மக்களாகிய நாமும், ஊடகங்களும் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

உலகின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் அவர்களது குழந்தை பருவத்தை நினைவேக்கத்துடன் எண்ணிப் பார்த்து
மக்களாகிய நாமும், ஊடகங்களும் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

உலகின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் அவர்களது குழந்தை பருவத்தை நினைவேக்கத்துடன் எண்ணிப் பார்த்து அந்த கால அளவை அற்புதமான ஆண்டுகள் என்று வர்ணிப்பது இயல்பு. இந்தியாவில், 5-14 வயது பிரிவில் உள்ள சுமார் 13 மில்லியன் குழந்தைகளுக்கு, குழந்தை பருவம் என்பது வாழ்க்கைக்கு ஒரு விரும்பத் தகாத மற்றும் அதிர்ச்சியளிக்கிற அறிமுகத்தை வழங்கும் காலமாக உள்ளது. வாழ்க்கையின் அடிப்படை அத்தியாவசியங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது மட்டுமன்றி, மிகச் சொற்பக் கூலிக்காக சுகாதாரமற்ற, மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளில் நாளின் பெரும்பாலான நேரத்தை வேலை செய்வதன் மூலம் கழிப்பதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது மிகவும் கசப்பான உண்மை.

குழந்தை தொழிலாளர் முறையில், சுகாதாரம் மற்றும் உடல் சார்ந்த, மனநலம் சார்ந்த வளர்ச்சியை பாதிக்கின்ற சூழ்நிலைகளின் கீழ், நீண்ட மணி நேரங்களுக்கு குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றுவது, சில நேரங்களில் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனித்து வசிப்பது, ஒரு சிறப்பான எதிர்காலத்தை அவர்களுக்கு திறந்து விடக்கூடிய அர்த்தமுள்ள கல்வி மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள் பெரும்பாலும் பறிக்கப்பட்ட நிலையில் சிறு வயதிலேயே வயது வந்த நபர்கள்போல குழந்தைகள் வாழ்க்கையை நடத்துவது ஆகியவையும் உள்ளடங்கும்.

குழந்தை தொழிலாளர்முறை (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986

குழந்தை தொழிலாளர்முறை (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986 (CLPRA) என்பது, பல தொடர்ச்சியான குழுக்களால் செய்யப்பட்ட பல்வேறு பரிந்துரைகளின் விளைவாக இயற்றப்பட்டதாகும். பல கமிட்டிகளால் செய்யப்பட்ட பரிந்துரைகளின்படி குறிப்பிட்ட சில பணிகளில் குழந்தைகளை / சிறார்களை ஈடுபடுத்துவதை தடை செய்வதற்கு ஒரு சீரான விரிவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்கு தேசிய அளவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்காக இந்திய நாடாளுமன்றம், குழந்தை தொழிலாளர் முறை (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986 என்பதை இயற்றியது.

வேலை செய்கிற சிறார்களின் பாதுகாப்பிற்கு படிப்படியாக சட்டப்பாதுகாப்பை விரிவுபடுத்தியதன் மூலம் 1881-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்ட வரலாறு நீண்ட தூரம் பயணித்திருக்கிறது. பல்வேறு சட்டங்களின் கீழ் குழந்தை தொழிலாளர் முறை தொடர்பாக இயற்றப்பட்ட சட்ட விதிகள், வேலை நேரங்களை குறைப்பது, குறைந்தபட்ச வயதை அதிகரிப்பது, சிறு வயதுள்ள குழந்தைகளின் உடல்நலம் மற்றும் நலவாழ்வுக்கு தீங்கு விளைவிக்கிற பணிகள் மற்றும் செயல்முறைகளில் குழந்தைகளை பணியமர்த்துவதை தடை செய்வது போன்ற அம்சங்களின் மீது தான் பிரதானமாக கவனம் செலுத்தியிருக்கின்றன.

குழந்தை பணியமர்த்தல் சட்டம் 1938 என்பது, குழந்தை தொழிலாளர்முறை மீது நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாகும். குழந்தை தொழிலாளர்முறை (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986-ல் பழைய சட்டம் நீக்கப்பட்டது.

CLPRA -ன் குறிக்கோள்கள்

குழந்தை தொழிலாளர்முறை (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986 குறிக்கோள்கள் கீழ்வருமாறு:

  • குழந்தைகளின் / சிறார்களின் பணியமர்த்தலை தடைசெய்வது, எ.கா. குறிப்பிட்ட சில பணி நிலைகள் மற்றும் செயல்முறைகளில் தங்களது 14வது ஆண்டு வயதை பூர்த்தி செய்யாத சிறார்களை பணியமர்த்துவது;
  • தடை செய்யப்பட்ட பணிநிலைகள் அல்லது செயல் முறைகளில் அட்டவணையில் திருத்தங்களை தீர்மானிப்பதற்கு நடைமுறைகளை வகுப்பது;
  • பணியாற்றுவதிலிருந்து சிறார்கள் தடை செய்யப்படாத இடங்களில் பணியில் அவர்களது பணி நிலைகளை ஒழுங்கு முறைப்படுத்துவது.

CLPRA-ன் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

குறிப்பிட்ட சில பணி நிலைகளில் சிறார்களை பணியமர்த்துவதை தடுக்கிற மற்றும் குறிப்பிட்ட வேறு பிற பணி நிலைகளில் சிறார்களின் பணிச் சூழ்நிலைகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான சட்டம் இது என்று இச்சட்டத்திற்கான முகவுரை குறிப்பிடுகிறது. இச்சட்டத்தின் அட்டவணையில் பகுதி யு மற்றும் பகுதி டீ-ல் குறித்துரைக்கப்பட்டிருக்கிற பணி நிலைகள் மற்றும் செயல்முறைகளில் 14 ஆண்டுகள் வயதை பூர்த்தி செய்திராத எந்தவொரு நபரும் பணியமர்த்தப்படுவதை இச்சட்டம் தடை செய்கிறது.

இச்சட்டம், இவ்வாறாக அனைத்து நிறுவனங்களையும் இரு வகையினங்களில் வகைப்படுத்துகிறது:

  • குழந்தை தொழிலாளரை பணியமர்த்தல் தடைசெய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் / தொழில்கள் மற்றும்
  • குழந்தை தொழில்முறையின் பணி சூழ்நிலைகள் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்கள் / தொழில்கள்.

குற்றச் செயல்களுக்கு வழக்குத் தொடர்வதற்கான செய்முறை

குற்றச்செயல்களுக்கு வழக்குத் தொடர்வது தொடர்பாக இச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறை கீழ்வருமாறு:

  • எந்தவொரு நபர், காவல்துறை அதிகாரி, அல்லது ஆய்வாளர், ஒரு உரிய நீதிமன்றத்தில் இச்சட்டத்தின் கீழ் குற்றச் செயல் நடைபெற்றது குறித்த ஒரு புகாரை தாக்கல் செய்யலாம்.
  • குறித்துரைக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்டிருக்கும் குழந்தையின் வயது குறித்த சான்றிதழானது, இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக, இது தொடர்பான குழந்தையின் வயதிற்கான அறுதிச் சான்றாக கருதப்படும்.
  • ஒரு பெருநகர் குற்றவியல் நடுவர் அல்லது முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நிலைக்கு குறைவான தகுதியுள்ள எந்த நீதிமன்றமும் இச்சட்டத்தின்கீழ் எந்த குற்றச்செயல்களையும் விசாரணை செய்யாது.

தண்டனை வழங்கல்

இச்சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விதிகளை பின்பற்றாத நேர்வுகளில் பணி வழங்குநர் அல்லது நிறுவனத்தை நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டிக்கப்படுவதற்கு உரியவராவார். மூன்று மாதங்களிலிருந்து ஒரு ஆண்டுக்கு இடைப்பட்ட காலஅளவிற்கு சிறை தண்டனை அல்லது ரூ.10,000-லிருந்து ரூ.20,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கப்படலாம்.

ஒருமுறை தண்டிக்கப்பட்டதையும் மீறி இக்குற்றத்தை திரும்பவும் செய்யும் எந்தவொரு நபரும் ஆறு மாதங்களிலிருந்து இரு ஆண்டுகள் வரையிலான கால அளவிற்கு சிறை தண்டனைக்கு உள்ளாவார். பணியமைவிடத்தில் பணியாற்றுகிற நபர்களின் வயது மற்றும் பிற விவரங்கள் குறித்து ஒரு பதிவேட்டை பராமரிக்கத் தவறுகின்ற அல்லது இச்சட்டத்தின்கீழ் உள்ள வேறுபிற ஒழுங்குவிதிகளைப் பின்பற்றத் தவறுகின்ற எந்தவொரு நபருக்கும் ஒரு மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூ.10,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்த தண்டனை விதிக்கப்படும்.

குழந்தை தொழில்முறையை சார்ந்திருக்கும் தொழிற்சாலைகள்

தீக்குச்சி மற்றும் பட்டாசு தொழிலகங்கள், வளையல் தயாரிப்பு, பீடி தயாரிப்பு, விசைத்தறிகள், வைரக்கல் செதுக்குதல், தோல் பதனிடுதல், கம்பளி தூய்மையாக்கல், ரத்தினம் மெருகேற்றல், மைகா வெட்டுதல் மற்றும் பிளத்தல், கார்பெட் நெய்தல், பூட்டு செய்தல், கட்டிட மற்றும் கட்டுமானப் பணி, பித்தளைப் பாத்திரங்கள் உற்பத்தி, ஸ்லேட் பென்சில் தயாரிப்பு, சிமெண்ட், ஷெல்லாக் மற்றும் சோப்பு உற்பத்தி செய்முறைகள், ஈயம், மெர்குரி, மேங்கனீஸ், குரோமியம், காட்மியம், பென்சின், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற நச்சு உலோகங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்துகிற உற்பத்தி செயல்முறைகள் ஆகியவை குழந்தை தொழிலாளர்முறையை சார்ந்திருக்கும் சில தொழிலகங்களாகும். செங்கற்சூளைகள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பகங்கள், பட்டு மற்றும் பட்டு சார்ந்த பொருட்கள், மின்னியல் தொழிலகங்களில் சால்டரிங் செய்முறைகள் மற்றும் பூந்தோட்ட மற்றும் காய்கறி தோட்டங்களிலும் குறிப்பிட்டளவு குழந்தை தொழிலாளர்முறை பயன்பாட்டில் இருப்பது அறியப்பட்டுள்ளது.

கொத்தடிமை குழந்தை தொழில்முறை

கொத்தடிமை குழந்தை தொழில்முறை என்பது, தங்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களோடு- வழக்கமாக பெற்றோருடன் அவர்களை இணைத்திருக்கிற ஒரு கடனை திரும்பச் செலுத்துவதற்காக அடிமைத்தன நிலைகளில் குழந்தைகள் வேலை செய்கின்ற நிலமையை குறிக்கிறது. கொத்தடிமைத்தனம் என்பது ஒரு பாரம்பரியமான, தொழிலாளர் – பணி வழங்குநர் உறவுமுறையாகும். மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை செய்வதற்கு அல்லது திருமணம் செய்து வைக்கப்படுகிற பெண் குழந்தைக்கு வரதட்சணை கொடுப்பதற்கு அல்லது பெரும்பாலான நேர்வுகளில் சாப்பிடுவதற்கான உணவுச் செலவை எதிர்கொள்வதற்கு பெற்றோருக்கு பணம் தேவைப்படுகின்ற நிலையில் கடனை அல்லது முன் பணத்தை வேலை வழங்குநரிடமிருந்து பெறுவதன் மூலம் இந்த கொத்தடிமைத்தனம் ஆரம்பமாகிறது.

அடிமைகளைப் போல் வேலை வாங்குகிற முதலாளிகளிடம் விற்பனை செய்யப்படுகிற இந்தக் குழந்தைகள், கடனை திரும்ப செலுத்துவதற்கான ஒரு முயற்சியில் பல ஆண்டுகளாக நீண்ட மணி நேரங்கள் தினமும் பணியாற்றுகின்றனர். நினைத்துப் பார்க்க முடியாத மிக அதிக வட்டி விகிதம் மற்றும் மிக மோசமாக வழங்கப்படும் சொற்பக் கூலி ஆகியவற்றின் காரணமாக கடனை திருப்பித் தர முயற்சிக்கும் இக்குழந்தைகள் பொதுவாக அவர்களது முயற்சிகளில் வெற்றி பெறுவதில்லை. வயது முதிர்ச்சி நிலையை அவர்கள் எட்டியவுடன் அவர்களுள் சிலர், புதிதாக கடன்பட்ட மற்றும் இளைய சகோதரன் / சகோதரிக்குப் பதிலாக முதலாளியால் அவர்களது பெற்றோர்களிடமே அல்லது அவர்களது சொந்த குழந்தைகளிடம் கூட திரும்பவும் விடுவிக்கப்படலாம்.

பெண் குழந்தை தொழிலாளர் முறை

'ஒரு மகிழ்ச்சியான சிறுமியே நமது நாட்டின் எதிர்காலம்’ என்பதே பெண் குழந்தை பிரச்சார இயக்கத்திற்காக இந்திய அரசு முன்னிலைப்படுத்திய கோஷமாக இருந்தது. பாரம்பரியங்கள், மரபுகள், வழக்கங்கள் மற்றும் சமூக நடைமுறைகள் ஆகியவை, ஒரு பொருளாதார சுமையாக பெரும்பாலும் கருதப்படுகிற மகள்களை விட மகன்கள் மீது பெரிய அளவிலான மதிப்பை இன்னும் வைத்திருப்பது, பெண் குழந்தைகள் அவர்களின் முழு வளர்ச்சித்திறனை எட்டுவதற்கான பாதையில் தடை கற்களாக இன்னும் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு எதிரான, இந்த அடிப்படையற்ற பாகுபாடு முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக அரசாலும் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களாலும் கல்விசார்ந்த ஒரு பிரச்சார இயக்கம் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

பெண் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது கீழ்வரும் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது:

வீட்டு வேலை: ஆறிலிருந்து பதினோரு வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகள் பெருக்குவது, துவைப்பது, தண்ணீர் சேகரித்து வருவது, விறகு பொருக்குவது மற்றும் வீட்டு விலங்குகளையும், இளவயது தம்பி, தங்கைகளையும் பார்த்துக்கொள்வது.

விவசாய வேலை: வயல்களிலும் தோட்டங்களிலும் இளவயது சிறுமிகள் நீண்ட மணிநேரங்கள் வேலை செய்வது.

வீட்டில் இருந்து கொண்டு உருப்படி விகிதாச்சார அடிப்படையில் வேலை செய்வது: இந்த வகையான பணியில் சிறுமிகள் மிக அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு பொருளாதார ஆதாரமாக இவள் செயல்படுவது வெகு அரிதாகவே பிறருக்கு தெரிந்திருக்கிறது. வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்கிற அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் பீடி சுற்றுவது, கார்பெட் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு மற்றும் இரத்தின கற்கள் மெருகேற்றல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கொத்தடிமை தொழில்முறை: வறட்சி, பஞ்சம், அல்லது இயற்கை பேரிடர் நேர்வுகளின் போது, கடன் தரும் நபர்களிடம் கொத்தடிமை தொழிலாளர்களாக அல்லது பிச்சை எடுத்தல் அல்லது விபச்சார பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்காக விற்கப்படுவதற்கு இச்சிறுமிகள் தரப்படுகின்றனர். இந்தியாவின் பெருநகரங்களில் அமைந்துள்ள சிவப்பு விளக்கு பகுதிகளில் பெற்றோர்களால் விற்கப்பட்டிருக்கிற அல்லது ஆசை காட்டி மோசம் செய்யப்பட்டு சிக்க வைக்கப்பட்ட பெண் குழந்தை பாலியல் தொழிலாளர்களால் நிறைந்திருக்கின்றன. சில சமூகங்கள், அவர்களது இளம் சிறுமிகளை தேவதாசிகளாக தெய்வங்களுக்கு நேர்ந்து விடப்படுவதனால் விபச்சாரத்தை ஒரு அமைப்புமுறையாக ஆக்கி விடுகின்றன.

வீட்டு வேலைக்கான பணிப் பெண்கள்: ஊதியமே இல்லாமல் அல்லது மிகக் குறைந்த ஊதியத்திற்கு நீண்ட நேரத்திற்கு பணியாற்றுமாறு பெண் குழந்தைகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதற்கு பதில் ஆதாயமாக எந்தவொரு திறமையையும், திறனையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அது மட்டுமன்றி, உடல் சார்ந்த மற்றும் பாலியல் சார்ந்த சுரண்டல்கள் மற்றும் தொந்தரவுகளுக்கும் ஆளாக்கப்படும் சவால்களையும் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண் குழந்தைகளை பாதுகாக்கவும் மற்றும் அவர்களை முன்னேற்றுவதற்கும் பல நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திருக்கிறது. 60 சதவிகிதம் பெண் குழந்தைகள் இருக்கிற 6-14 வயது பிரிவில் உள்ள 19-24 மில்லியன் குழந்தைகளை சென்றடைவதற்காக அனைவருக்கும் கல்வி என்ற செயல்திட்டத்தை இந்திய அரசு அறிவித்திருக்கிறது. 1991 - 2000க்கு பெண் குழந்தைக்கான ஒரு தேசிய அளவிலான நடவடிக்கை திட்டமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெண் சிசுக் கொலையையும், வளரும் கருவிலேயே கொல்வதை தடை செய்வது, வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பான குடிநீர் மற்றும் தீவனத்தை வழங்குவது, பாலியல் தொந்தரவு சுரண்டல் தாக்குதல், தவறாக பயன்படுத்துவதிலிருந்து சிறுமிகளை பாதுகாப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதே இத்திட்டத்தின் முனைப்பாகும். அரசின் கல்விக்கான தேசிய கொள்கை மற்றும் 'பெண் குழந்தை மற்றும் குடும்பம்’ மீதான நடவடிக்கை ஆய்வு திட்டம் என்பவையும் பெண் குழந்தையின் நிலைமையை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கின்றன.

இந்த நூற்றாண்டிலும் குழந்தைகளை நவீன முறையில் அடிமைப்படுத்தும் முறை தொடர்ந்து நிகழ்வதை பொது மக்களாகிய நாமும், ஊடகங்களும் இன்னும் அறியாத நிலையிலேயே இருப்பதாக தோன்றுகிறது.

குழந்தைப் பருவத்தை தொலைத்து நிற்கிற இந்த அப்பாவி குழந்தைகளின் துயர நிலையையும், அனுபவிக்கிற கடும் சிரமங்களையும் அனைவருமே அறியுமாறு செய்வதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக அமைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com