ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...

உஸ்தாத் தனது சமகால இசைக்கலைஞர்களில் லதா மங்கேஷ்கரையும், பேகம் அக்தரையும் மிகப் பிடித்திருந்தது என்று பதிலளித்தார்.
ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...

உஸ்தாத் பிஸ்மில்லா கான்... இசையால் மதம் கடந்த மாமேதைக்கு இன்று 102 வது பிறந்தநாள்!

அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. 1916 ஆம் ஆண்டில் பிகார் மாநிலத்தின் தும்ரயோனில் பாரம்பர்யமானதொரு இசைக்குடும்பத்தில் பைகாம்பர் பக்‌ஷ் கானுக்கும், மித்தனுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஹம்ருத்தீன். ஆனால், இவர் பிறந்ததுமே இவரைப் பார்க்க வந்த இவரது தாத்தா ரசூல் பக்‌ஷ் கான், குழந்தையைக் கண்ட கணத்தில் பூரிப்படைந்து மிதமிஞ்சிய ஆச்சர்யத்தில் ‘பிஸ்மில்லா!’ என ஆச்சர்யத்தில் ஆழ்ந்தவராகப் புகழ்ந்து குறிப்பிட்டதால் அன்றிலிருந்தே பிஸ்மில்லா எனவும் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று. ஆனால், அவரது ஷெனாய் இசையின் தீவிர ரசிகர்களைப் பொறுத்தவரை இவர் என்றும் ஷெனாய் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தான்.

கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்....

இவரது முன்னோர்கள் போஜ்பூர் மன்னர்களின் அவையில் இசைக்கலைஞர்களாக இடம்பெற்றவர்கள். இவரது தந்தை பிகார், தும்ரயோன் மகாராஜாவான கேசவ பிரசாத்தின் அவையில் ஷெனாய் இசைக்கலைஞராகப் பணிபுரிந்தவர்.

உஸ்தாத் தனக்கு 6 வயதாகும் போது குடும்பம் பிகாரில் இருந்து வாரணாசிக்கு இடம்பெயர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். அங்கு, வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம், பாலாஜி மற்றும் மங்களகெளரி ஆலயங்களில் உஸ்தாத்தின் முன்னோர்கள் மாதம் 40, 50 ரூபாய்கள் ஊதியமாகப் பெற்றுக் கொண்டு ஷெனாய் வாசிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனக் குறிப்பிடுகிறார் அவர்.

வாரணாசியில் வாழ்ந்த போதும் இவரது பூர்வீகம் பிகார் தான் என்பதால், உஸ்தாத்தின் மறைவுக்குப் பிறகு பிகார் அரசு, அவரது நினைவாக, உஸ்தாத் பிஸ்மில்லா கானைச் சிறப்பிக்கும் வகையில் அவரது ஆளுயரச் சிலையுடன் கூடிய நினைவில்லம் ஒன்றை தும்ரயோனில் நிர்மாணித்து அதில் இசை தொடர்பான நூலகம் ஒன்றையும் நிர்மாணித்து, இசை விழாக்களை நடத்தி வர மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. பிஸ்மில்லாகானின் பூர்வீக வீடு அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லும் போதே அவரது தாத்தாவால் விற்கப்பட்டு விட்டதால், அவர் பிறந்த ஊரில், பிறந்த வீட்டில் நினைவில்லம் அமைக்கும் முயற்சி இன்று வரை தடைப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

உலகறிந்த மாபெரும் இசைமேதை, ஷெனாய் என்றாலே இந்தியர் எவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் கலை வித்தகராக இருந்த போதும் உஸ்தாத் பிறந்த வீடிருந்த தலம் ஆக்ரமிப்பாளர்களின் வசம் போனதால், அதை மீட்டெடுத்து அவருக்கு ஒரு நினைவில்லம் ஏற்படுத்தும் அரசின் ஆவல் தடைப்பட்டுக் கொண்டே தான் செல்கிறது. ஆனாலும், பிகார் அரசு, தங்களது மாநிலத்துக்குச் சொந்தமான உஸ்தாத்தின் பெருமையை பிறருக்கு விட்டுத்தர மனமின்றி மீண்டும் வேறு இடங்களைத் தேடிக் கண்டடைந்து அவருக்கான நினைவில்லத்தை அமைக்கும் முயற்சியை அவ்வப்போது மேற்கொண்டவாறு தான் இருக்கிறது. 

தாம் சார்ந்த மதத்தின் மீது ஆழ்ந்தபற்றும், நம்பிக்கையும் கொண்ட இஸ்லாமியராகப் பிறந்த போதும் ‘உஸ்தாத்’ இந்தியர்களிடையே மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடையேயும் சமய நல்லிணக்கத்தை விரும்பியவர்களில் ஒருவராகவே கடைசி வரையிலும் அடையாளம் காணப்பட்டார். ஒருமுறை ஈராக்கில் இருந்து வந்து அவரைச் சந்தித்த மெளலானா( இஸ்லாமிய மதகுரு) ஒருவர் பிஸ்மில்லாவிடம்; ‘உஸ்தாத் நீ ஏன் ஷெனாய் வாசித்து சாத்தானை துதிக்கிறார். இசையென்பது சாத்தானின் மறுவடிவம், நீ மீண்டும், மீண்டும் இசைப்பயிற்சி செய்து சாத்தானை மீட்டெடுத்துக் கொண்டே இருக்கிறாய்! என்று கூறியிருக்கிறார். அதற்கு உஸ்தாத் அளித்த மறுமொழி கிளாசிக் ரகம்.

மெளலானாவுக்கு உஸ்தாத் அளித்த பதில்; 

‘நாம் தினமும் அல்லாவைத் தொழுகிறோம், எப்படித் தொழுகிறோம்? அல்லாஹ்ஹ்ஹ் ஹு அக்பர் என்று இசைவடிவாகத்தானே அவரை நீட்டி முழக்கித் தொழுகிறோம். அதை நீங்கள் தீய சக்தி என்கிறீர்களா? இசை தெய்வீகமானது. இறைவனை அடைவதற்கான பலவழிகளில் இசையும் ஒன்று. அதில் மதத்தைப் புகுத்தாதீர்கள்.’

- என்றிருக்கிறார். இவ்விதமாக உஸ்தாத்தின் பதிலைக் கேட்ட மெளலானா பின்பு இவரை மறுத்துப் பேச வகையின்றி வாயடைத்துப் போனார். இசைக்கு மதம் கிடையாது என்பது உஸ்தாத்தின் தீவிர நம்பிக்கை.

2002 ஆம் ஆண்டில் உஸ்தாத்துக்கு பாரதரத்னா விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. தகவல் அறிந்து இவரை நேர்காணலுக்காக அணுகிய ஊடக நண்பரிடம் உஸ்தாத் சொன்னது, நான் மிகவும் குறைவாகப் பேசக் கூடிய ஒரு மனிதன், ஆனால் நீங்கள் பேசப் போவது இசை குறித்து எனில் என்னிடம் மணிக்கணக்காகப் பேச வார்த்தைகள் நிறைய உண்டு. நாள் முழுதும் நாம் இசை பற்றித் தீராது பேசிக் கொண்டே இருக்கலாம்’ என்றிருக்கிறார். ஒருவிதத்தில், பிறப்பால் இஸ்லாமியரான தன்னிடம் வாயைப் பிடுங்கப் பார்க்கும் ஊடகத்தினரிடம் முதல் அணுகலிலேயே, இசை தவிர பேசுவதற்கோ, சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ என்னை அணுகாதீர்கள் என்ற தொனி அதில் தெரிந்தாலும் இயல்பில், தான் செல்லுமிடமெங்கும் ஒரு சிசுவைப் போல தன் ஷெனாயை கையெட்டும் தூரத்தில் வைத்திருந்த ஒரு மாமேதையிடம் அவரது மேதமை தவிர்த்து வேறெதுவும் கேட்பது கூடத் தவறு தான் இல்லையா?
 
வாரணாசியின் கங்கையில் படகுப் பயணம் செய்து கொண்டே உஸ்தாத் ஷெனாய் இசைக்கும் இந்த அற்புதக் காணொளி போதும்... தனது இசையை தன்னினும் மேலாக நேசித்த ஒரு பிறவிக் கலைஞனின் ப்ரியத்தை அறிந்து கொள்ள;

உஸ்தாத் தனது ஷெனாயில் இசைத்தது தனக்குப் ப்ரியமான கங்கைக்கரை மனிதர்களின் அன்றாடச் செயல்பாடுகளைத் தான். மனித யத்தனங்கள் இசையாகும் போது அதிலும் உஸ்தாத்தில் ஷெனாயில் இசையாகும் போது மனம் கரைந்து ரசிக்காதோர் யார்?

ஒரு நேர்காணலில் உஸ்தாத்துக்கு பிடித்த இசைக்கலைஞர் யாரென்ற ஒரு கேள்வி எழுப்பப் பட்டது;

தனது சமகால இசைக்கலைஞர்களில் லதா மங்கேஷ்கரையும், பேகம் அக்தரையும் மிகப் பிடித்திருந்தது என்று பதிலளித்தார். ‘லதா மங்கேஷ்கரின் குரல் மிக இனிமையானது, வயது ஏற, ஏற குரலினிமையைப் பாதுகாத்துக் கொள்ள இவர் என்ன செய்யப் போகிறார்? என்று கூட நான் யோசித்ததுண்டு, ஆனால், இப்போது பாருங்கள், இத்தனை வயதுக்குப் பிறகும் லதாவின் குரலில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பழைய இனிமையுடன் அவர் பாடிக் கொண்டிருப்பது வரப்பிரசாதம் என்கிறார்.

பேகம் அக்தரின் அதி தீவிர ரசிகர் உஸ்தாத். பேகம் பாடிய கஜல் பாடல்களில் தீவானா பனாதே எனும் கஜல் என்றால் உஸ்தாத்துக்கு உயிர். தாம் எங்கிருந்தாலும் அந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் அதில் லயித்துப் போய்விடுவார். ஒருமுறை இவர் தங்கியிருந்த இடமொன்றில் நடுஇரவில் எங்கிருந்தோ பேகம் அக்தரின் தீவானா பனாதே பாடல் ஒலித்திருக்கிறது. அது பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டு என்றிருக்கிறார் மனைவி, ஆனால், உஸ்தாத் மனைவியை அதட்டி, இல்லை இது இசைத்தட்டு அல்ல பேகம் அக்தரே நேரில் எங்கேயோ பாடிக் கொண்டிருக்கிறார் என்று மறுத்திருக்கிறார். ஊரே இவரது ஷெனாய் இசையில் மயங்கிக் கிடக்க இவருக்கோ பேகம் அக்தரின் குரலில் அத்தனை மயக்கம்! இப்படித் தன் சக இசைக்கலைஞர்களையும் ரசனையுடன் அணுகியவர் உஸ்தாத் பிஸ்மில்லாகான். இவருக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்ட அதே ஆண்டில் லதா மங்கேஷ்கருக்கும் பாரத ரத்னா வழங்கிக் கெளரவித்திருக்கிறது இந்திய அரசு. விருது அறிவிக்கப்பட்டதும் உஸ்தாத்திற்கு வந்த முதல் பாராட்டு அழைப்பே லதா மங்கேஷ்கரிடம் இருந்து தானாம்!

உஸ்தாத் ரசித்த பேகம் அக்தரின்  ‘தீவானா பனாதே’ கஜல் பாடலுக்கான காணொலி;

உஸ்தாத் பிஸ்மில்லாகான் பெற்ற விருதுகள்...

அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார்.

பாரத ரத்னா தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

  • 1956 சங்கீத நாடக அகாடமி விருது,
  • 1961 பத்மஸ்ரீ விருது, தேசிய பண்பாட்டு நிறுவனம் வழங்கிய பாரத செனாய் சக்கரவர்த்தி விருது,
  • 1968 பத்மபூசன் விருது, பத்மவிபூசன் விருது,
  • 1980 மத்திய பிரதேச அரசின் தான்சேன் விருது,
  • 1981 காசி இந்து பல்கலைக்கழகம், சாந்தி நிவேதின் பல்கலைக்கழகம், மராத்வாடா பல்கலைக்கழகம் என பல பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள்.

பிஸ்மில்லாகான் பிறந்த 1916 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர், லதாமங்கேஸ்கர் ஆகியோர். இவர்கள் நால்வருக்குமே இந்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அளித்து கெளரவித்திருக்கிறது.

தூங்கும் போது கூட படுக்கையில் தன்னுடன் தனது ஷெனாய் வாத்தியத்தை வைத்துக் கொண்டே தூங்கும் அளவுக்கு அந்த இசைக்கருவியின் மீது உஸ்தாத்துக்கு காதல் மிகுந்திருந்தது. அவரிடம் இதைப் பற்றிக் கேட்டால், எனது மனைவி இறந்த பிறகு நான் ஷெனாயை எனது மனைவியாகப் பாவிக்கத் தொடங்கி விட்டேன் என்றாராம். அந்த அளவுக்கு ஷெனாய் இசை வாத்தியத்திடமிருந்து உஸ்தாதைப் பிரித்துப்பார்க்கவே முடியாத அளவுக்கு எந்த நொடியும் ஷெனாயைத் தன்னருகில் வைத்திருந்த இசைமேதை அவர். உஸ்தாத் பிறந்த காலகட்டத்தில் கர்நாடக மற்றும் இந்துஸ்தான் இசை மேடைகளில் ஷெனாய் இசைக்கருவிக்கு பெரிதாக முக்கியத்துவம் எதுவும் இருந்ததில்லை. கோயில் மற்றும் அரசு விழாக்களின் போது மட்டுமே ஷெனாய் வாத்தியம் இசைக்கப்படுவது வழக்கம். அந்த நிலையை மாற்றி உலகம் முழுதும் தனது ஷெனாய் இசையை ஒலிக்க வைத்து ஷெனாயை இந்துஸ்தானி மேடைகளில் பிரதானமாக்கி இசைக்கச்சேரிகள் தோறும் தனித்து இசைக்கக் கூடிய இசைக்கருவியாக மாற்றிய பெருமை உஸ்தாத்தையே சாரும். இந்தச் சாதனையை அவர் தனியொரு மனிதராகச் சாதித்தார். இன்று உஸ்தாத் தன் ஷெனாயுடன் சென்று கச்சேரி செய்யாத உலக நாடுகள் எதுவும் இல்லை.

உலகமெங்கும் தன் ஷெனாயை ஒலிக்க விட்ட மாபெரும் இசைக்கலைஞரை அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்வது நமது நல்வினை! 


Image Courtesy: Hindusthan times.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com