‘காலா’ வைப் புரிந்து கொள்ள பக்தியில் மூடத்தனம் இல்லாத மனம் வேண்டும்!

காலா முன்வைப்பது நிலம் எங்கள் உரிமை எனும் சாமானிய மக்களின் கோஷத்தை... இதை இந்துத்வா ரீதியாக அணுக வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
‘காலா’ வைப் புரிந்து கொள்ள பக்தியில் மூடத்தனம் இல்லாத மனம் வேண்டும்!

காலா முன்வைப்பது நிலம் எங்கள் உரிமை எனும் சாமானிய மக்களின் கோஷத்தை... இதை இந்துத்வா ரீதியாக அணுக வேண்டிய நிர்பந்தம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். காரணம் இதில் நிலத்தை அதிகாரமாகக் கொண்டாடும் ஒருவனை ராம பக்தனாகச் சித்தரித்து அவனை வில்லனாக்கிய இயக்குனரின் சாமர்த்தியம். அப்படியெனில் நிலத்தை உரிமையெனக் கோரும் காலா ஹீரோ தானே?!. 

காலா வழக்கமான ரஜினி படம் இல்லை. இது படம் பார்த்த அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம். ரஜினி படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் வருபவர்கள் நிச்சயம் காலாவைப் பார்த்து ஏமாந்து போகலாம். ஆனால், காலாவில் பேசுவதற்கும், பேசப்படுவதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இது ரஜினி படமல்ல. ரஜினி மூலமாக இயக்குனர் பா.ரஞ்சித் பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தில் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பலி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக குரலுயர்த்தக் கிடைத்த ஒரு வாய்ப்பு. இதில் ஊடே புகுந்து இந்து மத அவமதிப்பு என்று யாரேனும் சீனி வெடியைக் கொளுத்திப் போட்டால் அது வெடிக்கிறதோ இல்லையோ? நியாயமாக யோசிக்கத் தெரிந்த மக்களில் சிலர் ஆராயத் தொடங்கி விடுவார்கள். குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக ராமனை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தெய்வமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் விழித்துக் கொண்டு பெயருக்காவது சில கேள்விகளை கேட்கத்தான் செய்வார்கள். அப்படி யோசித்தால் மட்டுமே இந்தப் படத்தில் கதையோடு கதையாக நுழைக்கப்பட்ட சில கருத்தாக்கங்களுக்கு வெற்றி கிடைத்ததாகக் கருத முடியும்.

கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு ராமனைப் பற்றியும், இந்து மத நம்பிக்கைகளைப் பற்றியும் விமர்சித்துப் பேசினால் போதும் உடனே அநாகரீகமாக தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கி விடும் கும்பலுக்கு ஒரு வேண்டுகோள்... ராமன் உங்களைப் போலவே எனக்கும் தெய்வமே. நான் நம்பும் தெய்வம் குறித்து விமர்சிக்கவே கூடாது எனும் தடை எனக்கில்லாததாலும், அவனை அப்படியே ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் எனக்கில்லை என்பதாலும், நான் இப்போது என் ராமனை கேள்விக்குள்ளாக்க விழைகிறேன். உங்களுக்கு அப்படிப் பட்ட தளைகள் இருப்பின், கட்டுரை முன் வைக்கும் கேள்விகளுக்கு நேர்மையான முறையில் பதில் அளிக்க முயலுங்கள். அல்லது ஓரமாக நின்று வேடிக்கை பாருங்கள். நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பி மத துவேஷத்தைத் தூவும் வேலை மட்டும் வேண்டாம். ஏனெனில் இது மதம் தொடர்பான விவாதம் அல்ல. நிலம் தொடர்பான விவாதம்.

இந்தியா... இந்தியாவாக ஆவதற்கு முன்பு அதன் பெயர் என்னவாக இருந்தது? என்னென்னவாக இருந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்.. 

1.குருதேசம் , 2. சூரசேனதேசம், 3. குந்திதேசம் 4. குந்தலதேசம் 5. விராடதேசம், 6. மத்ஸ்யதேசம், 7.த்ரிகர்த்ததேசம் 8.கேகயதேசம், 9.பாஹலிகதேசம், 10. கோசலதேசம், 11.பாஞ்சாலதேசம், 12.நிஷததேசம், 13.நிஷாததேசம், 14. சேதிதேசம் 15.தசார்ணதேசம் 16.விதர்ப்பதேசம் 17.அவந்திதேசம்,18. மாளவதேசம், 19. கொங்கணதேசம், 20. கூர்ஜரதேசம், 21. ஆபிரதேசம், 22. ஸால்வதேசம், 23. சிந்துதேசம், 24. செளவீரதேசம், 25. பாரசீகதேசம், 26. வநாயுதேசம், 27. பர்பரதேசம்  28. கிராததேசம் 29. காந்தாரதேசம், 30. மத்ரதேசம்,  31. காஷ்மீரதேசம் 32. காம்போஜதேசம் 33. நேபாளதேசம் 34. ஆரட்ட தேசம் 35. விதேஹதேசம் 36. பார்வததேசம் 37. சீனதேசம் 38. சாமரூபதேசம் 39. ப்ராக்ஜோதிஷதேசம் 40. சிம்மதேசம் 41. உத்கலதேசம் 42. வங்கதேசம் 43. அங்கதேசம் 44. மகததேசம் 45. ஹேஹயதேசம் 46. கலிங்கதேசம் 47. ஆந்த்ரதேசம் 48. யவனதேசம் 49. மஹாராஷ்டரதேசம் 50. குளிந்ததேசம் 51. திராவிடதேசம் 52. சோழதேசம் 53. சிம்மளதேசம் 54. பாண்டியதேசம் 55. கேரளதேசம் 56. கர்னாடக தேசம்

- இப்படி 56 தேசங்களாக இருந்தவற்றை தங்களது நாடு பிடிக்கும் ஆசையால் வெறி பிடித்துப் போரிட்டு வென்று இந்துஸ்தானமாக ஆக்கிய பெருமை முகலாயர்களைச் சாரும். அந்த முகலாயர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்றால் அதற்கு காரணம் ஆசியாவில் இமயமலைக்கு மறுபுறம் இருந்த இந்த தேசத்தில் இருந்த செல்வ வளமும், வாழ்வதற்கு மிகத்தோதான சீதோஷ்ணமும் தான்.

முகலாயர் வருகைக்குப் பின் இந்துஸ்தானத்தில் வடக்கே பெரும்பான்மையாக முகலாயர்களும், சிறு, சிறு தேசங்களை ரஜபுத்திரர்களும், மராட்டியர்களும் ஆண்டார்கள். தெற்கே துவக்கத்தில் முற்காலச் சோழர்களும், பாண்டியர்களும், சேரர்களும் ஆண்டு மடிந்த பின் இடைக்கால, பிற்கால சேர, சோழ, பாண்டியர்கள் ஆளத் தொடங்கும் முன் ஆந்திர எல்லைகளில் இருந்து பல்லவர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆற்றல் இழந்த காலகட்டத்தில் நடுநடுவே களப்பிரர்கள், சாதவாகனர்கள், சாளுக்கியர்கள், நாயக்க மன்னர்கள் எனப் பலரும் தென்னிந்தியாவை ஆண்டனர். நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஊடுருவல் ஆரம்பமானது. வடக்கில் முகலாயர்களின் கடைசி பேரரசரான பகதூர் ஷா 2 கும்பினியாரின் சூழ்ச்சி வலையில் சிக்கி பர்மாவில் சிறை வைக்கப்பட்டார். இப்படிச் செல்கிறது இந்திய வரலாறு!

இப்படிப் பயணிக்கும் இந்திய வரலாற்றில் இந்திய நிலப்பகுதிகள் மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிப் பெருமை கொண்ட ரஜபுத்திரர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், உள்ளிட்ட இந்திய மன்னர்களால் ஆளப்பட்ட போதும் சரி கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர், குஷான மன்னர்கள், முகலாயர்கள், பாமினி சுல்தான்கள், லோடிகள், துக்ளக்குகள் என அயலக மன்னர்களால் ஆளப்பட்ட போதும் சரி மன்னர்களுக்கு நிலம் என்பது அதிகார வெறியாக மட்டுமே கருத்தில் பதிவதாக இருந்தது. சாமானிய மனிதர்களுக்கு மட்டுமே அன்று முதல் இன்று வரை அது வாழ்வாதார உரிமையாக இருந்து வந்திருக்கிறது.

இந்த இருவிதமான ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக நிலையில்... சாமானியர்கள் சார்ந்திருக்கும் தலைமையை ராட்ஷத வில்லனாகவும், அதிகார வர்க்கத்தினர் தங்களது சுயநலத்திற்காக கட்டமைத்த தலைமையை தெய்வாம்சம் பொருந்திய எல்லாம் வல்ல ஹீரோவாகவும் உருவகப் படுத்தும் முயற்சி தொடங்கியது. அப்படித்தான் ராமன் மானுட இளவரசனாக இருந்த ராமன் முதலில் இந்துக்களின் நாயகனாகவும் பின்பு தெய்வமாகவும் நீட்சி அடைந்தார் எனும் நோக்கில் காலா தன் போக்கில் சில ராமாயணக் குறியீடுகளை முன் வைக்கிறது.

இந்தியாவை, அது இந்தியாவென ஆவதற்கு முன்பிருந்தே கூரஜரமென்றும், வேசரமென்றும், திராவிடம் என்றும் எல்லைக்கோடிட்டுக் கொண்டு மன்னர்கள் பலர் ஆண்டனர். இந்த மன்னர்கள் பரம்பரை உருவானதெல்லாம் வேளாண்மை என்றொரு விஷயம் கண்டுபிடிக்கப் பட்ட பின்னரே! வேளாண்மை கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பிருந்த பூர்வகுடிகள் வேட்டைச் சமுதாயத்தினரே. வேட்டையின் தலைவனே இனக்குழுவுக்கும் தலைவனாக இருந்தான். அன்றும் வர்ணாசிரம பேதங்கள் நிறையவே இருந்தன. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ராமாயணம். 

ராமாயணத்தில் ராமன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விதம் குறித்துப் பேசுகையில் குற்றம் ஒன்றே எனும் போது தண்டனை மட்டும் பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர் எனும் நால்வகை வர்ணங்களைப் பொறுத்து ஏற்றத்தாழ்வுடன் அளிக்கப்படுவதாக ராமகதை பகர்கிறது. அதற்கு அந்தந்த வர்ணங்களின் சமுதாய அந்தஸ்தைப் பொறுத்தும் அவர்களது மக்கள் மற்றும் மன்னர் சேவைகளில் அவர்களது கடமை மற்றும் பங்கேற்பைப் பொறுத்தும் தண்டனைகள் விதிக்கப்படுவதாகக் காரணம் கூறப்படுகிறது.

மிகப்பரந்த மெளரிய சாம்ராஜ்யம் முதலில் பூர்வ குடியாக இருந்து சாணக்யரின் ராஜதந்திரத்தால் இந்தியாவின் முதல் பரந்து விரிந்த தனிப்பெரும் சாம்ராஜ்யமாக விரிந்தது. மன்னர்களின் அல்லது ஆண்ட பரம்பரைகளின் நிலத்தின் மீதான அதிகாரம் ஆரம்பமானது அது முதல் அல்ல அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கருதப்படும் மகாபாரத காலத்திலேயே நிலத்தின் மீதான வெறி மன்னர்களுக்குள் கொளுந்து விட்டு எரியத் தொடங்கி விட்டதாகவே இதிகாசம் காட்டுகிறது. மகாபாரதம் நிகழ்ந்தது துவாபர யுகத்தில், மகாபாரத காலத்திலேயே அப்படி என்றால் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திரேதா யுகத்தில் நடந்து முடிந்ததாகக் கருதப்படும் ராமாயண காலத்தில் ராமன் தன் மனைவியான சீதா தேவியை ராவணன் சிறையெடுக்க... தண்டகாரண்ய வனத்தில் (இன்றைய ஒதிஷா, ஆந்திர எல்லைப்புறத்தை ஒட்டிய காடுகள்) இழந்த மனைவியை மீட்பதற்காக தெற்கே ராவணனனைத் தேடி லங்கைக்கு செல்கிறார். ராமனின் பயணம் தொடங்கியதோ இன்றைய உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் இருந்து. ராமன் நாடிழந்ததற்கும், காடேகியதற்கும் கைகேயியின் வரமே காரணம் என ராமாயணம் காட்டுகிறது. பண்டைய இந்தியாவை அலசி ஆராயும் நோக்கில் மன்னர் பரம்பரைகளை குறுக்குவெட்டு, நீள்வெட்டு எனப் பலவிதமாக ஆராய்ந்து பண்டைய இந்தியா குறித்த வரலாற்று ஆவணங்களை எழுத முற்பட்டவர்களோ, அன்றைய வழக்கப்படி 
ராமன் நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்றும்... நாடு கடத்தப்பட்ட ராமன் தெற்கு நோக்கித் தன் மனைவியுடன் நடந்து வந்து புதிய ராஜ்ஜியங்களைக் கண்டடையும் முயற்சியில் ஈடுபடுகையில் மண்ணின் மைந்தனான ராவணனுடன் தண்டகாரண்யத்தில் வைத்து நில உரிமைப் போட்டி ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு புது சித்திரத்தை வரைந்து காட்டுகிறார்கள். இதில் எது உண்மையாயிருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. ஆனால் லாஜிக் இடிக்கவில்லை என்பதும் நிஜம்.

நிலம் எங்கள் உரிமை, நிலம் எங்கள் அதிகாரம் என அதன் நிஜமான உடமைதாரர்கள் கதறிக் கதறிப் போராடி தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டியிருப்பது காலக்கொடுமையல்ல. பன்னெடுங்கால மனித வரலாற்றை, வாழ்ந்து மறைந்த பல மனித நாகரீகங்களை தூசி தட்டிப் பார்த்தால் கிடைக்கக் கூடிய தீராப்பசி கொண்ட அதிகார வெறியின் எச்சம்.

ராமாயணமும், மகாபாரதமும் சித்தரிக்கும் ஆரிய மன்னர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவிய காலகட்டத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் யார்? அவர்கள் எங்கே விரட்டியடிக்கப்பட்டார்கள்? அவர்களை ஜெயமோகனின்... மகாபாரத புத்தாக்க மீட்டுருவான வெண்முரசு நாவல் நாகர்கள் எனும் பூர்வ குடிகளாக இன்றைய இளம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அந்த நாகர்களை மூர்க்கமானவர்கள், ஆபத்தானவர்கள் என காடுகளிலும், மலைகளிலும் ஒழித்து விட்டு அவர்களது நிலங்களை ஆக்ரமித்தவர்களே வரலாற்றில் நாம் அறிய நேரும் இந்தியப் பூர்வ பழங்குடிகளான லிச்சாவிகள், ஓரண, சந்தால், புரூக்கள், அலினார், மத்சியர், மோர்கள் போன்ற பூர்வ இந்திய பழங்குடியினர். இந்த பூர்வ பழங்குடிகளை எல்லை விரிவாக்கப் போர்களில் வென்று பிறகே ஆரியர்கள் இந்துஸ்தானத்தை ஆக்ரமிக்கிறார்கள். இந்துஸ்தானம் எனும் சொல் இந்திய வரலாற்றின் பிற்காலத்தைய பயன்பாட்டுச் சொல். அது முகலாயர் காலத்துக்குப் பின் பயன்பாட்டில் வந்ததாக இருக்கலாம்.

காலா திரைப்படத்தில் ராமனை வில்லனாகவும், ராவணனை நல்லவனாகவும் ஹீரோவாகவும் காட்ட முயற்சிப்பதின் பின்னணியை விஷமத்தனம் என்று புறம் தள்ளாமல் கொஞ்சம் யோசிக்க முயற்சித்தோமானால் அதிலுள்ள உண்மை பிடிபடலாம். இதை நான் சொல்லவில்லை, இந்திய வரலாற்றை பல விதமாகப் புரிந்து கொண்டு ஒரே விதமாக எழுத முயன்ற வரலாற்றாசிரியர்கள் பலர் முன்பே சொல்லிச் சென்றது தான் அது.

எனவே காலா முன் வைக்கும்  ராமாயணக் குறியீடுகள் ஆதாரமற்றவை அல்ல, ஏனெனில் நிலத்தின் மீதான அதிகாரம் ராமனில் இருந்தே தொடங்குகிறது. மற்றெல்லா யுத்தங்களுக்கும் மூத்தது ராம, ராவண யுத்தம். அந்த யுத்தத்தை பெண்ணுக்காக நடந்த யுத்தமெனக் காட்ட சிலருக்கு எத்தனை உரிமையுண்டோ அத்தனை உரிமை மண்ணுக்காகவும் நடந்திருக்கக் கூடும் எனக் காட்டவும், சித்தரிக்கவும் கூட சிலருக்கு இருக்கக் கூடும். காரணம் நிலமாக இருக்கும் போது. ராமாயண காலத்தில் நிலத்தை அடிப்படையாகக் கொண்டே போர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ராமாயணமே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்த மனிதர்களை நமக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது. மிதிலையில் ஜனக மஹாராஜா மேழி பிடித்து உழுகையில் நிலம் அகழ்ந்து கிடைத்த குழந்தையே மாதா சீதா பிராட்டி. சீதா என்பது அவளுக்கு காரணப் பெயர். ரிக் வேத ஸ்லோகங்களில் சீதா என்றொரு பெண் கடவுளின் பெயர் மொழியப்படுகிறது. அந்த சீதா, ராமாயண சீதாவிற்கும் முற்பட்டவள். அவள் விளைச்சலின் அன்னையாகக் கருதப்பட்டாள். மண் விளைந்தால் அன்றோ மனிதர்களுக்கு வாழ்வு. ஆக விளைச்சலையுண்டாக்கும் செழிப்பான மண்ணுக்கு சமஸ்கிருதத்தில் சீதா எனப் பெயர். அந்த சீதையின் பெயரே இந்த சீதைக்கும் காரணப் பெயரானது.

நிலத்தில் கிடைத்த சீதா கடைசியில் இந்த பூமியில் நிலவும் சகலவிதமான அதிகார வெறியாட்டங்களையும் சகித்துக் கொள்ள முடியாமல் மீண்டும் பூமிக்குள் தஞ்சமடைவதாகவே ராமாயணம் காட்டுகிறது.

ஒருவேளை சீதை என்பதே கற்பனை கதாபாத்திரம் தானோ என்னவோ? நிலத்தின் மீதான உரிமைக்காக நடந்த ராம, ராவண யுத்தத்தை நியாயப்படுத்த பிற்காலத்தைய வரலாற்றுத் திரிபுகள் அவளைப் பெண்ணாகச் சித்தரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

எது எப்படியோ? காலாவில் ராமாயணக் கதை விரித்தாளப்படும் காட்சியில் ராமன் வில்லனாகிறான். ராவணன் ஹீரோவாகிறான்.

அதிசயத்திலும், அதிசயமாக இதை ஆர்எஸ்எஸ்காரர்கள் எப்படி அனுமதித்தார்கள் எனத் தெரியவில்லை. மெர்சல் படத்தில் அரசின் கொள்கைகளை கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் எனக்கூறி படம் வெளிவரச் சிக்கலை ஏற்படுத்திய கூட்டம். இன்று காலாவை காலாற நடக்க அனுமதித்திருப்பது மாயாஜாலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com