‘சுமங்கலி திட்டம்’: வரதட்சணை பணத்திற்காக 5 ஆண்டுகளுக்கு கொத்தடிமைகளாக விலை போகும் பெண்கள்!

'சுமங்கலி’ திட்டம் என்பது 3-ல் இருந்து 5 ஆண்டுகள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாக இளம் பெண்களை பணியில் சேர்க்கும் ஒரு திட்டமாகும். காலம் முடியும்போது, அந்த பெண்ணின் திருமணத்தின் போது தேவைப்படுகின்ற வரதட்ச
‘சுமங்கலி திட்டம்’: வரதட்சணை பணத்திற்காக 5 ஆண்டுகளுக்கு கொத்தடிமைகளாக விலை போகும் பெண்கள்!

1976-ம் ஆண்டில் கொத்தடிமைத் தொழில் முறை (ஒழிப்பு) சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியாவில் கொத்தடிமைத் தொழில் முறையானது சட்ட விரோதமானதாக ஆக்கப்பட்டது. ஆனால், 42 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், இந்திய மண்ணில் சமூகத்திற்கு தீமை பயக்கும் இது இன்னும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு நிறுவனங்களுக்கிடையே போட்டி அதிகரித்ததால் பிற நிறுவனங்களைவிட தங்களது உற்பத்திச் செலவு, குறைவாக இருக்க வேண்டுமென்று நிறுவனங்கள் விரும்புகின்றன. உற்பத்திச் செலவை குறைப்பதற்கு குறைந்த அல்லது குறைந்தபட்ச ஊதியத்தில் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை இந்நிறுவனங்கள் தொடங்கியிருக்கின்றன. சில நேரங்களில், தொழிலாளர் நல சட்டத்தில் வகை செய்யப்பட்டவாறு குறித்துரைக்கப்பட்ட கால அளவுக்கும் அதிகமாக நீண்ட மணி நேரங்கள் பணியாற்றுமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். இதற்கு மறுபக்கத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியத்தில் வேலை கிடைக்காதா என்ற எதிர்பார்ப்போடு இந்தியாவில் எண்ணற்ற தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவில் சில நிறுவனங்கள் தொழிலாளர்களை தவறாக பயன்படுத்தவும், சுரண்டவும் தொடங்கியுள்ளன. 

'சுமங்கலி’ திட்டம் என்பது 3-ல் இருந்து 5 ஆண்டுகள் வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாக இளம் பெண்களை பணியில் சேர்க்கும் ஒரு திட்டமாகும். இந்த ஒப்பந்த காலத்தின்போது, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே இந்த பெண் பணியாளர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. அவர்களது ஒப்பந்த காலம் முடியும்போது, அந்த பெண்ணின் திருமணத்தின் போது தேவைப்படுகின்ற வரதட்சணை பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு வழங்கப்படும். 

சுமங்கலி என்ற வார்த்தை 'மகிழ்ச்சியான திருமணமான பெண்’ என தமிழில் பொருள்படும். 'திருமகள் திருமண திட்டம்’, 'கேம்ப் கூலி சிஸ்டம்’ போன்ற பெயர்களும் இந்த சுமங்கலி திட்டத்திற்கு உண்டு. இது செயல் படுத்தப்படும் பிராந்தியத்தை பொறுத்து இதன் பெயர்கள் மாறுபடுகின்றன. கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில்தான் இத்திட்டம் இந்தியாவில் முதலில் அறிமுகமானது என்று இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் வழியாக பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் திருமணம் என்பது மணப்பெண்ணின் குடும்பத்திற்கு அதிக செலவு வைக்கும் விஷயமாகும். அதிலும் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு இந்த திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சுமையாகும். இதன் காரணமாக 1950-களில் பெண் சிசுக்கொலை அதிகமானது. இன்னும் கூட இந்தியாவில் சில தொலை தூர கிராமங்களில் இப்பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்திய சமூகமானது, பெண் குழந்தையை ஒரு சுமையாகவே பார்த்து வந்திருக்கிறது என்பது வருத்தம் தரும் உண்மையாகும். 

தங்களது மகளின் திருமணத்திற்கான செலவுகளை சமாளிப்பது, பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு மிக கடினமானதாகவே இருக்கிறது. கிராமத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வருடம் முழுவதும் வருவாய் தரும் வேலை கிடைப்பது என்பதும் மிகவும் அரிதானது. இத்தகைய சமூக காரணிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் தங்களது மகள்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யுமாறு அனுப்பிவைக்க பெற்றோர்களை நிர்ப்பந்திக்கின்றன. 

சுமங்கலி திட்டத்தின் அடிப்படை அம்சங்கள்: 

1. குறைந்தபட்ச ஊதியம்: 



குறைந்தபட்ச ஊதியம் என்பது, அரசால் நிர்ணயிக்கப் பட்டிருக்கிற அல்லது சட்டத்தால் அனுமதிக்கப் பட்டிருக்கிற மிக குறைந்த ஊதியத்தையே குறிக்கிறது. சுமங்கலி திட்டத்தில் பெரும்பாலான இளம் பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. ஒப்பந்த கால அளவு முடியும்போது ‘வாக்குறுதியளிக்கப் பட்டிருக்கிற தொகை’ அவர்களுக்கு இறுதி செட்டில்மென்ட்டாக வழங்கப்படுவதற்கு அவர்களது மாத ஊதியத்தில் ஒரு பகுதியை நிறுவனங்களே பிடித்து வைத்துக் கொள்வதுதான் இத்தகைய குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதற்கான காரணமாகும். 

2. விரும்புகிற இடத்திற்கு சென்று வரும் உரிமை (நடமாட்ட சுதந்திரம்): 

'கேம்ப் கூலி சிஸ்டம்’ என்பது சுமங்கலி திட்டத்தின் மற்றொரு பெயராகும். இத்திட்டத்தின்படி வழக்கமாக தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பகுதியில் அமைந்திருக்கும் விடுதிகளில் (ஹாஸ்டல்) வேலை செய்யும் இளம் பெண்கள் தங்க வேண்டும். வழக்கமான கொத்தடிமைத் தொழில் முறை போன்று இல்லாமல் வித்தியாசமான வழியில் தொழிலாளர்களின் நடமாட்டம் மீது பணிவழங்கும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை சுமத்துகின்றன. 1976-ம் ஆண்டில் கொத்தடிமைத் தொழில் முறை (ஒழிப்பு) சட்டத்தின்படி ஒரு முன்தொகை (கடன்) அல்லது வேறு பிற சமூக கடமை பொறுப்புகளின் காரணமாக ஒரு தொழிலாளரின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுமானால், அப்போது அத்தகைய உரிமை மறுப்பானது கொத்தடிமைத் தொழில் முறை செயல்பாடாக கருதப்படுகிறது. 

பிற்பாடு வழங்குவதாக உறுதியளிக்கும் தொகையைக் கொண்டு பணி வழங்கும் நிறுவனங்கள் இளம்பெண்களுக்கு ஆசை காட்டி கவர்ந்திழுக்கின்றன அல்லது குறிப்பிட்ட காலம் வரை பணியாற்ற வேண்டுமென்று அச்சுறுத்துகின்றன. சுமங்கலி திட்டத்தில் பிறகு வழங்குவதாக கூறுகிற இந்த மொத்த தொகையை அல்லது உறுதியளிக்கப்படும் தொகையை, எதிர்மாறான வழிமுறையில் ஒரு கடன் பத்திரமாகவும் கருத முடியும், ‘உறுதியளிக்கப்படும் தொகை’ என்பதன் மூலம் இத்தொழிலாளர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர் மற்றும் தவறாக பயன்படுத்தப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும் கூட தொழிற்சாலையை விட்டு அவர்கள் வெளியேறுவதில்லை. 

நடமாட்ட சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்டவைகளும் அடங்கும் : 

  • வார இறுதி விடுமுறை நாளில் அவசியமான பொருட்களை வாங்க பெண் தொழிலாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கூட அநேக நேரங்களில் தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் அல்லது பிற அதிகாரிகள் இவர்களை கண்காணிப்பதற்கு உடன் செல்கின்றனர். 
  • ஒரு நாளில் 24 மணிநேரமும் தொழிற்சாலை நிர்வாகத்தால் இப்பணியாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். 
  • பெரும்பான்மையான நேரங்களில் தொழிலக வளாகத்திற்குள் இத்தொழிலாளர்கள் செல்போன்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • அனுமதி பெறாமல் ஒரு தொழிலாளி விடுப்பு எடுப்பாரானால், அவரது ஊதியத்தில் பெருந்தொகை பிடித்தம் செய்யப்படும். 

3. வேலைவாய்ப்புக்கான சுதந்திரம்: 

தனது சொந்த வேலைவாய்ப்பை தேர்வு செய்கின்ற சுதந்திரமானது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் வழங்குகிறது. ஆனால் சுமங்கலி திட்டத்தில் இந்த விலை மதிப்பில்லா சுதந்திரம் குறைக்கப்படுகிறது. தொழிலாளர்களது ஒப்பந்த காலம் முடிவடையும் வரை வேறு பிற தொழிற்சாலைகளில் பணியாற்ற தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நல்ல வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்தாலும் கூட பிறகு தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை தாங்கள் இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக இத்தொழிலாளர்கள் அவர்களது வேலையைவிட்டு விலகுவதில்லை. 

தங்களது வேலைக்காக பணியாளர்களை வேறு எங்கும் செல்லவிடாமல் தக்கவைத்துக் கொள்வதற்காக சுமங்கலி திட்டத்தை நிறுவனங்கள்/உரிமையாளர்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை ஒரு பங்கை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். வேலை வாய்ப்பை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இதில் நிச்சயமாக பறிக்கப்படுகிறது. 
 
4. சுமங்கலி திட்டம் மற்றும் மனித வணிகம்:

செயல்பாடு வழிமுறை நோக்கம் ஸ்ரீ மனித வணிகம் பணிக்கு ஆட்சேர்ப்பு, போக்குவரத்து, இடம் மாற்றுகை,  மறைவாக தங்க வைத்தல், நபர்களை வரவைத்தல்,    பலவந்த பிரயோகம் அல்லது அச்சுறுத்தல், நிர்ப்பந்தம், கடத்தல், மோசடி, ஏமாற்றல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது அல்லது எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலை, பணத்தொகை அல்லது ஆதாயங்களை வழங்குதல், பிறரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது உட்பட தவறாக பயன்படுத்துவது,  பாலியல் சுரண்டல், கட்டாயப்பணி, அடிமைத்தனம் அல்லது அதை போன்ற நடைமுறைகள், உடலுறுப்புகள் அகற்றல் சுரண்டலின் பிற வகைகள்.

2013-ம் ஆண்டின் குற்றவியல் திருத்தம் சட்டம், வழியாக பிரிவு 370-ஐ இந்திய குற்றவியல் தொகுப்பு திருத்தம் செய்து, மனித வணிகத்திற்கான மேற்கண்ட பொருள் வரையறையை சேர்த்துக் கொண்டிருக்கிறது. சுமங்கலி திட்டத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு என்பது பல்வேறு முகமைகள்/நபர்கள் வழியாக நடத்தப்படுகிறது. கிராமங்களில் பெண்களை தேடிப்பிடித்து வேலையில் அமர;த்துவதற்காகவே வழக்கமாக நூற்பு ஆலைகளில் (பஞ்சாலைகளில்) ஏஜெண்டுகள் இருக்கின்றனர். வறட்சியினால் பாதிக்கப்பட்ட மற்றும் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாத கிராமங்களை இந்த ஏஜெண்டுகள் குறிவைக்கின்றனர். தமிழ்நாட்டில் இன்றைய காலகட்டத்திலும்கூட பல பகுதிகளில் வரதட்சணை என்ற கொடுமை தலைவிரித்தாடுகிறது. வரதட்சணையின் காரணமாக திருமணத்தின்போது, பெரியளவில் வரதட்சணையை தர ஏழை குடும்பங்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்; இதனால் பஞ்சாலைகளில் வேலை செய்ய தங்களது பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர். இச்சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளும் இந்த ஆட்சேர்ப்பு முகமைகள்/ஏஜெண்டுகள் அவர்களது வலையில் இளம் பெண்கள் சிக்குமாறு செய்வதற்கு அவர்களது உத்திகளை கவனமாக கையாளுகின்றனர். பொதுவாக, ஒரு இளம் பெண் 3 ஆண்டுகள் பணியாற்றினால் 3-வது ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு 30,000 தரப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. அத்துடன் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற பிற வசதிகளும் அப்பெண்ணுக்கு கிடைக்கும் என்றும் உறுதி தரப்படுகிறது.
 
தவறான உறுதிமொழியின் அடிப்படையில் சுமங்கலி திட்டத்தில் பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. சுரண்டலுக்காக, தவறாக பயன்படுத்தும் நோக்கத்திற்காக ஏமாற்றுவது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே, சுமங்கலி திட்டமானது, இந்திய குற்றவியல் சட்டத் தொகுப்பின் பிரிவு 370-ன் கீழ் மனித வணிகத்திற்கான பொருள் வரையறைக்குள் இடம் பெறுகிறது. 

5. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

அநேக நேரங்களில், நிறுவனங்களால்/உரிமையாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல நேரங்களில் காப்பற்றப்படவில்லை என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆசை வார்த்தை கூறி தங்கள் வலையில் சிக்க வைப்பதற்காக மட்டுமே இந்த வாக்குறுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பந்த கால அளவு முடிவதற்கு சற்று முன்னதாகவே, வாக்குறுதியளித்த தொகையை அவர்களுக்கு வழங்குவதை தவிர்ப்பதற்காக உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி இப்பெண்களை உரிமையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்திவிடுகின்றனர். 

தொழிற்சாலைக்குள் நிலவும் சிரமங்கள், கஷ்டங்கள் குறித்த உண்மைகளை இளம்பெண்களின் பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே சுமங்கலி திட்டத்தின் புரோக்கர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவது வழக்கமானதுதான். வேலைக்கு செல்லும் பெண் அதற்கான திறனை கற்றுக் கொண்டால் ஒரு நிலையான வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, உணவும், தங்குமிட வசதியும் தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதில் கிடைக்கின்றன என்று ஆதாயங்கள் குறித்து இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி வறுமையில் வாடுகிற மற்றும் வேறு வழி தெரியாத பெற்றோர்களை இந்த புரோக்கர்கள் நம்ப வைத்து விடுகின்றனர். அத்தகைய பணியில் இருக்கிற ஆபத்துகள் குறித்தோ, கடினமான உடல் உபாதைகள் மற்றும் மன அழுத்தங்கள் குறித்தோ எந்த தகவலையும் இவர்கள் எடுத்துக் கூறுவதில்லை.

தொழில் பழகுநர் என்ற பெயரில் சுமங்கலி திட்டங்களில் வேலைசெய்கிற பெண்களுள் அநேகர், வேலை பழகுநர்களாகவே இருக்கின்றனர் என்பதைத்தான் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மோசமான, சுகாதாரமற்ற பணியிடம் மற்றும் குடியிருப்பு சூழ்நிலைகளில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அமைவிடத்திற்குள் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீண்ட மணி நேரங்களுக்கு 'வேலை பழகுநர்களாக’ வேலை செய்யுமாறு இளம்பெண் தொழிலாளர்களை சுமங்கலி திட்டம்  நிர்ப்பந்திப்பதாகவும் மற்றும் ஜவுளித் தொழில் துறைக்கு குறைந்த ஊதியத்தில் மலிவான தொழிலாளர்களை வேலை செய்ய வைப்பதற்கான ஒரு வழி முறையாக இது இருக்கிறது என்றும் இதன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

1961-ம் ஆண்டின் 'வேலை பழகுநர்’ (அப்ரென்டிஸ்) சட்டத்தில் தொழில் பழகு பருவ ஒப்பந்தத்தின்படி தொழில்/வேலையை கற்றுக் கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடுகின்ற ஒரு நபர் என்று ‘வேலை பழகுநர்’ என்ற வார்த்தை பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டின் ‘வேலை பழகுநர்’ சட்டத்தில், வேலை பழகுநருக்கான தெளிவான பொருள் வரையறை காணப்படவில்லை. சட்டப்பூர்வ ஏற்பின்படி, அவரது வேலையை, திரள் பயிற்சியை கற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக மற்றொருவரின் கீழ் இணைந்து பணியாற்றும் ஒரு நபராக, ஒரு வேலை பழகுநர் கருதப்படுகிறார்; கற்றறிந்த ஆசான் கற்றுத்தருகிற மற்றும் கற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக ஆசானுக்கு சேவையாற்றுகின்ற தன்மையை கொண்டதாக இந்த ஒப்பந்தம் இருப்பதாகவும், கருதப்படுகிறது. பயிற்சி பெறும் நபர், அவரது தொழில் முறை முன்னேற்றத்தில் எதிர்கால ஆதாயத்தை பெறுவதற்காக அவருக்கு திறன்சார்ந்த பயிற்சியை வழங்குவதே ‘வேலை பழகுநர்’ சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமாகும். ஆனால், சுமங்கலி திட்டத்தில் வேலை பழகு பருவத்தின் கருத்தாக்கமும், குறிக்கோளுமே கடுமையாக மீறப்படுகிறது. இளம் பெண்களை பயிற்சி பெறுபவர்களாக கருதி கற்றுத் தருவதற்கு பதிலாக முழு நேர பணியாளர்களாக அவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் முழுநேர பணியாளர்களுக்கான ஊதியமும் பிற பலன்களும், இத்தகைய பெண் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

சுமங்கலி திட்டம் மற்றும் கொத்தடிமைத்தொழில்முறை:
 
கடன் வழங்கியவர் - கடன் பெற்றவர் என்ற உறவுமுறை சுதந்திரம்/உரிமைகள் இழப்பு என்பதே கொத்தடிமைத் தொழில் முறையின் முதன்மையான பண்பியல்பாக இருக்கிறது. 

சுமங்கலி திட்டத்தில், குறைந்தபட்ச ஊதியம் பெறுவதற்கான உரிமை, விரும்பும் இடத்திற்கு சுதந்திரமாக சென்று வருகிற உரிமை மற்றும் பிற வேலை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவை தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகின்றன. 

இரண்டாவதாக, சுமங்கலி திட்டத்தின் கீழ் பணியாற்றும் அநேக தொழிலாளர்கள் முன்தொகை அல்லது கடனை பெறுவதில்லை. ஆனால், ஒரு கொத்தடிமைத் தொழில் முறையில் கடன் வழங்கியவர் மற்றும் கடன் பெற்றவருக்கு இடையிலான உறவுமுறை இருப்பது கட்டாயமானதாகும்.. 

சுமங்கலி திட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் இந்த முன்தொகை/கடன் என்பது இருப்பதில்லை. கடன் வழங்கியவர் - கடன் பெற்றவர் உறவுமுறை இல்லாத நிலையில் சுமங்கலி திட்டத்தை ஒரு கொத்தடிமைத் தொழில் முறை செயல்பாடாக கருதுவது கஷ்டமானதாக இருக்கும். ஆனால் பல மனித உரிமை மீறல்களை உள்ளடக்கிய சுரண்டுகின்ற நடைமுறையாக சுமங்கலி திட்டம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சுமங்கலி திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாகவே பெறுகின்றனர் என்பதை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமானது, 'குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் பெற்று ஒரு பணியை அல்லது சேவையை ஒரு நபர் வழங்குவாரென்றால், சட்டத்தின்கீழ் பிற உரிமைத்தகுதி  கொண்டுள்ள அளவுக்கும் குறைவாக ஊதியம் தரப்படுகிற போதிலும் கூட அந்த பணியை செய்வதற்கு அவரை ஊக்குவிக்கிற ஏதாவது ஒரு வகையிலான நிர்ப்பந்தம் அல்லது கட்டாயத்தின் கீழ் அவர் செயல்படுகிறார் என்று நியாயமாக ஊகித்துக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. 

சுமங்கலி திட்டத்தில் பசிக்கொடுமை, ஏழ்மை, தேவை மற்றும் ஆதரவற்ற நிலை ஆகியவற்றின் காரணமாக தொழிலாளர்கள் இத்தகைய பணியை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்ய வேண்டுமென்று உடல் ரீதியாக அவர்கள் நிர்ப்பந்திக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ இல்லையென்றாலும் கூட, வரதட்சணை என்ற சமூக ரீதியிலான அழுத்தத்தின் காரணமாகவே வேலை செய்யுமாறு இத்தொழிலாளர்கள் ஆளாக்கப்படுகின்றனர். மேற்கூறப்பட்ட ஆய்வு முடிவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் சுமங்கலி திட்டம் என்பது ஒரு கட்டாய பணியாகவே இருக்கிறது என்பது தெளிவாகிறது. 

சுமங்கலி திட்டத்தில் கடன் வழங்கியவர் அல்லது கடன் பெறுபவர் உறவுமுறை இருக்கிறதா என்று பரிசீலிப்போம் என்றால், அது கண்ணுக்குப் புலப்படாமல் மறைக்கப் பட்டிருக்கிறது என்பதே உண்மை. சுமங்கலி திட்டத்தில் முன்பணம், கடன் என்பது தலைகீழான முறையில் செயலாற்றுகிறது. இங்கு, பணி வழங்குநரின் பணத்தை தொழிலாளர் வைத்திருப்பதற்கு பதிலாக, தொழிலாளருக்கு சேர வேண்டிய பணத்தை பணிவழங்குநர் வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் பணியாளருக்கு தரப்படும் என்று பணி வழங்குநர் ‘வாக்குறுதியளிக்கும் தொகையானது,’ தொழிலாளரின் பணமே; வேறு எவருக்கும் சொந்தமானதல்ல; மறைமுகமான வழிமுறையில் தங்களது, பிடிக்குள் தொழிலாளர்களை வைத்திருப்பதற்கான ஒரு உத்தியாகவே இத்திட்டம் பயன் படுத்தப்படுகிறது. 

மேலும், சுமங்கலி திட்டம் கொத்தடிமைத்தொழில்முறையை பின்பற்றும் ஒரு நடைமுறையாகவே இருக்கிறது என்றும் அது சட்ட விரோதமானதென்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதன் இடைக்கால உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. 

6. இறுதி உரை:

சுமங்கலி திட்டம், தொழிலாளர் நல சட்டங்களை மீறுவதாக இருப்பதோடு, மனித உரிமைகளை கடுமையாக மீறுகின்ற செயல் நடவடிக்கையாகவும் இருக்கின்றது. இளம்பெண்களின் வாழ்க்கைக்கு, அதுவும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு கடுமையாக அச்சுறுத்தலை இது முன்வைக்கிறது. சமூக, கலாச்சார மற்றும் பிற காரணங்களினால் சுமங்கலி திட்டமானது, தமிழ் நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைகள் வழங்குகிற வேலைவாய்ப்புகள் இத்திட்டம் பரவுவதற்கான மற்றொரு காரணமாகும். இத்தகைய ஏழை இளம் பெண்களுக்கு இதை விட்டால் மாற்று வேலை வாய்ப்புகள் இல்லை என்பதே நம்மை கவலைப்பட வைக்கிற உண்மையாகும். 

கட்டுரை ஆசிரியர்
ஊ.இராஜ்குமார்,
வழக்குரைஞர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com