போலிப் பயிற்சியாளரை அனுமதித்து மாணவியின் உயிரைப் பறித்த ‘அலட்சியம்’! மரணத்துக்கு யார் பொறுப்பு?

மாணவி லோகேஷ்வரி மரணத்தின் பின்னால் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் இப்படியான பயிற்சி வகுப்புகள் குறித்து மாணவர்களிடையிலும், பெற்றோர்களிடையிலும் ஒரு விழிப்புணர்வு வந்தால் சரி.
போலிப் பயிற்சியாளரை அனுமதித்து மாணவியின் உயிரைப் பறித்த ‘அலட்சியம்’! மரணத்துக்கு யார் பொறுப்பு?

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபடுகையில் மாணவி தவறி விழும் விடியோவைக் காணும் போது ஒரு விஷயம் மிகத்தெளிவாகிறது. பயிற்சியாளர் தள்ளி விட்டதில் தான் அந்த மாணவி சன் ஷேடில் இடித்துக் கொண்டு கீழே விழ நேர்ந்திருக்கிறது. மாடியிலிருந்தோ அல்லது உயரமான இடங்களிலிருந்தோ குதிப்பவர்கள் விசையுடன் குதித்தால் மட்டுமே பக்கவாட்டில் இடித்துக் கொள்ளாமல் கீழே விழ முடியும். ஆனால், இந்த மாணவி விழுந்த விதத்தைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. உண்மையில் பொறுப்பான, அனுபவமிக்க பயிற்சியாளர் என்றால், மேலிருந்து குதிக்க அந்த மாணவி பயத்துடன் தயங்கும் போதே அவரை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அல்லது பயத்தில் இருக்கும் மாணவியைக் காத்திருக்க வைத்து விட்டு மற்றவர்களைக் குதிக்கச் சொல்லி பயிற்சி அளித்து அதைப் பார்க்கச் சொல்லி எப்படி விழுந்தால் காயமின்றி  தப்ப முடியும் என்பதை அவதானிக்க அவகாசமளித்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே செய்யாமல், பயந்து கொண்டு சன் ஷேடில் அமர்ந்திருக்கும் மாணவியை வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்டது முற்றிலும் தவறு. பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் எல்லாம் இப்படித்தான் அளிக்கப்படுகின்றன என்றால் அது நிச்சயம் கொலை முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

மாணவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் குறித்து தற்போது சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன 2011 ஆம் ஆண்டு முதல் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளராகத் தன்னை அறிவித்துக் கொண்டு பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற பயிற்சிகளை அளித்து வரும் ஆறுமுகம் மத்திய, மாநில அரசு ஊழியர் அல்ல, அவர் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளரே அல்ல என்று தெரிவித்திருக்கிறார் கோவை எஸ்பி மூர்த்தி. ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே ஆறுமுகம் தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற பயிற்சிகளை அளித்து வருவதாக கலூரி முதல்வருக்கு தான் அனுப்பிய அனுமதி கோரல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஆறுமுகம் ஒரு அரசு அங்கீகாரம் பெறாத பயிற்சியாளர் எனில், அதைத் தீர விசாரிக்காமல், அவரைத் தங்களது கல்லூரியில் பயிற்சியளிக்க எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது எனத் தெரியவில்லை. அது குறித்தும் தீவிர விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல்.

மாணவியின் உயிரைப் பறித்த பயிற்சியாளர் ஆறுமுகம் கடந்த 2007 ஆண்டில் சென்னையில் தனியார் கல்லூரியொன்றில் எம்காம் முடித்தவர் என்பது கூடுதல் தகவல். தற்போது இவர் அரசு அங்கீகாரம் பெறாத பயிற்சியாளர் என்று தெரிய வந்துள்ள நிலையில் பயிற்சியின் போது தான் எப்படி பயிற்சியளிக்கிறேன் என்பதை நேரில் பார்த்துக் கற்றுக் கொள்ள ஒரு பெண் பயிற்சியாளரையும், இரு மாணவப் பயிற்சியாளர்களையும் தன்னுடன் அழைத்து வந்த செய்தி வெளியாகியுள்ளது. இவரே போலி பயிற்சியாளர் என்கையில் இவரிடம் பயிற்சி பெற ஒரு குழுவை வேறு நிர்வகித்து வந்திருப்பது அதிர வைத்திருக்கிறது.

மேலும் தற்போது சந்தேகத்திற்கிடமான பயிறிசியாளராகியுள்ள இந்த ஆறுமுகம் 2007 ஆம் ஆண்டில் சென்னையில் எம்காம் படித்தவர் என்பதும் இதுவரை தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பயிற்சி அளித்தவர் என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள்.

இச்சூழ்நிலையில் இம்மாதிரியான பயிற்சிகளை அளிக்கும் போது தேவைப்படக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூட சம்மந்தப்பட்ட அந்தக் கல்லூரி நிர்வாகம் கட்டமைத்திருக்கவில்லை என்பது மிகவும் கண்டனத்துக்குரியது. ஏனெனில், காயமடைந்த மாணவியை உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியைக் கூட கல்லூரி நிர்வாகம் முன்னெச்சரிக்கையாகச் செய்து வைத்திருக்கவில்லை. அது மட்டுமல்ல இது போன்ற பயிற்சிகளை நடத்துகையில் கல்லூரி நிர்வாகம் அப்பகுதி காவல்நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என்பது ஒரு விதியாக இருந்தும் தங்களுக்கு அப்படிப்பட்ட தகவல்கள் எதுவும் வரவில்லை  என இரு தரப்பிலிருந்தும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு என் எஸ் எஸ் மற்றும் என்சிசி பயிற்சி அளிக்கும் போது அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகிறதா? அல்லது ஆறுமுகம் போன்று பணம் சம்பாதிப்பதற்காக அணுகும் அங்கீகாரமற்ற கத்துக்குட்டி பயிற்சியாளர்களை வைத்தே பெரும்பாலும் ஒப்புக்கு அந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா? என்பது குறித்த சந்தேகத்தை வலுவாக எழுப்பியிருக்கிறது மாணவி லோகேஷ்வரியின் மரணம். 

மாணவி லோகேஷ்வரி மரணம் எழுப்பும் கேள்விகள்...

  • மாணவர்களை கீழிருந்து வலையைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி உயரத்திலிருந்து குதித்துப் பயிற்சி அளிக்கும் முறை பேரிடர் மேலாண்மை பயிற்சியில் நடைமுறையில் இல்லாத போது அப்படியொரு பயிற்சி முறையை பின்பற்ற கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது?
  • பயிற்சியின் போது காயமடையும் மாணவ, மாணவிகளின் முதலுதவிக்காக முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படாதது ஏன்?
  • காவல்துறை, தீயணைப்புத் துறையிடம் முன்கூட்டி தகவல் அளிக்கப்படாதது ஏன்?
  • பயிற்சி அளிக்கப்படுவதற்கு முன் பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறாதது ஏன்?
  • தங்களது கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியளிக்க வரும் நபர் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளரா? அல்லது போலியா என்பதைக் குறித்து ஆராயாமல் எந்த அடிப்படையில் இது போன்றதொரு பயிற்சிக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதியளித்தது?
  • காலையில் கல்லூரிக்குச் சென்ற மகள் மாலையில் வீடு திரும்புவாள் என்று காத்திருந்த பெற்றோருக்கு மரணச் செய்தியைப் பரிசளித்த குற்றத்திற்கு பொறுப்பேற்கப் போவது யார்?
  • போலிப் பயிற்சியாளர் ஆறுமுகமா? இல்லை ஆறுமுகத்தை அனுமதித்து குற்றத்திற்கு வித்திட்ட கல்லூரி நிர்வாகமா? அல்லது கல்லூரிகளில் இது போன்ற பயிற்சிகளை நடத்தும் போது எந்தெந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஞானம் சிறுதுமற்ற உடற்கல்வித்துறை ஆசிரியர்களா?

யாரைப் பொறுப்பாக்கினாலும் அது மறைந்த மாணவியின் உயிரைத் திருப்பியளிக்கப் போவதில்லை.

மாணவி லோகேஷ்வரி மரணத்தின் பின்னால் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் இப்படியான பயிற்சி வகுப்புகள் குறித்து மாணவர்களிடையிலும், பெற்றோர்களிடையிலும் ஒரு விழிப்புணர்வு வந்தால் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com