இன்று (ஜனவரி 12) தேசிய இளைஞர் தினம்! சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன கூறினார்?

ஜனவரி மாதம் பன்னிரண்டாம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், இதை நாம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம்.
இன்று (ஜனவரி 12) தேசிய இளைஞர் தினம்! சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன கூறினார்?

ஜனவரி மாதம் பன்னிரண்டாம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், இதை நாம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத்துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியையும் காட்டியிருக்கின்றனர். சமயத் தலைவராகவும், அதே நேரத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் புண்ணிய பூமியில் உண்டு.

இந்த வரிசையில் தோன்றியவர்தான் 'சுவாமி விவேகானந்தர்’. இன்று நம் பாரதம் சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்க நம் நாட்டின் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.

விடுதலைக்கு அஸ்திவாரமிட்டவர்

விவேகானந்தரின் வீர முழக்கம்தான் இந்தியர்களை சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது. எனவே தான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, 'விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார். 

விவேகானந்தரை 'தேசபக்த ஞானி' என முன்னோர் கூறுவர். அவர் வெற்றி வீரராக அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, அவர் சென்ற இடமெல்லாம் பாரத மக்கள் போட்டி போட்டு வரவேற்றனர். அப்போது அவர் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று தேசபக்தி ததும்பும் வீரச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்தச் சொற்பொழிவுகள் தேசபக்தியைத் தரும் ஓர் உபநிஷதம் போன்று இந்திய தேசியத்துக்கு வழிகாட்டியாக விளங்கின.

'விவேகானந்தர் உயிருடன் இருந்திருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையைச் சொல்வதானால் இன்றைய இந்தியா அவருடைய படைப்பே ஆகும்,’ என்று, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் கூறுவது வழக்கம்.

விவேகானந்தரின் நுால்கள், உள்ளத்தில் உண்மையான தேசபக்தியைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றை நாம் படிக்கும் போது, 'நம் தாய்நாட்டின் நலனுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும்,' என்ற எண்ணம், இயல்பாக நம் உள்ளத்தில் பதியும்.

காந்திஜி, 'சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று’என்று கூறியிருக்கிறார். மற்றும் பாலகங்காதர திலகர், வ.உ.சி., லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால், என்.என்.ராய், அரவிந்தர், கோகலே, சுப்ரமணிய சிவா உட்பட சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் விவேகானந்தரின் கருத்துக்கள் ஊக்கமும் உற்சாகமும் அடைந்து அவர்தம் பணியில் செம்மையுறச் செய்தது.

ஜவஹர்லால் நேரு, 'என்னுடைய கருத்தின்படி, இந்திய விடுதலைப் போருக்கு உரிய தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மாமனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். அதோடு, அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விவேகானந்தருக்குப் பிறகு நாடு முழுவதும் பரப்பிய பலரும் அதற்கு உரிய வலிமையையும் வேகத்தையும் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து தான் பெற்றார்கள். பெரும்பாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும், இன்றைய இந்தியா சுவாமி விவேகானந்தரால் தான் உருவாக்கப்பட்டது’என்று கூறியிருக்கிறார்.

ராஜாஜி, 'இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் இல்லையென்றால், நாம் நமது இந்துமதத்தை இழந்திருப்போம்; இந்தியா விடுதலையும் பெற்றிருக்காது. ஆதலால் நாம் எல்லாவற்றுக்கும் சுவாமி விவேகானந்தருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

'எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,’ என சுவாமி விவேகானந்தர் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருக்கிறார். விவேகானந்தரின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள். சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கங்கள்.

நம்பிக்கையும் வலிமையும்

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றி போதிப்பாயாக.

வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. 

கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

ஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். 

கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை. சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.

உன்னால் சாதிக்க முடியாத காரியம் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே அப்படி நினைத்தால் ஆன்மீகத்திற்கு அது முற்றிலும் முரண்பட்டது. மிக பெரிய உண்மை இது, பலமே வாழ்வு, பலவீனமே மரணம். 

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
 
என்றைக்கு ஆன்மீகம் தனது செல்வாக்கை இழந்து, உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவு ஆரம்பித்துவிடுகிறது. 

தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும். உனக்கு தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
 
உயர்ந்த லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக கூறுகிறேன். தூய்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு நிச்சயம் வேண்டும். 

ஒவ்வோரு உயிரிலும் தெய்வீகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும், உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடி கொண்டுள்ளன. இந்தத் தெயவீகத்தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான லட்சியம்.

ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மையமாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு வெற்றிக்கு இதுதான் வழி.

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களகளில் நிற்கும்படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்.

பாரதமாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை, நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும்.

தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

நல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள். மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்து விட விரும்பினால், அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதல்ல. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகி விடுவாய்.

எனது வீர இளைஞர்களே! 

செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். நமது தாய்நாட்டின் இளைஞர்களே! ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் ஈடுபடுங்கள்.

நம்புங்கள்! உறுதியாக நம்புங்கள்!!

இந்தியா கண் விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை பிறப்பித்தாகி விட்டது.

என் சகோதரர்களே!!!

நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.

நீங்கள் உண்மையிலேயே அவரது கருத்துக்களை புரிந்துகொண்டு அதை நடைமுறைப்படுத்த தொடங்கினால் இன்னொரு விவேகானந்தராக மாறிவிடுவீர்கள். இப்படிப்பட்ட இளைஞர்களை தான் அவர் எதிர்பார்த்தார், எதிர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களை நம்பியே இருக்கிறது என்றார். நாடு முன்னேற்றம் அடைய, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com