குடிப்பழக்கத்தை ஒருபோதும் கொண்டாடாதீர்கள் நியாயமாரே!

சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட திரையில் நடிகர்கள் சிகரெட்டை ஊதித் தள்ளும் ஸ்டைலான
குடிப்பழக்கத்தை ஒருபோதும் கொண்டாடாதீர்கள் நியாயமாரே!

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து திரையில் நடிகர்கள் சிகரெட்டை ஊதித் தள்ளும் ஸ்டைலான காட்சிகள்  உண்டு. தற்போது பெண்கள் சிகரெட் புகைப்பதாக சில படங்களின் போஸ்டர்கள் வெளிவருகின்றன. அதில் என்ன தவறு என்றும் கேட்கத் தொடங்கிவிட்டனர். திரைப்படத்தைப் பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை. சமூகத்தில் உள்ளதைத்தான் நாங்கள் படம் பிடிக்கிறோம் என்பார்கள் இயக்குநர்கள். ஆனால் உண்மையில் சினிமாவின் வீச்சும் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிகம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.  அல்லது அறிந்தும் அறியாதவர்களாகிறார்கள். காரணம் அவர்ளின் கணக்கு வழக்குகள் வணிகத்துடன் முடிந்துபோவதால்தான் இத்தகைய வாதங்களை முன் வைக்கிறார்கள். 

தன் ஆதர்ச ஹீரோவைப் போல சிகரெட்டை தூக்கிப் பிடித்து ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் ஆதியிலிருந்து இன்னும் உள்ளனர். பெண்களின் கவனத்தைப் பெற இத்தகைய சேஷ்டைகள் உதவும் என்று உண்மையாகவே சிலர்  நம்புகிறார்கள்.  எவ்வித கெட்ட பழக்கத்துக்கும் உள்ளாகாமல் மன உறுதியுடன் இருப்பதுதான் ஆண்மை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.  

'டென்ஷனலிருந்து விடுபட ஒரு தம், தம் போடலாம ப்ரோ, டீயும் தம்மும் அடிச்சிட்டு வரேன்’ என்று சிகரெட்டை தம்மென்று அழைக்கும் பழக்கம் மெள்ள பரவியது. இந்த வேண்டாத பழக்கத்தால் அவர்களில் பலர் புற்றுநோய், நரம்புத் தளர்ச்சி, சர்க்கரை நோய் போன்ற உடற்கூறு பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. புகை எமனாகும் என்ற விழிப்புணர்வு மீடியா மூலம் அதன் பின் பரவலாக இன்று வரை தொடர்ந்து கொண்டிருந்தாலும் பலர் அதில் காதில் வாங்குவதில்லை. நான் செயின் ஸ்மோக்கர் என்று பெருமையாக கூறிக் கொண்டிருந்தவர்கள் சங்கிலித் தொடர் போல செத்துக் கொண்டிருப்பதை பார்த்த இளைய தலைமுறையினர் அந்தக் கொடிய பழக்கத்துக்கு ஆட்படாமல் ஓரளவு தப்பித்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இருந்தால், புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்றும் அக்காட்சியுடன் வெளியிட வேண்டும் என்று தணிக்கை அமைப்பினரால் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. போலவே  ஒரு படம் திரையிடுவதற்கு முன்னாலும் புகைத்தல் பழக்கத்தின் தீமையை பற்றிய விளம்பரப் படத்தை ஓடவிட்ட பிறகு படம் தொடங்குவதும் இந்த விழிப்புணர்வின் ஆரம்பக் கட்டம் எனலாம். இவையெல்லாம் சிறு அளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்.

ஆனால் மனித மனம் என்பது குரங்குதானே? ஒரு பழக்கத்திலிருந்து இன்னொரு பழக்கத்துக்குச் சட்டென்று தாவி விடுகிறது. மச்சி சிகரெட் விட்டுட்டுட்டியாமே என்று 'நலம்' விசாரிக்கும் நண்பர் கூட்டம் இருக்கும்வரை சில பழக்கங்கள் சிலரைவிட்டுப் போகாது. சுற்றி இருப்பவர்கள் போகவும் விடமாட்டார்கள். எனக்காக ஒண்ணே ஒண்ணு என்று மங்களகரமாக ஆரம்பித்து வைக்க, கொடுத்தவர் தப்பித்துக் கொள்ள பெற்றுக் கொண்டவர் புற்றுப் பெற்றவராகவும் கூடும். எனவே புகை இனி வேண்டாம் என்று எடுத்த முடிவில் உறுதியாக ஒருவர் இருக்க வேண்டும்.  

சிகரெட் விட்டாச்சு அதுக்கு பதில் பீர் என்று சிலர் முடிவெடுப்பார்கள். மது அருந்துதல் என்பதை சமூகக் கடமையாக நினைத்து, இது. பார்ட்டி மச்சி, லெட்ஸ் செலப்ரேட், என்று ட்ரீட் கொடுக்க சிறந்த இடம் பப் தான் என்றும் உறுதியாக நம்புகிறவர்கள் இன்று உள்ளனர். வாலு போய் கத்தி வந்துச்சு டும் டும் டும் என்ற கதையாக சிகரெட் போய் ஆல்கஹால் வந்துவிட்டது. இந்த சீரழிவை நேரடியாக சந்துக்கு சந்து இருக்கும் டாஸ்மாக்கின் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம். சிறுவர்கள் கூட எவ்வித தயக்கமும் இன்றி பீர் வாங்கிச் செல்லும் காட்சியைப் பார்த்தபடி வேதனையுடன் கடந்து செல்கிறோம். இந்த திரவமும் உயிர் குடிக்கும் என்பதை மறந்து போதையில் இரவு முழுவதும் விழுந்து கிடக்கவே விரும்புகின்றனர் பலர். சினிமாக்கள் இப்போது சிகரெட்டை விட்டுவிட்டு குடியை கையில் எடுத்திருப்பதும் உண்மைதான். கதாநாயகனில் தொடங்கி, அவனது நண்பர் குழாம், வில்லன், காமெடியன் என்று சகலரும் திரையில் 'தண்ணி'யில் மிதக்கும் படங்கள் பெருகிவிட்டன. புகைப்பதையும், குடிப்பதையும் ஹீரோயிஸத்துடன் தொடர்பு படுத்துவது முட்டாள்தனம். கொண்டாட்டத்துக்கான காரணமாக குடியை தேர்ந்தெடுப்பதும் அதைவிட முட்டாள்தனம்.

உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை கொண்டாட்டமாக்கி அதை நியாயப்படுத்தும் விதமாக அமைக்கப்படும் காட்சிகள் உள்ள திரைப்படங்களை வன்மையாக கண்டிக்கப் பழகுவோம். முன்பெல்லாம் பெற்றோர்களை மதித்து, எதாவது கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் அவர்களுக்குத் தெரியாமல் மறைக்க பிரயத்தனப்படுவார்கள். ஆனால் இப்போது நமது இளைய சமூகம் யாருக்கும் பயப்படுவதில்லை. டேய் அப்பாடா என்று யாராவது அவர்களை உஷார்படுத்தினால், என்னிக்காவது தெரிஞ்சுதானே ஆகும், பரவால்ல, பாக்கட்டும் என்று பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர் தந்தை மகன் இருவரும் ஒன்றாக குடிப்பதுவரை இந்த சமூகம் குடியை குடும்பத்துக்குள் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது நிகழ் சோகம். 

என்னிக்காவது, மாதம் ஒரு முறை, மூட் அவுட் ஆனால், அல்லது தன்னம்பிக்கை வர, அல்லது உடல் எடை கூட, என்று ஏதாவது ஒரு காரணம் ஒவ்வொரு 'குடி'மகனுக்கும் இருக்கும். சந்தோஷம் என்றாலும் சரி, துக்கம் என்றாலும் சரி பீர் எடு கொண்டாடு என்று பழகிவிட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் சிகரெட்டை எதிர்த்து எழுப்பப்பட்ட விழிப்புணர்வு வாசகங்களை மதுவை நோக்கி திருப்ப வேண்டும். இரண்டும் கேடு என்று விளம்பரப்படுத்தி வந்தாலும் தனி நபர்களின் மனங்களில் அவை தாக்கத்தை நிகழ்த்துவதில்லை. அது தனக்கல்ல வேறு யாருக்கோ என்று நினைத்து தன்னுடைய குடியை நியாயப்படுத்தும் பலர் உள்ளனர். மகள், மனைவி, வீட்டினர், சமூகம் என அனைவரும் வெறுக்கும் ஒரு வஸ்துவை இதயத்தில் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? ஒரு பீர் வாங்கும் பணத்தில் ஒரு புத்தகம் வாங்கினால் அது அறிவுச் சுரங்கத்தை திறக்கும் ஒரு சாவியாக மாறும். மதுக்கடை வாசல் வரை சென்றுவிட்டாலும், பிரியமான ஒருவரின் முகத்தை உள்ளன்புடன் நினைத்துக் கொண்டால் நிச்சயம் அதைவிட அந்த மதுவுக்கு சக்தி இருக்கவே முடியாது என்பது உண்மைதானே? சொல்லுங்கள் நியாயன்மாரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com