புதிய 100 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்க ரூ.100 கோடி செலவாகும்! அது மட்டுமா?

ஊதா நிறத்தில் சிறிய அளவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் புகைப்படத்தையும் வெளியிட்டது.
புதிய 100 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்க ரூ.100 கோடி செலவாகும்! அது மட்டுமா?


மும்பை: ஊதா நிறத்தில் சிறிய அளவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் புகைப்படத்தையும் வெளியிட்டது.

பெண்களுக்கு மிகவும் பிடித்த ஊதா நிறத்தில் அமைந்திருக்கும் இந்த 100 ரூபாய் நோட்டு, தற்போது புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைப் போலவே அளவில் ஒத்திருக்கும். தற்போது புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் அளவில் பெரியதாக இருப்பதால், புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. ஆனால் பழைய 100 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. தற்போது புதிய மற்றும் பழைய 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது போல.

ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளிர் சிவப்பு நிறத்தில் 2000 ரூபாயையும், கரும்பச்சை நிறத்தில் 500 ரூபாய் நோட்டையும், பச்சை நிறத்தில் 50 ரூபாய் நோட்டையும் வெளியிட்டது. அவை ஏடிஎம்களில் கிடைக்க சில காலம் ஆனது. பழைய ரூபாய் நோட்டுகளை அடுக்கும் கேஸட்டுகள், புதிய நோட்டுகளின் அளவுக்கு ஏற்ப மாற்றப்பட்டு ஏடிஎம்களில் மெல்ல மெல்ல 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. 50 ரூபாய்க்கு பிரச்னையே இல்லை. இதுவரை அவை ஏடிஎம்களில் கிடைப்பதில்லை.

ஆனால் தற்போது புதிய 100 ரூபாய்  நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டால் அதற்கு ஏற்ப 100 ரூபாய் வைக்கும் டிரேக்களை மாற்ற மீண்டும் வங்கிகள் பணத்தை செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 100 கோடி ரூபாய்.

இந்தியாவில் உள்ள 2,40,000 ஏடிஎம் இயந்திரங்களில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள சுமார் 100 கோடி ரூபாய் செலவாகும் என்று ஏடிஎம் ஆபரேட்டர்கள் கூறுகிறார்கள்.

அதாவது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் ஏடிஎம்களில் புதிய கேஸட்டுகளை ஏற்படுத்த 100 கோடி செலவாகும், இதனை செய்து முடிக்க 12 மாதங்கள் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் பழைய ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படும் 6வது புதிய நோட்டாக 100 ரூபாய் நோட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.2,000, ரூ.500, ரூ.200, ரூ.50, ரூ.10 ஆகிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

100 கோடி ரூபாயை செலவிட்டால் போதுமா புதிய 100 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைத்து விடுமா என்றால் அதுதான் இல்லை. பழைய 100 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. அப்படியானால் ஒரு ஏடிஎம்மில் புதிய 100 ரூபாய் நோட்டுக்கும், பழைய 100 ரூபாய் நோட்டுக்கும் இரண்டு காஸெட்டுகளை வைக்க முடியுமா? அளவில் மாறுபடுவதால் இரண்டு நோட்டுக்களையும் ஒரே காஸெட்டில் வைக்க முடியாது.

பழைய ரூபாய் நோட்டு 73 மில்லி மீட்டர் X  157 மில்லி மீட்டர் அளவில் இருக்கும் நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டு 66 மில்லி மீட்டர் X 142 மில்லி மீட்டர் அளவில் உள்ளது.

ஒரு வேளை புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ற வகையில் ஏடிஎம்களில் ரிகேலிபரேஷன் செய்யப்பட்டுவிட்டது என்றால் பிரச்னை ஓய்ந்துவிடுமா? இல்லையே அப்போதும் அப்படி சொல்ல முடியாது.. போதிய அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குக் கிடைக்காமல், அதே சமயம் பழைய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மூலமாக அளிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

தற்போதைக்கு பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகளை ஒரே சமயத்தில் ஏடிஎம்கள் வாயிலாக அளிக்க முடியாத அளவுக்கு தொழில்நுட்ப சிக்கல் உள்ளது.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளே இந்த சிக்கல்களால்தான் இன்னமும் பல ஏடிஎம்களால் வழங்கப்பட முடியாத நிலை உள்ளது.  இதற்குள் புதிய 100 ரூபாய்களை வழங்க ஏடிஎம்கள் எந்த விதமான மாற்றங்களை செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com