நடிகர் விஜய்-க்கு அரசியல் பாடம் கற்பிக்கிறாரா ரஜினிகாந்த்?

அரசியல் களத்தில் நடிகர் விஜய்-க்கு ரஜினிகாந்த் முன்னோடியாக திகழ்ந்து வருகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
நடிகர் விஜய்-க்கு அரசியல் பாடம் கற்பிக்கிறாரா ரஜினிகாந்த்?

தமிழகத்தில் சுதந்திர காலத்தில் இருந்தே சினிமாவும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கத் தொடங்கியது. அந்த வரிசையில் திராவிட கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் போன்றவற்றின் மூலம் அரசியல் தலைவர்கள் மக்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தனர். 

சினிமா புகழ் மூலம் மக்கள் மத்தியில் அரசியல் விதைகள் தூவப்பட்டன. திரைத்துறைதான் என்றாலும் திரைக்கு பின்னால் இருப்பவர்களைவிட திரைக்கு முன்னாள் வருபவர்களுக்கு மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டவர் தான் எம்ஜிஆர். அவர் தூவிய இந்த விதை தான் இன்றும் திரைத்துறையில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களுக்கு முதல்வராகும் எண்ணம் தோன்றுகிறது. 

தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் எம்ஜிஆர், பிற்காலத்தில் அவர் முதல்வரானார். அவருக்கு அடுத்து அந்த உச்ச நட்சத்திர இடத்தை ரஜினிகாந்த் நிரப்பினார். அதனால், அவரும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பங்கள் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. 

ரஜினி தனது திரைப்படம் நல்ல வியாபாரம் ஆவதற்காக அரசியல் பிரவேசம் குறித்து குழப்பத்தை கிளப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவருடைய ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார் அப்போது வருவார் என்று ஏங்கி ஏங்கியே பல வருடங்களை கழித்துவிட்டனர். 

இதற்கிடையில், திரைத்துறையில் இருந்து விஜயகாந்த் அரசியலில் களமிறங்கி பெருமளவு வரவேற்பு பெற்றார். அது ரஜினிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால், மீண்டும் சில நாட்கள் அரசியல் குறித்து மௌனம் காத்தார்.  

பின்னர், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு கமல்ஹாசன் திடீரென்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க ரஜினிக்கு அது கூடுதல் நெருக்கடி தந்தது. அதனால், ஒருவழியாக டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் குறித்தான முடிவை அறிவிக்கப்போவதாக ரஜினி தெரிவித்தார். அதன்படி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார்.   

இந்த அறிவிப்புக்கு பிறகு ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் பரபரப்பு தான். இந்நிலையில், அரசியலில் ஜெயிக்கப்போவது ரஜினியா கமலா என்ற விவாதங்கள் எழத்தொடங்கின. 

ஆனால், இதற்கிடையில் நடிகர் விஜய் ரஜினியிடம் இருந்து அரசியல் பாடத்தை கற்று வருகிறார். 

எம்ஜிஆர், ரஜினி வரிசையில் தற்போதயை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர இடத்தில் இருப்பது விஜய் தான். இவரும் அரசியலில் களமிறங்குவது குறித்தான பேச்சுகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கும். அவருடைய ஒரு படத்தின் தலைப்புக்கே மிகப் பெரிய பிரச்சனை எழுந்து வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாக வெளியானது. அதன்பிறகு அவருடைய அரசியல் பேச்சுகள் குறையத் தொடங்கியது. 

விஜய், தனது பாதையிலேயே முன்பு பயணித்துக் கொண்டிருக்கும் ரஜினியின் நகர்வு மூலம் ஒவ்வொன்றாக படித்து அதன் மூலம் தனக்கான அரசியல் களத்துக்கு பாதை அமைக்கிறார். 

தனக்கு முன் ரஜினி என்ன செய்கிறார் என்பதையும் அவர் மீது விழும் விமரிசனங்களை என்ன என்பதையும் விஜய் உன்னிப்பாக கவனித்து வருகிறார். 

ரஜினி மீது எழும் விமரிசனங்கள் என்ன?

  • ரஜினி மீது வைக்கும் மிக முக்கியமான விமரிசனமே தமிழர் அல்லாதவர் என்பது. 
  • 2-ஆவதாக அரசியலுக்கு வருகிறேன் என்றால் வர வேண்டும் இல்லை வரவில்லை என்று அறிவிக்க வேண்டும். ரசிகர்களை ஏமாற்றக் கூடாது.
  • திரைத்துறையில் இருப்பதும் சரி, வேற்று மாநிலத்தவரும் சரி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர் தமிழ் படத்தில் நடித்ததற்காக மட்டும் அதன் புகழை வைத்து முதல்வர் இருக்கைக்கு ஆசை கொள்ளலாமா? தமிழர் பிரச்சனைக்கு எப்போதாவது குரல் கொடுத்துள்ளாரா? 
  • ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தை பயன்படுத்திக்கொண்டுதான் ரஜினி அரசியலில் களமிறங்குகிறார். 
  • அரசியலில் கொள்கை என்ன என்று தெளிவாக இல்லாமல் ஆன்மீக அரசியல் என்று கூறி சந்தித்த விமரிசனங்கள் மிக முக்கியமானது. மேலும், ஆன்மீக அரசியல் என்பதன் மூலம் பாஜகவின் பின்புலமா என்ற சர்ச்சை கேள்வியும் ரஜினி மீது எழுந்தது. 
  • இதைத்தொடர்ந்து அண்மையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிப்படைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாலும், செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் மீண்டும் விமரிசன்ங்களை சந்தித்தார். 

இதை எப்படி விஜய் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்?

  • ரஜினி மீது வைக்கும் முதல் விமரிசனம் தமிழர் அல்லாதவர் என்று. விஜய்-க்கு இந்த விமரிசனத்தில் சர்ச்சையே இல்லை. 
  • அடுத்ததாக உச்ச நட்சத்திரம் என்பதாலே மட்டும் அரசியலில் களமிறங்கலாமா, தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்துள்ளீர்கள் என்ற கேள்வி ரஜினிக்கு வைக்கப்பட்டது. அதனால், விஜய் தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளில் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யாருக்கும் தெரியாதவாறு கலந்துகொண்டார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விடியோ மூலமும் எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதனால், நாளை விஜய் அரசியல் களத்தில் இறங்கும் போது இந்த விமரிசனங்கள் அவர் மீது வைக்க முடியாது. 
  • ரஜினி கொள்கை விவகாரத்தில் எண்ணற்ற விமரிசனங்களை சம்பாதித்தார். அதனால், விஜய் வரும்காலத்தில் அரசியலில் களமிறங்கும் போது முதலில் கொள்கையில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். 
  • பின்னர், தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்திலும், ரஜினி விளம்பரம் தேடுகிறார் என்ற பெயரை சம்பாதித்துவிட்டார். தூத்துக்குடியில் கார் மூலம் ரசிகர்களுக்கு கையசைத்து சென்றது என அவர் மீது விமரிசனங்கள் குவிந்தது. விஜய், அதே துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் பாதிப்படைந்தவர்களை எந்த விளம்பரமும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தில் பாதப்படைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இதன் மூலம் விஜய் எந்தவித விளம்பரமும் செய்யவில்லை என்ற பெயரை சம்பாதித்துவிட்டார்.    
  • பிறகு ரஜினி பாஜகவின் பின்புலம் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், விஜய்க்கு மெர்சல் பட விவகாரமே இந்த விமரிசனத்துக்கு பதிலளித்துவிடும். காரணம், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக விஜய் பேசிய வசனம் நாடு முழுவதும் மெர்சல் vs மோடி என்று ஹேஷ்டேக் கிளம்பியது. அதனால், அந்த விமரிசனமும் விஜய் மீது வைக்க முடியாது. 
  • விஜய், ரஜினி போன்று அரசியலுக்கு வருகிறேன் என்ற சர்ச்சையை வெளிப்படுத்துவதே இல்லை. அரசியலில் விஜய் என்பதை மிகவும் ரகசியமாகவே விஜய் கடைபிடித்து வருகிறார். அதனால், அவர் ரசிகர்களையும் மக்களையும் குழப்பமடைய வைக்கவில்லை. 
  • பின்னர், வெற்றிடத்தை நிரப்பத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற விமரிசனம் இருப்பதால் அரசியலில் களமிறங்க தகுந்த நேரம் குறித்து நிச்சயம் விஜய் முடிவு செய்ய ஆலோசனையை தொடங்கியிருப்பார். 

மேலும், வரும் காலங்களிலும் ரஜினி மீது வைக்கும் விமரிசனங்கள் மூலம், தொடர்ந்து அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டு விஜய் அரசியல் காய் நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்-இன் மிக முக்கியமான அரசியல் பாடம் 

அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி களமிறங்குவதாக கூறியிருப்பதால் அதன் முடிவுகள் நிச்சயம் விஜய்-க்கு முக்கிய பாடமாக அமையவுள்ளது. கூடுதலாக தற்போது கமலும் களத்தில் இருப்பதால் தேர்தல் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை நிச்சயம் இருவரும் இணைந்து விஜய்-க்கு கற்பிக்கவுள்ளனர்.

மொத்தத்தில நடிகர் விஜய்-க்கு ரஜினி நன்றாக அரசியல் பாடத்தை கற்பித்து வருகிறார். விஜய்யும் நன்றாக பாடம் படித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com