நான் கருப்பு எனில், நான் வணங்கும் கடவுள் மட்டும் கருப்பாக இருக்கக் கூடாதா?!

கருப்பின் மீதான வெறுப்பு தானாக அமைந்திருந்தால் அது இயல்பு. ஆனால், அப்படியல்லாமல் அது இந்தியாவில் காலனி ஆதிக்க காலத்தின் போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயமாக இருப்பின், கருப்பின் மீது ஏன் இத்தனை
நான் கருப்பு எனில், நான் வணங்கும் கடவுள் மட்டும் கருப்பாக இருக்கக் கூடாதா?!

நான் கருப்பு, எனில் நான் வணங்கும் தெய்வங்களும் கருப்பாய் இருந்தால் தவறில்லையே, இப்படி ஒரு கேள்வியோடு ‘இருளும் தெய்வீகமே’ எனும் கான்செப்டில் சமீபத்தில் ஒரு ஃபோட்டோஷூட் நடத்தி முடித்திருக்கிறார்கள் புகைப்படக் கலைஞர் நரேஷ் நில் மற்றும் சுந்தர் பரத்வாஜ் இருவரும். இவர்களது புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் துர்கா, சரஸ்வதி, லக்‌ஷ்மி, சிவன், பாலமுருகன், பாலகிருஷ்ணன், லவ, குசர்களுடனான சீதை என அனைவருமே கருநிறத் தெய்வங்கள். இப்படி ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்துவதற்கான தூண்டல் எதுவெனக் கேட்கையில் அக்கேள்விக்கான பதிலாகக் கிடைத்தது தான் இக்கட்டுரையின் முதல்வரி. நியாயமான ஆசை தான்!

பொதுவில் கருப்பு தவிர்க்கப்படத் தக்க நிறம் எனும் எண்ணம் தென்னிந்தியாவெங்கும் விரவிக் கிடக்கிறது. என்ன தான் திரைப்படங்களில் கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு, உன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் தெளசண்ட் வாட்ஸு பவரு’ என்று பாடினாலும், இன்றும் கூட ஜவுளிக்கடைகளில் பாருங்கள்; குடும்பமாக புடவை எடுக்க வரும் போது வயதான பெண்கள் முதல் நடுத்தர வயதுப் பெண்கள் வரை பெரும்பாலான பெண்கள் தவிர்க்கும் நிறமாக இருப்பது கருப்பு தான். கருப்பு நிறத்தை தங்களது ஆதர்ச நிறமாகக் கொண்டாடுபவர்கள் கூட விசேஷ தினங்களில் கருப்பு நிற ஆடைகளை அணியத் தயங்கத்தான் செய்கிறார்கள். கருப்புச் சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ள திராவிடர் கழகத்தினரே கூட தங்களது சுயமரியாதைத் திருமணங்களில் மணப்பெண்களையும், சுற்றத்தாரையும் கருநிறப்புடவை அணிந்து கொள்ள அனுமதித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. கரும்பட்டும் அழகு தான், ஆனால் ஏனோ நாம் அதை மங்கலகரமாக ஏற்றுக் கொள்ளத் தயங்கிக் கொண்டு தான் இருக்கிறோம். 

இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று வாகனங்கள் வாங்கும் போது கருப்பு நிற வாகனங்களைத் தவிர்த்து விடுகிறார்கள். அப்படியே ஒரு சிலர் ஆசைப்பட்டு வாங்கினாலும் முழுக்கருப்பு ஆகாது என்ற கொள்கையுடன் கருப்பு, வெள்ளை, அல்லது கருப்பு, சிவப்பு என்ற காம்பினேஷன் வண்ணங்களில் வாகனங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் உச்சமாக இன்றும் கூட மணப்பெண்/ மணமகன் தேடல் வேட்டையில் தகுதி வாய்ந்த மணப்பெண்ணாகப் பால் நிறத்து தேவதைகளுக்குத் தான் முன்னுரிமை தர நினைக்கிறார்கள். ஆண்களைப் பொருத்தவரை வெளுத்த தேவதூதர்களைக் காட்டிலும் கருப்பு ஆண்மை நிறைந்த நிறமாகக் கருதப்பட்டாலும் பெருவாரியான ஓட்டுக்கள் பச்சக்கென விழுந்து மணமகன் வேட்டையில் முன்னணியில் நிற்க வைத்திருப்பதும் வெளுப்பான சிவந்த ஆண்களைத் தான். பெண் கருப்பு, மாப்பிள்ளை கருப்பு என்று தட்டிக்கழிக்கப்படும் வரன்கள் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் உண்டு. 

அவ்வளவு ஏன்? கோயில் சிலைகளை வெண்ணிறப் பளிங்கில், மார்பிளில் வடிப்பது நமது தென்னிந்தியக் கோயில்களின் பாரம்பர்யம் அல்லவென்பதால் தான் சிலைகளையேனும் கருங்கல்லில் நீடிக்க விட்டிருக்கிறார்கள் இல்லையேல், காலண்டர்கள் தோறும் காணக் கிடைக்கும் செக்கச் சிவந்த பொன்னிற மேனியர்களாகவோ, அல்லது வட இந்திய சிலாரூபங்களைப் போன்ற வெண்ணிற மேனியர்களாகவோ தயங்காது ஆக்கி வைத்திருப்பார்கள். அதெல்லாம் சரி, ஆனால், இதெல்லாம் ஒரு பேச்சா? அவரவர் விரும்பியதை, அவரவர் தேர்ந்தெடுக்கிறார்கள்... இதில் ஒரு குறிப்பிட்ட நிறத்தை வெறுப்பதாக நாம் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்? அல்லது குற்றம்சாட்ட முடியும்? என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒண்றுண்டு. கருப்பின் மீதான வெறுப்பு தானாக அமைந்திருந்தால் அது இயல்பு. ஆனால், அப்படியல்லாமல் அது இந்தியாவில் காலனி ஆதிக்க காலத்தின் போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயமாக இருப்பின், கருப்பின் மீது ஏன் இத்தனை ஒவ்வாமை? என்ற கேள்வி எழுவதும் இயல்பு தானே?! அதனடிப்படையில் உருவானது தான் இந்த ஃபோட்டோஷூட் என்கிறார்கள் நரேஷ் கில் மற்றும் பரத்வாஜ் சுந்தர் இருவரும்.

இதோ அவர்களது ஃபோட்டோஷூட்டில் இடம்பெற்ற கருத்த தெய்வங்கள்...

சிவன் & துர்கை...

சரஸ்வதி

சீதை

யோசித்துப் பாருங்கள், நமது இதிகாசங்களில் கார்மேக வண்ணர்கள் என்று குறிப்பிடப்பட்ட ராமனையும், கண்ணனையும் கூட திரைப்படங்களிலும், கோயில் சுவர்களிலும், புத்தகங்களிலும் நீலநிறப் பெயிண்ட் அடித்துத் தான் சித்தரித்து வருகிறோம். மிக அபூர்வமாக தேர்ந்த ஓவியக் கலைஞர்கள் சிலர் மட்டுமே அவர்களை கருநீல வண்ணர்களாகவோ அல்லது தெளிவற்ற கருப்பிலோ சித்தரித்துக் கொஞ்சமே கொஞ்சம் நியாயம் செய்கிறார்கள்.

நீலநிறக் கடவுளரைக் கண்டிராதவர்கள் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ராமராஜ்ஜியம்’ தெலுங்கு கம் தமிழ் டப்பிங் திரைப்படத்தை எப்பாடுபட்டேனும் ஒருமுரை பார்க்க முயலலாம், அதில் பாலகிருஷ்ணா உடல்முழுதும்  நீலபெயிண்ட் அடித்து நடித்து மிரட்டு, மிரட்டென மிரட்டியிருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com