சங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொரு தற்காப்பு முறை! ஆண்களுக்கும், பெண்களுக்கும்...

ஒருவேளை மேலே சொன்ன தற்காப்பு முறையில் நீங்கள் திருடனின் கண்களைப் பதம் பார்க்க முயலும் போது அவன் சடாரென முகத்தைத் திருப்பிக் கொண்டான் எனில், அப்போதும் அசராது அவனது பின் தலைமுடியைப் பிடித்து
சங்கிலி பறிப்புத் திருடர்களிடமிருந்து தப்ப எளியதொரு தற்காப்பு முறை! ஆண்களுக்கும், பெண்களுக்கும்...


இன்று சென்னையில் பொது மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் ஆபத்துக்களில் ஒன்று சங்கிலி பறிப்புத் திருடர் பயம். அவர்கள் சங்கிலியை மட்டுமே பறிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சங்கிலி கிடைக்காவிட்டால் நீங்கள் காதோடு ஒட்ட வைத்துப் பேசிக் கொண்டு செல்லும் ஸ்மார்ட் ஃபோன்களைப் பறிப்பதற்கும் தயங்குவதில்லை. அல்லது தோளோடு கைக்குழந்தை போல நீங்கள் அணைத்துப் பிடித்துச் செல்லும் கைப்பையையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் உயிர்ப்பலி நேர்ந்தாலும் திருடர்களுக்கு அதில் எவ்வித அக்கறையுமில்லை. அவர்களது ஒரே இலக்கு விலையுயர்ந்த ஏதேனும் ஒரு பொருள். அது சங்கிலியாக இருந்தால் பெருத்த மகிழ்சியடைவார்கள், ஃபோனாக இருந்தாலும் மோசமில்லை... 

இப்போது தான் ஸ்மார்ட் ஃபோனில் ரகசியத் தகவல்கள் அத்தனையையும் சேகரித்து வைக்கிற பழக்கம் இருக்கிறதே மக்களுக்கு, இல்லாவிட்டாலும் வங்கி சேமிப்புக் கணக்கு எண் உட்பட பணப்பரிவர்த்தனைக்கான அத்தனை பாஸ் வேர்டுகளையும் ஸ்மார்ட் ஃபோனில் சேமித்து வைக்கிறோமே அதை வெகு எளிதாக நோண்டி தகவல்களைக் கபளீகரம் செய்யும் தொழில்நுட்ப அறிவு இருந்தால் போதும் திருடர்களுக்கு. அப்புறம் இதைப் போல பத்து திருவாளர் அப்பாவி பொது ஜனங்கள் கிடைத்தால்  அலேக்காகத் தகவல்களைத் திருடி பெரும் பணத்தை ஸ்வாஹா செய்து விடுவார்கள். 

இது ஒரு வகை ஸ்மார்ட் ஃபோன் திருட்டு என்றால், இதில் மற்றொரு வகை சற்று விவகாரமானது. ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் ரகஷிய சாட்டிங் மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைத் திருடியோ அல்லது அத்துமீறி கையாண்டோ சம்மந்தப்பட்ட நபர்களை பிளாக் மெயில் செய்வது. இதைப் பற்றி பிறிதொரு கட்டுரையில் நாம் விளக்கமாகத் தெரிந்து கொள்வோம். இப்போது இந்த வகைத் துன்பத்திற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். 

மக்கள் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களைப் பறி கொடுக்காமல் இருந்திருந்தாலோ அல்லது தங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் அலட்சியமில்லாமல் ஜாக்கிரதையாக இருந்திருந்தாலோ இந்த வகை அவஸ்தைகளில் சிக்கி நிலைகுலையாமல் இருந்திருக்கலாம் தானே! இதற்கெல்லாம் மூலகாரணம் சில நொடி அலட்சியம் அல்லது ஜாக்கிரதை உணர்வு போதாமை தான் காரணமே தவிர வேறில்லை. இதைத் தவிர்ப்பதற்கான முதல் தேவை முன் ஜாக்கிரதை உணர்வே!

அதற்காக காலையில் வாசல் தெளித்துக் கோலமிடச் செல்லும் போதே, யாரோ ஒரு திருடன் வந்து சங்கிலி பறித்துக் கொண்டு போவான் என்ற எதிர்மறை உணர்வுடனே அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்ய முடியுமா? வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும் போது, திடீரென யாரோ ஒருவர் குறுக்கிட்டு கழுத்தில் பகட்டாக மின்னும் சங்கிலியை இழுக்கப் போகிறார்கள் என்ற உணர்வுடனே வண்டியோட்டிச் செல்ல வேண்டுமா? அதெப்படி முடியும். அப்புறம் கவனம் சிதறி ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் எல்லா நேரங்களிலும் பயந்து, பயந்து சாக வேண்டியது தான் என்கிறீர்களா? இல்லை முன் ஜாக்கிரதைக்கு அர்த்தம் அதுவல்ல, 

நீங்கள் பூங்காவில் காலையிலோ, மாலையிலோ வாக்கிங் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரெனக் குறுக்கிடும் ஒருவன் உங்களது கழுத்துச் சங்கிலியில் கை வைக்கிறான் எனில் நிச்சயமாக உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு அதைக் காட்டித்தரும். அந்த உள்ளுணர்வை அலட்சியப் படுத்தாதீர்கள். அதைத் தான் முன் ஜாக்கிரதை என்பார்கள். இப்போதெல்லாம் ஆளரவமற்ற இடங்களை விட மனித நடமாட்டம் மிகுந்த இடங்களில் தான் சங்கிலி பறிப்பு, ஸ்மார்ட் ஃபோன் பறிப்புத் திருட்டுகள் அதிகமாக நடக்கின்றன. காரணம் பலே கில்லாடியாக திட்டம் தீட்டும் திருடர்களின் சாமர்த்தியம் தான். திருடுபவனுக்கே அத்தனை சாமர்த்தியம் இருந்தால், திருட்டுக் கொடுக்கவா நாம் ஒவ்வொரு பொருளையும் கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறோம் என்ற உணர்வுள்ள மனிதர்களுக்கு அவர்களைக் காட்டிலும் சாமர்த்தியம் அதிகமிருக்க வேண்டும் தானே?! எப்படிச் சமாளிப்பது இந்த வகை நூதனத்திருடர்களை? சொல்லித் தருகிறார் தற்காப்புக் கலை பயிற்றுநர் கோபுடோ ஏ.எஸ். கிருஷ்ணமூர்த்தி;

தற்காப்புக் கலை பயிற்றுநரின் விளக்கத்தைக் காட்சியாகக் காண...

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள், திடீரென ஒருவன் உங்கள் கழுத்தில் இருக்கும் சங்கிலியையோ அல்லது காதுகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனையோ வெடுக்கென நொடியில் பறித்துக் கொண்டு ஓட முயல்கிறான். அப்போது ஒரு நொடி திகைத்து நின்றாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு திருடிக் கொண்டு ஓட முயல்பவனை உங்களது வலது கைகளால் வெடுக்கெனத் தட்டி விட்டு அவனுக்கு யோசிக்க அவகாசம் தராமல் உடனடியாக உங்கள் வலது கையில் இருவிரல்களைப் பயன்படுத்தி அதாவது சுட்டு விரல் மற்றும் பாம்பு விரல் கொண்டு சடுதியில் அவனது கண்களைப் பதம் பார்த்து அவன் அசரும் நேரத்தில் தலைமுடியைப் பிடித்து உலுக்கி மோவாயில் நச்சென முஷ்டி மடக்கி அழுந்தக் குத்தி அவனை நிலைகுலையச் செய்ய வேண்டும். அவ்வளவு தான் அதற்குள் நீங்கள் உரக்கக் கத்தி கூப்பாடு போட்டால் போதும் மற்றதை சுற்றியுள்ள மக்கள் கூட்டம் பார்த்துக் கொள்ளும். இந்த தற்காப்பு முறையை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தைரியமாக முன்னெடுக்கலாம். ஏனெனில், பெண்களின் தயக்கம் தான் சங்கிலி பறிப்புத் திருடர்களின் முதல் பலம். எனவே பெண்களும் கூட தங்களது தயக்கத்தை உதறி விட்டு ஆபத்துக்காலங்களில் திடமாகச் செயல்பட வேண்டும்.

ஒருவேளை மேலே சொன்ன தற்காப்பு முறையில் நீங்கள் திருடனின் கண்களைப் பதம் பார்க்க முயலும் போது அவன் சடாரென முகத்தைத் திருப்பிக் கொண்டான் எனில், அப்போதும் அசராது அவனது பின் தலைமுடியைப் பிடித்து உலுக்கி கீழே தள்ளி தரையோடு அழுத்த வேண்டும். நமது ஒரே நோக்கம் திருடன் தப்பி ஓடி விடக்கூடாது என்பதாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் அவன் ஓடி விட்டால் பொருள் பறிபோகும் அபாயமுண்டு. அதோடு கூட இந்த தற்காப்பு முறையில் நாம் மேலும் கவனித்தாக வேண்டிய முக்கிய அம்சம், திருடனின் கையில் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா? என்றும் அவதானிக்க வேண்டும். இல்லா விட்டால் சிக்கலாகி விடும். இம்மாதிரியான ஆபத்தான தருணங்களில் ஆண்களோ, பெண்களோ தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவேனும் தற்காப்புக் கலைகளை முறையாகப் பயின்று வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு திருட்டு நடைபெறுகையில் திருடனுக்கும் சரி, பொருளைப் பறிகொடுப்பவர்களுக்கும் சரி... சரி பாதி ரிஸ்க் இருக்கிறது. அந்த ரிஸ்கைத் தான் பொது மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும். வீண் பயம் இழப்பை மட்டுமே தரும்.

ஆகவே முடிந்தவரை தனிப்பட பயிற்சியாளரை வைத்தோ அல்லது தொலைக்காட்சி அல்லது இணையத்தில் கிடைக்கும் வீடீயோ பதிவுகள் மூலமாகவோ எப்படியேனும் தற்காப்பு வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு முன் ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டு சங்கிலி முதல் ஸ்மார்ட் ஃபோன் வரையிலான திருட்டுகளுக்கு பலிகடாக்கள் ஆவதில்லை என உறுதியேற்போம்.

Image courtesy: Hindusthan times

Video courtesy: kalaigner t.v

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com