அதிகாரத் திமிரில் சாமானிய மக்களைக் கொசுக்களாகப் பாவிக்கும் உரிமையை இவர்களுக்கெல்லாம் யார் வழங்கியது?

நீங்கள் அவர்களை எதிர்க்க வேண்டும் என நினைத்தீர்களானால் உங்களது வேலையில் அல்லது நீங்கள் கோரி வந்த விண்ணப்பத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அதிகாரத் திமிரில் சாமானிய மக்களைக் கொசுக்களாகப் பாவிக்கும் உரிமையை இவர்களுக்கெல்லாம் யார் வழங்கியது?

வங்கிகள், ரேஷன் அலுவலகங்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு சாமானிய மக்கள் சென்றாக வேண்டிய சூழல் வரும்போது அணுகக் கூடிய மக்களின் பதவி, வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வசதியை முன்னிட்டு ஒவ்வொருவரும் ஒரு தராசால் அளக்கப்படுகிறார்கள். நாம் அவர்களை அணுகும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பதவியில் இருக்கும் மனிதர்களுக்கு நம்மைப் பற்றி ஒரு மாற்றுக்குறைவான அல்லது தாழ்வான எண்ணம் சிறிது உருவானாலே போதும் அப்படிப்பட்ட சாமானியர்களின் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் பேசக்கூடிய, செயல்படக்கூடிய அதிகாரிகள் இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள்.

நீங்கள் அவர்களை எதிர்க்க வேண்டும் என நினைத்தீர்களானால் உங்களது வேலையில் அல்லது நீங்கள் கோரி வந்த விண்ணப்பத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். எதுவரை? என்றால், அவர்கள் மனம் இரங்கும் வரை, அல்லது அவர்களாக போய்த் தொலையட்டும் என்று சலித்துப் போய் சமாதானம் ஆகும் வரை. சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்த்த கையூட்டை நீங்கள் அளிக்கும் வரை. சில இடங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் பணிவு உங்களது உடல்மொழியில் தெரியும் வரை. உண்மையில் மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்துமே ஒருவகையில் சேவைப்பணிகளே! மக்களின் தேவைகளுக்காகத் தான் இவர்களை அரசு தேர்ந்தெடுத்து அந்தந்த பதவிகளில் அமர வைத்திருக்கிறது. அங்கே அமர்ந்து கொண்டு பெரும்பாலானோர் கெத்துக் காட்டுகிறோம் என்ற போர்வையில் செய்யும் அட்டூழியங்கள் அதிகம். 

ஒருமுறை சினேகிதி ஒருவரது குடும்பம் சென்னையில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்தது. இதனால், சென்னையின் பிரபல பள்ளிகளில் பயின்று கொண்டிருந்த அவரது இரு மகன்களுக்கும் டி.சி வாங்க வேண்டிய நிலை. பள்ளியில் அதற்காக அவர்கள் சொன்ன கெடுவில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட தினத்தன்று பள்ளி அலுவலகத்துக்கு வந்து டி.சி வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது. சினேகிதியால் அந்தத் தேதியில் செல்லமுடியவில்லை. மறுநாள் வரலாமா? என நேரம் கேட்டு அறிந்து கொள்ள பள்ளிக்குத் தொலைபேச முயற்சித்திருக்கிறார். எந்தப் பள்ளியில் உடனே தொலைபேசி லைன் கிடைக்கிறது. இவர் முயன்றபோதெல்லாம் பிஸி என்றே ஒலித்திருக்கிறது. சரி நாளை நேரில் சென்றே பேசிக் கொள்ளலாம் என சலித்துப் போய் தனது தொலைபேசும் முயற்சியைக் கைவிட்டு விட்டார்.

மறுநாள் இவர் பள்ளிக்குச் சென்ற போது, முதலில் பள்ளியின் துணை முதல்வரரைச் சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள். உடனே அல்ல, ஏறக்குறைய 2 மணி நேரக் காத்திருப்பின் பின் அந்த அம்மணி இவரை உள்ளே அழைத்திருக்கிறார். உள்ளே சென்றவருக்கு செம டோஸ். சொன்னால், சொன்ன நேரத்தில் வந்தால் தான் டி.சி தர முடியும். நீங்கள் இப்போது வந்து உங்கள் இஷ்டத்துக்கு டி.சி கேட்டால் எங்களது மற்ற வேலைகள் எல்லாம் தடை படுகின்றன. ஒரு பள்ளியின் அலுவலகப் பணியாளர்களுக்கு டி.சி வழங்குவதைத் தவிர வேறு வேலை இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்று டி.சி தர முடியாது. மறுபடியும் அடுத்த வாரம் வந்து பாருங்கள். முதல்வர் இன்று விடுமுறை என்பதால் இன்று டி.சி வழங்க முடியாது என்று முகத்திலடித்தாற் போல் கூறி இருக்கிறார். சினேகிதிக்கு தன்நிலை விளக்கம் அளிக்கவோ, பேசவோ வாய்ப்பே தரவில்லையாம் அந்த அம்மணி. பள்ளியில் டி.சி வாங்க வரச்சொல்லி அவர்கள் குறிப்பிட்ட தினத்தன்று மாமானார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த காரணத்தால் அவருடன் மருத்துவமனை சென்று திரும்பியதில் தாமதமான காரணத்தை எல்லாம் விளக்க இவருக்கு வாய்ப்பே தரப்படவில்லை. பிறகென்ன டி.சி வாங்காமலே நொந்து போய் வீடு திரும்பிய சினேகிதி அறிந்தவர்களிடமும், நட்புக்களிடையிலேயும் ஒரு பாட்டம் இந்தக் கதையைச் சொல்லிப் புலம்பித் தீர்த்தார்.

அப்புறமும் ஓரிரு முறை அலைய விட்டுப் பிறகு தான் அவரால் டி.சி வாங்க முடிந்திருக்கிறது. சென்னை மட்டுமல்ல இன்றும் தமிழகத்தில் லட்சங்களில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பல்வேறு பிரபல பள்ளிகளில் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கிடையிலான உறவு இப்படித்தான் இருக்கிறது. 

ரேஷன் அலுவலகங்களில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? குடும்ப உறுப்பினர்கள் பெயர் சேர்க்க வேண்டுமா? நீக்க வேண்டுமா? இடம் மாறுதல் காரணமாக ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா? எந்த வேலையாக இருந்தாலும் சரி ரேஷன் அலுவலகம் சம்மந்தப்பட்ட வேலை எனில் அது சுமுகமாக முடியும் வரை நிச்சயம் உங்களது உயிரை வாங்கி பெரும் மன உளைச்சலுக்கு உட்படுத்தக் கூடியவையாகவே இன்றளவும் நீடிக்கிறது. திருமணமான புதிதில் கணவரது சொந்த ஊர் முகவரியில் எங்களுக்கு ரேஷன் கார்டு இருந்தது. அங்கிருந்து எங்களது பெயர்களை நீக்கிச் சான்றிதழ் பெற்று சென்னை வந்ததும் இங்கிருந்த முகவரிக்கு புது ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்திருந்தோம். அவர்கள் கேட்ட சான்றிதழ்கள் மற்றும் தகவல்களை சமர்பித்து விட்டு புது ரேஷன் கார்டு இன்று வரும், நாளை வரும் எனக் காத்திருக்கத் தொடங்கினோம். இடையிடையே ரேஷன் அலுவலகத்துக்கு நேரில் சென்றும் விசாரிக்கத் தவறவில்லை. ஒரு பயனும் இல்லை. நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. விண்ணப்பித்து சரியாக 10 மாதங்கள் கழித்து அவர்களாகத் தராமல் நாங்களே போய் அங்கே மேலதிகாரியின் இன்ஸ்ஃபெக்‌ஷன் நடந்து கொண்டிருக்கையில் எங்களது குறையை உரக்கக் கத்திச் சொல்லி அங்கிருந்தோர் அத்தனை பேரின் கவனத்தையும் கலைத்த பிறகே எங்களுக்கென நியமிக்கப்பட்ட ரேஷன் அலுவலக அதிகாரியான பெண்மணி புது கார்டை எடுத்து நீட்டினார். எதற்காக இத்தனை நாட்கள் தராமல் இழுத்தடித்தார்கள் என்பது மிகப்பெரிய புதிராக இருந்தது எனக்கு. இவர்களது தேவை தான் என்ன? ஓரளவு படித்தவர்களான எங்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத பாமர மக்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள். என்று யோசிக்கையில் வெறுப்பாக இருந்தது.

அங்கே இப்படி என்றால், வங்கி நடைமுறைகள் பற்றித் தனியாக ஒரு மெகா நாவலே எழுதலாம். வங்கியில் புதிதாக கணக்குத் தொடங்க வேண்டும் என்றால் இப்போதெல்லாம் தனியார் வங்கிகளில் ராஜமரியாதையோடு கணக்குத் துவக்கிக் கொடுத்து விடுகிறார்கள் அங்குள்ள அலுவலர்கள். ஆனால், எஸ்பிஐ போன்ற அரசு வங்கிகளை புதுக் கணக்குத் துவக்க அதுவும் அலுவலகத்தின் சார்பில் புதுக்கணக்குத் தொடங்க விண்ணப்பித்துப் பாருங்கள். விண்ணப்பத்தில் உள்ள சான்றிதழ்களை பரிசோதித்து அவர்கள் கேட்டுள்ள பகுதிகளை எல்லாம் பூர்த்தி செய்திருக்கிறோமா என்றெல்லாம் சரி பார்க்கிறேன் பேர்வழியென்று சில கடுவன் பூனை மேனேஜர்கள் செய்யும் அராஜகம் பொறுமையைச் சோதிக்கக் கூடியவை. வங்கிக் கணக்கு துவக்கக் கோரி விண்ணப்பிக்கையில் ஏற்படும் கால தாமதத்தைக் கூட நாம் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான வங்கி மேலாளர்கள் தங்களை அணுகும் சாமானியர்களான விண்ணப்பதாரர்களை கொசுக்களைப் போலவும் ஈக்களைப் போலவும் பாவித்து மரியாதையின்றி பேசுவதும், என்னவோ பள்ளித் தலைமையாசிரியரைப் போல மிரட்டல் தொனியில் பதிலளிப்பதும் மகா கேவலமான செய்கை. வங்கிகளில் ஒருமுறையேனும் அவமதிப்பாக உணரத் தலைப்படாத மானுடர்கள் நம்மில் குறைவு. இந்த ஏடிஎம்கள் வந்தனவோ, இல்லையோ பலரும் உண்மையில் ஜென்ம சாபல்யம் அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

காவல் நிலையங்கள்... காவல்நிலையங்களைப் பற்றியும் ஏதோ பூர்வ ஜென்ம பாவத்தால் அங்கே செல்ல வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டவர்களின் கதியையும் பற்றித் தனியாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அதைத் தான் நம் தமிழ் சினிமாக்களில் காலங்காலமாக கிழி, கிழியென்று கிழித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். காவலர்களில் விரல் விட்டு எண்ணிவிடத்தக்க அளவில் ஒரு சில மனிதாபிமானிகளைத் தவிர பலருக்கும் இந்த நாட்டில் அராஜகமாக நடந்து கொள்வதற்கான உரிமையை அரசே தங்களுக்கு வழங்கியிருப்பதான பாவனை தான் அதிகம். பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டால் கதை, கதையாகச் சொல்வார்களே! இதோ நேற்றுக் கூட காவலர் ஒருவர், வாகனச் சோதனையின் போது வண்டியை நிறுத்தாமல் சென்றதற்காக கர்ப்பிணிப் பெண் ஒருவரை எட்டி உதைத்ததில் அவர் இறந்ததாக வந்த செய்தியை என்னவென்பது? இத்தனை அராஜகமாக மனிதாபிமானமற்று நடந்து கொள்ளும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?! காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் இளம்பெண்களை மானபங்கம் செய்த காவல்துறை அதிகாரிகள் பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தனை ஏன் காவல்துறை உயர் அதிகாரிகளின் அராஜகப் போக்கை சிவகாசி ஜெயலட்சுமி, டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு, உள்ளிட்ட சம்பவங்களில் எல்லாம் நாம் அறியாதிருக்கிறோமா என்ன? கிரா வின் கதையொன்றில் சித்தரிக்கப்பட்டதைப் போல இப்போதெல்லாம் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டால் புகார் அளிக்க காவல்நிலையம் சென்றாரகள் எனில் அங்கே அவர்கள் இரண்டாம் முறை பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படலாம் என்ற நிலையே எஞ்சியுள்ளது. மக்களிடையே காவல்நிலையங்களைப் பற்றியதான சித்திரம் இப்படித்தான் இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளை இப்போதும் சிங்கம், புலி, கரடிகளைப் போல மிரட்சியுடன் பார்க்கும் நிலை தான் பொதுமக்களுக்கு! காவல்துறை மக்களின் நண்பன் என்று பெயரளவிற்கு அவர்கள் ஸ்தாபிக்க நினைத்தாலும்... அவர்களில் பெரும்பாலானோரது மோசமான நடவடிக்கைகளால் நடைமுறையில் அது சாத்தியமில்லாத நிலையே நீடிக்கிறது.

மேற்கண்ட துறை சார்ந்த அலுவலர்களும், அதிகாரிகளும் சாமனியர்களிடம் இத்தனை தலைக்கனத்துடனும், அவமரியாதையாகவும் நடந்து கொள்வது எதனால்? இவர்கள் சாமானியர்களிடத்தில் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவே மாட்டார்களா? பதவிக்கு மரியாதை தருவது மனித இயல்பு, அதை வேண்டுமானால் இவர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், தாங்கள் வகிக்கும் பதவியின் காரணமாக தங்களைக் கண்டால் சாமானியர்கள் பயந்து மரியாதை தருவதோடு, தங்களை அரசர்களைப் போல உணர வைக்க வேண்டும் என்றெல்லாம் இவர்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கே அநியாயமாகத் தோன்றாதா? இல்லை, அநியாயமானாலும் பரவாயில்லை. தாங்களது அதிகாரத்தின் எல்லைக்குட்பட்டு தங்களை சிற்றரசர்களாகத்தான் உணர்வோம், மற்றவர்களுக்கு உணர்த்துவோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களா? இதுவும் கூட ஒருவகையான நடத்தைக் கோளாறு தான் இல்லையா?

மேற்கண்ட குற்றச்சாட்டை வாசகர்கள் அனைவரும் உங்களது சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள். நான் அடுக்கிய குற்றச்சாட்டை இல்லையென மறுப்பவர்கள் அது குறித்த உங்களது கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

நடக்கும் பாதையில் இடறும் முட்களைப் போன்றதான இவர்களின் செயல்களுக்கு எப்படிப் பதிலடி தருவது? இதற்குப் பொருத்தமான தங்களது பதில்களையும் வாசகர்கள் இங்கு பதிவு செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com