கொத்தடிமை தொழில்முறையை அடையாளம் காணல்

கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) அவசர சட்டம் 1975, குடியரசு தலைவரால் 1975-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது
கொத்தடிமை தொழில்முறையை அடையாளம் காணல்

கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) அவசர சட்டம் 1975, குடியரசு தலைவரால் 1975-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது மற்றும் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976 என்ற பெயரில் 1976-ம் ஆண்டில் சட்டமாக கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் பிரதான குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள் என கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 'நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் கந்து வட்டி அமைப்பு என்பது இன்னும் இருந்து வருகிறது. இதன் கீழ் கடன்பட்டவர் அல்லது அவரது வாரிசுதாரர்கள் அல்லது அவரை சார்ந்து வாழ்பவர்கள், இக்கடனை அடைப்பதற்காக ஊதியமில்லாமலோ அல்லது நியாயமான ஊதியத்தைப் பெறாமலோ கடன் வழங்கியவருக்கு வேலை செய்ய வேண்டும். சில நேரங்களில் பல தலைமுறைகளுக்கு முந்தைய நபரால் வாங்கப்பட்ட மிகச்சிறிய கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்காக பல தலைமுறையினர் கொத்தடிமையின்கீழ் வேலை செய்கின்றனர். இதற்கான வட்டி விகிதங்கள் மிக மிக அதிகமாகும் மற்றும் இத்தகைய கொத்தடிமைமுறையை எந்தவொரு சட்டப்பூர்வ ஒப்பந்தம் அல்லது ஒப்புகையின் விளைவு என்று பொருள்கூற இயலாது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதையும் மற்றும் மனித உழைப்பின் மாண்பு அழிக்கப்படுவதையுமே இந்த கொத்தடிமை முறையானது உணர்த்துகிறது."

கொத்தடிமைமுறை (ஒழிப்பு) சட்டம் 1976, கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்கான நடைமுறை குறித்தும் பேசுகிறது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு பொறுப்பையும், அதிகாரத்தையும் மாவட்ட ஆட்சியர்ஃமாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்குவதற்கு மாநில அரசுக்கு இந்த சட்டமே அதிகாரமளிக்கிறது மற்றும் அந்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட், தனக்கு கீழே பணியாற்றும் ஒரு அதிகாரியை இப்பொறுப்புக்காக நியமனம் செய்யலாம்; அவ்வாறு நியமனம் செய்யப்படும் அதிகாரி, அதற்கான உள்ளுர் வரம்பெல்லைகளுக்குள் இதற்கான அனைத்து அல்லது எந்தவொரு அதிகாரத்தையும் பிரயோகிப்பார் மற்றும் தனக்கு வழங்கப்பட்டிருக்கிற அல்லது தன் மீது சுமத்தப்பட்டிருக்கிற அனைத்து அல்லது எந்தவொரு கடமைகளையும் அவர் மேற்கொள்வார். அதன்படி, கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்பது மாவட்ட ஆட்சியரின்ஃமாஜிஸ்ட்ரேட்டின் தனிப்பட்ட கடமையாகும். கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து வேறு எந்த மாநில அல்லது மத்திய அரசின் அமலாக்க முகமைகள் புகார்களை பெற்றாலும்கூட அந்த புகாரை மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் மற்றும் எவ்வித தாமதமுமின்றி அப்புகார்கள் மீது மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) சட்டம் 1976ன்கீழ் கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணும் செயல்முறையானது அதிக சவாலானதாகும் மற்றும் இச்செயல்முறையானது அதற்கே உரிய தனித்துவத் தன்மையைக் கொண்டிருக்கிறது மற்றும் பிற குற்றவியல் செயல்முறைகளிலிருந்து இது மிக அதிகமாக மாறுபட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு, கொத்தடிமை தொழில்முறை கையேட்டை வெளியிட்டிருக்கிறது மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்பது குறித்த சில செயல்நடைமுறைகளை அதில் குறிப்பிட்டிருக்கிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு சுற்றுமடலை அனுப்பியது. அதில் கொத்தடிமை தொழில்முறையை அடையாளம் காண்பதற்கான விரிவான செயல்முறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்கான நோக்கமே, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதே. மேற்கூறப்பட்ட வழிகாட்டல்கள் அனைத்தையும் கொண்டிருந்தாலும்கூட, கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணும் செயல்முறையை பூர்த்திசெய்வது மாவட்ட ஆட்சியருக்கு மிக கடினமானதாகும்; இதற்கே உரிய தனித்துவ பண்பின் காரணமாக குறிப்பிட்ட கோட்பாடுகளை செயல்முறைப்படுத்துவதும் சிரமமானதாகும். உச்ச நீதிமன்றமானது, 'கொத்தடிமை தொழிலாளர்களே அடையாளம் கண்டு மற்றும் விடுவிப்பதற்கான செயல்முறை என்பது புதிதாக கண்டறிகிற ஒரு செய்முறையாகும் மற்றும் ஒன்றுமில்லாதவர்களை மனிதர்களாக உருமாற்றம் செய்கின்ற நடைமுறையாகும். இதை ரவீந்திரநாத் தாகூரின் 'காதி மற்றும் கோமல்" என்ற படைப்பில் அழகான சொற்றொடர்களில் இது மிக நேர்த்தியாக விவரணை செய்யப்பட்டிருக்கிறது. 'இந்த வாய்பேசாத, சாதுவான, அப்பாவி நபர்களின் வாய்களில் ஆன்மாவின் மொழியை நாம் புகுத்தவேண்டும்." நிர்வாக தரப்பில் மன உறுதி, துடிப்பான செயல்நடவடிக்கை மற்றும் ஒற்றை பொறுப்புறுதி உணர்வு ஆகியவையே, இந்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்கும் மற்றும் அவர்களை விடுவிப்பதற்கும் தேவைப்படுகிறது. கொத்தடிமை தொழிலாளர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து நமது தேசிய வாழ்க்கையில் ஒரு அவமானக் கறையாக இருக்கும் இந்த அசிங்கமான மனிதாபிமானமற்ற நடைமுறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இது அவசியம்".

கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணும் செயல்முறையில் மாவட்ட ஆட்சியருக்கு, 'எதிர் செயல்முறை மற்றும் சாட்சியங்களை கண்டறிதல்" 'மெய்ப்பிப்பு பொறுப்பு" 'வேலையில் நிர்ப்பந்தம் இருந்ததை நிலைநாட்டுதல்" 'கண்காணிப்பு குழுவின் பங்கு மற்றும் அடையாளம் காணல் செயல்பாட்டில் அரசு சாரா அமைப்புகளின் பங்கு மற்றும் ஈடுபாடு" ஆகிய கருத்தாக்கங்களில் தான் முக்கியமான குழப்பங்கள் எழுகின்றன. இந்த அனைத்து கருத்தாக்கங்களுமே, வழக்கமான குற்றவியல் நடைமுறையிலிருந்து மிக அதிகமாக மாறுபட்டவை. ஆனால் இந்த குழப்பங்கள் அனைத்துமே பல்வேறு நீதிமன்றங்களின் வழிகாட்டல்களினால் தீர்த்து வைக்கப்பட்டவையாகும்.

எதிர் செயல்முறை

'கொத்தடிமை தொழில்முறை வழக்குகளில் எதிரி சார்ந்த ஃ எதிர் செயல்முறையை நாம் கண்மூடித்தனமாக பின்பற்றுவோம் என்றால், கொத்தடிமை தொழிலாளர்களை, அடிப்படை உரிமைகளை அவர்களால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது மற்றும் இதன் விளைவானது அரசமைப்பு சட்டத்தை கேலிக்கு உட்படுத்துவது என்பதைத் தவிர வேறு எதுவுமாக இருக்காது" (உச்ச நீதிமன்றம்)

உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது: 'கொத்தடிமை தொழிலாளர்கள் தொடர்புடைய வழக்குகள் உண்மையில் எதிரிகளுக்கிடையிலான வழக்கு தன்மையை கொண்டவையல்ல. இவ்வழக்கின் தரப்புகளுள் ஒருவர் சமுதாயத்தின் ஏழ்மையான மற்றும் வசதிகள் மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராகவும், போதுமான சமூக மற்றும் பொருளாதார வசதிகள் இல்லாதவராகவும் இருக்கின்ற நிலையில் நீதிக்கான இது எதிர் தரப்புகள் வழக்காடுகின்ற அமைப்பு முறையின்கீழ் ஒரு வலுவான மற்றும் வசதியான எதிராலிக்கு எதிராக அவர் சாதகமற்ற நிலையில் தான் இருக்க முடியும்; அதிகமாக திறமையான சட்ட பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் அவருக்கு இருக்கிற பிரச்சனையின் காரணமாகவும் மற்றும் பிற அனைத்தையும்விட, நீதிமன்றத்திற்கு முன்பாக இது தொடர்பான சான்றுகளையும் சாட்சியங்களையும் சமர்ப்பிக்கவும், ஆஜர் செய்யவும் அவருக்கு வசதியும், திறமையும் இல்லாதது அவரை சாதகமற்ற நிலையில் இருக்கச் செய்கிறது. ஆகவே, நீதிமன்றத்திற்கு முன்பாக ஏழை மக்கள் வரும்போது, குறிப்பாக அவர்களது அடிப்படை உரிமைகள் அமல்படுத்தப்படுவதற்காக, இரு எதிர் தரப்புகள் வழக்காடும் செயல்முறையிலிருந்து விலகிச் செல்வதும் மற்றும் தங்களது அடிப்படை உரிமைகள் அமலாக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக அவசியமான ஆதாரங்களை ஏழைகளும், பலவீனமானவர்களும் கொண்டுவருவதை சாத்தியமாகுமாறு ஒரு புதிய செயல்முறையை உருவாக்குவது அவசியமாகும்.

நீதிமன்றத்திற்கு முன்பாக இப்போது வருகிற ஏழை மக்களின் பிரச்சனைகள், இதுவரை நீதிமன்றத்தின் கவனத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்த நபர்களிடமிருந்து தரத்திலே மாறுபட்டது என்பதையும் மற்றும் ஒரு வேறுபட்ட வகையிலான வழக்குரைக்கும் திறனையும் மற்றும் ஒரு வேறுபட்ட வகையிலான நீதிமன்ற அணுகுமுறையும் அவர்களுக்கு அவசியம் என்பதை கட்டாயமாக நினைவில் கொள்ளவேண்டும். கொத்தடிமை தொழில்முறை வழக்குகளில் எதிரி சார்ந்த ஃ எதிர் செயல்முறையை நாம் கண்மூடித்தனமாக பின்பற்றுவோம் என்றால், கொத்தடிமை தொழிலாளர்களை, அடிப்படை உரிமைகளை அவர்களால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது மற்றும் இதன் விளைவானது அரசமைப்பு சட்டத்தை கேலிக்கு உட்படுத்துவது என்பதைத் தவிர வேறு எதுவுமாக இருக்காது. ஆகவே, நீதிமன்ற செய்முறையில் தலையிடாமை அணுகுமுறை என்பதை, அடிப்படை உரிமைகளை அமலாக்கம் செய்கின்ற கேள்வி எழுகின்ற நேர்வில், நாம் கைவிட்டாகவேண்டும். உச்சநீதிமன்றம் இது குறித்து மேலும் கூறுகையில், 'அடிப்படை உரிமைகளை அமலாக்கம் செய்வதற்காக வழக்கின் ஒவ்வொரு தரப்பும் எதிர் தரப்பால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிற அவரது தரப்பு சொந்த சாட்சியத்தை ஆஜர்படுத்தும்போது நீதிபதி ஒரு விளையாட்டு போட்டியின் நடுவரைப்போல் அமர்ந்து கொண்டு, இரு தரப்புகளாலும் அவருக்கு முன்பு சமர்ப்பிக்கப்படுகிற அத்தகைய சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே வழக்கை முடிவுசெய்யக்கூடியவாறு, எதிர்தரப்புகள் வாதிடுகிற செயல்முறையை சட்டவிதி 32-ன்கீழ் வழக்கு விசாரணை செயல்முறையில் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்ற கடமைப்பொறுப்பு கட்டாயமில்லை. உண்மையில், பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் ஆங்கில-சாக்ஸன் நீதி நடைமுறை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக, ஒவ்வொரு நீதிமன்ற செயல்முறையின் எதிர்தரப்புகள் வழக்காடுகிற செயல்முறை வடிவத்தில் இருந்தாக வேண்டும் என்ற சிந்தனையை நமது மனதில் இடம்பெற்றிருப்பது மட்டுமன்றி, நமது ஆழ்மனதிலும் ஒரு அங்கமாக ஆகியிருப்பதால், எதிர்தரப்புகள் வழக்காடுகிற செய்முறை பின்பற்றப்பட்டாலொழிய நீதியை வழங்க இயலாது என்று கருதி, நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக எதிர்தரப்புகள் வாதிடுகிற செயல்முறையை நாம் பின்பற்றி வந்திருக்கிறோம் என்பதால் மட்டும் அரசியலமைப்பு சட்டத்தின் சட்டவிதி 32-ன் சரத்து (2)ல் அத்தகைய அரசியலமைப்பு சட்ட ரீதியிலான நிறைவாக்கம் இயற்றப்படவில்லை".

கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் காண்பதிலும் மேற்குறிப்பிடப்பட்ட கருத்துகள் சம அளவில் பொருந்தக்கூடியவையாகும். கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணுகின்ற நேரத்தில் எதிர்தரப்புகள் ரீதியிலான செயல்முறையை பின்பற்றுவது அவசியமில்லை என்பதும் மற்றும் கொத்தடிமை தொழிலாளரின் வாக்குமூல அறிக்கைகள் மட்டுமே போதுமானது என்பதும் தௌ;ளத்தெளிவாகிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் வழக்கு தொடரும் செயல்முறையில் வார்த்தை அடிப்படையிலான சான்றும் மற்றும் வார்த்தை ரீதியிலான சாட்சியமும் மிக முக்கியமானவை; ஆனால், கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணும் நேரத்தில், அவர்களை விடுவிக்கும் நோக்கத்திற்காக கொத்தடிமை தொழிலாளர்களின் தரப்பை நிலைநாட்டுவதற்காக அவர்களிடமிருந்து சாட்சியங்களை மாவட்ட ஆட்சியர் சேகரிப்பது என்பது முக்கியமானதல்ல. 1976ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டமே, அதன் பிரிவு 2 (ப) (i)ல் இவ்வாறு குறிப்பிடுகிறது 'அத்தகைய முன்பணம் (கொத்தடிமையாக்குகிற கடன்) ஆவண ரீதியாக சான்றாக்கம் செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும்."

மெய்ப்பிப்பு பொறுப்பு

'வழங்கப்பட்ட கடன் ஒரு கொத்தடிமை கடன் அல்ல என்று மெய்ப்பிக்கின்ற பொறுப்பு கடன் வழங்கியவரை சார்ந்ததாகும்."

வழக்கமான குற்றவியல் வழக்குகளில், குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எப்போதும் குற்றம் சாட்டும்ஃகுற்றம் சாட்டுபவரை சார்ந்திருக்கும். ஆனால் கொத்தடிமை தொழிலாளர் நேர்வுகளை பொறுத்தவரை தான் குற்றமற்றவர் அல்ல என்று மெய்ப்பிக்கின்ற பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரையே எப்போதும் சார்ந்திருக்கும். கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டமானது, 'ஒரு நபரால் அல்லது அவரது முன்னோர்களால் அல்லது பின்வரும் வாரிசுதாரர்களால் பெறப்பட்ட ஒரு முன்தொகைக்கு ஈடாக" என்று கொத்தடிமை தொழில்முறை அமைப்பை பொருள்வரையறை செய்கிறது. மேலும், கொத்தடிமை கடனை, ஒரு கொத்தடிமை தொழிலாளரால் பெறப்பட்ட அல்லது பெறப்பட்டதாக கருதப்படும் ஒரு முன்பணம் அல்லது கொத்தடிமை தொழில்முறை அமைப்பின்கீழ் அல்லது அந்த செயல்நடவடிக்கையைத் தொடர்ந்ததாக என்று அதே சட்டம் பொருள் வரையறை செய்கிறது.

அதே சட்டத்தின்கீழ் முன்பணம் என்ற சொற்றொடரானது இவ்வாறாக விளக்கப்படுகிறது: 'முன்பணம் என்பது ஒரு நபரால் மற்றொரு நபருக்கு ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ அல்லது பகுதியளவு ரொக்கத்திலோ அல்லது பகுதியளவு பொருளாகவோ வழங்கப்படுகிற முன்பண தொகையாகும்." 1976ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டத்தின் பிரிவு 15, 'ஒரு கொத்தடிமை தொழிலாளரால் அல்லது ஒரு கண்காணிப்பு குழுவால் எந்தவொரு கடன் தொகையானது கொத்தடிமை கடனாக இருக்கிறது என்று கூறப்படுமானால், அத்தகைய கடன் கொத்தடிமைக்கு உட்படுத்தும் ஒரு கடன் அல்ல என்று நிரூபிக்கிற பொறுப்பானது கடன் வழங்கிய நபரை சார்ந்திருக்கும்," என்று கூறுகிறது. கொத்தடிமை தொழில்முறையை அடையாளம் காணும் நேரத்தில் இந்த விதிமுறை அம்சமானது (பிரிவு 15) பரிசீலிக்கப்படுவது அவசியம் என்று தனது முடிவின் வழியாக உச்சநீதிமன்றமும் வலியுறுத்துகிறது. ஆகவே, கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணுகிற நேரத்தில், மெய்ப்பிக்கின்ற பொறுப்பானது கொத்தடிமை தொழிலாளர்களை சாராமல் கடன் வழங்கிய நபரை சார்ந்தது என்பதை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேலையில் நிர்ப்பந்தம் இருந்ததை நிலைநாட்டுதல்

'மாற்று வழிகளுக்கான விருப்பத்தேர்வை ஒரு நபரிடமிருந்து பறிக்கின்ற மற்றும் ஒரு குறிப்பிட்ட செயல்நடவடிக்கையை பின்பற்றுமாறு அவரை கட்டாயப்படுத்துகிற எந்தவொரு காரணியும், 'நிர்ப்பந்தம் ஃ பலவந்தம்" என்று முறையாக கருதப்படலாம் மற்றும் வேலை அல்லது சேவை என்பது அத்தகைய ~பலவந்தத்தின்| விளைவாக கட்டாயப்படுத்தப்படுமானால், அது ~கட்டாயஃநிர்ப்பந்த பணி| எனப்படும்.

கொத்தடிமை தொழில்முறை அமைப்பு என்பது, கடன் வழங்கிய நபரோடு கடன் பெற்ற நபர் ஒரு ஒப்பந்தத்தில் நுழைகிற அல்லது நுழைந்திருக்கிற அல்லது நுழைந்திருப்பதாக உத்தேசிக்கப்படக்கூடிய நிர்ப்பந்தப்படுத்துகிற அல்லது பகுதியளவு நிர்ப்பந்தப்படுத்துகிற தொழில்முறை அமைப்பையே குறிப்பிடுகிறது என்று 1976ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை அமைப்பு ஒழிப்பு சட்டத்தின் பிரிவு 2 (ப) கூறுகிறது. இந்த நிர்ப்பந்தத்தில் உத்தேசம் என்ற வார்த்தையானது உச்சநீதிமன்றத்தால் மிக விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. 'சமூக நல வாழ்வுக்கான இச்சட்டத்தின் பலன்களை பெறுவதற்காக ஒரு கொத்தடிமை தொழிலாளர், சாட்சியத்தை பதிவுசெய்வதற்கான வழக்கமான செயல்முறையைக் கொண்ட ஒரு முறையான விசாரணை செய்முறை வழியாகவே சென்றாகவேண்டும் என்று வலியுறுத்துவது குரூரமான செயலாகும்," என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. அவரது ஏழ்மை, படிப்பறிவின்மை மற்றும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைமை ஆகியவற்றின் காரணமாக சட்ட செய்முறையின் வளைந்து கொடுக்கா தன்மை மற்றும் முறைமைக்கு ஒரு கொத்தடிமை தொழிலாளரால் ஈடுகொடுத்து இருக்க இயலாது என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம் என்பதால் இது மொத்தத்தில் ஒரு பயனற்ற செய்முறையாக இருக்கும் மற்றும் அத்தகைய செயல்முறையானது இதில் பின்பற்றப்பட வேண்டும் என்பது அவசியமாக இருக்குமானால், சட்டங்களின் தொகுப்பு புத்தகத்திலிருந்தே இச்சட்டத்தை மாநில அரசு முழுமையாக நீக்கிவிடலாம். கொத்தடிமை தொழிலாளர்களில் அநேகர், பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் அல்லது பிற பின்தங்கிய வகுப்புகளின் உறுப்பினர்கள் என்பது புள்ளிவிவர அடிப்படையில் இப்போது நிலைநாட்டப்பட்டிருக்கிறது மற்றும் பணி வழங்குநரிடமிருந்து ஏதாவது முன்தொகை அல்லது பிற பொருளாதார பலனை அவர் பெற்றிருந்தாலொழிய உரிய ஊதியம் இல்லாமலோ அல்லது பெயரளவுக்கு மிகக்குறைந்த ஊதியத்திற்காகவோ அத்தகைய முன்பணத்தை அல்லது பெற்ற பிற பொருளாதார பலனை திரும்பத் தரவில்லை என்ற காரணத்தின் பேரில் பணி வழங்குநருக்கு அவர் வேலை செய்ய வேண்டும் என கோரப்படுமானால் அல்லது வேலை வாய்ப்பை கண்டறியும் அவரது சுதந்திரம் பறிக்கப்படுமானால் அல்லது அவர் விரும்புகிற இடத்திற்கு சுதந்திரமாக சென்றுவருகின்ற உரிமை பறிக்கப்படுமானால், நிர்ப்பந்தத்தின் கீழ் வேலை செய்யுமாறு அவசியப்படுகிற ஒரு நிலையில் ஒரு தொழிலாளர் வைக்கப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இருக்காது என்பதை மானுட விவகாரங்களின் வழக்கமான செயல்முறை காட்டும் மற்றும் அது குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே ஒரு தொழிலாளர், கட்டாயப்பணியை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்று எப்போதெல்லாம் காட்டப்படுகிறதோ, அவரால் பெறப்பட்ட ஒரு முன்பணம் அல்லது பிற பொருளாதார பலனுக்கு ஈடாக அவ்வாறு செய்யுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்ற யூகத்தை ஃ அனுமானத்தை நீதிமன்றம் எழுப்பும் மற்றும் ஆகவே அவர் ஒரு கொத்தடிமை தொழிலாளர் என்று கருதும். இந்த அனுமானமானது, பணி வழங்குநரால் அல்லது மாநில அரசு விரும்புமானால், அதனால் மறுக்கப்படவோஃநிராகரிக்கப்படவோ செய்யலாம்; ஆனால், இந்த அனுமானத்தை எதிர்த்து வாதிடுவதற்கு போதுமான ஆதாரச்சான்றுகள் வைக்கப்படும் வரை, அந்த தொழிலாளர், சட்ட விதிகளின் பலனை பெறுவதற்கு உரித்தான ஒரு கொத்தடிமை தொழிலாளரே என்ற அடிப்படையில் நீதிமன்றம் தனது பணியினை மேற்கொண்டு செய்யவேண்டும். குறிப்பிட்ட இத்தொழிலாளர்கள் கட்டாயத்தின்பேரில் வேலையை செய்துவந்தாலும்கூட, அவர்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் என்பதை எதிர்தரப்புகள் வழக்காடுகிற நீதி பரிபாலன விதிகளின்படி மேற்கொள்ளப்படுகிற உரிய சட்டப்பூர்வ செயல்நடவடிக்கைகளில் அவர்கள் நிரூபித்தாலொழிய மாநில அரசானது அவர்களுக்கு என்று எந்த கடமைப்பொறுப்பினையும் கொண்டிருக்காது என்று வாதத்தை முன்வைத்து, கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்கு, அவர்களுக்கு விடுவிப்பதற்கு மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான தனது கடமைப்பொறுப்பை மறுக்க மாநில அரசு அனுமதிக்கப்படக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் பெறுவதே கட்டாயப்பணி அல்லது நிர்ப்பந்தம் என்று உச்சநீதிமன்றம் இது குறித்து மேலும் விளக்குகிறது. ஆகவே, ஒரு நபர் மற்றொரு நபருக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் பெற்று பணி அல்லது சேவையை வழங்குவாரென்றால் ஏதாவதொரு நிர்ப்பந்த காரணங்களின்பேரில் அவர் செயல்படுகிறார் மற்றும் சட்டத்தின்கீழ் பெறுவதற்கு அவருக்கு உரிமைத்தகுதி உள்ளதற்கும் குறைவாக அவருக்கு ஊதியம் தரப்பட்டாலும் வேலை செய்யுமாறு அவரை இயக்குகின்ற நிர்ப்பந்தம் இருக்கிறது என்றே நியாயமாக அனுமானிக்கப்பட வேண்டும். பிரிவு 23 'கட்டாய தொழில்முறையை" தடைசெய்கிறது. அதாவது, ஒரு பணி அல்லது சேவையை வழங்குமாறு ஒரு நபர் நிர்ப்பந்திக்கப்படுவது மற்றும் அத்தகைய பணி அல்லது சேவையை செய்ய வைக்கிற ~நிர்ப்பந்தம்| என்பது பல வழிகளில் உருவாகக்கூடும். ஒரு நபரை மற்றொரு நபருக்கு பணி அல்லது சேவையை வழங்குமாறு கட்டாயப்படுத்துகிற உடல்சார்ந்த பலவந்தப்படுத்தலாக அது இருக்கலாம் அல்லது பணி அல்லது சேவையை வழங்க பணியாளர் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்ற ஒரு சட்ட விதியை சுட்டிக்காட்டி நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்படலாம் அல்லது பசி மற்றும் ஏழ்மை, வசதியின்மை மற்றும் ஆதரவின்மை என்ற காரணங்களினால் உருவாகக்கூடிய நிர்ப்பந்தமாகவும் அது இருக்கலாம். மாற்று வழிமுறைகளுக்கான விருப்பத்தேர்வு வாய்ப்பை ஒரு நபரிடமிருந்து பறிக்கிற மற்றும் ஒரு குறிப்பிட்ட செயல்நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிற எந்தவொரு காரணியும் ஃ அம்சமும், ~நிர்ப்பந்தம்| என முறையாக கருதப்படலாம் மற்றும் அத்தகைய ~நிர்ப்பந்தத்தின்| விளைவாக பணி அல்லது சேவை கட்டாயப்படுத்தப்படுமானால் ~கட்டாய ஃ நிர்ப்பந்த பணி| என்பதாக அது அமையும்.

பசி அல்லது பட்டினியால் ஒரு நபர் அவதியுறும்போது நோய்களை எதிர்த்துப்போரிட அல்லது அவரது மனைவி அல்லது குழந்தைகளுக்கு உணவளிக்க அல்லது அவரது நிர்வாணத்தை மறைக்கக்கூட ஆடைகள் வாங்குவதற்கு எந்த பணமோ, ஆதார வளமோ இல்லாதபோது, அத்தகைய பயங்கரமான வறுமை அவரது நம்பிக்கை என்ற முதுகெலும்பை நொறுக்கி, எதுவும் கிடைக்காத உதவியில்லாத நிலைக்கும், பெரும் துயருக்கும் ஆளாக்குமானால், மற்றும் அவரது ஏழ்மையின் கொடுமையிலிருந்து தப்பிக்க வேறு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காத நேரத்தில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே அவருக்கு ஊதியம் தரப்படும் என்று கூறப்பட்டாலும்கூட தனக்கு கிடைக்கிற எந்தவொரு வேலையையும் ஏற்று செய்வதைத் தவிர அவருக்கு வேறு விருப்பத்தேர்வு இருக்காது. தனக்கு பணி வழங்குபவரிடம் ஊதியம் பற்றி பேரம் பேசும் நிலையில் அவர் இருக்கமாட்டார்; அவருக்கு கொடுப்பதாக கூறப்படும் தொகையை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு செய்யும்போது, மாற்று வழிமுறைகளிலிருந்து ஒன்றை தேர்வுசெய்கின்ற வாய்ப்புள்ள ஒரு சுதந்திரமான நபராக அவர் செயல்படமாட்டார்; ஆனால், பொருளாதார சூழ்நிலைகளின் கட்டாயத்தின்கீழ் அவரால் வழங்கப்படும் பணி அல்லது சேவையானது, ~கட்டாய பணி| என தெளிவாக அறியப்படும். குறிப்பாக, அனைத்து நபர்களும், பணி செய்வதற்கான, கல்வி பெறுவதற்கான மற்றும் வாழ்வாதாரத்திற்கான போதுமான வழிமுறைகளை பெறுவதற்கான உரிமையை அனைவரும் கொண்டிருக்கக்கூடிய சமூக-பொருளாதார நீதி நிலவுகிற ஒரு புதிய சோசலிஸ்ட் குடியரசை உருவாக்குவதற்கான வாக்குறுதியை தேசிய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை ஆவணம் வழங்கியிருக்கும்போது ~நிர்ப்பந்திக்கப்படுகிற| என்ற வார்த்தை உடல்சார்ந்த அல்லது சட்ட ரீதியான நிர்ப்பந்தம் என்பதற்குள் மட்டும் ஒரு குறுகிய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வழிமுறையில் ஏன் பொருள் வரையறை செய்யப்படவேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஒரு புதிய சமூக பொருளாதார கட்டமைப்பை கொண்டுவருவதற்காக மிகவும் போற்றத்தக்க ஆவணங்களுள் ஒன்றை வரலாற்றில் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் நமக்கு தந்திருக்கின்றனர்; நமக்காக அவர்கள் உருவாக்கியிருக்கிற அரசியலமைப்பு சட்டமானது, ஒரு சமூக குறிக்கோளையும் மற்றும் ஒரு பொருளாதார செயல்நடவடிக்கையையும் கொண்டிருக்கிறது; ஆகவே, அரசியலமைப்பு சட்டத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தை அல்லது சொற்றொடரும், அரசியலமைப்பு சட்டத்தின் சமூக-பொருளாதார குறிக்கோளை முன்னெடுத்து செல்லக்கூடிய வகையில் பொருள் கொள்ளப்படவேண்டும்.

உடல்சார் நிர்ப்பந்தம் அல்லது சட்ட விதியின்கீழ் நிர்ப்பந்தம் என்பதைவிட ஒரு குறிப்பிட்ட செயல்நடவடிக்கையை நோக்கி ஒரு நபரை இயக்குகிறவாறு மிக அதிகமான அழுத்தத்தையும் கட்டாயத்தையும் பொருளாதார சூழ்நிலையானது முதலாளித்துவ சமூகத்தில் பிரயோகிக்கிறது என்பது மிக அதிகமாக அடிக்கடி நிகழ்கிறது என்பதே உண்மை. ஆகவே, ~நிர்ப்பந்தம்ஃகட்டாயம்| என்ற வார்த்தையானது, உடல்சார்ந்த அல்லது சட்டவிதி நிர்ப்பந்தம் சார்ந்ததாக மட்டும் பொருள்கொள்ளப்படாமல் பொருளாதார சூழ்நிலையின் கட்டாயத்தால் உருவாகிற நிர்ப்பந்தத்தையும் உள்ளடக்கியதாகவே கருதப்பட வேண்டும். தேவைகள் இருக்கிற ஒரு நபருக்கு வேறு மாற்று வழிகளுக்கான வாய்ப்பு இல்லாதபோது, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகவே வழங்குகிற வேலை அல்லது சேவைக்கு கூலி கிடைக்கப்பெற்றாலும்கூட அவ்வேலையைச் செய்யுமாறு அது நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. 'ஒரு நபர் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுவதற்கு பதிலீடாக மற்றொருவருக்கு வேலை அல்லது சேவையை வழங்குவாரானால், சட்டத்தின்கீழ் பெறுவதற்கு அவருக்கு உரிமைத்தகுதி உள்ளதை அவர் பெறுகிறார் என்பதால் அவரால் வழங்கப்பட்ட பணி அல்லது சேவை என்பது, கட்டாயஃநிர்ப்பந்தத்தின் கீழ் செய்யப்படும் பணி" என்று கூறுவதற்கு சாத்தியமில்லை. மேலும் உச்சநீதிமன்றம், 'ஒரு நபர் பணி அல்லது சேவையை செய்வதற்காக மற்றொருவரிடம் ஒப்பந்தம் செய்துகொண்டாலும் மற்றும் அத்தகைய சேவையானது வாங்கிய கடனை அடைக்கின்ற வடிவத்தில் அல்லது ஊதியமாக இருக்கின்ற நேர்வில், அத்தகைய பணியை தொடர்ந்து செய்வதற்கு சட்டவிதியின் கட்டாயத்தால் அல்லது வேறு வழிமுறையால் நிர்ப்பந்திக்கப்பட முடியாது; ஏனெனில், அது சட்டவிதி 23-ன்கீழ் கட்டாயஃநிர்ப்பந்தத்தின்கீழ் பணி என்பதாக அமையும்" என்று கூறியிருக்கிறது. ஒரு பணி அல்லது சேவையை வழங்குவதற்கு பொறுப்புறுதி கொண்டிருக்கிற ஒரு நபரால் சுய விருப்பத்தின்பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் அது தோற்றத்தை கொண்டிருந்தாலும்கூட கட்டாய ஃ நிர்ப்பந்தத்தின்கீழ் பணியின் ஒவ்வொரு வடிவத்தையும் இந்த சட்டவிதி குற்றச்செயலாக ஆக்குகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், அவரால் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கின்றபோதிலும்கூட அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லையெனில் பணி அல்லது சேவையை மற்றொருவருக்கு வழங்குவதற்கு ஒரு நபரை கட்டாயப்படுத்துவது என்பது மனித கண்ணியத்திற்குஃமாண்புக்கு எதிரான செயலாக இருக்கிறது. தனிநபரின் கண்ணியத்தையும் மற்றும் மனிதர்களின் சுய மதிப்பையும் மதிக்கின்ற சுதந்திரமான, ஜனநாயக இந்தியாவில் விருப்பமில்லாத அடிமைப்பணியோ அல்லது நிலச்சுவான்தார்களுக்கு காலம் காலமாக அடிமைபோல் பணியாற்றுவதோ இருக்கக்கூடாது.

இதற்கும் மேலாக, வறுமையும், வேலை வாய்ப்பின்மையும் மிக அதிகமாக இருக்கிற, பேரம் பேசுவதற்கான ஆற்றலில் சமத்துவம் இல்லாத இந்தியா போன்ற ஒரு நாட்டில் பணி ஃ சேவைக்கான ஒரு ஒப்பந்தமானது சுய விருப்பத்தின்பேரில் இருப்பதாக வெளியில் தோன்றக்கூடும். ஆனால், எதார்த்தத்தில் அது சுய விருப்பமில்லாததாக இருக்கும். ஏனெனில், ஒரு ஒப்பந்தத்தில் நுழையும்போது, அப்பணியாளர், பொருளாதார ரீதியாக வலுவற்ற, திறனில்லாத நிலையில் இருப்பதன் காரணமாக சக்தி வாய்ந்த பணி வழங்குநரால் அதிகார தொனியில் குறிப்பிடப்படுகிற சுரண்டல்தனமிக்க கட்டுப்பாடுகளுக்கும், வரையறைகளுக்கும் பணிந்துபோவதைத் தவிர அல்லது பட்டினி கிடந்து சாவதைத் தவிர வேறு விருப்பத்தேர்வு அவருக்கு இருந்திருக்காது. இத்தகைய நேர்வில் ஒப்பந்தத்தின் வரையறைகளுக்கு பணியாளர் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று கூறுவதும் மற்றும் அவ்வாறு செய்ய அவருக்கு விருப்பம் இல்லையென்றாலும்கூட பணி வழங்குநருக்கு வேலை செய்யுமாறு நிர்ப்பந்திப்பதும், நீதியை கேலிக்கு உட்படுத்துவதாகவே அமையும். ஏற்கனவே அந்த பணியாளர் பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் அவதியுறுகின்றபோது இத்தகைய செயல் அந்த சமத்துவமின்மையையும் மற்றும் அநீதியையும் இன்னும் மோசமானதாக ஆக்கி விடும். பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த பணி வழங்குநரால் ஏழ்மையில் வாடுகிற, வசதிவாய்ப்பு இல்லாத அப்பாவியான ஏழை பணியாளரை தவறாக பயன்படுத்தி சுரண்டுவதற்கு சட்ட அதிகாரத்தை பணி வழங்குநருக்கு வழங்குவதாகவே அமைந்துவிடும். ஆகவே, 'எந்தவொரு நபரும் அவரது விருப்பத்திற்கு எதிராக, பணிக்கான ஒரு ஒப்பந்தத்தின்கீழ் அது இருக்கின்றபோதிலும்கூட பணியை அல்லது சேவையை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்படக்கூடாது," என்று சட்டவிதி 23 கூறுகிறது.

கண்காணிப்பு குழுவின் பங்கும், ஆற்ற வேண்டிய பணியும்

'சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றவர்களாக அறிவிக்கை செய்யப்பட்டிருக்கும் அதிகாரிகள் பணியில் கண்காணிப்பு குழு குறுக்கே வராது."

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டத்தின் பிரிவு 10, 11 மற்றும் 12, கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் 1976ஐ செயல்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் குறித்து விவாதிக்கிறது மற்றும் பிரிவு 13 கண்காணிப்பு குழு குறித்து பேசுகிறது. கொத்தடிமை தொழில்முறையை அடையாளம் காண்பதில் கண்காணிப்பு கமிட்டிக்கு எந்த பங்கோ அல்லது ஆற்றவேண்டிய பணியோ இல்லை என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அந்த சட்டவிதிக்கான விளக்கத்தை வழங்கியிருக்கிறது. 'சட்டத்தின் பிரிவு 10ன்கீழ், அந்த ஆணையை செயல்படுத்துவதற்கென்று அதிகாரிகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் கண்காணிப்பு குழுக்கள் நிறுவப்பட்டிருந்தாலும்கூட சட்டத்தின் பிரிவு 14ன்கீழ் அவைகளின் செயல்பாடுகள் தெளிவாக குறித்துரைக்கப்பட்டிருக்கின்றன; அதன்படி, இச்சட்டத்தை கையாள்வதற்கு மாவட்ட ஆட்சியர் ஃ மாஜிஸ்ட்ரேட் மற்றும் அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் பிற நபர்களை உள்ளடக்கிய சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றவர்களாக அறிவிக்கை செய்யப்பட்டிருக்கும் அதிகாரிகளின் செயல்பாட்டுக்கு கண்காணிப்பு குழுவின் பணியானது குறுக்கே வராது" என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அடையாளம் காண்பதில் ஈடுபடுவதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு

'கொத்தடிமை தொழில்முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்காக அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய சமூக செயல்பாட்டு குழுக்கள் மற்றும் தன்னார்வ முகமைகள், அநேக நேரங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் வேலை செய்யுமாறு அவசியப்படுகிற இரகசிய செயல்பாட்டிற்குள் ஊடுருவ திறன் கொண்டவர்களாக இருப்பதால் மற்றும் கொத்தடிமை தொழில்முறை இருந்து வருவதை கண்டறியவும் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களை விடுவிக்க உதவவும் முடியும்".

கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிப்பது தொடர்பாக, அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடு அவசியப்படுவதை மாண்புமிகு உச்சநீதிமன்றம் குறிப்பாக வலியுறுத்துகிறது. உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது: 'ஒரு நபர் அல்லது பல நபர்கள் அடங்கிய ஒரு குழுவினரின் அடிப்படை உரிமையானது மீறப்படுகின்றபோது, அவர்களது வறுமை அல்லது திறனின்மை அல்லது சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ நலிந்த, பாதகமான நிலைமையின் காரணமாக நீதிமன்றத்தில் நீதி கோரும் வாய்ப்பு பயன்படுத்த இயலாதவர்களாக இருக்கும் நேர்வில் இந்த தர்க்க அறிவு அல்லது நியாயப்படுத்தல் தகர்ந்து போகும். ஆகவே, அத்தகைய நேர்வில் அத்தகைய நபரின் அல்லது பல நபர்கள் அடங்கிய குழுவினரின் அடிப்படை உரிமை நீதிமன்றத்தில் அமல்படுத்தப்படுவதற்காக அத்தகைய நபரின் அல்லது பல உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரின் நலனை காப்பதற்காக நேர்மையாக செயல்படுகின்ற பொதுமக்களில் எந்தவொரு நபரையும் நீதிமன்றம் அனுமதிக்கலாம் மற்றும் அனுமதிக்க வேண்டும்". அது, இது குறித்து மேலும் பேசுகையில், 'மிக முக்கியமாக, அரசியல் சார்பில்லாத சமூக நடவடிக்கை குழுக்கள் மற்றும் தன்னார்வ முகமைகள் மற்றும் குறிப்பாக பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புமுறை சாராத பிற தொழிலாளர்களுக்காக நேர்மையான மற்றும் திறன்மிக்க சேவையை வழங்கிய வரலாற்றை கொண்டிருக்கிற அமைப்புகள், கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காண்கிற மற்றும் விடுவிக்கின்ற பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்; கொத்தடிமை தொழில்முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுக்காக அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய சமூக செயல்பாட்டு குழுக்கள் மற்றும் தன்னார்வ முகமைகள், அநேக நேரங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் வேலை செய்யுமாறு அவசியப்படுகிற இரகசிய செயல்பாட்டிற்குள் ஊடுருவ திறன் கொண்டவர்களாக இருப்பதால் மற்றும் கொத்தடிமை தொழில்முறை இருந்து வருவதை கண்டறியவும் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களை விடுவிக்க உதவவும் முடியும்," என்பதனால் இத்தகைய செயல்பாட்டு குழுக்கள் மற்றும் தன்னார்வ முகமைகள் வழியாக மட்டுமே கொத்தடிமை தொழில்முறை அமைப்பை ஒழிப்பது சாத்தியம் என்பதே இதற்கு காரணம்.

1976-ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டத்தின் விதிகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக அரசியல் சார்பில்லாத சமூக செயல்பாட்டு குழுக்கள் மற்றும் தன்னார்வ முகமைகளின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கண்காணிப்பு குழுக்களுக்கு மற்றும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலை வழங்கியது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு தீர்ப்பில், 'பாதிக்கப்பட்ட நபர் என்பதன் பொருள்வரையறையானது ஒரு இயற்கையான பாதுகாவலராக அல்லது பிற பாதுகாவலராக அல்லது புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு நபரின் பாதுகாவலராக பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு நபரை அல்லது பாதிக்கப்படுகின்ற நபர் மிக ஏழையாக, கல்வியறிவில்லாதவராக மற்றும் தானே சொந்தமாக வழக்கு தொடர இயலாமல் பிறரின் ஆதரவு அவசியப்படுகிற அளவுக்கு மற்றவர்களை சார்ந்திருக்கின்ற நிலையில் ஒரு மூன்றாம் தரப்பு நபரையும் குறிக்கும்," என்று குறிப்பிட்டிருந்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இது குறித்து மேலும் பேசுகிறபோது, 'பாதிக்கப்பட்ட நபர் என்ற வார்த்தையானது பாதிக்கப்படுபவரின் பிரதிநிதியாக செயல்படுகிற ஒரு சட்டப்படி ஒழுங்குமுறையான மற்றும் நேர்மையான நபரையும் உள்ளடக்கும்" என்று குறிப்பிடுகிறது.

மேற் குறிப்பிடப்பட்ட அனைத்து விளக்கங்களும், 1976ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டத்தின்படி கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் காணும் செயல்முறையில் மாவட்ட ஆட்சியர் ஃ மாஜிஸ்ட்ரேட் ஈடுபடும்போது கவனத்தில் கொண்டு பின்பற்றவேண்டிய முக்கியமான கோட்பாடுகளாகும்.

மேற்கோள் ஆதாரங்கள்:-

  1. Bonded Labour System (Abolition) Act 1976
  2. Manu/SC/0051/1983 Bandhua Mukti Morcha Vs Union of India (Supreme Court of India)
  3. Manu/SC/0038/1982 People’s Union for Democratic Rights and Ors Vs Union of India and Ors (Supreme Court of India)
  4. Manu/TN/0324/2012 M. Venkatachalam Vs The District collector and Ors

(Madras High Court)

  1. 2010 (2) MWN (Cr.)273 Sathyavani Ponrani Vs. Samuel Raj and Ors (Madras High Court)
  2. Letter No.7824/ADW-6(1)/2012-1 Dated 12-06-2012 (Tamilnadu Government)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com