மஞ்சள் நீராட்டுவிழா அலைஸ் ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’!

மஞ்சள் நீராட்டுவிழா எனும் பூப்புனித நீராட்டு விழா வன்மையாக நிராகரிக்கப்பட வேண்டிய விஷயமா? அல்லது அதில் கடைபிடிக்கப்படும் நிபந்தனைகள் மட்டுமே கண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களா?
மஞ்சள் நீராட்டுவிழா அலைஸ் ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’!

பூப்புனித நீராட்டுவிழா அலைஸ் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்படுவது குறித்து முற்றிலும் படித்த தலைமுறையினர் ஆகிவிட்ட நம்மிடையே இன்று பலத்த விமர்சனங்கள் பல உண்டு. ஒரு சிறுமி பருவமடைந்து தன் வாழ்வின் அடுத்த படிநிலைக்குச் செல்வது பெண்ணுலகில் இத்தனை கொண்டாட்டத்துக்குரிய ஒரு விஷயமாக அணுகப்படுவது ஏன்? பெண்களிலும் தென்னிந்தியப் பெண்களுக்கு மட்டுமே இத்தகைய பண்டிகைகள் உரித்தானவையாக இருக்கின்றனவே தவிர இந்தியாவுக்கு வெளியே பிற நாடுகளில் சிறுமிகள்  பூப்படைவதை வெளிப்படையாக அறிவிக்கும் இம்மாதிரியான பண்டிகைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன் நமது பழந்தமிழர் நாகரீகத்தில் மட்டும் இப்படியோர் பழக்கத்தை தொன்று தொட்டு தலைமுறைகள் தோறும் கடத்திக் கொண்டு வந்து இன்றும் கூட முன்னைப்போல இல்லாவிடினும் சிறிய அளவிலேனும் விழாவெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதில் அப்படி என்ன சந்தோஷம் நம் மக்களுக்கு?! என நம்மில் பலர், பல சந்தர்பங்களில் யோசித்திருக்கக் கூடும். அப்படி யோசித்து விட்டு சிலர் அத்தகைய விழாக்களைத் தங்களது பெண் குழந்தைகளுக்குத் தவிர்த்திருக்கலாம். சிலர் பழைய பாரம்பரியங்களை விட மனமின்றிப் பின்பற்றிக் கொண்டும் இருக்கலாம். அது அவரவர் மனநிலை, விருப்பு, வெறுப்பு மற்றும் நம்பிக்கை சார்ந்தது.

ஆனால், மீண்டுமொருமுறை யோசித்துப் பாருங்கள், மஞ்சள் நீராட்டுவிழா எனும் பூப்புனித நீராட்டு விழா வன்மையாக நிராகரிக்கப்பட வேண்டிய விஷயமா? அல்லது அதில் கடைபிடிக்கப்படும் நிபந்தனைகள் மட்டுமே கண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களா? என்பதைப் பற்றி மீண்டுமொரு முறை ஆலோசித்துப் பார்த்தால் விழா தவறல்ல, அதன் மூலமாக பெண்ணுக்கு( சிறுமிக்கு) விதிக்கப்படும் நிபந்தனைகளும், கட்டளைகளும் தான் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்பது புரிய வரும்.

ஒரு சிறுமி பருவமடைவதை ஊர் கூடிக் கொண்டாடுவது கூட ஒரு வித அறிவிப்பு. இந்தச் சிறுமி இனி சிறுமியில்லை, அவளது கருப்பை ஒரு குழந்தையை உண்டாக்கக் கூடிய சக்தி கொண்டதாக வளர்ச்சி அடைந்து விட்டது. அதற்கான வளர்சிதை மாற்றங்கள் அவளது உடலில் தொடங்கி விட்டன. இனி இச்சிறுமியை விளையாட்டுப் குழலியாகக் கருதாமல் நாளை தனக்கென ஒரு குடும்பத்தை வழிநடத்தத் தகுந்தவளாக பக்குவமான பெண்ணாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அவளது பெற்றோருக்கு மட்டுமல்ல அவளைச் சார்ந்த மொத்தக் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட உண்டு. எனவே அவளை வாழ்த்துங்கள் என உரைக்கும் பண்டிகை அல்லவா அது?!

தனது எதிர்கால சந்ததியினரை பலமுள்ளவர்களாகப் படைக்கும் பொருட்டு அவளது உடல் வலுவடைய வேண்டும். அதற்கு ஊர் கூடி அவளுக்கு ஊட்டம் தர வேண்டும். இந்தக் காரணத்தை முன்னிட்டே, பூப்படைந்த பெண்ணைக் காணச் செல்பவர்கள் அனைவரும் அவளுக்கே அவளுக்கு எனப் பிரத்யேகமாக நிறைய சத்துள்ள தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் பழக்கம் தொடங்கியது. நல்லெண்ணெய் ஊற்றிய வெல்லம் தின்னத் தருவது அவளுக்குத் தேவையான இரும்புச் சத்தை அதிகரிக்க. வெல்லப்பாகுடன் தரப்படும் உளுந்துக் களி அவளது இடுப்பெலும்புகளை பலப்படுத்த வேண்டி, அதிகாலையில் விரலி மஞ்சள் கரைத்து, வேப்பிலை ஊறிய தண்ணீரில் தலை முழுகி சூட்டோடு சூடாக மிளகுத் தூள் தூவிய ஆம்லெட்டுகள் தின்னத் தருவது அவளுடலின் புரதச் சத்துக்கள் மேம்பட. அவள் விரும்புவதை எல்லாம் உண்ணத் தந்து அழகு பார்ப்பது ‘பெண்ணுலகின் வசந்தகாலம் அது மட்டுமே’ என உணர்ந்த அம்மா, பாட்டிகள், அத்தைகள், சித்திகள் எனும் அத்தனை பெண்களின் பரிவுணர்வால். 
இப்படியொரு உணர்வுப் பூர்வமான உன்னதமான குடும்பவிழாவை காலப்போக்கில் கேலிக்கூத்தாக்கியது யார்? 

பூதங்களோ, அரக்கர்களோ, யட்சிகளோ, பேய்களோ, கின்னர, கிம்புருடர்களோ அல்ல எல்லாம் மனிதர்களே தான்!

ஒரு சிறுமி பூப்படைந்ததை மஞ்சள் நீராட்டுவிழா என்ற பெயரில் ஏன் ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்துக் கொண்டாடி எல்லோருக்கும் வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்கிறார்கள்? காரணம், சிறுமி, இளம்பெண்ணாவது இயற்கையான வளர்சிதை மாற்றங்களில் ஒன்று, அதை ஊர்கூடிக் கொண்டாடி அவளது உள்ளத்தில் வித்யாசமான உணர்வுகளை ஏற்படுத்தத் தேவையில்லை என்பது முற்போக்காளர்களின் வாதம். இப்படி தேவையற்ற அணுகுமுறைகளால் அச்சிறுமியின் உணர்வுகள் மட்டுமே தூண்டப்படுவதில்லை அவளைப் பார்க்கும் ஆண்களின் மனதிலும் கூட சிறுமி என்ற எண்ணம் மாறி தேவையற்ற பாலியல் எண்ணங்களை தோன்றச் செய்யும் என்பது உணர்வு வறட்சி கொண்டவர்களின் வாதம். இரண்டுக்கும் நடுவில், ஒரு சிறுமி, வளர்ந்து வரும் போது தனது வாழ்வின் ஏதாவது ஒரு கணத்தில் தன்னை ஸ்பெஷலாக உணர விரும்புவாள் அது அவளது பூப்புனித நீராட்டுவிழாவாகவோ அல்லது திருமணமாகவோ, அல்லது வளைகாப்பாகவோ இருக்கலாம் என்ற ஆத்மார்த்தமான புரிதல் புறக்கணிக்கப்படுகிறதே அதை அனைவரும் அவசதியாக மறந்தே விட்டார்கள். 

எந்த ஒரு விழாவையும் தான் எடுத்துக் கொள்ளுங்கள், நாம் அவற்றின் ஆன்மா போன்ற அசலான தாத்பர்யங்களை எல்லாம் புறக்கணித்து விட்டு நமது வசதிகளுக்குத்தக நமக்குப் பிடித்தமாதிரியாகக் கொண்டாடிக் கொள்கிறோம். உதாரணத்துக்கு, பூப்புனித நீராட்டுவிழாவுக்கு, உறவினர்கள் தாண்டி நமது செல்வாக்கை விளம்பரப்படுத்தும் நோக்கில் விஐபிக்களை அழைக்கிறேன் பேர்வழியென்று அரசியல்வாதிகளை எல்லாம் அழைத்து விழாவின் அடிப்படை நோக்கத்தையே சிதறடிப்பது. விழாவின் நாயகியான சிறுமிக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தை மறந்து அவளை ஃபேஷன் டிரஸ் போட்டியில் பங்கு பெறும் போட்டியாளரைப் போல அம்மன், ஆண்டாள், மீனாட்சி, என்றெல்லாம் வேஷங்கட்டச் செய்து புகைப்படமெடுத்து அவளை பொம்மை போல ஆட்டுவிக்க முயல்வது. போன்ற விஷயங்கள் தான் இந்த விழாவுக்கு செயற்கைத் தன்மைகளையும் ஒரு வித அசூயையான வெறுப்புணர்வையும் தருகின்றனவே தவிர, மற்றபடி இத்தகைய விழாக்கள் ஒருபோதும் மூடநம்பிக்கைகள் அல்ல!

ஒரு செடியை வளர்க்கிறோம், அது எப்படியோ தானாக மழையில் முளைத்து வளர்ந்து வரட்டும் என்று விட்டு விட்டால் என்ன ஆகும்? காட்டுச்செடியென்றால் பிழைத்து முளைத்து வந்து விடும். அதுவே வீட்டுச் செடி என்றால் நாம் தான் அதைப் பக்குவம் பார்த்து வளர்த்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வெதும்பிப் போய் சில நேரங்களில் பட்டுப் போகும். மஞ்சள் நீராட்டுவிழாவும் அப்படித்தான், நம் வீட்டுக் குழந்தை உடலளவில் பக்குமடைவதை அவளுக்கு இதமாக உரைத்து உணர வைக்க இத்தகைய விழாக்கள் நிச்சயம் தேவை. வேண்டுமானால், அதன் பழமையான பழக்க, வழக்கங்களை முரட்டுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்ளலாம்.

முன்பெல்லாம் சிறுமிகள் பூப்படைந்தால் அவர்களை வீட்டுக்குள்ளே ஒதுக்குப்புறமாக குச்சுக் கட்டி அதில் அமர வைத்து தலைக்குத் தண்ணீர் விட்டு வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளும் வரையிலும் எந்தப் பொருளையோ, அல்லது வீட்டு மனிதர்களையோ தொட அனுமதிக்க மாட்டார்கள். இதே நிபந்தனைகள் அச்சிறுமி ஒவ்வொருமுறை வீட்டுக்கு விலக்காகும் போதும் வீட்டுப் பெரியவர்களால் கண்டிப்பாகவும், சற்றுக் கடுமையாகவும் பின்பற்றப்படும். பல குடும்பங்களில் இன்றைய சூழலுக்கு அது ஒத்து வராது. எனவே அத்தகைய வறண்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம்.

சிறுமிகளை வீட்டுக்குள் அனுமதிக்காமல் தனியே தரையில் பாய் விரித்து தூங்கச் செய்யாமல், இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக அவர்களுக்கு என துவைத்து உலர்த்திக் கொள்ளத் தக்க வகையிலான மெத்தைகள் வாங்கித்தந்து தனிக்கட்டில்களில் அம்மா அல்லது வயதான பாட்டிகளின் துணையுடன் தூங்கச் செய்யலாம். பழங்காலங்களைப் போல வைக்கோல் மெத்தை, கட்டாந்தரையில் பழம்போர்வை அல்லது சாக்கு விரித்து உறங்குவது எல்லாம் ஏறக்கட்டப்பட்டுவிட்டதென்றே நினைக்கிறேன்.

அப்புறம் இந்தத் ‘தீட்டு’ என்ற வார்த்தையை நமது இன்றைய சொல்லகராதியிலிருந்து நீக்கி விடலாம். காரணம் எதெல்லாம் தீட்டு எனப்படுகிறதோ, அவையெல்லாம் அறிவியல்பூர்வமாக பெண்ணின் வளர்சிதை மாற்ற வெளிப்பாடுகள் என்று நிரூபிக்கப்பட்டபின் மீண்டும், மீண்டும் பழைய காலங்களைப் போல அவளுக்குள் கட்டாயப்படுத்தியேனும் உடலளவிலான அசெளகரியங்களைத் திணிக்க நினைக்கும் முயற்சிகள் அனைத்துமே மூடநம்பிக்கைகள் என்றே சொல்லலாம்.

பார்ப்பவர்களுக்குள் இப்படியான விவாதங்களை எல்லாம் வளரச் செய்கிறது ‘யெல்லோ ஃபெஸ்டிவல்’ எனும் ஒரு குறும்படம். அதைத் தாமதமாகக் காண நேர்ந்ததற்காக வருந்துகிறேன். அருமையான குறும்படம். நேரமிருந்தால் எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம். சர்வதேச அளவில் இதுவரை 18 விருதுகளை வென்றதோடு ‘தங்க யானை’ விருதையும் வென்றெடுத்த குறும்படம் இது!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் புழக்கத்தில் இருக்கும் இந்த விழாக்கள், இந்தியாவைத் தாண்டி அயல்தேசங்களில் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

இலங்கை:

இலங்கையில் கிட்டத்தட்ட தென்னிந்தியர்களைப் போலத்தான் இந்த விழா அனுசரிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் இலங்கை வாழ் தமிழர்கள், பண்டைய தமிழ்மரபுப்படி அவரவர் சாதி முறைமைகளுக்குத் தக்கவகையில் மஞ்சள் நீராட்டு விழா அனுசரிக்கிறார்கள். முதலில் பருவமடைந்த சிறுமி தனியே அமர வைக்கப்பட்டு, தாய்மாமனுக்கு சேதி சொல்லப்பட்டு மாலை நேரத்தில் இரவு துவங்கும் முன்னான நேரத்தில் தலையில் நீரூற்றி முழுகச் செய்து உளுந்துக்களி உண்ண வைத்து தனியே குச்சுக் கட்டி அமர வைக்கப்படுகிறாள், 16 ஆம் நாளன்று வீட்டுக்கு விலக்காக்கி தனியே அமர வைக்க்ப்பட்ட சிறுமியை அந்தணர் ஒருவரை அழைத்து புண்ணிய ஹோமம் செய்வித்து வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளப்படுகிறாள். பிறகு அவரவர் வசதிக்கேற்ற வகையில் தகுந்த நாளொன்று குறிக்கப்பட்டு உற்றார், உறவினர் அழைக்கப்பட்டு தாய்மாமன் சீர்ப்புடவை அளிக்க தடபுடலாக மஞ்சள் நீராட்டுவிழா நடத்தி முடிக்கப்படுகிறது. இது தமிழர் கொண்டாட்ட முறை, இந்த முறையையே இலங்கை வாழ் தமிழர்களும் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பான்:

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் சிறுமிகளும், சிறுவர்களும் தங்களது அடலஸண்ட் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் வயது 20 என தீர்மானித்து அந்த வயதைக் கணக்கிட்டு பருவமடைதல் விழாவைக் கொண்டாடுகின்றனர். குறிப்பிட்ட அந்த தினத்தன்று ஆண்களும், பெண்களும் பாரம்பரிய ஜப்பானிய உடைகளை அணிந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பான உணவுகளௌ உண்டு, விழா முடிகையில் ஆல்கஹால் அருந்துவதோடு விழாவை நிறைவு செய்கின்றனர்.

கானா:

கானாவில், பருவமடையும் வயதிலிருக்கும் சிறுமிகளுக்கு கூட்டாக விழா எடுப்பதை ‘டிப்போ’ என்கிறார்கள். அந்தப் பண்டிகை வருடம் தோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் அரையாடை அணிந்த சிறுமிகள் வரிசையாக புனித நீராட புனிதக் குளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்போது அவர்கள் அரையாடை அணிந்திருப்பதன் பொருள், பாதி பக்குவமடைந்த நிலை என்று கூறுகிறார்கள். இந்தச் சிறுமிகளை திருமணத்திற்குப் பின் இவ்விதமாகக் காணும் உரிமை அவர்களது கணவர்கள் தவிர வேற்று ஆடவர்களுக்குக் கிடையாது என்பதை உணர்த்தும் விதமாக சிறுமிகளுக்கு அப்படி அரையாடை அணிவிக்கப்படுவதாக அங்கு ஒரு நம்பிக்கை. குளங்களில் நீராடிய பின் பருவமடைந்தவர்களாகக் கருதப்படும் சிறுமிகளுக்கு கரும்பும், நிலக்கடலையும் உண்ணத் தரப்படுகிறது. மேலும் விழாவின் ஒரு பகுதியாக சிறுமிகளுக்கு தலைமுடியின் ஒரு பகுதி சவரம் செய்யப்படுவதும் அங்கு வழக்கம் தான்.

இந்தோனேசியா:

இந்தோனேசியாவின் பாலித்தீவில் ஆண், பெண் இருவருக்குமே பருவமடையும் வயது வந்தவுடன் பற்கள் அடைக்கப்படுகின்றன (Tooth filing). நான்கு வெட்டுப்பற்கள் மற்றும் இரண்டு கோரப்பற்கள் இந்தச் சடங்கின் போது அடைக்கப்படுகின்றன. அதை ஒரு சடங்காகக் கருதி பருவமடைதல் விழா அனுசரிக்கப்படுகிறது. இப்படிச் செய்வதால் பொறாமை, பேராசை, மிதமிஞ்சிய கோபம் உள்ளிட்ட தீவினை அகன்று நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சடங்கன்று அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே பற்களை அடைக்கும் வேலைகள் மதகுரு முன்னிலையில் துவங்கி விடும். பற்களை அடைக்கும் போது வலி இருப்பதில்லை என்றே பாலி மக்கள் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com