காலண்டரில் ‘கெர்ப்போட்ட ஆரம்பம்’ என்றிருப்பதன் அர்த்தம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!

கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள் கொள்வார்கள்.
காலண்டரில் ‘கெர்ப்போட்ட ஆரம்பம்’ என்றிருப்பதன் அர்த்தம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!

தமிழர்களின் கண்டுபிடிப்புக்களை இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்.

தினசரி காலண்டரில் "இன்று" “கெர்போட்ட _ நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?

நான் மட்டுமல்ல நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது எப்போதாவது எல்லோருமே தான் கண்டிருப்போம் *கெர்போட்ட ஆரம்பம்* என்றொரு அறிவிப்பை.

சிலர் அரசு விடுமுறை தினங்களைத்தேடி நாட்காட்டியின் பின்புறம் தேடுகையில் கூட *கெர்போட்ட நிவர்த்தி* என்ற ஒரு அறிவிப்பு இருப்பதைக் கண்டிருக்கலாம்.

இது ஏதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாதக் கோவில் திருநாளோ அல்ல,

உண்மையில் தமிழர்களின் அடுத்த வருட மழைக்கணிப்பு முறைகளில் ஒன்றே இதுவும்!

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி காலப்போக்கில் கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்றப்படுகின்றன.

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனூர் ராசி மண்டலத்தைக் கடக்கும் போது பூராட நட்சத்திரத்தைக் கடக்கப் பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம். இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும். அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள், இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருத்தி... ஒன்பது மாதம் கழித்துப் புரட்டாசிக்குப் பின் பிள்ளைப் பேறடைவாள்.

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும்

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரமெல்லாம் தெரியாது இல்லையா??

எனவே, மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்துக் கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கருகட்டி இருக்கிறது என்று பொருள்

எனவே அடுத்து வரும் ஆண்டில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று விவசாயிகள் புரிந்து கொள்வார்கள்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள் கொள்வார்கள்.

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்.

இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் கருக்கொள்ளும் மேகத்தைக் கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இது தான் கர்ப்போட்டம் சங்கப்பாடல்களில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் எத்தனை மிமீ மழை எங்கே எவ்வளவு பதிவு ஆகிறதோ, அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும். உதாரணம் 5மிமீ × 180 = 900மிமீ சராசரியாகப் பெய்யும். ஆதற்கு தகுந்தாற் போல் நீர் மேலாண்மை செய்வார்கள். பயிரைத் தேர்வு செய்வார்கள்.

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியைப் பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்

புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!

ஆராய்ந்து உன் முன்னோரின் யுக்திகளை மறவாமல் கையாள் தமிழா! 
                

நன்றி முகநூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com