உலகம் என் சமூகத்தை மதிக்க வேண்டும், அதற்காக நான் படிக்கிறேன்! உரக்கச் சொல்லும் ‘குறத்தி மகள்’ கெளசல்யா!

என் சமூகம் முன்னேற, இந்த உலகத்தின் முன் மதிப்புடன் தலைநிமிர நான் மட்டும் படித்தால் போதாது, என் சமூகத்தைச் சேர்ந்த மற்ற பிள்ளைகளும் படிக்க முன் வர வேண்டும். அவர்களும் சாதிக்க வேண்டும்.
உலகம் என் சமூகத்தை மதிக்க வேண்டும், அதற்காக நான் படிக்கிறேன்! உரக்கச் சொல்லும் ‘குறத்தி மகள்’ கெளசல்யா!

கெளசல்யா என்ற இந்த சகோதரிக்கு வந்த ஞானத்தை போன்ற ஏக்கம் அந்தக்காலத்திலும் குறவர் சமுதாயப் பெண்களிடம் இருந்திருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான் ‘குறத்தி மகன்’. அதில் குறத்தியாக நடித்த கே.ஆர் விஜயாவை அவரது கணவரும் குறவர் சமுதாயத் தலைவருமான ஜெமினி கணேசன், ஒரு நாளிரவு தங்களது கூட்டத்தை விட்டு பாசிமணி, ஊசிமணி விற்கச் சென்ற மனைவி தாமதமாக வந்தார் என்று காரணம் காட்டி அவரை கூட்டத்திலிருந்தே விலக்கி வைத்து கொடிய தண்டனை அளித்து விடுவார். தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கியும் கணவர் தன்னைப் புரிந்து கொள்ளாததற்கு காரணம் ஜாதி புத்தியே எனக் கூறி வெகுண்ட கே ஆர் விஜயா, தன்னை விலக்கி வைத்த சமூகத்தில் தன் மகன் வளர்ந்தால், அவனும் அவர்களைப் போல கொக்கு, குருவி சுட்டுக் கொண்டு, மூடநம்பிக்கை, ஜாதியின் பெயரிலான புரியாத முரட்டுத்தனமான கட்டுப்பாடுகளுடனான மனப்பான்மையோடு தான் வளர்வான். அப்படி ஆகக் கூடாது. அவன் படிக்க வேண்டும் என்று கணவரிடம் சண்டையிட்டு குழந்தையை அங்கிருந்து பிரித்து அழைத்து வந்து படித்த தம்பதியினரிடம் விட்டு வளர்க்கச் சொல்லி பணிவுடன் கேட்டுக் கொள்வார். இப்படிச் செல்லும் அந்த ‘குறத்தி மகன்’ திரைப்படக் கதை. 

அந்தத் திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் படித்துப் பட்டம் பெற்ற தங்கள் மகனைக் கண்டு மிகுந்த பெருமிதத்துடன் கணவனும், மனைவியும் இணைவதாகக் கதை. படம் வெளிவந்து அரைநூற்றாண்டுகளாகின்றன, ஆனாலும் இன்று வரை அந்த சமூகத்தின் கதை அப்படியே தானிருக்கிறது என்பதற்கு சகோதரி கெளசல்யாவுடனான உரையாடல் உணர்த்துகிறது. அந்தப் படத்தைப் பார்த்து குறவர் சமூகம் திருந்தியிருந்தால் இன்று கணிசமானோர் பட்டதாரிகளாகி அவர்களுக்கான உரிமைகளையும், மரியாதையையும், சமூக அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருப்பார்களே. அப்படியான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.

இன்றும் பேருந்து நிலையத்திலோ, ரயில் நிலையங்களிலோ அல்லது இன்னபிற பொதுவிடங்களிலோ குறவர் சமூக மக்களைக் கண்டால் பொது சமூகத்தின் மனநிலை அவர்களை இந்தச் சமுதாயத்தின் கடைநிலை மனிதர்களாக மட்டம் தட்டிப் பார்க்கவே முனைகிறது. காரணம் அவர்களது அழுக்கான ஆடைகள், சுத்தம், சுகாதாரம் பற்றியெல்லாம் என்னவென்றே யோசித்தறியத் தெரியாத விட்டேற்றியான மனப்பான்மை, கல்வி கற்பதால் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் அனுகூலங்களை பற்றிய ஞானமே இல்லாத நிலை, பெண் பூப்படைந்ததுமே உடனே திருமணம் செய்து வைத்து விடத்துடிக்கும் அவசரக்குடுக்கைத் தனம். இன்னமும் மருத்துவமனைகளை நம்பாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மூட நம்பிக்கை இதெல்லாமும் தான் அந்த மக்களை பொது சமுதாயத்தின் கடைநிலையிலேயே வைத்திருக்கிறது.

‘அந்த நிலை மாற வேண்டும், என் சமூக மக்களுக்கு இன்றும் கல்வி கற்றால் அதன் பலன் என்ன என்று புரியவில்லை. அதனால் தான் இப்போதும் கூட குற சமுதாயம் தங்கள் பிள்ளைகளை அரசு தரும் இலவசக்கல்வியைப் பெறக்கூட அனுமதிக்காமல் தடுக்கிறது. அவர்களது ஒரே நோக்கம் இன்றும் கூட ஊசி மணி, பாசி மணி விற்று பணம் சம்பாதிப்பது ஒன்றே. பணம் கிடைக்குமென்பதற்காகத்தான் அவர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு கூட வெகு இளமையிலேயே, பெண் பூப்படைந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். பணம் தவிர இங்கு ஜாதிக் கட்டுப்பாடும் அதிகம். பெண்கள் ஜாதி மாறித் திருமணம் செய்தால் அவர்களை ஜாதியில் இருந்து விலக்கி வைக்கும் நிலை இன்றும் நீடிக்கிறது. அப்படியான அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்று தான் பெண்களை வயதுக்கு வந்த உடனே திருமணம் என்ற பெயரில் படுகுழியில் தள்ளி விடுகிறார்கள். திருமணத்திற்குப் பின் அந்தப் பெண்களின் மீதான பொறுப்பு பெற்றோர்களுக்கு இல்லாமலாகி விடுவதால், பாரம் குறைந்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். 

எங்களது ஜிப்ஸி சமூக மக்களும் கல்வியினால் கிடைக்கக் கூடிய அரிய பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருக்க மாட்டார்கள். அப்படியான மாற்றங்களைக் கொண்டு வரத்தான் நான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக ஆசைப்பட்டேன். சமூகம் அறக்கட்டளையிலிருந்து வந்து எங்கள் பிள்ளைகளை படிக்க அழைத்தார்கள். உங்கள் கல்விக்கு நாங்கள் உத்தரவாதம் தருகிறோம் என்று அழைத்தார்கள். அவர்களது நல்ல நோக்கத்தை உணர்ந்து நான் படிக்க சம்மதித்தேன். எட்டாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். அதுவரை எனக்கு, எங்களது ஜிப்ஸி மொழி தான் தெரியும். தமிழ் அவ்வளவாகத் தெரியாது. முதல்முறையாகப் பள்ளிக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து பாடங்களைக் கற்க முயன்ற போது எனக்கு அது மிகக் கடினமான வேலையாக இருந்தது. ஆனாலும், மன உறுதியுடன் கஷ்டப்பட்டு பாடங்களைப் புரிந்து கொண்டு படித்து 10 ஆம் வகுப்பில் 390 மதிப்பெண்களைப் பெற்றதே எனக்கு மிகப்பெரிய சாதனையாகி விட்டது. சமூகம் அமைப்பினர் நடத்தும் காப்பகத்தில் தங்கிக் கொண்டு, பெற்றோரிடம் சண்டையிட்டு, பிடிவாதமாக என் மூன்று தங்கைகளையும் என்னுடன் அழைத்துச் சென்று என்னுடன் தங்க வைத்துக் கொண்டு அவர்களையும் படிப்பதற்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன். என் தங்கைகளுக்கும் என்னைப் பார்த்து படிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. என்னைப் பார்த்து இன்று என் சமூகத்தில் என் வயதொத்த பிற பெண்பிள்ளைகளும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிக்க ஆசைப்படுகின்றனர்.

அவர்கள் தங்கள் பெற்றோரிடம், எங்களுக்குத் திருமணம் எல்லாம் வேண்டாம், நாங்களும் படிக்க வேண்டும். சுயமாக, மதிப்புடன் சம்பாதிக்க வேண்டும் என்று போராடி படிக்க வந்திருக்கின்றனர். இதுவே எங்கள் சமூகத்துப் பெண்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மனமாற்றம் தான். இப்போது நான் எனது செவிலியர் படிப்பில் மேற்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் பேராசிரியர் ஆகி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது தான் எனது ஒரே லட்சியம். அதை நான் நிச்சயம் சாதிப்பேன்.

அதுமட்டுமல்ல, என் சமூகம் முன்னேற, இந்த உலகத்தின் முன் மதிப்புடன் தலைநிமிர நான் மட்டும் படித்தால் போதாது, என் சமூகத்தைச் சேர்ந்த மற்ற பிள்ளைகளும் படிக்க முன் வர வேண்டும். அவர்களும் சாதிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் தொடர்ந்து செய்வேன். என்னால் முடிந்தவரை நான் அவர்களுக்கு உதவுவேன், கல்வி கற்க ஊக்குவிப்பேன் என்று புன்னகைக்கும் கெளசல்யா போன்றவர்களே இக்கால இளம்தலைமுறையினரின் யூத் ஐகான்கள். இவர்களைப் போன்றவர்களே இனி வரும் சமுதாயத்தினருக்கு வழிகாட்டிகளாக இருக்கத் தக்கவர்கள்.

இன்று கெளசல்யாவின் பெற்றோர் அவரை படிக்க வேண்டாம் என்று தடுத்த நிலை மாறி, கல்வியில் இவரது படிப்படியான முன்னேற்றங்களைக் கண்டு பெருமைப் படும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். பெற்றோரின் சந்தோஷத்தைக் கண்டு கெளசல்யாவுக்கு ஆரம்பத்தில் தான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்திருக்க கூடும். காரணம் அவரது நோக்கத்தில் அவர் வெற்றி கண்டு விட்டார். 

கெளசல்யாவிடம் பிறர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்... அவர் தான் முன்னேற வேண்டும் என்று மட்டும் கருதாமல் தன் சமூகம் மதிப்புக்குரிய இடத்துக்கு முன்னேற வேண்டும் என்று நினைத்தது தான். அதற்காக அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

ஹாட்ஸ் ஆஃப் டு யு கெளசல்யா!

நன்றி : நியூஸ் 7 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com