'ஆன்மிக அரசியல்' என்பதை ரஜினிகாந்த் இப்படி சொல்லி புரிய வைக்கலாமோ?!

ஆன்மீக அரசியலா!' என்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் கூக்குரலிடும் சில அரசியல் வியாபாரிகளின் குரல்களும்
'ஆன்மிக அரசியல்' என்பதை ரஜினிகாந்த் இப்படி சொல்லி புரிய வைக்கலாமோ?!

உண்மையான ஆன்மீக அரசியல்

புத்தாண்டில் தமிழகத்தை புரட்டிப்போட்ட இரண்டு வார்த்தைகள் ‘ஆன்மீக அரசியல்'. உலகத்தையே தன் பக்கம் திருப்பியது என்றுகூட சொல்லலாம். ‘ஆன்மீக அரசியலா!' என்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் கூக்குரலிடும் சில அரசியல் வியாபாரிகளின் குரல்களும் நமது காதுகளை எட்டத் துவங்கியுள்ளது.

‘ஆன்மீக அரசியல்' கூடாதா? ‘அரசியலில் ஆன்மீகம் இருக்கலாம், தவறில்லை. ஆன்மீகத்தில் தான் அரசியல் இருக்கக்கூடாது', என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். அதன்படி ஆன்மீகத்தோடு சேர்ந்த அரசியல் நேற்றைய, இன்றைய தமிழக அரசியல் நிலையைவிட மிக நன்றாகவே இருக்கும். ஏனென்றால் ஆன்மீகம் என்பது நம்பிக்கையோடு தொடர்புடையது.

ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு சிட்டுக் குருவி. கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு இரை தேட புறப்பட்டது. கண்களை மூடி பிரார்த்தனை செய்தது.

‘கடவுளே! எனக்கும் என் குஞ்சுகளுக்கும் இறை தேட புறப்படுகிறேன். எனக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது', என்று வேண்டியது.

அந்த மரத்தில் கீழ் ஒரு சாது அமர்ந்திருந்தார். சிட்டுக்குருவியின் வேண்டுதல் அவரின் காதுகளில் விழுந்தது. சிட்டுக்குருவியை அழைத்தார்.

‘சிட்டுக் குருவியே! நீ செல்லும் இடங்களில் உனக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு உபாயம் சொல்கிறேன். இதோ, இந்த குடத்தில் நீலநிறச் சாயம் இருக்கிறது. இதில் சிறிதளவு எடுத்து உன் வாலில் பூசிக்கொள். பிறகு யாரும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இந்த நீல நிறச் சாயம் இறைவன் அளித்தது. மற்றொரு விஷயம், நீ மழையில் நனைந்தால் இந்த நிறம் கரைந்துவிடும். உடனடியாக இந்தக் குடத்திலிருந்து நிறத்தை மீண்டும் பூசிக்கொள்', என்று சொல்லி குடத்தை மரத்தடியில் வைத்தார்.

குருவிக்கு மகிழ்ச்சி. தன் வாலை குடத்துக்குள் நுழைத்தது. வால் நீல நிறமானது. தைரியமாக இரை தேட புறப்பட்டது. இந்த விஷயம் காடு முழுவதும் பரவியது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது வாலின் நீல நிறம் கரைந்து போனது. உடனடியாக மரத்தடிக்குச் சென்று தன்னுடைய வாலில் நிறத்தை பூசிக்கொண்டது குருவி. தற்போது அதற்கு எதிரிகளின் பயம் இல்லை.

சிட்டுக் குருவிக்கு மகிழ்ச்சி. தன்னை காப்பாற்றிய சாதுவிற்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லி, பிரார்த்தனை செய்தது. குருவியின் பிரார்த்தனையில் மகிழ்ந்த கடவுள் சட்டென்று அதன் முன் தோன்றினார்.

‘குருவியே! உன்னுடைய பிரார்த்தனையில் மகிழ்ந்து போனேன். உனக்கு என்ன வரம் வேண்டும்', என்று கேட்டார் கடவுள்.

‘கடவுளே! ஒவ்வொரு முறையும் நிறத்தை புசிக்கொள்கிறேன், பிறகு அது கரைந்துவிடுகிறது. ஆகையால், வாலில் நீல நிறம் நிரந்தரமாக இருக்கும் வகையில் வரம் கொடுங்கள்', என்றது குருவி.

குருவி கேட்ட வரத்தை கடவுள் கொடுத்துவிட்டு மறைந்தார். நடந்த நிகழ்வுகளை சாதுவும் அவரது சீடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். சீடன் பேசினான்.

‘இறைவனிடம் கேட்பதற்கு ஆயிரம் வரங்கள் இருக்கும் போது நீல நிறத்தை வரமாக பெற்றிருக்கிறதே! ‘என்னை யாரும் ஜெயிக்க முடியாத பலசாலியாக மாற்றுங்கள், எனக்கு மரணமே நிகழக்கூடாது, எனக்கு உணவுப் பஞ்சமே வரக்கூடாது, நான் இந்த காட்டின் அரசனாக வேண்டும்', என்று ஏதாவது ஒரு பெரிய வரத்தை கேட்டிருக்கலாமே! முட்டாள் குருவி', என்று புலம்பினான் சீடன்.

சாது பேசினார்.

‘சீடனே! ஒரு உண்மயை உனக்கு சொல்கிறேன். நீல நிறத்திற்கும் கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘நீல நிறம் காப்பாற்றும்', என்று நான் சொன்னது பொய். நீல நிறம் தன்னை காப்பாற்றும் என்று குருவியும், குருவியை தொந்தரவு செய்தால் கடவுள் நம்மை தண்டிப்பார் என்று அதன் எதிரிகளும் நம்பினர். இந்த நம்பிக்கை குருவிக்கு தைரியத்தையும், எதிரிகளுக்கு பயத்தையும் கொடுத்தது. இதனால் குருவி மகிழ்ச்சியோடு தன் நாட்களை கழிக்கிறது. இது குருவியின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. கடவுள் கொடுத்த வரம், குருவியின் யதார்த்த தேவைக்கு கிடைத்த வெற்றி', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது. சீடன் சிந்திக்கத் தொடங்கினான்.

இந்தக் கதையில் நாம் படித்த நம்பிக்கைதான் ஆன்மீகம். கடவுள் நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார் என்று யாரும் நினைப்பதில்லை. ஆனால், நியாயமான நமது செயல்களை அவர் அங்கீகரிக்கிறார். முயற்சியில்லாத இறை நம்பிக்கையும், இறை நம்பிக்கையில்லாத முயற்சியும் பலனளிக்காது என்று மகாபாரதம் சொல்கிறது. எது எப்படியோ, இறை நம்பிக்கையே நம்மை வழி நடத்துகிறது', என்ற சித்தாந்தமே ஆன்மீகம். அப்படிப்பட்ட ஆன்மீகத்தோடு கூடிய அரசியல் வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் எண்ணம். இதுதான் இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்த தேவையின் அடிப்படையிலேயே ரஜினியின் ஆன்மீக அரசியல் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

ஆனால், ஆன்மீக அரசியல் குறித்து ரஜினியிடம் நேற்று கேள்வி கேட்ட போது, ‘உண்மையான , நேர்மையான, நாணயமான, ஜாதி மத சார்பற்ற அரசியலே ஆன்மீக அரசியல்', என்று புதிய விளக்கமளித்துள்ளார். இதே கொள்கைகள் எல்லா அரசியல் கட்சியிடமும் இருக்கிறதே! எதற்காக ரஜினியை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது.
 

ரஜினிகாந்த அவர்களே! உங்கள் ‘ஆன்மீக அரசியல்' அறிவிப்பு நாத்திக முகமூடி கட்சிகளிடம் ஒரு உதறலை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக அரசியல் என்று நீங்கள் அறிவித்தபோது மக்கள் புரிந்துகொண்ட விஷயத்திற்கும், தங்களது தற்போதைய புதிய விளக்கத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதாவது, புரிதலுக்கும், விளக்கத்திற்குமான இடைவெளி மிக அதிகம். ஆகையால் மக்களின் புரிதலுக்கு ஏற்றபடி தங்களது விளக்கத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். கடவுள் பக்தியோடு சேர்ந்த அரசியலை முன்னிறுத்துங்கள். ‘ஆன்மீகம்' என்ற வார்த்தை இந்து மதத்திற்கு மட்டும் சொந்தம் என்பது போல சிலர் பேசி வருகிறார்கள். மக்களை குழப்புவதாக நினைத்து அவர்கள் குழம்பி நிற்கின்றனர். 

ஒரு கட்சித் தலைவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் மற்ற மதங்களை மதிக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. நான் கஞ்சியும், கேக்கும் சாப்பிடுவேன், கொழுக்கட்டை சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் மோசமான அரசியல் உங்களுக்கு வேண்டாம். மற்ற மதங்களை மட்டுமல்ல, தான் சார்ந்த மதத்திற்கு மரியாதை கொடுக்கும் நல்ல அரசியலை உங்களால் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம். இனி யாராவது ‘ஆன்மீக அரசியல் பற்றி கேள்வி எழுப்பினால் கடவுள் பக்தியுடன் சேர்ந்த நேர்மையான, நாணயமான, ஜாதி மத சார்பற்ற அரசியல்', என்று பதிலளியுங்கள். இத்தகைய ஆன்மீக அரசியலை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்களது அரசியல் நாத்திக அரசியலுக்கு எதிரானதாக இருக்கட்டும்.

பிடித்த தலைவர் நாத்திகர் என்றாலும், அவர் மீது கொண்ட அன்பினால், தங்களது ஆன்மீக சிந்தனைகளையும், இறை பக்தியையும் புறம்தள்ளிவிட்டு அவருக்கு ஓட்டுப் போட்டவர்கள் நம் மக்கள். அதே போல் ஆன்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்களும் உங்களின் மீது கொண்ட அன்பினால் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.

ஆன்மிக அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது', என்று துள்ளிக் குதிக்கும் நாத்திகர்களும், அவர்களை முகமூடிகளாய் கொண்ட அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?', என்று ஒரு கவிஞன் பாடினான். ராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார்? என்று ஒரு கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார். நெற்றியில் குங்குமம் வைத்தவரை, ‘ரத்தம் வழிகிறது', என்று கேலி செய்தார் ஒரு கட்சித் தலைவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் ‘நாத்திக அரசியல். நாத்திக அரசியல் ஏற்றுக்கொள்ளப்படும் போது, ஆன்மீக அரசியல் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

தினமும் கோவிலுக்கு செல்லும் முரட்டு பக்தன்கூட, தேர்தல் நேரத்தில் நாத்திக தலைமை கொண்ட கட்சிகளை ஆதரித்ததை பார்த்திருக்கிறோம். ஆன்மீகத்தையும், இறைவழிபாட்டையும் அரசியலுக்குள் தமிழக மக்கள் கொண்டு வந்ததில்லை. இதை தவறாக புரிந்துகொண்ட நாத்திகவாதிகள், தமிழகத்தில் நாத்திகம் பேசினால் வெற்றி பெறலாம்', என்ற மாயையை நம்பத்தொடங்கினர். ஆன்மிக அரசியல் இந்த மாயையை நிச்சயம் உடைத்தெரியும்.

ஒரு நாத்திகத் தலைவர் அவ்வப்போது ஆத்திகர்களை, குறிப்பாக இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசுவார். ஆனால், தன் குடும்ப நபர்களின் முரட்டு ஆன்மீகத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுபோன்ற தலைவர்களின் வீடுகளில் நாத்திகம் தோற்றுப் போயிருக்கிறது என்று சொல்வதைவிட, ஆன்மீகமும், ஆத்திகமும் வெற்றி பெற்றுள்ளது என்று சொல்வதே பொறுத்தமானதாக இருக்கும்.

இது நாள்வரை தமிழக அரசியல் எப்படி இருந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு நல்ல கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை விட, ஏதாவது ஒரு பிரச்னையின் அடிப்படையில் மற்றொரு கட்சியை தோற்கடிப்பதற்காக மட்டுமே இதுவரை வாக்களித்துள்ளோம். அதாவது ஓட்டளித்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் நிலையிலிருந்து விலகி, குறிப்பிட்ட ஒருவரை விரட்டியடிப்பதற்காக மட்டுமே வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தி வந்திருக்கிறோம். அதனால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது இரு கட்சி முறையில் உள்ள சிக்கல். இது மாற வேண்டும். ‘வேண்டாதவரை விரட்டியடிக்கும் நிலையிலிருந்து, விருப்பமானவர்களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தமிழக மக்கள் தங்களை தயார்செய்து கொள்ள வேண்டும். அதற்கு ரஜினியின் முயற்சி உதவி செய்யும். ஆன்மீக அரசியல் என்ற புதிய அணுகுமுறை இறை நம்பிக்கையையும், ஆட்சியையும் ஒரே கோட்டில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம். சிக்கலான பிரச்னைகளில் ஜாதி, மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் நிலை இனி வரக்கூடாது. .

நாம் படித்த கதையில் வரும் சாதுவின் நிலையில்தான் இன்று ரஜினி இருக்கிறார். அவருடைய ‘ஆன்மீக அரசியல்' என்ற அறிவிப்புதான் நீல நிறச்சாயம். இந்த நீல நிறச்சாயம் மக்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதற்கு இறை அங்கீகாரமும் கிடைக்கும். ஆகையால் தெய்வ பக்தியோடு கூடிய அரசியலை முன்னிறுத்துங்கள். ரஜினியின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com