தேவராஜனின் பென்ஸ் கனவை பலிதமாக்கியது பெர்த்தா பென்ஸின் ஆன்மாவாக இருக்குமோ?!

தன் கணவரது காரியம் யாவிலும் கை கொடுத்து பென்ஸ் கார் சரித்திரத்தில் அகில உலகப் புகழ் ஈட்டியவர் பெர்த்தா. அதனால் தான் பெர்த்தா பென்ஸ் முதன்முறையாக ரோட் ட்ரிப் நடத்திய அந்த சாலை மார்க்கத்தை தேசிய சுற்றுல
தேவராஜனின் பென்ஸ் கனவை பலிதமாக்கியது பெர்த்தா பென்ஸின் ஆன்மாவாக இருக்குமோ?!

கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் கட்டுரையை முழுதாக வாசியுங்கள் பாஸ்.

தேவராஜனுக்கு வயது 88. அவருக்கு 8 வயதில் ஒரு காரின் மீது தீராக்காதல் வந்தது. 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் 
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் 
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
............................................................
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’

திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் இடம்பெற்றுள்ள இந்த அகத்துறை செய்யுளைப் போலவே தேவராஜனுக்கு அந்தக் காரின் பெயர் தெரியாமலே அதன் மீது பெருங்கொண்ட காதல். 

கோவையைச் சேர்ந்தவரான தேவராஜனுக்கு மும்முனை நீட்டிப் பளபளக்கும் நட்சத்திரக் குறியிட்ட லோகோ கொண்ட அந்தக்காரின் பெயர் 8 வயதுச் சிறுவனாக இருக்கும் போது தெரியாது. பெயர் தான் தெரியாதே தவிர அந்தக் காரின் மீது அவர் கொண்ட பெருங்காதல் அளவற்றதாக இருந்தது. அதனால் தான் அதன் மீது அவர் கொண்ட ப்ரியத்தை விவரிக்க மேற்கண்ட செய்யுளைப் பயன்படுத்தத் தோன்றியது. நாவுக்கரசர் இறைவன் மீது கொண்ட காதலை ஒரு சாமான்ய மனிதருக்கு ஒரு லக்ஸுரி காரின் மீதிருந்த காதலுடன் ஒப்பிடுவதா? என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால், யோசித்துப் பாருங்களேன். தேவராஜனுக்கு வயது தற்போது 88. தனது 8 வயதில் தான் கண்டு பிரமித்த, நேசம் கொண்ட ஒரு காரின் மீதான காதலை இன்று வரையிலும் அவர் தன் வாழ்நாளில் மறவாமல் மனதுக்குள் விதையாகப் புதைத்து வைத்து நீரூற்றி வளர்த்து இன்று அந்தக் கனவுச்செடி முளைத்து துளிர் விடும் பரவசத்தை அனுபவிக்கும் சுகத்தை வேறு எதனுடன் தான் ஒப்பிடுவது? 8 வயதுச் சிறுவன் தேவராஜனின் ஆசை அவரது 88 வயதில் பூர்த்தியாக உறுதுணையாக இருந்ததாக தனது மனைவியைக் குறிப்பிட்டிருக்கிறார் தேவராஜன். இத்தனைக்கும் கடைசியில் ஒரு பஞ்ச் வைத்தார் பாருங்கள். தனது நெடுநாள் கனவு நிறைவேற உதவிய மனைவிக்கு நன்றி என. அந்த நேசம் தான் அவரது கனவை நனவாக்கி இருக்கக் கூடுமோ என்னவோ?!

தேவராஜனுக்கு பென்ஸ் காரின் சரித்திரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பென்ஸ் கார் நிறுவனரான கார்ல் ஃப்ரெட்ரிக் பென்ஸின் மனைவி பெர்தா பென்ஸின் ஆன்மாவுக்கு மிக நெருக்கமாக இருந்தது போலும் தேவராஜனின் கனவும், அந்தக் கனவாக்க உறுதுணையாக இருந்த அவரது மனைவியின் உறுதியும். ஆம், பென்ஸ் கார் நிறுவனர் கார்ல் பென்ஸின் வாழ்க்கையில் அவர் கண்டுபிடித்த பென்ஸ் காரைக் காட்டிலும் விலைமதிப்பு மிக்க ஒருவர் உண்டென்றால் அது அவரது மனைவி பெர்த்தா பென்ஸ் தான்.

கார்ல் பென்ஸ் ஒரு பிறவி ஜீனியஸ். குழந்தையாக இருக்கும் போதே தனது ஆசிரியர்களால் குழந்தை மேதை எனக் கொண்டாடப்பட்டவர். இரண்டு வயதாகும் போது அவரது தந்தை இறந்து விடுகிறார்.

தாயாரால் வறுமையான சூழலில் வளர்க்கப்பட்ட கார்ல் பென்ஸ் தனது தந்தையைப் பின்பற்றி ஆட்டோமொபைல் துறையைத் தனது வேலைவாய்ப்பாக முடிவு செய்தார். ஜெர்மானியரான கார்ல் பென்ஸ் அங்கே ஆட்டோமொபைல் பொறியியல் முடித்த கையோடு வெவ்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் பயிற்சிப் பொறியாளராக பணியாற்றி வந்தார். அச்சூல்நிலையில் வேறு நிறுவனங்களில் பணிபுரிவதைக் காட்டிலும் சொந்தமாக ஒரு இரும்பு சுத்திகரிப்பு நிறுவனத்தை நண்பரோடு இணைந்து தாமே தொடங்கினால் என்ன? என்று யோசித்தார் கார்ல் பென்ஸ். காரணம் அந்நியர்களிடம் பணிபுரிவதைக் காட்டிலும், சொந்தத் தொழில் எனும் போது மேலும் சுதந்திரமாகச் செயல்பட முடியுமே... என அவர் நினைத்திருக்கலாம். 

அப்படித்தான் தனது நண்பருடன் இணைந்து இரும்பு சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றை முதன்முதலாகத் தொடங்கினார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அதில் லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்பதோடு தொழிற்கூட்டாளியும் ஏமாற்றவே... முதன்முதலில் தொடங்கப்பட்ட நிறுவனம் நஷ்டத்தில் மூடப்பட்டது. இதில் அதிசயிக்கத் தக்க விஷயம்... கார்ல் பென்ஸ் தொடங்கிய முதல் சொந்த நிறுவனத்தில் பென்ஸ் சார்பில் முதலீடு செய்தது அவரது மனைவி பெர்த்தா.

ஜெர்மனியில் பெண்களுக்கான சட்டங்கள் சற்று சிக்கலானவை. திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை தொழிலில் முதலீடு செய்து பங்குதாரர்களாக முடியாது. எனவே பெர்தா தங்களது திருமணத்திற்கு இரு ஆண்டுகள் முன்னதாகவே தன் பெயரில் இருந்த சொத்துக்கள் சிலவற்றை வரதட்சிணையாக கார்ல் பென்ஸின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதன் மூலமாக திருமணத்திற்கு முன்பே பெர்த்தா... கார்லின் நிறுவனத்தில் பங்குதாரராக ஆகி விட்டார். ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் பெர்த்தா, கார்ல் பென்ஸ் திருமணம் முடிந்த சில ஆண்டுகளின் பின் அது மூடப்பட்டது. அதையடுத்து தன் வசமிருந்த பங்குகளை அப்படியே கணவர் கார்ல் தொடங்கிய பென்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார் பெர்த்தா... இம்முறை வெற்றி ஆகாயத்தைப் பொத்துக் கொண்டு பொத்தென வந்து விழுந்தது. ஆம், உலகின் முதல் ஆடம்பரக் கார் என்று போற்றப்படும் பென்ஸ் காருக்கு காப்புரிமை பெற்றார்கள் அவர்கள். 

காப்புரிமை பெற்று என்ன செய்ய? ஆரம்பத்தில் அந்தக்காரில் ஏறிப் பயணிக்க மக்கள் மிகப் பயந்தார்கள். முதலாவது விலை கூடுதல் என்பதால் மட்டுமல்ல. அந்தக் காரை நெடுந்தூரப் பிரயாணத்துக்கு ஏற்ற கார் என எவருமே எண்ணவில்லை. கார் தயாரித்து என்ன செய்ய? அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல முடியாத போது காப்புரிமை பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டு ஒரு பயனும் இல்லையே! வேண்டுமானால் முதன்முதல் காருக்கு காப்புரிமை பெற்றோம் என்ற பெயரை வரலாற்றில் பதிப்பார்களாயிருக்கும். அதனால் என்ன லாபம்? முதல் போட்டுத் தொடங்கிய கார் நிறுவனத்தின் வெற்றி என்பது அது சம்பாதித்துத் தரக்கூடிய லாபத்தை வைத்துத் தானே மதிக்கப்படக் கூடும். என்ன செய்யலாம்? யோசித்தார் பெர்த்தா பென்ஸ்.

தமிழில்  கணவனின் வெற்றி, தோல்விகளில் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொள்ளும் மன உறுதி கொண்ட மனைவிகளைக் குறிப்பிட ‘காரியம் யாவிலும் கை கொடுப்பாள்’  என்றொரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. அந்த வார்த்தைப் பிரயோகத்தின் உயிருள்ள உதாரணம் பெர்த்தா. பெர்த்தாவுக்கு தன் கணவர் கார்ல் பென்ஸின் மீது இருந்த நேசத்தை எதைக் கொண்டும் அளவிட்டு விட முடியாது. அத்தனை உன்னதமானது அவர்களுக்கிடையில் இருந்த புரிந்துணர்வும், ப்ரியமும். அந்த ப்ரியமே பெர்த்தாவை, இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் உலகம் வியக்கும்படியான அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற செயலைச் செய்யத் தூண்டியது. ஆம், 1888 ஆம் ஆண்டில் பெர்த்தா தங்களது 4 மகன்களையும் அழைத்துக் கொண்டு தனது வசிப்பிடத்திலிருந்து தன் கணவர் புதிதாகக் கட்டமைத்து காப்புரிமை பெற்று வைத்திருக்கும் பென்ஸ் காரை (The Benz Patent-Motorwagen Nr. 3 of the year 1888) எடுத்துக்கொண்டு 143 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் தன் அம்மா வீட்டுக்கு சாலை மார்க்கமாகச் செல்வதென முடிவெடுத்து விட்டார். 

பெர்த்தா பென்ஸ் பயணித்த முதல் பென்ஸ் கார்...


அந்தக்காலத்தில் இது அதிசயத்திலும் பேரதிசயம். எந்தக்காரும் இந்த அளவு தொலைதூரப் பயணத்துக்கு  பயன்படுத்தப் பட்டதில்லை அப்போது. கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் அனைத்தும் பக்கத்திலிருக்கும் காஃபி கிளப்புக்குச் செல்வதற்கும், வீட்டு முற்றத்திலிருந்து குதிரை லாயம் செல்வதற்கு மட்டுமாக பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்க. உலகில் முதல் முறையாக பெட்ரோல் நிரப்பி சாலை மார்க்கமாக துணிந்து ஓட்டிச் செல்லப்பட்ட முதல் வாகனம் என்ற பெருமை பெர்த்தா பென்ஸ் ஓட்டிச் சென்ற பென்ஸ் காருக்கு மட்டுமே உண்டு.

கணவரிடம் கூட அனுமதி பெறாமல்... அவருக்குத் தெரிவிக்காமல் தன் அன்னையைக் காணும் பொருட்டும், தன் கணவரின் ஆட்டோமொபைல் ஜீனியஸ் மூளையால் உருவான பென்ஸ் மோட்டார் காரை ஊருக்கும், உலகுக்கும் காட்டும் முயற்சியாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உத்தேசித்து மகன்களையும் அழைத்துக் கொண்டு பெர்த்தா பென்ஸ் அந்தக் காரில் பயணிக்கத் தொடங்கினார். துணைக்கு தன் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தப் பயணம் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆனால், அன்று அது அவருக்கு அத்தனை எளிதானதாக இல்லை. ஆனாலும் பெர்த்தா உற்சாகமாக அந்தக் காரை இயக்கினார். வழி நெடுகிலும் அவர் பென்ஸ் காரை இயக்கும் அழகைக் காண மக்கள் கூடி நின்று பெருங்கூச்சலிட்டு வரவேற்பதாக பெர்த்தா கருதியிருக்கலாம். ஆனால், அப்போது மக்கள் கூடியது வேடிக்கை பார்க்க மட்டுமல்ல... பெர்த்தாவுக்கு ஏதாவது ஆகி விடக்கூடாதே என்கிற பயத்துடனும் தான். 

பெர்த்தா பென்ஸ் எரிபொருள் நிரப்பிய முதல் பார்மஸி...

இந்தப் பயணத்தின் ஊடே காருக்கு எரிபொருள் நிரப்ப வழியில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் காரை நிறுத்தினார். என்ன? எரிபொருள் நிரப்ப காரை மெடிக்கல் ஷாப்பில் நிறுத்துவதா என்று நக்கலாகப் பார்க்காதீர்கள். அந்தக் காலத்தில் வண்டிக்குள் இருக்கும் பெட்ரோல் உறைந்து போகாமல் இருக்க அதனுடன் கரைப்பான் (solvent) ஒன்றைச் சேர்க்க வேண்டும். அது மெடிக்கல் ஷாப்களில் அதாவது பார்மஸிகளில் மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் இந்த பார்மஸி தான் இன்றளவிலும் உலகின் முதல் பெட்ரோல் ஃபங்க் ஆகக் கருதப்படுகிறது. காரில் நடு நடுவே தனக்குத் துணையாக வண்டியோட்ட மற்றுமொரு ஓட்டுநரையும் பெர்த்தா அழைத்துச் சென்றிருந்தார். அதனால் இடைப்பட்ட தூரத்தில் அந்தக் காரில் மேம்படுத்தப்பட வேண்டிய குறைகள் அனைத்தையும் அவரால் இனம் காண முடிந்தது என்கிறார்கள். அந்தக்காரில் மான்ஹெய்மிலிருந்து தன் தாய்வீடான ஃபோர்ஸியம் செல்ல பெர்த்தாவுக்கு மூன்று நாட்களாயின. அங்கே சென்றதும் உடனடியாக நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டோம் என கணவருக்கு டெலிகிராம் அனுப்பினார். 

பெர்த்தா மேற்கொண்ட இந்த சாலைப் பயணம் ஏன் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது எனில், அந்தப் பயணம் அந்தக் கால மக்களிடையே முற்றிலும் புதியது. திருமணமான பெண்களுக்கென தனி சட்டங்களும், கட்டுப்பாடுகளும் மிகுந்த ஜெர்மனியில் திருமதி ஒருவர் தன் நான்கு குழந்தைகளுடன் காரில் 143 கிலோ மீட்டர் பயணிப்பதெல்லால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சாகஸங்கள். அந்த சாகஸத்தைத் தன் கணவரின் பொருட்டு நிகழ்தத் துணிந்தார் பெர்த்தா. அதற்கு கிடைத்த பரிசு தான் பென்ஸ் காருக்கு கிடைத்த சந்தை வரவேற்பு. ஆம், பெர்த்தா பென்ஸ் நிகழ்த்திய அந்தப் பயணத்துக்குப் பிறகு தான் உலகின் முதல் காப்புரிமை பெற்ற மோட்டார் காரான பென்ஸின் பலாபலன்கள் குறித்து மக்களுக்கு பூரணமாகத் தெரிய வந்தது. பலர் பென்ஸ் கார் வாங்கும் விருப்பத்தை வளர்த்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் கார்ல் பென்ஸ் ரோட் ட்ரிப் சென்ற தன் மனைவி கூறிய அனுபவங்களின் துணை கொண்டு முதல் பென்ஸ் காரில் இருந்த சிறு சிறு குறைகளைக் கூட களைந்தார். இப்போது பென்ஸ் அனைவரது உபயோகத்துக்கும், அதிக தூரத்தை சொகுஸாகக் கடப்பதற்கும் உரியதாக மாற்றமடைந்தது. அப்புறம் பென்ஸ் கார், அகில உலக கார்சந்தையில் சாதித்த வெற்றிகள் அனைத்துமே வரலாறுகள். ஆனால், அந்த வரலாற்று விருட்சத்துக்கான விதையை ஊன்றியவர் கார்ல் பென்ஸ் அல்ல பெர்த்தா பென்ஸ் தான்.

இதை சரித்திரம் எந்நாளும் நினைவில் கொள்ளும்.

அதனால் தான் பெர்த்தா பென்ஸ் முதன்முறையாக ரோட் ட்ரிப் நடத்திய அந்த சாலை மார்க்கத்தை தேசிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக அறிவித்துக் கெளரவித்துள்ளது ஜெர்மன் அரசு.

இப்படித் தன் கணவரது காரியம் யாவிலும் கை கொடுத்து பென்ஸ் கார் சரித்திரத்தில் அகில உலகப் புகழ் ஈட்டியவர் பெர்த்தா.

இப்போது சொல்லுங்கள்... அப்போ மனைவியை நேசிக்கிறவங்களை எல்லாம் பெர்த்தா பென்ஸின் ஆன்மா பென்ஸ் கார் வாங்க வைக்குமா இல்லையா?!

நம்பினார் கெடுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com