று பெரியார் கூறியிருக்கிறார். பெரியாரின் மேற்படி அறிவுரையைத் திராவிடக் கட்சிகள் ஏற்கவில்லை என்பதே உண்மை. தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை முதன்மை நோக்கமாகக் கொண்ட பெரியாரின் சிந்தனைக்கு எதிராகவே இன்றைய பெரியாரியப் போர்வையாளர்களின் குரல் ரஞ்சித்திற்கு எதிராக இருக்கிறது.

ஆடுகள் ஒருங்கிணைவதற்கும் வேட்டைநாய்கள் ஒருங்கிணைவதற்கும் வித்தியாசம் உண்டு என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்படுகிற வகுப்பினர் ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என்ற ரஞ்சித்தின் குரலை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

சொந்த மகளையே மொட்டையடித்துக் கைகால்களைக் கட்டி உயிரோடு ஆற்றில் தூக்கி வீசிக் கொடுமையாக் கொல்லும் அளவிற்குக் கொடூர ஜாதி ஆதிக்கம் தொடர்கிற சூழலில் இன்னும் தமிழகம் என்பது பெரியார் பூமி என்று பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான குரல் தான் ரஞ்சித்துடையது. திராவிட அரசியல் பேசுவோரும் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் சுயஜாதி அடையாளத்தைத் திணிப்பது தொடர்கிறது.  இவர்களைப் பெரியார் போர்வையாளர்கள் என்று சொல்வதில் தவறேயில்லை.  சுயஜாதிப் பெருமை பேசி சுயஜாதிச் சங்கங்களைக் கட்டமைத்து அதிகாரப் பதவிகளை மறுத்துத்  தாழ்த்தப்பட்டோரை இன்னமும் அடிமைகளாக நினைப்பது தமிழக அரசியலில் குறிப்பாகத் திராவிட அரசியலிலும் தொடர்ந்து கொண்டே இருக்குமானால் ரஞ்சித்தின் குரல் நியாயமானதே.

சி.சரவணன் 9360534055 senthamizhsaravanan@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com