இந்தியாவில் நதிகளின் தேசியமயமாக்கல் சாத்தியமா?

காவிரி நதி நீரை கர்நாடகமும், தமிழ்நாடும் பிரித்துக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியதுடன்,
இந்தியாவில் நதிகளின் தேசியமயமாக்கல் சாத்தியமா?


காவிரி நதி நீரை கர்நாடகமும், தமிழ்நாடும் பிரித்துக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது. விடுதலை இந்தியாவில், நீர்த் தகராறு பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் சூழ்நிலையில், இத்தீர்ப்பு பல சிக்கல்களுக்கு முடிவு கட்டுவதாக வெளிவந்துள்ளது. ஆயினும், நதிகளை தேசியமயமாக்கினால் இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிடலாம் எனப் பலரும் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இதற்கு எதிராக அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

நதி நீர் என்பது மாநில விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடுவது பொருத்தமல்ல என்பது பல மாநில அரசுகளின் வாதம். நதி நீரைப் பிரித்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசு தலையிட அரசமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு. அதன்படி, 262-ம் பிரிவின் கீழ் நதிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். இப்போதைய காவிரி மேலாண்மை வாரியமும் இப்படியொரு நடவடிக்கைதான் என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று நம்முடைய பயன்பாட்டுக்குக் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 1123 பில்லியன் கன அடியாகும். 2030-ம் ஆண்டில், நமது தேவை 1.5 டிரில்லியன் கன அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது. அதே ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 150 கோடியாகவும் உயரும் வாய்ப்பும் உள்ளது. இதையொட்டியே நதிகளை இணைப்பது அல்லது தேசியமயமாக்கல் செய்து நீரைப் பிரித்தளிப்பது என்கிற ஏற்பாடு அவசியமாகிறது.

நதிகளை தேசியமயமாக்குவதற்கு மாற்றாக, வற்றாத நதிகளை இணைத்து, விவசாயம், குடிநீர், தொழிற்சாலைத் தேவைகள், அன்றாடப் பயன்பாடு மற்றும் இதரத் தேவைகளுக்கு உள்ள பற்றாக்குறையை நீக்க, நீண்டகாலமாகவே திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், இத்திட்டங்கள் வரைபடங்களிலேயே தங்கிவிட்டன. இந்தியா விடுதலை பெற்ற பின்னர், கே.எல். ராவ் என்ற பொறியாளரும், காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், நதிகளை இணைக்கும் திட்டத்தினை முன்னெடுத்தனர். என்றாலும், இத்திட்டத்துக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறதோ அவ்வளவு எதிர்ப்பும் இருக்கிறது. 

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் பல அரசியல்வாதிகள், நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, போலாவரம் அணையை நதிகள் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டி வருகிறார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1980-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் அஞ்சையாவால் துவங்கப்பட்ட திட்டம் இது. அண்டை மாநிலங்களான சத்தீஸ்கரும், ஒடிஷாவும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. அவர்கள் மட்டுமின்றி, இத்திட்டத்தால் ஏராளமான வனப்பரப்பு நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், சூழலியலாளர்களும் கடுமையாகவே எதிர்க்கின்றனர். 

நதிகளை இணைப்பதால் கிடைக்கும் நன்மை குறைவே என்றும், அதனால் ஏற்படும் பாதகமான அம்சங்களை சரிவர கணக்கிடாமல் திட்டத்தை வற்புறுத்துகின்றனர் என்றும், இத்திட்டத்தால் மிகக்குறைவான நீராதாரமே கிடைக்கும் என்றும், அன்றாட பயன்பாட்டுக்கு இப்போது நாட்டில் கிடைக்கும் மொத்த நீரில் 5 - 10 சதவீதம் மட்டுமே செலவாகிறது என்றும், அதனால் இத்திட்டத்தை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறார் நீர்வள நிபுணரும், முன்னாள் தேசிய திட்டக்குழு உறுப்பினருமான பேராசிரியர் வைத்தியநாதன். அதுமட்டுமின்றி, கங்கை நதியை இந்தியாவுடன் பங்கிடும் வங்க தேசம், நதி நீர் இணைப்பை எதிர்க்கிறது.

இந்தியாவில், பல மாநிலங்கள் பல்வேறு காரணங்களால் நதிநீர் இணைப்புத் திட்டத்தை எதிர்க்கின்றன. ஆந்திரமும், தமிழகமும் மட்டுமே இத்திட்டத்தை முன்னெடுக்க விரும்புகின்றன. காரணம், இரு மாநிலங்களிலும் உள்ள வறட்சிப் பிரதேசங்களாகும். அதுமட்டுமின்றி, பெருகிவரும் நீர்த் தேவைகளும் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நதி நீர்வழிகளை இணைத்து, அதில் நீர்வழிப் போக்குவரத்தை நடத்தும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இத்திட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நமது அண்டை நாடான சீனா, சுமார் 1.2 லட்சம் நீர்வழிகளை உருவாக்கியுள்ளதை, இத்திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக அணுகிவரும் தேசிய நீர்வழி மேம்பாட்டுத் தொழில்நுட்பத்தின் தலைவர் ஏ.சி. காமராஜ் சுட்டிக்காட்டுகிறார். இத்திட்டத்தின் மூலம் சரக்குப் போக்குவரத்து விரைவாக நடைபெறுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.  

நவீன இந்தியாவின் நீர்ப்பயன்பாட்டு முறை
நாடு விடுதலை பெற்றபோது, நீர்ப் பயன்பாடு என்பது ஏறக்குறைய முற்றிலும் வேறாக இருந்துள்ளது. நீர்நிலைகளை நம்பி மக்கள் இருந்ததால், குடிமராமத்து போன்ற நடைமுறைத் திட்டங்கள் இருந்தன. மேலும், நீரில் மாசு என்பது அறவே இல்லை. சென்னையின் முக்கிய ஆறுகளான அடையாறும், கூவமும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நிலையில் இருந்துள்ளன. நகரமயமாக்கல், மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றால் நீர்நிலைகள் மாசுபட்டன. இன்று அவற்றை மீண்டும் புனரமைக்க, சில ஆயிரம் கோடிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

மக்கள் தொகைப் பெருக்கத்துடன், தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், நவீன கருவிகளான மேற்கத்திய கழிவறைகள், துணி துவைக்கும் இயந்திரம் போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் அன்றாடம் பயன்படும் நீரின் அளவை அதிகரித்துவிட்டன. இத்துடன், இந்தியாவில் உணவு உற்பத்தியை மேம்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியின் புதிய வீரிய ரகப் பயிர்கள், அதிக நீரினைப் பயன்படுத்தும் தன்மையுடையவையாக இருந்தன. இதனால், பாசன நீருக்கான தேவை பல மடங்கு உயர்ந்தது. இன்றைய நீர்ப் பங்கீட்டு சிக்கல்களுக்கு மூலகாரணம் இதுவே என்று சூழலியலாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இயற்கை விஞ்ஞானியான நம்மாழ்வார், பாரம்பரிய பயிர்முறைகளில் நமக்குத் தேவையான ஊட்டம் நிரம்பிய பயிர்களை மட்டுமின்றி, நீரின் பயன்பாடும் சிக்கனமானது என்றார். மேலும், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்கள் இங்கு பயிரிடப்பட்டதை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருவதையும் காணமுடிகிறது.

நகர்ப்புறங்களில் உருவாகும் மாசு கலந்த நீரைச் சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு அளிக்கும் முறைகள் இருந்தாலும், அவை சுமார் 30 சதவீத நீரை மட்டுமே சுத்திகரிக்கின்றன என்று தனியார் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. நீர் சுத்திகரிப்புத் தொழிலோடு, குப்பைகளையும் உரங்களாக மாற்றினால் மக்கள் பயனைடைவர் என்பது மெய்யே! தனியார் நிறுவனங்கள் பல இதில் ஆர்வம் காட்டிவருவதும் கண்கூடு. மேலும், நீரைச் சுரண்டாமல் நிலத்தடி நீர்மட்டத்தை வற்றாமல் வைத்திருப்பது அவசியமாகும். மேலும், நிலத்தடி நீரைச் சேகரிக்கும் வழிமுறைகளை அரசு மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நீர் மேலாண்மை வல்லுநர்களால் வலியுறுத்தப்படுகிறது. 

நதிகளை தேசியமயமாக்குவதற்கு ஆதரவாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். அதேபோல, மத்திய அரசின் நீர்வழி இணைப்புச் சட்டத்தை எதிர்த்து கோவாவின் பாஜக மக்களவை உறுப்பினர் தனிநபர் சட்ட முன்வரைவு ஒன்றைக் கொண்டுவந்ததும் வரலாறு. எனவே, நதிகளை இணைப்பதோ அல்லது தேசியமயமாக்குவதோ இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதையே இதுவரையிலான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com