கலைஞரின் தமிழ்க் காதல்...

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார்.
கலைஞரின் தமிழ்க் காதல்...

ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி. அத்தனை முதல்வர்களிடமும் காணக்கிடைக்காத ஒரு பெரும் தகுதி கருணாநிதியிடம் உண்டென்றால் அது அன்று முதல் இன்று வரை மாறாத அவரது தமிழ்ப்பற்று. தமிழுக்கு கருணாநிதி என்ன செய்தார்? தமிழ் கலாச்சாரத்துக்கு கருணாநிதி என்ன செய்தார்? என்று யாரேனும் கேட்டால் அவர்கள் கருணாநிதியைப் பற்றியும் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டைப் பற்றியும் ஒன்றும் அறியாதவர்கள் என்று அர்த்தம். அவருக்குத் தெரிந்தது மொத்தமும் அரசியல்வாதி கருணாநிதியை மட்டுமே!

கருணாநிதியின் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு ஆறாக் கோபம் இருக்கலாம். ஒரு தலைமுறை மொத்தமும் இந்தி கற்றுக் கொள்ள முடியாமல் மூளைச் சலவை செய்தவர் கருணாநிதி என்ற குற்றச்சாட்டு அவர் மீதிருந்த போதும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததில் தமிழ் மீது அவர் கொண்ட காதல் வெளிப்படுவதைக் காணலாம். 

  • இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.
  • சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.
  • மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது. அதுமட்டுமல்ல அதுவரை தமிழ்த்தாய்க்கு உருவில்லாமலே இருந்து வந்த நிலையில் தமிழன்னைக்கு உருக்கொடுக்கும் நிகழ்வை முன்னெடுத்ததும் கலைஞர் கருணாநிதியே! 
  • தமிழ்த்தாய்க்குக் கோயில் எழுப்பவேண்டும் என்பது கம்பனடிப்பொடி சா.கணேசன் அவர்களது நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் 1975 ஏப்ரல் 23 அன்று தமிழ்த்தாய்க் கோயிலுக்குக் கால்கோள் விழா நடந்து, பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிப்பொடி சா. கணேசனும், சிற்ப கலாசாகரம் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த்தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோயிலின் இறுதிக் கட்டப்பணிக்கு தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பிறகு மு. கருணாநிதி அவர்களால் தமிழ்த்தாய்க் கோயில் 1993 ஏப்ரல் 21 அன்று திறக்கப்பட்டு, தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு வழிபாடு நிகழ்ந்து வருகிறது.
  • சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான். ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.
  • தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.
  • கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.
  • இயல், இசை, நாட்டியம் எனும் முத்தமிழ்க் கலைகளை வளர்க்க ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் மறக்கடிக்கப்பட்ட பழந்தமிழர் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டியவர் கருணாநிதி.

கருணாநிதியின் தமிழார்வத்துக்கும், தமிழைக் கையாளத் தெரிந்த எழுத்து வன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்தவை என பராசக்தி, மனோகரா, பூம்புகார் திரைப்பட வசனங்களைக் குறிப்பிடலாம். அந்த வசனங்களைக் கேட்டு எழுச்சி கொள்ளாதோர் எவருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு கருணாநிதியின் தமிழில் அடுக்குமொழியும், கோபக்கனல் நெருப்பும், குறும்புமாக வசனங்கள் மாறி மாறி உணர்வுகளைச் சங்கமிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com