குறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில...

கருணாநிதியின் சிலேடைகள் அனைத்தும் சில சமயங்களில் கேட்போரை வெடித்துச் சிரிக்க வைக்கத் தக்கவை. சில கேட்ட மாத்திரத்தில் புன்னகையை வரவழைப்பவை.
குறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில...

மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் கரகரவென கசிந்தொழுகும் அந்த வெண்கலக் குரலில் அப்படியொரு வசியமிருந்தது... இன்றும் இருக்கிறது. அது பிரச்சார மேடையாக இருந்தாலும் சரி அல்லது சட்டமன்ற விவகார உரையாடலாக இருந்தாலும் சரி, இல்லை பாராட்டு விழாக்களின் வாழ்த்துரை பேச்சாக இருந்தாலும் சரி கருணாநிதியின் மூளையில் சட், சட்டென உருவாகி அவரது வெண்கலக் குரலில் சற்றே மிதமான எள்ளலுடனும், குறும்புடனும் வெளிப்படும் சிலேடைகள் கருணாநிதியை வெறுப்பவர்களால் கூட ரசிக்கப்படக் கூடியவையாகவே இருக்கும். கருணாநிதியின் சிலேடைகள் அனைத்தும் சில சமயங்களில் கேட்போரை வெடித்துச் சிரிக்க வைக்கத் தக்கவை. சில கேட்ட மாத்திரத்தில் புன்னகையை வரவழைப்பவை. சில சிரிக்கத்தக்கனவாக இருப்பினும் உண்மையில் அந்த சிலேடையோடு தொடர்புடையவரின் குற்றத்தை வாழைப்பழ ஊசியாகச் சொல்லிக் காட்டத்தக்க வகையில் அமைந்து விடக்கூடியவை...

அப்படி கலைஞர் கருணாநிதியிடம் இருந்து  பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்ட சில சுவையான சிலேடைகளை இங்கே காணுங்கள்...

கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் கூறுகிறார்.

“மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” (கலைஞர் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார்)

“இப்போ மூச்சை விடுங்க”

“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்”

ஹாக்கிப் போட்டி ஒன்றிற்கு கலைஞர் பரிசளிக்க வந்திருக்கிறார். இரண்டு அணிகளும் சமமான கோல். டாஸ் போடப்படுகிறது. “தலை” கேட்ட அணி தோற்று,  “பூ” கேட்ட அணி ஜெயிக்கிறது.

கலைஞர் இப்போது பேசுகிறார்.

“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. “தலை” கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் “தலை” கேட்பது வன்முறை அல்லவா?” என்றார் கலைஞர்.

கவியரங்கம் ஒன்றில் புலவர் புலமைப் பித்தன் ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை பாடுகிறார். “கலைஞரே எனக்கொரு துப்பாக்கி தாருங்கள்!”“ என்று ஆவேசத்துடன் முடிக்கிறார். கலைஞர் வசம்தான் அப்போது காவல் துறை இருக்கிறது.  “புலவேரே! வேறு ஏதாவது  ‘பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்”பாக்கி”  மட்டும் என்னால் தர இயலாது”

ஒருமுறை செல்வி ஜெயலலிதா  “நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று கூறியபோது “அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மைதான்” என்றார்.

கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்கிறார்.

“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப் போகிறீர்கள்..?

” எந்த தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச்  சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.  நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..!”

சிரித்தபடி தனக்கே உரித்தான பாணியில் கவிஞருக்கு இருக்கும் மதுப்பழக்கத்தை மனதில் கொண்டு …

” பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”

அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?’

கலைஞர்:: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ‘முதலை’ கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது.

ஒலிபெருக்கியில் கட்சிக்காரர்: அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் பேசுவார் (பேச எழுந்த அமைச்சரின் காதில் கலைஞர் கிசுகிசுக்கிறார்.”அயிரை மீன் அளவுக்குப் பேசு, அதிகமாய் பேசாதே!” இதனை ஒரு நிகழ்ச்சியின்போது கவிஞர் வைரமுத்து சொன்னது.

ஒருமுறை கலைஞரை ஒரு விழாவில் நேருக்கு நேர் சந்தித்து விட்ட எம்ஜிஆர், முகமன் கூறும் நோக்கில், விசாரணைத் தொனியில்; என்னப்பா கருத்துப் போயிட்ட?! என்றிருக்கிறார். அதற்கு கலைஞர் சொன்ன பதில், கருத்துத் தான் போயிட்டேன், ஆனால் என்  ‘கருத்து’ இன்னும் போகல’ என்றாராம்.

நடிகர் நெப்போலியன் சொன்னதாக ராஜேஷ் கலைஞரின் 95 ஆவது பிறந்தநாள் விழா உரையில் தெரிவித்தது...

ஒருமுறை கலைஞருடன் நடந்து சென்று கொண்டிருக்கையில் கலைஞருக்கு நடை தள்ளாடியிருக்கிறது. அதற்கு கலைஞர் அடித்த விட், ‘என்னய்யா, தள்ளாத வயதுங்கறாங்க, ஆனா, தள்ளுதே! என்றிருக்கிறார்.

ஒருமுறை கலைஞரிடம் சிலர் கேட்கிறார்கள், தலைவரே, எம்ஜிஆர் தன்னை மன்றாடியார் பரம்பரை என்கிறார்களே? அப்படியா? நீங்க என்ன சொல்றீங்க?

கலைஞர், தன்னிடம் அப்படிக் கேட்டவர்களை மேலும், கீழும் பார்த்து விட்டு சொல்கிறார். மன்றாடியார் பரம்பரையா?  ஆமாம், மன்றாடியார் பரம்பரை தான். என்கிறார். 

அதற்கு எதிரிலிருந்தவர்கள், என்னங்க இப்படி சொல்லிட்டீங்களே? என்று கேட்டப் போது,

ஆமாம் மன்றாடியார் பரம்பரை தான், டெல்லில அவர் எத்தனை தடவை போய் மன்றாடினார் என்று? என்றாராம்.

இப்படி சந்தடி சாக்கில் சிக்ஸர் அடிக்க கலைஞரால் மட்டுமே முடியும். அதுமட்டுமல்ல, கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற உரையாடல்களின் போது தெறித்து விழும் நகைச்சுவைத்துணுக்குகள் சில ரசமானவை... அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இத்தனை நகைச்சுவை உணர்வு இருக்குமா? என்று சொல்ல முடியாது.

1970 களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது, இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கருத்திருமன், விளையாட்டாக,

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
(பெரியாரை மதிக்காமல் நடந்துகொண்டால் பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்)

என்ற குறளை ராஜாஜி வீட்டிலும்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
( இறைவன் திருவடிகளை வணங்காவிட்டால், படித்தும் பயனில்லை)

என்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.

முதல்வர் கருணாநிதி உடனே எழுந்து,
”யார் வீட்ட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ

யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார். அவையில் சிரிப்பலை எழுந்தது.

காமாட்சி: ‘‘மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன் னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே!’’

கருணாநிதி: ‘‘நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ் காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.’’ 

அனந்தநாயகி: ‘‘அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன் றைக்கு இங்கே வந்து உட்கார்ந் திருக்கிறீர்கள்!’’

கருணாநிதி: ‘‘அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம்.’’ 

ஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!’’

கருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா?’’ 

வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!’’ 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com