நல்லது செய்றவங்க ஹீரோன்னா, இந்த இளைஞர் ஒரு ரியல் ஹீரோ தான்!

நேர விரயம், பொருள் விரயம், உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வோமோ என்ற சஞ்சலம், சந்தேகம் இதுமாதிரியான காரணங்களை உத்தேசித்துக் கொண்டு தான் பலரும் தங்களது உதவி மனப்பான்மைக்கு கடிவாளம் போட்டு
நல்லது செய்றவங்க ஹீரோன்னா, இந்த இளைஞர் ஒரு ரியல் ஹீரோ தான்!

‘தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்யுங்கள்’ Serve Needy தன்னார்வக் குழுவின் தாரக மந்திரம் இது.

இப்படியொரு அமைப்பை நிறுவி அளப்பரிய சேவைகள் பல செய்து வருகிறார் ஒரு இளைஞர். அவர்களின் சேவையால்... பிறந்த குழந்தைகள் முதலாக வயோதிகர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்முறை துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி சொந்தக் குடும்பத்தினரால் நிராதரவாக விடப்பட்டவர்கள் என அத்தனை பேருக்குமே ஒரு புகலிடமாக விளங்குகிறது இந்த தன்னார்வ தொண்டு அமைப்பு. இவர்கள் மேற்சொன்ன அத்தனை பேருக்குமே ஒரு ஆசிரமத்தை அல்ல... சொந்தக் குடும்பச் சூழலை உருவாக்கித் தரும் பொறுப்பை மனமுவந்து ஏற்றிருக்கிறார்கள்.

அதில் மிக முக்கியமான சேவை. நிராதரவாகவும், அனாதைகளாகவும் இறந்து விடக் கூடியவர்களை அவர்கள் எந்த வயதினராக இருந்த போதிலும் இறந்த சடலத்துக்குச் சட்டரீதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு சட்டப்படி அவர்களுக்கான இறுதிச் சடங்கை அவரவர் மத வழக்கப்படியும், சம்பிரதாயப்படியும் நிறைவேற்றி இந்திய நம்பிக்கைகளின் படி இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஒரு கர்த்தாவாகி நிற்பது இவர் செய்து வரும் சேவைகளில் தலையாயது. இத்தனைக்கும் கெளதம் ஒன்றும் அம்பானி பேரனோ, அதானி மகனோ அல்ல. ஒரு சாதாரண இந்தியப் பிரஜை. அவருக்கும் தன் வாழ்க்கை வெல்லக்கட்டி தான். ஆனால், பிறரோடு ஒப்பு நோக்கும் போது இல்லாத சில குணங்கள் இவரிடம் தென்படுகின்றன.

இயல்பான மனநிலை கொண்ட அத்தனை மனிதர்களுக்குமே ‘உதவி’ என்ற வார்த்தை மிகப் பிடித்தமானதாகவே இருக்கிறது. எளியவர்களுக்கும், வறியவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்குமே உண்டு. மனிதர்களின் உதவும் நோக்கில், எங்கே இடைஞ்சல் வருகிறது என்றால்? நேர விரயம், பொருள் விரயம், உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வோமோ என்ற சஞ்சலம், சந்தேகம் இதுமாதிரியான காரணங்களை உத்தேசித்துக் கொண்டு தான் பலரும் தங்களது உதவி மனப்பான்மைக்கு கடிவாளம் போட்டு அடக்கி விடுகிறார்கள். அந்த விஷயத்தில் தான் கெளதம் போன்ற அசலான மனிதர்கள் நம்மிடையே இருந்து வேறுபடுகிறார்கள்.

ஆந்திராவை சேர்ந்த இந்த இளைஞர் எம்சிஏ பட்டதாரி. தனியார் பன்னாட்டு நிறுவனமொன்றில் 60,000 ரூபாய் மாதச்சம்பளத்துக்கு 2013 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து கொண்டிருந்தவர். இந்தியாவின் பேச்சிலர் இளைஞன் மாதம் 60,000 சம்பளத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யக்கூடுமோ அதையெல்லாம் கெளதம் செய்யவில்லை. வேலையில் திருப்தி காணமுடியாத மனநிலையோடு தனக்கு உகந்த வேலை இதுவல்ல எனத்தீர்மானித்த கணத்தில் வேலையை விட்டு விட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் துவங்கி விட்டார் கெளதம்.

சுமார் 5 ஆண்டுகளாக வெவ்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு தானும் அப்படியொரு என் ஜி ஓ துவக்க என்னவெல்லாம் அனுபவ அறிவு தேவையோ அத்தனையையும் அங்கே பெற்றார். இதேதடா... பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரியாகப் பணியாற்ற முன் அனுபவம் சேகரிப்பதைப் போல இவர் என்ஜிஓ தொடங்க முன் அனுபவம் பெற்றிருக்கிறாரோ? என்று யோசிக்கிறீர்களா?! உண்மை தான் கத்துக்குட்டிகளாக எதுவுமே தெரியாமல் நானும் என் ஜி ஓ தொடங்கி நாலு பேருக்கு நன்மை செய்கிறேன். என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக மட்டுமே! பொதுக்காரியங்களில்.... தர்ம காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் முன் அனுபவம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால்... வாழ்க்கை முழுதையும் தர்ம காரியங்களுக்காக ஒதுக்க நினைத்த இளைஞனுக்கு அப்படியில்லையே! அதனால் பல என்ஜிஓக்களில் இணைந்து சுமார் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமென்றால் சட்டப்படி எப்படியெல்லாம் இயங்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் கெளதம்.

அதெல்லாம் சரி... ஆனால், இவருக்கு எப்படி இப்படி ஒரு ஆர்வம் வந்தது? என்ற கேள்வி இவரைப் பற்றி முதன்முறையாக அறிந்து கொள்ளும் எவருக்குள்ளும் எழக்கூடும். அதற்கான பதில்... இப்படி வாழ்ந்தால் மட்டுமே தன்னால் தன் மனதை திருப்திப்படுத்த முடியும் என்பதால்... ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் பெரிதாக ஆராய்ந்து கொண்டிராமல் உடனடியாக தான் பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை உதறி விட்டு தன்னார்வலராக மாறி பல்வேறு தொண்டு நிறுவனங்களில் இணைந்து செயலாற்றத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார் கெளதம். அங்கே பெற்ற அனுபவங்களைக் கொண்டு இதோ 'Serve Needy' உருவாகியிருக்கிறது.

முதலில் இப்படியொரு குறிக்கோளுடன் களத்தில் இறங்கியதும் கெளதமின் பெற்றோர் கடுமையாக அதை எதிர்த்திருக்கிறார்கள். ஆனால், ஒருமுறை மகனுடம் களமிறங்கி செயல்படத் தொடங்கியதும் அவர்களுக்கும் இவரது ஆர்வம் புரிபட இப்போது அவர்களும் ஆர்வத்துடன் தொண்டு நிறுவன வேலைகளில் மகனுக்குத் தோள் கொடுக்கிறார்கள். 

‘Serve Needy' அமைப்பின் பாராட்டப்படத் தக்க கொள்கைகளில் ஒன்று... நாங்கள் அனாதை ஆசிரமங்களையோ, ஆதரவற்றோர் இல்லங்களையோ நடத்த நினைக்கவில்லை. நாங்கள் நிராதரவாக விடப்பட்டவர்களுக்கு குடும்பங்களை உருவாக்கித் தர நினைக்கிறோம். ‘குடும்பத்திற்கும், ஆசிரமங்களுக்கும், ஆதரவற்றோர் & முதியோர் இல்லங்களுக்கும் இடையே உள்ள வித்யாசம் உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்’ என்கிறார் கெளதம்.

கெளதம் பிற என் ஜி ஓக்களில் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்த போது அவர் கண்ட ஒரு சமூக அவலம், அவரை இத்துறையில் மேலும், மேலுமென இயங்கத் தூண்டியதாகக் குறிப்பிட்டார். அதைப் பற்றி அறிந்தால் எவரொருவருக்கும் கற்பனையில் நெஞ்சும் கலங்கி கண்ணீர் வரும். ஒருமுறை ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டிக்கு அருகிலுள்ள மனநலம் குன்றிய ஆதரவற்றோர் இல்லமொன்றுக்கு கெளதம் சென்றிருக்கிறார். அரசு உதவியில் இயங்கி வரும் காப்பகமாகவே இருந்த போதும் அந்தக் காப்பகத்துக்கு அப்போது கடுமையான நிதிப்பற்றாக்குறை நிலவிய நேரம். உள்ளே வயதானவர்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையோ அதிகம். அவர்களை சங்கிலியால் பிணைத்து தங்க வைத்திருக்கிறார்கள். ஏனெனில், மனநலம் குன்றியவர்கள் என்பதால் எங்கானும் தொலைந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம். அது மட்டுமல்ல அந்தக் காப்பகத்தில் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. எனவே அவர்களைக் கவனித்துக் கொள்ளக்கூட அங்கே போதிய ஆட்கள் இல்லை. இத்தனை சிரமங்களுடன் அங்கிருப்பவர்களுக்கு உணவு மட்டும் உரிய நேரத்தில் போதுமான அளவுக்கு கிடைத்து விடுமா என்ன? அதுவும் இல்லை. அவர்களோ மனநலம் குன்றிய நிலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு எங்கேயும் நகர முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள். பசித்தால் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொள்ள முடியும்? கெளதம் அந்த காப்பகம் பற்றிக் கேள்விப் பட்டு அங்கே செல்கையில் அவரது கண்ணில் பட்ட காட்சி வாழ்நால் முழுமையுமாக அவருக்கு நினைக்கும் தோறும் மரண அவஸ்தை தரக்கூடியதாக அமைந்து விட்டது. ஆம், உள்ளே, அவர்கள்.. அவரவர் மலத்தையே உணவாக உண்டு கொண்டிருந்தார்கள். இதை டிவி ரியாலிட்டு ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கெளதம் பகிர்ந்து கொண்ட போது அரங்கிலிருந்தோர் அத்தனை பேரின் கண்களும் குளமாகின. 

நமது பாரத தேசம் நம் தந்தையர் பள்ளி சென்று கொண்டிருந்த காலத்திலும், நாம் பள்ளி சென்ற காலத்திலும், இன்று நம் குழந்தைகள் பள்ளி சென்று கொண்டிருக்கும் காலத்திலும் கூட இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. பாடப்புத்தகங்களில் நமக்கு அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வளர்ச்சியின் அடையாளம் தான் இந்த நிராதரவானவர்கள் அன்று உண்ட அந்த உணவு. அந்த நிலையை மாற்ற முயலாமல் நாம் என்னவோ பைத்தியக் காரத்தனமாக இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கூடிய விரைவில் இணைந்து விடப்போவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். எப்படி நிகழ முடியும் அந்த அதிசயம்?!

ஒருபுறம் அரசாலும், சக மனிதர்களாலும், ஏன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களாலும் கூட கைவிடப்படக்கூடிய சமூகமொன்று பெருகிக் கொண்டே இருக்க, அவர்களை இந்தியச் சாலைகளில் பிச்சையெடுக்க விட்டு விட்டு நாம் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த வேலையைச் செய்ய நான் மட்டும் போதாது... இன்னும் நிறைய இளைஞர்கள் இப்படிக் கைவிடப்பட்டவர்களுக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசு ஆவதைப் பற்றியெல்லாம் பேசுவதில் அர்த்தமிருக்கும் என்கிறார் கெளதம்.

சரி இப்படியொரு நற்செயலில் இறங்க மனமிருந்தால் போதுமா? காரியங்களை நிறைவேற்றப் பணம் வேண்டாமா? அதற்காக இவர்களுக்கென தனியாக முகநூல், இணையதளப் பக்கம், சர்வ் நீடியின் அயல்நாட்டு பிரதிநிதி என எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் நிறைவேற்றவிருக்கும் ஒவ்வொரு சமூகப் பணி குறித்தும் உடனுக்குடன் முகநூலிலும், இணையப் பக்கத்திலும் தகவல் பதிகிறார்கள். மனமிருப்பவர்கள் அவர்களுக்குத் தங்களால் முடிந்தவரை உதவி வருகிறார்கள். இன்று வரை இப்படித்தான் இயங்கி வருகிறது இந்த ‘Serve Needy' அமைப்பு.

ஆந்திராவில் மட்டுமல்ல நம் தமிழகத்திலும் இப்படிப்பட்ட உண்மையான சேவை மனப்பான்மையுடன் கூடிய இளைஞர்கள் ஆயிரக் கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் நமது டிவி சேனல்கள் மக்களிடையே அறிமுகப்படுத்தினால் நல்லது.

எனக்கிந்த இளைஞரைப் பற்றித் தெரிய வந்தது ஒரு தெலுங்கு ரியாலிட்டி ஷோ மூலமாகத்தான். நடிகர் மோகன் பாபுவின் மகள் லஷ்மி மஞ்ச்சு என்பவர் ‘மேமு செய்தம்’ (நாம் செய்வோம்) என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இப்படியான அதிசயப் பிறவிகளை அடையாளம் கண்டு நிகழ்ச்சியின் இடையே அறிமுகம் செய்வதோடு பிரபலங்களைக் கொண்டு இப்படிப் பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவன காரியங்களுக்காக நிதி திரட்டியும் தருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com