பேரானந்தத்துக்கு அருகே....

சொல் என்பதற்கு உருவம் உண்டு. காட்சி உண்டு. இசைக்கு உண்டா?
பேரானந்தத்துக்கு அருகே....

சொல் என்பதற்கு உருவம் உண்டு. காட்சி உண்டு. இசைக்கு உண்டா?

எண்ணம் என்பது நமக்கு சொல்லாகத்தானே இருக்கிறது. ஒவ்வொரு எண்ணமும் ஒரு உருவத்தை, ஒரு காட்சியை, ஒரு செயலை மனசுக்குள்ளேயே காட்டிக் கொண்டே தானே இருக்கிறது. அல்லது ஒரு உருவத்தை, ஒரு காட்சியை, ஒரு பொருளைக் காணும் போது உள்ளுக்குள் உடனே சொல் வருகிறதல்லவா. எனவே பார்வை படுகின்ற இடங்களிலெல்லாம் சொற்கள் களி நடனம் புரிகின்றன.

சொற்கள் மனதிற்குள் குவியக் குவிய எதிரே உள்ள காட்சியைத் தாண்டி மனம் வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து கொண்டு போகிறது. அதாவது சொற்களின் பெருக்கம் அதிகமாகிறது.

ஆனால், தன்னை அறிய, கடவுள் என்கிற விஷயத்தைப் புரிந்து கொள்ள, சொற்களற்ற மெளனம் முக்கியம் என்று சொல்கிறார்கள். எண்ணங்களை நிறுத்தச் சொல்கிறார்கள். எண்ணங்கள் எங்கு துவங்குகின்றனவோ அந்த இடத்திலேயே மனதை நிலை நிறுத்த எண்ணங்கள் பின்வாங்கி, பிறகு வெளியேறி பிறகு காணாமல் போகும். பிறகு உதிக்காமலேயே கிடக்கும் என்கிறார்கள். எந்தச் சொல்லும் உதிக்காமல் கிடக்கும் மோன நிலைக்குத் தான் தியானம் என்று பெயர். இது நிரந்திரமாகக் கைகூடினால் சமாதி என்றும் சொல்கிறார்கள்.

அப்படியானால் மொழி என்பது கடவுளுக்கு எதிரான விஷயமா? சொற்கள் என்பது கடவுளுக்கு அருகே போகாமல் சிதறடிக்கின்ற செயலா? ஆனால் மனிதன் கோழையல்ல, விவேகி, எந்த சொல் உன்னைச் சிதிலப்படுத்துமோ எந்த சொல் உன்னைக் கடவுளிடமிருந்து அன்னியப்படுத்துமோ அந்த சொல்லை வைத்துக் கொண்டே கடவுளுக்கு அருகே போக முயற்சிகள் செய்யப்படுகின்றன. இதன் பொருட்டே வேத சப்தங்களும் அதற்கு விளக்கமாக எழுந்த உபநிஷத்துகளும் கடவுளை மிக அருகே கொண்டு வர முயற்சிக்கின்றன.

கவிதைகள் இன்னும் ஆழ்ந்து சில மனிதர்களால் சிந்திக்கப்பட்டு பல மனிதர்களால் உணரப்படுகின்றன. அப்படி உணரப்படுகின்ற போது அந்தச் சொற்கள் கடவுள் என்கிற விஷயத்தைத்தான் அருகே கொண்டு வருகின்றன. எது கடவுள் என்று ஒரு கேள்வி எழ,

அரியானை, அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை
அணுவை, ஆர்க்கும் தெரியாத தத்துவனை
தேனை, பாலை, திகழொளியை தேவர்தம்
கோனை, மற்றைக்கு அரியானை, நான்முகனை
கனலை, காற்றை கனை கடலை, குலவரையை
கடந்த நின்ற பெரியானை

என்று பெரிய பட்டியல் போடப்படுகிறது. உன்னால் அறிய முடியாத ஒரு விஷயம் இந்த பிரம்மாண்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரம்மாண்டத்தைச் சொல்ல சொற்கள் போதாது என்று ஒரு மன்னிப்பு கோரலை, ஒரு கழிவிரக்கத்தை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

மனம் என்ன யோசிக்குமோ அதை நிறுத்த முடியும் என்பதற்கு ஒரு கவிஞர் முயற்சி செய்கிறார்

உள்ளுயிரின் உள்ளே ஒரு
பரஞ்சோதி வரின்
கள்ள மனம் துள்ளாது
கண்ணே ரகுமானே

என்கிறார். மனம் ஏதேனும் திருட்டுத்தனம்தான் செய்து கொண்டிருக்கிறது. நேர்வழியில் போகின்ற விஷயம் இந்த மனதிற்குத் தெரியாது. இந்தக் கள்ள மனம் துள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், அமைதியாக வேண்டுமென்றால், யோசிக்காமல் இருக்க வேண்டுமென்றால் உள் உயிரின் உள்ளே ஒரு பரஞ்சோதி வர வேண்டும் என்கிறார். கடவுள் வந்தால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் கடவுள் வருவார் என்று ஒரு செய்யுள் சொல்லாமல் சொல்கிறது. ஒரு மொழி விவரிக்கிறது. ஆக கடவுளை அடைவதற்கு மொழி அவ்வப்போது இடைஞ்சலாக இருந்தாலும் எதிர்ப்பதமாக இருந்தாலும் அதைத் தாண்டியும் முன்னேறிப் போக முயற்சி செய்கிறது.

அரைக்கணம் கூட என்னால் மனதை கட்டுப்படுத்த முடியவில்லையே என்கிற புலம்பல்கள் கவிதைகளில் உண்டு. எல்லா மொழிகளிலும் கடவுள் என்கிற பிரம்மாண்டம், பிரமிப்பு சொல்லப்படுகிறது.

'அகளங்க சசி கோடி பிரகாசம்’ என்கிற ஒரு வடமொழியின் வரி கடவுளின் இருப்பை ஒருவாறு சொல்கிறது. களங்கமில்லாத ஒரு கோடி சந்திரனின் பிரகாசம்தான் கடவுள் என்று சொல்ல முயற்சிக்கிறது. விவரிக்க முடியாது என்று சொல்ல எத்தனை விவரமாக வார்த்தைகள். எத்தனை விதவிதமான வாக்கியங்கள் என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் செய்தி கடவுளுடைய இருப்பை சொல்லித்தான் ஆகவேண்டுமா? அவசியமில்லை. மொழிக்கு அப்பாற்பட்ட விஷயம் அது என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்டால் மொழியை எதற்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமோ அதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

எதற்கு மொழி உபயோகம்.

தர்மசாஸ்திரத்திற்கு, வாழ்வியல் வழிமுறைக்கு, ஒரு வகை தொகைக்கு, சில சட்டதிட்டங்களுக்கு மொழி மிக அவசியம்.

காலையில் எழுந்ததும் பல் துலக்கு என்று சொல்வதிலிருந்து அச்சம் தவிர்! ஆண்மை தவறேல்! என்று வாழ்க்கை தத்துவம் வரைக்கும் மொழியால் மனிதருக்கு வழிகாட்ட முடியும். இப்படி ஒரு தரும நெறி, ஒரு வாழ்க்கை வழி, ஒரு வாழும் வகை வந்து விட்டால் அந்த வாழும் வகையிலிருந்து கடவுள் தேடலுக்கு எளிதாக நகர்ந்து விட முடியும். மொழி ஒரு அளவு தூரம் கொண்டு போய் விட மற்றபடி மேற்கொண்டு பயணத்தை மொழியற்று நகர்த்திவிடலாம். மொழியற்று நகர்ந்து விட்ட பயணத்திற்கு எது துணைக்கு வரும்.

இசை துணைக்கு வரும்! ‘வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குளிருதடி கிளியே, ஊனும் உருகுதடி’ என்று பாடல் உண்டு. இதைப் பாடுகிற போது முருகன் என்கிற ஒரு விஷயமும் ஒரு கதையும் வள்ளியை மணந்ததும், யானை வந்ததும் அந்த வள்ளியின் கணவனாக முருகன் மாறியதும் நமக்கு உடனடியாக நினைவுக்கு வரும். இது ஒரு பார்வை. 

ஆனால் குறவள்ளி என்பது பூமி. பூமியினுடைய வடிவம்தான் கொடியாக உணரப்படுகின்ற வள்ளி. தாவரமாக உணரப்படுகின்ற தேவதை. அவளுடைய கணவன் முருகன். கடவுள். பூமியை ஆளுகின்ற அந்த பிரபஞ்ச சக்தியை பர்றி, அந்தக் கடவுள் பற்றி எவர் சொன்னாலும் உடம்பு நடுங்கிப் போகிறது. உடம்பு வலுவில்லாமல் உருள்கிறது. பிரபஞ்ச சக்தியின் பிரம்மாண்டத்தை சிறிதாக்கி வள்ளி என்றும் முருகன் என்றும் சிறிய உருவமாக்கி சொல்கிறார்கள். உருவம் சட்டென்று உடைந்து மிகப் பெரிய பிரம்மாண்டத்திற்கு மனம் தாவ வழி இருக்கிறது.

மாலைக்கதிர் வேலவனும் வரிசையாய்
நான் எழுதும் ஓலைக் கிறுக்காச்சுதே
-கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே என்று பாடல் தொடர்கிறது.
 

என்ன இது.. கடவுளுக்கு பக்தன் எழுதுகின்ற ஓலையா...என்ன ஓலை? விண்ணப்பங்களா? வேண்டுதல்களா?

இருக்கலாம். ஆனால் கடவுளைக் கொண்ட தொடர்புகள் கடித வரியில் மனம் எழுப்பிய எண்ண அலைகள் சீராக இல்லை. அதற்குக் காரணம் மனம் சீராக இல்லை என்று வெளியே ஒரு காதல் கடிதம் எழுதுகின்ற ஒரு காதலியைப் போல் உருவகப்படுத்தினாலும் உள்ளுக்குள்ளே வேறு ஒரு உருவம் வேறு ஒரு செய்தி கிடைக்கிறது. அந்த செய்திக்கு உருவம் இல்லை. அந்தச் செய்தியைக் காட்சிப்படுத்த முடியவில்லை.

அப்படி ஒரு தத்துவமா இந்தப் பாடலில் இருக்கிறது என்று கேள்வி வரலாம். கடைசி வரியைக் கவனியுங்கள்

எங்கும் நிறைந்திருப்பன்
எட்டியும் எட்டாதிருப்பன்
குங்கும வண்ணனடி கிளியே
குமரப் பெருமானடி

செக்கச் செவேலென்ற சுந்தரவடிவமான ஒரு இளைஞனை இந்த வார்த்தைகள் ஞாபக்கப்படுத்தினாலும் எங்கும் நிறைந்திருப்பது அந்த உருவகத்தை பிரம்மாண்டமாக மாற்றி விடுகிறது. மொழி வேறுவித காட்சியைத் தருகிறது. அந்த பிரம்மாண்டத்திற்கு என்ன வடிவம். அந்த பிரம்மாண்டத்தை எந்தக் காட்சியில் அடக்க முடியும். மொழி என்பது காட்சியைச் சொன்னாலும் காட்சியைத் தாண்டி விவரிக்கின்ற விஷயத்தைப் பாடல்கள் எளிதாகச் சொல்கின்றன. அதையும் தாண்டி ராக ஆலாபனைகள் எந்த காட்சியும் கொண்டு வராமல் எந்த மன ஓட்டத்தையும் ஏற்படுத்தாமல் எங்கே எண்ணங்கள் எழுகின்றதோ அந்த இடத்தில் மனம் நின்று ஒரு சகானாவை, ஒரு மோகனத்தை எழுப்ப முயல்கிற போது அதில் மனம் கரைந்து தோய்கிற போது மனம் ஒரு மையத்தில் இருப்பது கூட மறந்து போய் இருக்க முயற்சிப்பதும்கூட நகர்ந்து போய் வெறும் வெளியில் கலக்கிறது.

இசை மிக உன்னதமான கலை என்பதற்கு இதுதான் உதாரணம். இசைக் காட்சியினுடைய தொகுப்பு அல்ல. மொழி காட்சியைக் கொடுத்தாலும் காட்சிகளுக்குப்பால் ஒரு இடத்திற்கு அழைத்துப் போகிறது.

ஆனால் இசையின் முக்கியமான அங்கமான ராக ஆலாபனையோ, பாடப் பாட மொழி மறந்து மொழிக்கு ஆதாரமான காட்சி மறந்து தன்னுள் தான் மூழ்குதல் என்பதை மிக எளிதாகச் செய்து விடுகிறது. தன்னுள் தான் மூழ்குவதுதான் கடவுள் தேடலில் ஆரம்பம். எண்ணங்கள் எங்கு தோன்றுகிறதோ அங்கே ஒரு மையத்தில் நிற்பதுதான் தியானத்தின் துவக்கம். அதுதான் யோக சாதனை. இசை மனிதனின் கண்டுபிடித்தல்களில் மகத்தானது. பிரபஞ்ச சக்தியின் அசைவை, இயற்கையில் ஒலிகளை உள்ளுக்குள் வாங்கி சொற்கள் காட்டுகின்ற சுகத்தை விட இன்னும் பல படிகள் உஅயரே கொண்டு போய் ஆழ அழுத்துகின்ற, ஒரு தன்மையை எளிதில் செய்கிறது.

‘தெர தீயக ராதா..’ என்பதற்கு திரையை விலக்க மாட்டாயா என்று பொருள் இருப்பது உண்மைதான். அது ஒரு கோவிலில் உள்ள கருவறைக்கு முன்னே போடப்பட்ட துணித் தடையாக இருப்பினும் உண்மைதான். ஆனால் அது துணித் திரை மட்டுமல்ல என்பது பாடுபவருக்குப் புரியும்.

அப்போது எது திரை என்கிற கேள்வி வரும். உலகம் முழுவதும் திரை. இந்த உலகத்தால் ஏற்பட்ட செயல்கள் முழுவதும் திரை, இந்த செயல்களால் ஏற்பட்ட எண்ணங்கள் முழுவதும் திரை. என் மனம் தான் எனக்குப் பெரிய திரை. என் மனத் திரையை நான் எப்போது விலக்க என்கிற கதறல்தான் முன்னே வந்து நிற்கிறது.

கடவுளைத் தேடுவதற்குத் தான் இசையா. மற்ற கலைகளா என்கிற கேள்வி வரின் அதற்கு உடனடியான பதில் ஆமாம் அதற்குத் தான் வாழ்க்கை மொத்தமுமே மனிதனாகப் பிறவி எடுத்ததுவே கடவுளை தேடத்தான். ஆனால் கடவுள் என்பது ரூப அரூபங்களைத் தாண்டி வாழ்வு ஆதாரங்களை பிரபஞ்ச சக்தியாக, உள் மனதில் தோன்றும் சத்தியமாக நிரம்பப் பெற்றிருக்கிறது. 

இவற்றை லேசாகத் தொட்டதன் விளைவுதான். உலகாய சந்தோஷங்கள். கர்வங்கள் கடவுள் தன்மையில் முற்றிலும் மூழ்க, பேரானந்தப் பெருமிதம் வந்தடையும். வந்தடைந்தவர்கள் இந்த பூமியில் இருந்திருக்கிறார்கள்.

இசைக்கு அருகே இருப்பவர்கள் இந்தப் பேரானந்தத்திற்கு அருகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திரை விலகும்.

(தினமணி இசைவிழா மலர் 2009-10 இதழில் வெளியான கட்டுரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com