மாவீரன் மதன்லால் திங்ரா: இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதல் படுகொலை

யார் இந்த மதன்லால் திங்ரா? பஞ்சாப் மாநிலத்தில் 1883ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் பிறந்தவன். இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவன்.
மாவீரன் மதன்லால் திங்ரா: இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதல் படுகொலை

யார் இந்த மதன்லால் திங்ரா? பஞ்சாப் மாநிலத்தில் 1883ம் ஆண்டு பிப்ரவரி 8ம் நாள் பிறந்தவன். இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவன்.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட முதல் படுகொலை ஆங்கிலேயன் கர்சான் வைலி'யுடையது. லண்டனில் இருந்த இந்திய மந்திரியின் வலதுகரமாக செயல்பட்டவன் கர்சன் வைலி. இந்த தீரச்செயலை நிகழ்த்தியது மதன்லால் திங்ரா. ஆங்கிலேயர்கள் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்திய மாவீரன்.

திங்ராவிற்கு அப்போது வயது 22. இந்தியாவில் இருந்தபோது ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தான். சில காலம் ‘டோங்கா' என்று அழைக்கப்படும் பயணிகள் வண்டியை இழுக்கும் பணியை செய்தான். சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக பணியாற்றினான். அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க முயற்சித்த போது நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்பட்டான். திங்ரா எந்த வேலையாக இருந்தாலும் தன்மானம் பார்க்கமல் செய்வான். நேர்மை மீதும், தேசத்தின் மீதும் அபார நம்பிக்கை கொண்டவன். திங்ரா வேலை இழந்ததும் அவருடைய அண்ணன் வருத்தமடைந்தார். இனி திங்ராவிற்கு இந்தியா ஒத்துவராது', என்று நினைத்தார். மேல் படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பினார். அங்கு மெக்கானிக்கல் இன்ஜியரிங் படிப்பில் சேர்ந்தான் திங்ரா. இதற்காக ஆகும் செலவை அவர் அண்ணனும், சில தேசபக்தர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

லண்டனில் சாவர்கர் ஏற்படுத்திய ஃப்ரி இந்தியா சொஸைட்டியிலும், ரகசிய இயக்கமான அபிநவ் பாரத் இயக்கத்திலும் சேர்ந்தான் திங்ரா. சாவர்க்கர், வ.வே.சு ஐயர், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா போன்றவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தான். லண்டனில் செயல்பட்டுவந்த ‘இந்தியா ஹவுஸிலும்' உறுப்பினர். திங்ராவை சாவர்க்கருக்கும் மிகவும் பிடிக்கும். திங்ராவின் தேசபக்தியும், வேகமும், சாவர்க்கரை ஆச்சர்யப்பட வைத்தது. நாட்கள் செல்லச் செல்ல திங்ராவிற்கு பயங்கரவாதத்தில் நாட்டம் அதிகமானது. லண்டனில் ஆயுதப்பயிற்சி சாலை ஒன்றில் சேர்ந்து தீவிர பயிற்சி பெற்றான். துப்பாக்கியை கையாள்வதில் தேர்ச்சி பெற்றான். திங்ராவிற்கு வாய்ப்பந்தல் போடும் ஆசாமிகளை பிடிக்காது. எந்த விஷயமாக இருந்தாலும், பேச்சைவிட செயலே அவசியம் என்று வாதிப்பான்.

1905 - ம் வருட லார்ட் கர்ஸன் செய்த வங்கப் பிரிவினை சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. பிரிட்டிஷ் வைசிராய் லார்ட் கர்ஸ்ன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை கிழக்கு வங்காளம் என்றும், இந்துக்கள் வசிக்கும் பகுதியை மேற்கு வங்காளம் என்றும் பிரித்தார். இந்து - முஸ்லிம் வேற்றுமையை இது மேலும் அதிகப்படுத்தியது. இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து அதில் குளிர்காய்ந்தது ஆங்கிலேய அரசு. இதை எதிர்த்து பல இடங்களில் கிளர்ச்சி நடைபெற்றது. 1909-ம் ஆண்டு, லார்ட் கர்ஸன் லண்டனுக்கு வந்தார். இது சரியான தருணம். கர்ஸனை கொன்று பிரிட்டிஷ் அரசுக்கு நமது எதிர்ப்பை காட்டவேண்டும் என்று நினைத்தான் மதன்லால் திங்ரா. ஆனால், கர்ஸனை நெருங்க முடியவில்லை. பாதுகாப்பு பலமாக இருந்தது. லார்ட் மார்லி'யின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினான் திங்ரா. அவரையும் நெருங்க முடியவில்லை. கடைசியாக கர்சான் வைலி'யை கொல்வது என்று முடிவு செய்தான். இந்தியாவிற்கான மந்திரிக்கு வலதுகரமாக இருந்தவன் ‘கர்சான் வைலி'. தனது திட்டத்தை வ.வே.சு ஐயர் மற்றும் சாவர்க்கரிடம் சொல்லி அவர்களின் ஆசியைப் பெற்றான்.

ஜுலை 1, 1909 அன்று லண்டனில் ‘இந்தியன் நேஷனல் அசோசியேஷன்' வருடாந்திர கொண்டாட்டத்திற்கு சர் கர்சன் வைலி தனது மனைவியுடன் வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இந்தியர்களும், ஆங்கிலேயர்களும் கலந்து கொண்டனர். விழா முடிந்து கர்சன் வைலி தன் மனைவியுடன் கூட்ட அரங்கைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது மணி இரவு 11.20. கர்சன் வைலியை நெருங்கினான் திங்ரா. அவரிடம் ஏதோ சொல்ல முற்பட்டான். திங்ராவின் பேச்சைக் கேட்க அவரும் குனிந்தார். தன் வலதுபுற கோட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை கர்சன் வைலி யின் முகத்தை நோக்கி சுட்டான். நான்கு குண்டுகள் முகத்தில் பாய்ந்தது. பக்கத்தில் நின்றிருந்த கவாஸ்ஜி லால்காகா என்ற டாக்டர், பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர், பாய்ந்து வந்து திங்ராவை தடுக்க முயற்சித்தார். அவரின் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இரண்டு பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். திங்ரா தப்பி ஓடவில்லை. துப்பாக்கியை கையில் பிடித்தவரே அப்படியே நின்றான். பிரிட்டிஷ் அரசு ஸ்தம்பித்துப் போனது. இருபதாம் நூற்றாண்டில், இந்திய சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட முதல் கொலை அது. அது நாள்வரை சுதந்திரமாக சுற்றித் திரிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், முதல்முறையாக தங்கள் பாதுகாப்பைப் பற்றி நினைக்கத் தொடங்கினர்.

கர்சன் வைலியை சுட்டவுடன் அங்கிருந்த போலீஸ் திங்ராவை கீழேதள்ளி படுக்க வைத்தது. இதில் அவனுடைய கண்ணாடி கீழே விழுந்தது. போலீஸ் அவனிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கியது. கைகளை பின்புறமாக மடக்கி, அவனைத் தூக்கி நிறுத்தியது. திங்ரா என்ன பேசப்போகிறான் என்று எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், ‘என்னுடைய கண்ணாடியைக் கொடுங்கள்', என்றான். கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டு அமைதியாக நின்றான். டாக்டர்கள் அவனுடைய நாடித் துடிப்பை பரிசோதித்தார்கள். அவனிடம் எந்த பதட்டமும் காணப்படவில்லை.

‘உன்னை கைது செய்கிறோம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் யாருக்காவது தெரிவிக்க வேண்டுமா?', என்று கேட்டார் ஒரு போலீஸ் அதிகாரி.

‘தேவையில்லை. என்னுடைய கைது பற்றி நாளைய செய்தித்தாளை படித்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்', என்றான் அமைதியாக. காவல்துறை அவனை வால்டன் ஸ்டிரீட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தியர்களின் வீரத்தை வெளிக்காட்ட வேண்டும் என்று சொன்ன சாவர்க்கரும், வ.வே.சு ஐயரும் திங்ரா பிடிபட்டதை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார்கள். உடனே வ.வே.சு ஐயரும், டாக்டர் ராஜனும் சிறைச்சாலைக்கு சென்று, திங்ராவை சந்தித்தனர். வழக்கறிஞர் ஒருவரை வைத்து வாதிடலாம் என்று அவர்கள் சொன்னார்கள். திங்ரா அதை மறுத்துவிட்டான். ‘இந்த காரியத்தில் இறங்குமுன், விளைவுகளை தெரிந்துகொண்டுதான் இறங்கினேன். இனி தேசத்திற்காக உயிரை விடும் நாளை மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்', என்றான் திங்ரா

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜுலை 3-ம் தேதி லண்டனில் கர்சன் வைலி கொலையைக் கண்டித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். திங்ராவின் செயலை கண்டிப்பதன் மூலம், ஆங்கிலேயர்களிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் நினைப்பு. திங்ராவின் தந்தை தன் மகனின் செயலை கண்டித்து, ‘அவனை மகனாகப் பெற்றதற்கு வெட்கப்படுகிறேன்', என்று ஒரு தந்தி அனுப்பியிருந்தார். வெள்ளையர்கள், உளவாளிகள், இந்தியாவில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் அதிகாரிகள் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் திங்ராவை தங்கள் பங்குக்கு திட்டித் தீர்த்தனர். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸின் ஆங்கிலேய ஆதரவு முகம் அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு குணம் உண்டு. தங்களைத் தவிர மற்றவர்களின் வளர்ச்சியோ, மற்றவர்களுக்கு பெருமையோ போய்ச்சேர்ந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. இதுதான் சரியான தருணம் என்று காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட தலைவர்கள் சுரேந்திர நாத் பானர்ஜி, பிபின் சந்திர பால், காப்ர்டே, பவநகரி ஆகியோர் திங்ராவின் செயலை கண்டித்தனர். அவர்களில் ஆத்திரத்தோடும், ஆக்ரோஷத்தோடும் பேசியவர் பிபின் சந்திர பால். ‘இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சியை விரும்புவதாகவும், சாவர்கர் போன்றவர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்', என்பது போன்று அவர்களுடைய பேச்சு இருந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆகாகான், திங்ராவின் செயலைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

அப்போது கூட்டத்தின் பின்பகுதியிலிருந்து ஒரு குரல் எழுந்தது.

‘தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. நான் அதை எதிர்க்கிறேன்', என்றது அந்தக் குரல்.

அனைவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினர். ‘யாரது, பிடி அவனை. உதை', என்று பலர் கத்தினார்கள்.

‘யார் பேசியது', என்று கேட்டார் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆகாகான்,

‘தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படவில்லை. நான் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை', என்றவாறு அமைதியாக எழுந்து நின்றார் சாவர்க்கர்.

கர்சன் வைலி கொலையைப் பற்றிய செய்திகளை அன்றைய பத்திரிக்கைகள் திகில் கதை போல வெளியிட்டுவந்தன. அவற்றில் அதிகமாக சாவர்கர் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது. சாவர்க்கரைக் கண்ட கூட்டத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற பயத்தில் அங்குமிங்கும் ஓடினர்.

அந்தக் கூட்டத்தில் இருந்த பால்மர் என்ற யூரேஷியன் சாவர்க் நெருங்கினான். அவரின் முகத்தில் பலமாக குத்தினான். சாவர்க்கரின் கண்ணாடி உடைந்து நெற்றிப் பொட்டை பதம் பார்த்தது. சதை பிய்ந்து இரத்தம் கொட்டியது. யாருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சாவர்க்கரின் நண்பர் எம்.பி. திருமலாச்சாரி கையில் இருந்த தடியால் பால்மரின் மண்டையில் ஓங்கி அடித்தார். பால்மரின் மண்டை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பக்கத்தில் நின்றிருந்த வ.வே.சு ஐயர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால், பால்மரை சுடுவதற்கு தயாரானார். அதைக் கவனித்த சாவர்க்கர் அவரை சமாதானப்படுத்தினார். உடனடியாக போலீஸ் அங்கு வந்தது. சாவர்க்கரை கைது செய்தது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு விடுவித்தது.

உடனடியாக ‘டைம்ஸ்' பத்திரிக்கைக்கு விளக்கக் கடிதம் ஒன்றை எழுதினார் சாவர்க்கர்.

‘திங்ராவின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணையே இன்னும் ஆரம்பமாகவில்லை. தற்போதுவரை அவன் குற்றம் சாட்டப்பட்டவன். குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். நிலைமை அப்படியிருக்க திங்ராவை கண்டித்து தீர்மானம் போடுவதால் வழக்கு ஒருதலைப்பட்சமாக போகும். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதைப் பற்றி பேசுவதுகூட நீதிமன்ற விவகாரத்தில் தலையிட்டு அதை அவமதிப்பது போன்றது. எனவேதான் தீர்மானத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவர நினைத்தேன்', என்று ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்தார்.

டைம்ஸ் பத்திரிக்கை சாவர்க்கரின் கடிதத்தை வெளியிட்டது. சாவர்க்கரின் செய்கையில் தவறில்லை என்று பல பத்திரிக்கைகள் தங்கள் கருத்தை வெளியிட்டன. இதைப் படித்த சாவர்க்கரை தாக்கிய பால்மர் ஒரு கடிதம் எழுதியிருந்தான். ‘தான் சாவர்க்கரை தாக்கியது நியாயமென்றும், ஒரு பிரிட்டிஷ் அடி எப்படி இருக்கும் என்பதை சாவர்க்கருக்கு உணரவைத்ததற்காக பெருமைப்படுவதாகவும்' எழுதியிருந்தான். இதைத் தொடர்ந்து இந்தியர்கள் தரப்பில் மற்றொரு கடிதம் எழுதப்பட்டது. அதில் ‘பிரிட்டிஷ் அடியை இரத்தம் கக்க வைத்த இந்தியன் தடியை அவன் மறந்திருக்கமாட்டான்', என்று எழுதப்பட்டிருந்தது.

வழக்கு 23 ஜுலை நீதிமன்றத்துக்கு வந்தது. கர்சன் வைலியை கொன்றதற்காக பெருமைப்படுவதாக வெளிப்படையாக தெரிவித்தான் திங்ரா. அதே நேரத்தில் கவாஸ்ஜி லால்காகாவை கொலை செய்ய திட்டமிடவில்லை என்றும் அது தவறுதலாக நடந்தது என்றும் சொன்னான். அதற்காக வருத்தம் தெரிவித்தான்.

‘எனக்காக யாரும் வாதாட வேண்டாம். என்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த வாதத்தையும் நான் முன் வைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் எந்த ஆங்கிலேய சட்டத்திற்கும் என்னை கைது செய்யவோ, தண்டனை அளிக்கவோ அதிகாரமில்லை. அதனால்தான் எனக்காக வாதாட யாரையும் நான் நியமிக்கவில்லை. திரும்பதிரும்ப நான் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். உங்கள் யாரையும் நான் அதிகாரமுள்ளவராக நினைக்கவில்லை. நீங்கள் அளிக்கும் தண்டனையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வெள்ளையர்களான நீங்கள் இன்று அதிகாரம் படைத்தவராக இருக்கிறீர்கள். இந்த நிலை சீக்கிரம் மாறும். எங்கள் கையில் அதிகாரம் வந்து சேரும், என்று சொல்லி தன் வாதத்தை முடித்தான்.

திங்ராவிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி இருபது நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார். எந்த வழக்கிலும் இல்லாத வகையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி, இடம் ஆகியவற்றையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார். தண்டனையை கேட்ட திங்ரா வருத்தப்படவில்லை.

‘என்னுடைய நாட்டிற்காக உயிரை தியாகம் செய்வதில் பெருமையடைகிறேன். ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வருகின்ற காலம் எங்களுடையது', என்று சொல்லி அமைதியானான். திங்ராவின் பேச்சை செய்தித் தாள்கள் வெளியிட்டன.

பல காங்கிரஸ் தலைவர்கள் திங்ராவின் செயலை கண்டித்தது போலவே, காந்தியும் கண்டித்தார். அவர் அஹிம்சாவாதி. அதனால் வன்முறையை கண்டித்தார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், சாவர்க்கர் தாக்கப்பட்டது குறித்து ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

மதன்லால் திங்ராவின் அண்ணன் பஜன்லால் திங்ரா லண்டனில் படித்துக் கொண்டிருந்தார். கர்சன் வைலி கொலை செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின் திங்ராவை கண்டித்து லண்டனில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பஜன்லால், மதன்லால் திங்ராவின் செயலை கண்டித்தார். சில நாட்களுக்குப் பிறகு திங்ராவை சந்திக்க சிறைச்சாலைக்குச் சென்றார். ஆனால், அவரை சந்திக்க திங்ரா மறுத்துவிட்டான். அதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம், மதன்லால் திங்ரா தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது சகோதரர்கள், தங்கள் பெயரில் இருந்த திங்ரா என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்கள்.

17 ஆகஸ்ட், 1909 அன்று தூக்குக்கயிறு திங்ராவிற்காக காத்துக் கொண்டிருந்தது. தூக்குமேடையில் ஏறிய திங்ரா விரமுழக்கமிட்டான்.

‘அந்நியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட எங்கள் தாய் நாடு, தொடர் போருக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆயுதமில்லாத நாங்கள் நேரடியாக அவர்களிடம் மோதுவது என்பது இயலாத காரியம். அதனால் தான் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தாக்கினேன். எங்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ளும் அனுமதி இல்லாததால், என் கைத்துப்பாக்கியை பயன்படுத்தினேன். நான் பெரிய அறிவாளி இல்லை. பெரிய பணக்காரனுமில்லை. ஒரு மகனாக தாய்க்கு கொடுக்க என் ரத்தத்தைத்தை தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை. அதனால்தான் என் ரத்தத்தை அவளுக்கு காணிக்கையாக்குகிறேன். இந்தியர்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாம் எப்படி உயிர் தியாகம் செய்வது என்பது தான் அது. நம் உயிரை தியாகம் செய்வதன் மூலம் அந்த பாடத்தை அடுத்தவர்களுக்கும் புரியவைக்க முடியும். கடவுளிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். வெற்றி கிடைக்கும் வரை நான் மீண்டும் அதே தாயின் வயிற்றில் பிறக்கவேண்டும். மீண்டும் இதே போல் ஒரு புனித காரியத்திற்காக நான் இறக்க வேண்டும். வந்தே மாதரம்', என்று சொல்லி தன் பேச்சை முடித்தான். சுருக்குக் கயிறு கழுத்தை இறுக்கியது. மரணத்தை மகிழ்ச்சியோடு முத்தமிட்டான் திங்ரா.

திங்ராவின் உடலை சாவர்கர் பெற முயற்சித்தார். உடலைத் தர பிரிட்டிஷ் அரசு மறுத்துவிட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘சாவர்க்கர், திங்ராவின் உறவினர் அல்ல', என்பதுதான். திங்ராவின் குடும்பம் எங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டது. எந்தவித சடங்குகளும் செய்யாமல் ஓர் மாவீரனை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்தது பிரிட்டிஷ் அரசு.

அறுபத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சாஹித் உத்தம் சிங்கின் கல்லறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் அரசு இறங்கியது. பல இடங்களில் தோண்டியது. அப்போது மதன்லால் திங்ராவின் சவப்பெட்டி கிடைத்தது. இந்திய அரசு அந்த சவப்பெட்டியை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா அருங்காட்சியகத்தில் வைத்தது. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நிரந்தரமான இடத்தை பிடித்துவிட்டான் திங்ரா.

காங்கிரஸ் சாரா தியாகிகள் பலரின் தியாகங்கள் மறைக்கப்பட்டது போல் திங்ராவின் புகழும் முடக்கப்பட்டது. பிப்ரவரி 8ம் தேதி திங்ராவின் பிறந்த நாள் இந்தக் கட்டுரையை படிக்கும் நேரமாவது அந்த மாவீரனை நம் மனத்தில் நினைப்போம். ஜெய்ஹிந்த்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com