அரசியல்வாதிகளே.. உங்கள் முடிவுகளை எங்கள் மீது திணிக்காதீர்கள்!!

தங்கள் தரப்பு விருப்பங்களை யார் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் வைக்கலாம். அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் மக்கள் முடிவு. ஆனால், இந்த கோரிக்கையே கூடாது என்று சொல்வது ஜனநாயகமல்ல.
அரசியல்வாதிகளே.. உங்கள் முடிவுகளை எங்கள் மீது திணிக்காதீர்கள்!!

கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் ஒரு நிகழ்வு ராமராஜ்ய ரத யாத்திரை. ஸ்ரீராமதாச மிஷன் சர்வதேச சங்கம் சார்பில் இந்த ரதம் பிப்ரவரி 13ம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்து புறப்பட்டு மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது கேரள மாநிலம் புனலூரிலிருந்து நேற்று காலை 9.20 மணிக்கு நெல்லை மாவட்டம் புளியரைக்கு வந்தது. ரதம் பிரச்னைகளையும் உடன் அழைத்து வந்தது.

முன்னதாக ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் செங்கோட்டையில் போராட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. சட்டசபையிலும் எதிரொலித்தது.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் யாத்திரையை தடை செய்ய வேண்டும்', என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த முதல்வர், ‘ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல', என்று பதிலளித்தார். அதை ஏற்காத எதிர்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து வெளி நடப்பும் செய்தனர். பிறகு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. எதிர்கட்சி தலைவரும் அவர்களது எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர். அவரின் கைதை கண்டித்து மாநிலத்தின் பல இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மொத்தம் 6000 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் 3314 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டங்கலில் ஈடுபடுபவர்களுக்கு சில கேள்விகள்:

மற்ற நான்கு மாநிலங்களை கடந்து வந்தபோது ஏற்படாத கலவரம் தமிழ் நாட்டில் ஏற்படும் என்று எப்படி நினைக்கிறீர்கள்? அப்படியென்றால் பிரச்னை உங்களிடம்தான் இருக்கிறது என்றல்லவா நினைக்க வேண்டியிருக்கிறது?

கண்டன அறிக்கை விடும் கமலஹாசன் அவர்களே! கேரளாவில் இப்படி ஒரு ரதயாத்திரை நடக்கிறது என்பதையே பலரும் அறிந்திருக்கவில்லை. கேரளத்தை ஆள்வது உங்கள் நண்பர் பினராயி விஜயன், கம்யூனிஸ்ட் ஆட்சி. அவர்கள் யாத்திரைக்கு அனுமதி கொடுத்துள்ளார்களே அதெப்படி? எதற்கெடுத்தாலும் கேரளத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பேசும் நீங்கள் கேரள சிந்தனையிலிருந்து வேறுபடுகிறீர்களே எப்படி?

காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு கேள்வி! ரத யாத்திரை நீங்கள் ஆளும் கர்நாடகாவை கடந்து வந்துள்ளது. அங்கு ஏன் போராட்டம் செய்யவில்லை? ரத யாத்திரை மதவாதம் என்றால், சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் வீரசைவ லிங்காயத்து சமூகத்தை தனி மதப்பிரிவாக அங்கீகரித்திருக்கிறது உங்கள் காங்கிரஸ் அரசு. இந்துக்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் இந்த முயற்சி மதவாதமல்லவா?

நாத்திக மாநாடு மற்றும் பிற மதத்தவர்கள் மாநாடு நடத்தும் போது எழாத பிரச்னை இப்போது மட்டும் ஏற்படும் என்று சொல்வது சரியா?

ஒரு கட்சி எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம் என்கிறது. மற்றொரு கட்சி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்கிறது. மற்றொரு கட்சி பேரறிஞர் அண்ணா ஆட்சி என்கிறது. அதே போல் ஒரு தரப்பு ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்கிறது. இதிலென்ன தவறு இருக்க முடியும்? எத்தகைய ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த மக்களிடம் கோரிக்கையை வைக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், மக்கள் மன்றத்திற்கு இந்த கேள்வியே கொண்டு செல்லக்கூடாது என்று சொல்வது சரியா?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக் கதையை படிப்போம்.

ஒரு நாடு. அந்த நாட்டு அரசர் வீரர்கள் புடைசூழ யாத்திரைக்கு புறப்பட்டார். பல ஊர்களை கடந்து பிரயாணம் நீடித்தது. மாலை முடிந்து இரவு தொடங்கியது. பக்கத்தில் இருந்த விருந்தினர் மாளிகையில் தங்கினார் அரசர். தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார் சாது.

நல்ல காற்றோட்டமான அறை. அறையைச்சுற்றி பூச்செடிகள். எங்கும் நறுமணம். படுக்கையின் மேல் ரோஜா இதழ்களை பரப்பி அதன் மேல் மெல்லிய துணி. தூங்குவதற்கான அருமையான சூழல். பிரம்மித்துப்போனார் அரசர். சாதுவைப் பாராட்டினார். படுக்கையில் படுத்த அரசர் அயர்ந்து தூங்கிப்போனார்.

யாரோ கதவை தட்டும் சத்தம். கண்விழித்தார். கதவைத் திறந்து பார்த்தார். எதிரில் நின்றது தளபதி. கையில் பெரிய குச்சி. தூக்கம் கலைந்துபோன கோபம் அரசனுக்கு. கோபத்தோடு பேசினார்.

‘தளபதியே! எதற்காக என்னை எழுப்பினாய்', என்று கேட்டார்.

‘அரசே! உங்கள் பக்கத்தில் இந்த குச்சியை வைத்துவிட்டு போகலாம் என்று வந்தேன்', என்றான் தளபதி.

‘இந்த குச்சிக்கு இப்ப என்ன அவசரம்', என்று கோபமாக கேட்டார் அரசர்.

‘அரசே! இந்தப் பகுதியில் ராஜநாகம் ஒன்று நடமாடுவதாக கேள்விப்பட்டேன். அதற்காக இந்த மாளிகையைச் சுற்றி நிறைய ஆட்களை காவலுக்கு வைத்திருக்கிறேன். பதினைந்து பாம்பு பிடாரர்களையும் வெளியே நிறுத்தியிருக்கிறேன். விஷமுறிவில் கைதேர்ந்த ஐந்து வைத்தியர்களையும் தயாராக வைத்திருக்கிறேன். ஏனென்றால் அது கொடிய விஷமுள்ளது. அது கடித்தால், கடிபட்டவர் பிழைக்கமாட்டார். அப்படியே பிழைத்தாலும், உடல் முழுவதும் கரிய நிறமாக மாறிவிடும். அது கார்கோடகன் இனத்தைச் சேர்ந்தது. கதைகளில் நாம் படித்த நளமகாராஜனை கடித்த பாம்பு இதுதான். ஒருவேளை அது அறைக்குள் வந்துவிட்டால் உங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் இந்த குச்சி. இதை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்', என்றான் தளபதி.
 

அதிர்ந்து போனார் அரசர். அரசனின் படுக்கைக்கு பக்கத்தில் குச்சியை வைத்துவிட்டு நகர்ந்தான் தளபதி. அரசன் உறக்கத்தை தொடர படுக்கைக்குச் சென்றான்.

பொழுது விடிந்தது. அரசனை எழுப்ப அறைக்குச் சென்றான் தளபதி. உடன் சாதுவும் சென்றார். கண்கள் சிவக்க படுக்கையில் அமர்ந்திருந்தார் அரசர். கையில் குச்சி.

சாது, ‘அரசே கண்கள் சிவந்திருக்கிறதே? உடல் நலமில்லையா?' என்று கேட்டார் சாது.

‘இரவு முழுவதும் தூங்கவில்லை', என்றார் அரசர்.

சாது, ‘எல்லா வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்தேனே? உறங்குவதற்கு ஏற்ற அருமையான சூழல் என்று சொல்லி என்னை பாராட்டினீர்களே?' என்று கேட்டார் சாது.

‘உண்மைதான். என்ன பிரயோஜனம்? ராஜநாகம் வந்து செல்லும் இடத்தில் எப்படி தூக்கம் வரும்?' என்றார் அரசர்,

‘ராஜநாகம்தான் வரவில்லையே. வராத பாம்பு எப்படி உங்கள் தூக்கத்தை கெடுத்திருக்க முடியும்? ஆகையால் உறக்கம் வராமல் இருக்க அது காரணமாக இருக்க முடியாது', என்றான் தளபதி.

‘பாம்பு வரவில்லை என்பது காலைவரை கண்விழித்த பிறகுதானே தெரிந்தது!' என்றார் அரசர்.

‘அரசே! பாம்பினால் உங்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பது என் வேலை. அதை சரியாகச் செய்துவிட்டேன்', என்றான் பெருமையோடு தளபதி.

அப்போது சாது பேசினார்.

‘அதுசரி! இங்கு பாம்பு நடமாட்டம் இருக்கிறது என்று யார் உன்னிடம் சொன்னது', என்று கேட்டார் சாது.

‘சாதுவே! நேற்று நான் தூங்கும் போது ஒரு கனவு வந்தது. கனவில் இந்த இடத்தில் ஒரு ராஜநாகம் ஓடுவதை பார்த்தேன்', என்றான் தளபதி.

சாதுவை முறைத்துப் பார்த்தார் அரசர்.

‘அரசே! அருமையான தளபதி. கனவில் வந்தது ராஜநாகம் என்றும், அது கொடிய விஷமுள்ளது என்றும், அது கடித்தால் உடல் கருத்துப் போகும் என்றும், அது கார்கோடகன் வம்சத்து பாம்பு, நளமகாராஜனை கடித்தது என்றும், அதை பிடிப்பதற்காக பாம்பு பிடாரர்களையும், விஷமுறிவு வைத்தியர்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார் தளபதி. ரொம்ப பிரமாதம்', என்றார் சாது.

அரசனுக்கு எதுவும் புரியவில்லை. மீண்டும் சாது பேசினார்.

‘ஆகையால் அரசே! ஒன்று மட்டும் சொல்கிறேன். தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். “தளபதி நிம்மதியாக தூங்கினால், நீங்கள் நிம்மதியாக தூங்க முடியாது. நீங்கள் நிம்மதியாக தூங்கவேண்டுமென்றால், தளபதி நிம்மதியாக தூங்கக்கூடாது', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

இந்த கதையில் வரும் பாம்பைப் போன்றதுதான் இன்று நாம் பார்க்கும் ராமராஜ்ய ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டம். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பயம், மக்கள் மீது திணிக்கப்படுகிறது. கனவில் கண்டதையெல்லாம் நிஜத்தில் திணிக்க நினைக்கும் படைத் தளபதி போன்றவர்களின் எண்ண ஓட்டங்களில் மாற்றம் ஏற்படாதவரை, நம்மைச் சுற்றி கலவரத்துக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. இந்த நிலை மாறவேண்டுமென்றால், மக்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். போராட்டங்களையும், அதன் உள் நோக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் புரிதல் அரசியல்வாதிகளிடம் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமாக வெளிப்படையாக சொல்லப்படுபவை இவைதான்:

ராம ராஜ்யத்தை மீண்டும் அமைக்க வேண்டும், ராமஜென்ம பூமியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும், கல்வியில் ராமாயணத்தை பாடமாக கொண்டுவர வேண்டும், ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வியாழக் கிழமையை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். உலக இந்து தினத்தை அறிவிக்க வேண்டும்'.

கோரிக்கையையும், தங்கள் தரப்பு விருப்பங்களையும் யார் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் வைக்கலாம். அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் மக்கள் முடிவு. ஆனால், இந்த கோரிக்கையே கூடாது என்று சொல்வது ஜனநாயகமல்ல.

ராமர் கோவில் என்பது எல்லோருடைய ஒப்புதலுடனும் கட்டப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக இருதரப்பும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரும் இன்னொரு தரப்புக்கு அநீதி இழைத்துவிட முடியாது. இது செய்திகளை அடுத்த நாள் காலை நாழிதளில் படித்து தெரிந்து கொள்ளும் காலமல்ல. ஒரு நிகழ்வு நடந்தால் அடுத்த வினாடியே உலகின் அடுத்த மூலையை சென்றடையும் காலம். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. ஆகையால், ராமர் கோவில் விஷயத்தில் சுமூகமான முடிவு எட்டும்வரை பொறுமையோடு நாட்களை நகர்த்துவதே உத்தமம். அப்படியில்லாமல், அடுத்தவர்களை உசுப்பேற்றும் செயல் உசுப்பேற்றிகளுக்கு குறுகிய கால சாதகங்களை தரலாம், நிச்சயமாக ஒற்றுமையான சமுதாயத்துக்கு சாதகங்களைத் தராது.

சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com