இவர்களின் மரண ஓலம் கேட்கிறதா? உடம்பை மறைக்கச் சரியான ஆடைகூட இல்லாமல் தவிக்கும் அடிமைப் பெண்கள்!

தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள்.
இவர்களின் மரண ஓலம் கேட்கிறதா? உடம்பை மறைக்கச் சரியான ஆடைகூட இல்லாமல் தவிக்கும் அடிமைப் பெண்கள்!

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 11-01-2018 அன்று ஒரு முக்கியமான உத்தரவை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசின் தலைமை செயலருக்கும் அளித்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் விசைத்தறி ஆலையில் கொத்தடிமைகளாக தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தில் 6  வயது சிறுமி மின்கம்பி வேலியில் சிக்கி இறந்து போன சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுக்காவில் உள்ள நொச்சிக்குட்டை கிராமம் பொன்மேடு காலனியில் வசிக்கும் பாலசுப்பிரமணி என்பவர் தன் மனைவி கருப்பம்மாள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர் வந்துள்ளார். கொத்தடிமைகளை விசைத்தறி ஆலைகளுக்கு சப்ளை செய்யும் ஒரு இடைத்தரகர் மூலம் இவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் தாலுக்காவில் உள்ள காடுவெட்டி பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு விசைத்தறி ஆலையில் சேர்க்கப்பட்டார்கள். 

விசைத்தறி ஆலை வளாகத்திற்குள்ளேயே இக்குடும்பத்திற்கு எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத மிகச் சிறிய அறை அளிக்கப்பட்டு அங்கு இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். ஒரு சிறிய தொகை இக்குடும்பத்துக்கு வழங்கப்பட்டு அத்தொகையைத் திருப்பி செலுத்தும் வரை இந்த அறையில் தான் தங்கி தினமும் 12 மணி நேரம் கணவன், மனைவி இருவரும் வேலை செய்ய வேண்டும் என்பது விசைத்தறி முதலாளியின் கட்டளை. அந்த அறையிலேயே இந்தக் குடும்பத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழிந்தது. இவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நேரிட்டால் குழந்தைகளை அழைத்துச் செல்ல கூடாது என்பது கொத்தடிமை குடும்பத்துக்கும், ஆலை முதலாளிக்கும் நடுவில் போடப்பட்ட வாய்மொழி ஒப்பந்தமாகும். இரண்டு வருடம் கழித்து, செய்து கொண்ட ஒப்பந்தத்தால் 30-08-2014 அன்று கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாமல் அவர்களை விசைத்தறி ஆலை வளாகத்திற்குள்ளேயே விட்டு இவர்கள் மட்டும் ஊருக்குச் சென்றுள்ளனர். 

சிறுமியின் குடும்பம்
சிறுமியின் குடும்பம்

அன்று மாலை பெற்றோர்கள் ஊருக்குச் சென்று விட்ட நிலையில் மின் கம்பி வேலிக்கு அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அறியாமல் மின் கம்பி வேலியை 6 வயது பெண் குழந்தை நந்தினி தொட்டதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தாள். சொந்த ஊருக்குச் சென்ற பெற்றோர்கள் தகவல் அறிந்து விசைத்தறி ஆலைக்குச் சென்று பார்க்கும் பொழுது தனது குழந்தை மின் கம்பி வேலியருகில் இறந்து கிடப்பதை பார்த்துக் கதறி அழுதனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக விழுதுகள் அமைப்புக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து உடனடியாக விழுதுகள் அமைப்பிலிருந்து 5 பேர் கொண்ட குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை விழுதுகள் குழுவினர் நேரில் சென்று பார்த்ததும் உடனடியாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கும், வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் அவர்களுக்கும் போன் மூலம் தகவல் அளித்தனர். இதை அறிந்த விசைத்தறி ஆலை முதலாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவச்சென்ற குழுவினரை தாக்க முயன்றனர். தகவல் அளித்து மூன்று மணி நேரம் கழித்து காவல் நிலையத்தினர் சுமார் 9 மணிக்குச் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அரசு அதிகாரிகள் காட்டிய அலட்சியம்:

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை புகாராக அளித்தனர். இறந்த குழந்தையின் சடலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக கோயமத்தூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாருக்குரிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம் 1976-ன் படியும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும் வழக்குப் பதிவு செய்யவில்லை. கோட்டாட்சியர் அவர்களும் உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட கொத்தடிமை குடும்பத்துக்கு விடுதலைச் சான்று அளிக்கவில்லை. 

சிறுமி நந்தினி
சிறுமி நந்தினி

இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட கொத்தடிமை குடும்பத்தினர் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்யக்கோரி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை வாங்காமல் போராட்டம் செய்தனர். அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு கோயமத்தூர் அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து விடுதலைச் சான்று வழங்குவதாக உறுதியளித்ததை நம்பிய பாதிக்கப்பட்ட கொத்தடிமை குடும்பம் சடலத்தை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்று அடக்கம் செய்தனர். ஆனால், காவல் துறையினரும், கோட்டாட்சியரும் உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு விடுதலைச் சான்று வழங்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்த அந்தக் குடும்பம் விழுதுகள் அமைப்பின் இயக்குநர் திரு.எம். தங்கவேல் அவர்களின் மூலம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் உரிய நடவடிக்கையும் நீதியும் வேண்டி புகார் அளித்தனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படியே  கடந்த 11-01-2018 அன்று இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை அளித்துள்ளது. 

கொத்தடிமை ஒழிப்பு பற்றிய இந்திய அரசியல் சாசனம்: 

நம் நாட்டில் கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும்  நோக்கத்தில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதியன்று  கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் 1976  கொண்டு வரப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு 42 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் அடிமை முறையும் கொத்தடிமை முறையும் தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்ட உரிமைகளைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்தாமல் அடிமை முறையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு ஆதரவாகச் செயல்படுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு செயல்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களில் என்னென்ன இருக்கின்றன. இருளில் மின்னும் விண்மீன்களின் எண்ணிக்கை என்ன? இனி வருங்காலங்களில் நோயே இல்லாத உயிரினத்தை உருவாக்க முடியும்.  ஒருவரைப் போலவே இன்னொருவரை உருவாக்க முடியும் என்றெல்லாம் மனிதன் விஞ்ஞானத்தின் துணை கொண்டு அற்புதங்கள் நிகழ்த்தும் சாதனைகளைக்கொண்டு மனித சமுதாயம் பெருமிதம் கொள்கின்றது. ஆனால், இவ்வளவு உயர்ந்த மனித சமுதாயத்தின் லட்சக்கணக்கான மக்கள், நாளெல்லாம் உழைத்தும், உழைப்பின் பயன் கிட்டாமல் கடனுக்கு ஆளாகி, வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, உண்பதற்கு போதிய உணவின்றி, மானத்தை மறைத்திட தேவையான ஆடைகளின்றி, தான் பெற்ற மழலைச் செல்வங்களுக்கு கல்வி அளிக்க முடியாமல், மருத்துவம் செய்யா வழியில்லாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அடிமையாய் வாழ்ந்து வரும் மக்களும் மனித சமுதாயத்தின் ஒரு பகுதிதான், இப்படி அடிமையாக நடத்தும் மக்களும் மனித சமுதாயத்தின் ஒரு பகுதிதான், இந்த நிலையை ஒழுங்குபடுத்தி, சட்டத்தின் துணை கொண்டு மனித மாண்பினையும், மனித உரிமைகளையும் நிலை நாட்ட வேண்டியவர்கள் தங்களது கடமைகளை மறந்து, அடிமை முறையைக் கையாளுவோரின், செயலுக்கு நீரூற்றி வளர்த்து வருகிறார்களே, அவர்களும் மனித சமுதாயத்தின் ஒரு பகுதிதான் என்று எண்ணும்போது, உண்மையில் நாம் இருபதாம் நூற்றாண்டிற்கே திரும்பி விட்டோமா? என்கிற கேள்வி எழுகிறது.

கொத்தடிமைகளின் மரண ஓலம்:

நமது பாரதத்தை குடியரசாகப் பிரகடனம் செய்து அரசியல் சாசனத்தை வெளியிட்டார்களே, அப்போது கூறினார்கள், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வியில், வேலைவாய்ப்பில், மருத்துவத்தில், குடிநீரில், சாலைகளில், மின்சாரத்தில் என்று அனைத்திலும் தன்னிறைவு பெற்ற நிலை உருவாக்கப்படும், மக்களுக்குக் குறைவின்றி அனைத்தும் கிடைத்துவிடும் என்று. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று 7௦ ஆண்டுகளுக்குப் பின்னும் கேட்கும் அவலக்குரல் அடிமை நிலையிலிருந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... எனக் கதறுகின்றனர். அடிமைகளின் குரலின் உண்மை நிலையறிய குறிப்பாகத் தமிழகத்தின் உண்மை நிலையறிய.  1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனதுஆய்வறிக்கையில் தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள். ஆதியில் நிலவிய அடிமைத்தனத்தை உணர்ந்துதான் அரசியல் சாசனம் பிரகடனம் செய்தபோதே அடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. 1976-ல் கொத்தடிமை முறை ஒழிப்புக்காக ஒரு சட்டமே இயற்றப்பட்டு மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம் என்று அழுத்தந் திருத்தமாக சொல்லப்பட்டது. ஆயினும் தொழிலாளர்களை சங்கிலியால் கட்டியா வேலை வாங்குகின்றார்களா? இல்லை அடைத்து வைத்து இருக்கின்றார்களா? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இது என்ன கேள்வி? அடிமை முறை குறித்து புரியாதவர்களால் எவ்வாறு பிரச்சனையை தீர்க்க முடியும்? அடிமை முறைக்குப் பலவித அர்த்தங்கள் கூறப்படுகின்றன. உண்மையில் அடிமை முறை என்றால் என்ன?

அடிமை முறை இன்று நேற்று தோன்றியதல்ல. என்று மனிதன் தோன்றினானோ அன்றே அடிமை முறையும் தோன்றி விட்டது.  ஆரம்பத்தில் வலிமையுள்ளவரின் உடல் பலத்துக்கு மட்டும் பயந்து அடிமையாக வாழ்ந்த மனிதன், காலப்போக்கில் கொடுக்கல், வாங்கலுக்காக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டதும், பணத்துக்காகவும் அடிமையாக வாழ வேண்டிய கட்டாயம் தோன்றியது.

அடிமைகள் பல விதம்:

சாதிய அடிப்படையில் அடிமை, பரம்பரை அடிப்படையில் அடிமை, பணத்துக்காக அடிமை, விலைகொடுத்து வாங்கியதால் அடிமை என்று பலவிதமான வழிகளில் கொத்தடிமை முறை கையாளப்பட்டு வந்தது. கொத்தடிமை நிலையில் வைக்கப்பட்டு இருப்பவர்கள் ஊதியம் ஏதுமின்றி தானியத்துக்கும், உயிர் வாழ இரண்டு வேளை உணவுக்கு மட்டுமே ஆசைப்பட முடியும். இதில் அடிமை முறை தன்னுடைய தலையெழுத்து என்றுநம்பி அடங்கிக் கிடப்பவர்கள் சற்று சுதந்திரமாக நடமாடமுடியும். மாறாக எதிர்ப்பு தெரிவிக்க நினைப்பவர்கள் எல்லாம் கழுத்தில் வளையத்தோடு கையில் ஒரு இரும்புக் குண்டு அல்லது கால்களில் சங்கிலிகளோடு, கையில் இரும்புக் குண்டு என்ற தடைகளோடுதான் நடமாடமுடியும்.  அவர்கள் உழைக்கும் நேரங்களுக்கு வரம்பு இல்லை. எந்த நேரமும் முதலாளி அழைக்கிறாரோ, உடனே ஐயா என்று குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல் சாட்டைதான் பேசும். இது அந்த கால அடிமை முறை.


காலத்தின் போக்கில் அனைத்தும் நவீனப்பட்டது போல் கொத்தடிமை முறையும் நவீன பட்டுவிட்டது.  கழுத்திலும், காலிலும் விலங்கிட்ட நிலை மாறி, நாகரீகமாக உடையணிந்து நடமாட அனுமதிக்கப்படுகிறது.  பழைய உணவை எருமை சாணிக்கு நடுவிலே உண்ண வேண்டிய கொடுமை மாறி, வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து உண்ணவும் அனுமதிக்கப்படுகிறது.

எதிர்க்க நினைத்தால் கையெழுத்திட்ட வெற்று பத்திரம் பேசும்:

ஆனால், முதலாளியால் கொடுக்கப்பட்ட முன் பணம் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் தொடர்ந்து அங்கேயே வேலை செய்தாக வேண்டும், தொடர்ந்து வேலைக்கு வர வேண்டும், விடுமுறை எடுக்கக்கூடாது, கொடுக்கும் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  மறுத்துப் பேசினால் அடி, உதை நிச்சயம் அல்லது பொய்யான புகாரின் பேரில் தண்டிக்கப்பட நேரிடும்.  இதற்கு உறுதுணையாக வெற்று புரோநோட்டு, வெற்று பத்திரங்கள் ஆகியவற்றில் குடும்ப தலைவன், மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று ஒரு கூட்டத்திடமே கையெழுத்து வாங்கி வைத்திருப்பார்கள்.  தொழிலாளி எப்போது எதிர்க்க நினைகிறானோ அப்போது அந்த ஆவணங்கள் பேசும்.  இப்படி கையொப்பம் பெற்ற வெற்று புரோ நோட்டுக்களைப் பயன்படுத்தி வழக்கு தொடர்ந்து தொழிலாளிக்குச் சொந்தமாக இருக்கும் மூதாதையர்களால் வழங்கப்பட்ட நிலம், வீடு போன்ற சொத்துக்கள் கைப்பற்றப்படும். வெற்று பத்திரங்களில் இட்ட கையெழுத்துக்களை பயன்படுத்தி சொத்துக்களை எழுதித் தந்ததாகவும், அடகு வைத்ததாகவும், ஆவணங்கள் தயாரித்து சொத்துக்கள் அபகரிக்கப்படும்.  இறந்து போன கணவன் பட்ட கடனுக்காக மனைவி அடிமையாகி கட்டாய உழைப்பிற்கு ஆளாவது உண்டு.  அது போல தகப்பன் பட்ட கடனுக்காகப் பிள்ளைகள் அடிமையாக உழைக்க நேர்வதும் உண்டு. இது இந்தக்கால கொத்தடிமை முறை.

கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பஞ்சாலை, விசைத்தறி ஆலை நூற் பாலை மற்றும் பின்னலாடை தயாரிப்பு ஆலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர். போதிய தங்குமிடம், சுகாதாரமான குடிநீர் உணவு கிடைப்பதில்லை.  இதிலும் குறிப்பாக 20 வயதிற்குட்பட்ட இளம் பெண் தொழிலாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்த இரு மாதங்களில் மட்டும்3  இளம் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது இறந்துள்ளனர். மேற்கண்ட தொழில்களில் நவீன கொத்தடிமை முறையில் சிக்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். சட்டமும் அரசும் நவீன கொத்தடிமை முறையிலிருந்து தொழிலாளர்களை மீட்பதும் மறுவாழ்வு அளிப்பதும் அவசியமானதாகும்.

M. தங்கவேல்,
விழுதுகள் அமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com