எழுதப்பட்ட கருத்துகளைவிட கலந்துரையாடல் மேல்!

கட்டுரை, ஹோம்வொர்க், பரீட்சை என்று மாணவர்கள் எழுதும் பலவற்றை ஆசிரியர்கள் திருத்திக் கொடுப்பார்கள்.
எழுதப்பட்ட கருத்துகளைவிட கலந்துரையாடல் மேல்!

கட்டுரை, ஹோம்வொர்க், பரீட்சை என்று மாணவர்கள் எழுதும் பலவற்றை ஆசிரியர்கள் திருத்திக் கொடுப்பார்கள். அதில் வெவ்வேறு விதமான குறிப்புகள் எழுதித் தன் கருத்தை மாணவருக்குத் தெரிவிப்பார்கள். கற்றலைப் பற்றித் தெரிவிக்கும் விதம் முக்கியம், ஏனென்றால் அதை வைத்துத்தான் மாணவர்கள் தான் சரியாக கற்றுக் கொள்கிறோமா, கற்பதை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

எழுதுவதைத் திருத்துவது என்பது ஆசிரியர்கள் எப்பொழுதும் செய்வதே. திருத்தித் தருவதை வேறொரு வழியில் எப்படிச் செய்யலாம் என்று  இங்கு பார்க்கப் போகிறோம். இது, மாணவர்களுடன் இணையச் சிறந்த வாய்ப்பாக அமைக்கவும் முடியும். 

வகுப்பில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், இதைச் செயல்படுத்த முடியுமா என்று ஆசிரியர் தயங்கலாம். அதை மீறி வருவதற்கான வழியையும் பார்ப்போம். 

மாணவர்கள் தங்கள் புரிதலில் மேம்பட, ஆசிரியர் திருத்தித் தருவதில் தன் கருத்துகளை தெரிவிப்பது பழக்கமே. இந்த தெரிவிப்பதை கலந்துரையாடலாக மாற்றி அமைக்கலாம். கலந்துரையாடல் மூலம், பிழைகளை எப்படி தவிர்க்க முடியும், எப்படி இன்னும் நன்றாகக் கற்றுச் செயல்பட முடியும் என்பதற்கான பாதையை மாணவர் புரிந்து கொள்வார்கள்! 

கலந்துரையாடலின் நோக்கமே, என்ன எப்படி எழுதியிருக்க வேண்டும் என்பதைப் பற்றி அல்ல, உரையாடலினால் மாணவர்கள் தாங்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறோம், புரிதலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து - வெளிப்படுத்தும் திறனை மையம் கொண்டதாகும். இப்படிச் செய்கையில் அவர்கள் தன்னைப் புரிந்து கொள்ளும் திறனை உபயோகிப்பதாகும். ஆசிரியர் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்து மட்டுமே தன்னை எடை போட்டுக் கொள்வது, கற்பதை மேம்படுத்துவது என்றிருந்தால், எப்பொழுதும் மற்றவர் சொல்லை எதிர்பார்க்கும் நபர்களாகவே இருந்து விடுவார்கள். 

உரையாடல்களினால், மதிப்பெண் மட்டும் அல்லாமல், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதங்களும் மற்றும் பல திறன்களும் மேம்படும்! 

உரையாடலுக்கு- முன் தருணங்கள்

எழுதியதைத் திருத்தும் பொழுது, பல கருத்துக்களை தெரிவிக்கத் தேவைப்படும். ஒவ்வொன்றையும் மாணவரின் தாளில் எழுதுவதற்குப் பதிலாக, ஆசிரியர் அதைத் தனியாக குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதைப் பிரித்து, சபாஷை விவரிக்கும் கருத்துக்களை ஒரு இடத்திலும், மாற்றித் திருத்தி எழுத வேண்டியவை இன்னொரு இடத்திலும் குறித்துக் கொள்ளலாம். 

தாள்களைத் திரும்பி கொடுக்கும் பொழுது, மாணவர் எழுதி உள்ள தனித்துவமான ஒன்றைப் பற்றிச் சொல்லி, மாற்ற வேண்டிய ஒன்றை மட்டும் காண்பித்து, அவர்கள் தாளுடன் குறித்ததையும் பகிர்ந்து கொள்ளலாம். எந்த நபரின் பெயரும் எடுக்காமல், வகுப்பின் தனிப்பட்ட 'நல்ல'  குறிப்புகளையும் எடுத்துச் சொல்லலாம். இந்த வயதில், அடுத்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இருப்பதால் இப்படிச் செய்வது நன்றே! அதனால் தான் நல்லதை மையமாக வைப்பது முக்கியமாகும். மாணவர்கள் தாளில் கூறியதைப் படித்து விட்டு, ஆசிரியரின் குறிப்புத் தாளைக் கொடுத்து விடலாம்.

மாணவர்-ஆசிரியர் உரையாடல் 

பிழைகளைத்  திருத்திக் கருத்தை உரையாடலாகப் பகிர்ந்து கொள்ள, ஆசிரியர் ஒவ்வொரு மாணவரைத் தனியாகப் பார்க்க வேண்டும். 

எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்களோ ஒவ்வொருவருக்கும் அதே நேரத்தைக் கொடுக்க, நேரத்தை குறித்துக் கொண்டு ஆரம்பிக்கலாம். ஆசிரியர் தங்கள்  குறிப்புகளையும், மாணவர்கள் தாங்கள் எழுதிய தாளையும் கொண்டு வர வேண்டும். எழுதியதுள்ளதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், மற்ற விஷயங்களை இந்தக் கலந்துரையாடலில் கொண்டு வரக் கூடாது..

ஆராய்வதற்கு, தாளில் எதை, ஏன், எப்படி மதிப்பிடுவது என்று ஒரு வரைபடம் செய்து கொண்டிருந்தால், அதை உபயோகிக்கலாம், இது உரையாடலின் வழிகாட்டியாகவும் ஆகலாம். இந்த உரையாடலின் போது, மாணவர்களின் எழுதியதைப் பற்றி ஆசிரியர்கள் குறித்துக் கொண்ட குறிப்புகளை மேலும் விவரித்துச் சொல்லலாம். மாணவர்கள் குறித்து வைத்ததைப் பற்றியும் உரையாடலாம். இப்படிச் செய்வதில், அவர்கள் கருத்தையும் மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.

தேர்ந்தெடுப்பு

எழுதுவதற்கு உரையாடுவதைப் பல வகைகளில் செய்யலாம். எந்த வகையில் செய்தாலும், கவனம் எழுதுவதின் மேல் இருக்க வேண்டுமே தவிர மாணவர் மீது அல்லவே அல்ல. அப்பொழுது தான் ஆசிரியர்-மாணவர் உறவை இணைக்கச் செய்யும். இப்படிச் செய்தால், மாணவரின் தன்மதிப்பு கூடிவரும். உரையாடலின் தருணங்கள் இப்படி இருக்கலாம்: 

உரையாடலின் பொழுது 

சில அம்சங்களைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உரையாடலில் என்னவெல்லாம் அடங்கியுள்ளது என்பதை மாணவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும். சுமூகமான சூழலை அமைத்தால், உரையாடலில் வருவது உரைக்கக்கூடியதாக இருக்க, பயம் தோன்றாது. விடைகளைக் காட்டத் தேவை என்றால் மாணவருடன் செய்யலாம். எழுதுவதற்கு எந்த மாதிரியான சொற்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றைய பழக்கங்களை பற்றியும் சொல்லலாம்.

அவர்களுடன் எதைப் பற்றி எழுதப் போகிறார்களோ அந்த விஷயத்தைப் பற்றி குழுச்சிந்திப்பு செய்து அவர்களுடன் சிந்திக்கலாம். இது, ஆரம்ப நிலையில்.
எழுதுவதை அமைக்க வேண்டிய விதங்கள், சுருக்கம் செய்வது பற்றியும் இருக்கலாம். வாய்விட்டுப் படித்தால் திருத்த உதவும். உரையாடுவதால், எழுதுவது சுவாரஸ்யமானது என்பதை மாணவர்கள் உணர்ந்து ஆர்வமாகச் செய்வார்கள். 

உரையாடலின் விளைவு

சில சமயங்களில் ஓர் சில மாணவர்கள் தான் எழுதியதை மேம்படுத்த, மறுபடியும் எழுத வேண்டும் என்பார்கள். இப்படிச் செய்ய அனுமதிக்கலாமா என்ற முடிவு ஆசிரியர் எடுக்க வேண்டும்.. ஒப்புக்கொண்டு செய்யச் சொல்வதில், மாணவர்களின் தன்னம்பிக்கை வளரும். 

ஆசிரியர்கள், ஒவ்வொரு உரையாடலின் குறிப்புகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இதைப் பற்றி ஐந்தே நிமிடத்திற்கு மாணவர்களுடன் கலந்துரையாடினால், அது மாணவர்களுக்கு தங்களின் வளர்ச்சியை: முயற்சிகளில், எழுத்தில், சிந்தனைத் திறனில்,காட்டும். 

அவர்களின் மதிப்பெண்களுடன் மற்ற திறன்களும் மேம்பட, மதிப்பெண் அதிகரிப்பது மட்டும் பெரிதாகத் தோன்றாது. இத்துடன் மாணவர்கள் தங்கள் கணிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து, மேம்படுத்த வேண்டிய இடங்களைச் சீர் திருத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்பும் மாணவர்கள் பல விஷயங்களை உணர்ந்து கொள்வார்கள். 

இந்த உரையாடலின் நேர் விளைவு இதிலிருந்து வரும் புத்துணர்ச்சி. முதலில், கொஞ்சம் தயக்கம், சங்கோசம் இருக்கும். போகப் போக மாணவர்களிடம் ஒழுக்கம், அக்கறை, நேர்மை போன்ற பல குணாதிசயங்கள், திறன்கள் வளரக் கலந்துரையாடல் ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது. மாணவர்களாக மட்டும் அல்ல, இதனாலேயே எதிர்காலத்திலும் இவர்களுக்கு, தான் செய்வதை மேம்படுத்திக்கொண்டு நன்றாகச் செய்ய வேண்டும் என்ற தன்மை இருப்பதால், எங்கும் 'தேவையானவர்கள்’ என்றே இருக்கும்.

இது ஆசிரியர்களுக்கும் தங்களுள் உள்ள குறைகளை சரி செய்து கொள்ள வாய்ப்பாக அமையும். உரையாடலிருந்து அவர்கள் சொல்லித் தரும் பாடத்தின் பொருளைச் சரியாக விளக்க வில்லை என்பது தென் படலாம், சொல்லித் தரும் விதங்களை மாற்றிச் செய்ய உதவலாம். மாணவர்களை எந்நாளும் ஏற்றத் தாழ்வாக பார்க்கும் மனப்பான்மையிலிருந்து வெளி வரக் கூடும். உரையாடல் இதற்கு என்று செய்யவில்லை, ஆனால் இவையும் அமைந்து விடுகிறது.

உரையாடலுக்கு நேரம் ஒதுக்க முடியும். 'நான் பாடத்தை முடிக்க வேண்டுமே’ என்ற மனப்பான்மை இல்லாமல் 'நான் சொல்லித் தருவது, புரிய வேண்டும்’ என்று அமைய வேண்டும். இதைச் செய்ய செய்ய ஆசிரியர்கள் எது முக்கியம் என்பதைக் கணக்கிடுவதில் வல்லமை பெறுவார்கள். கற்றுத் தரும் முறைகளில் பல வண்ணங்கள் சேர்ந்து கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர் என்பவர் மாணவர்களின் பல திறன்களை, கோட்பாடுகளை மேம்படுத்தக் கூடும் சந்தர்ப்பமாக அமைந்து விடுகிறது.

என்னுடைய அனுபவம்

இந்த விதமான திருத்துவதை, நான் உபயோகித்திருக்கிறேன். நான், இதை தற்செயலாகச் செய்ய, ஆரம்பித்ததும், மாணவர்களிடம் சின்ன சின்ன மாற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். அதனாலேயே தொடர்ந்து செய்ய முடிவு எடுத்தேன். 

முதலில், நேரம் ஒதுக்குவது சவாலாகவே இருந்தது. அவர்களின், ஒரு எழுத்து வடிவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உரையாடலை உபயோகித்தேன். மிக இனிய ஆனுபவமாக அமைந்தது! அடுத்த முறை நேரம் இல்லை என்று சொல்லி, தவிர்த்து விட்டேன். மூன்றாம் முறை மாணவர்கள் தங்களின் assignment சமர்ப்பிக்கும் பொழுது அவர்களே உரையாடலைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தார்கள். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறச் சொன்னார்கள். 

கூட்டு அமைப்பு திட்டம் போலவே இதைச் செயல்படுத்த ஆரம்பித்தேன். மிக முக்கியமாக, நான் சொல்லி தருவதை ஆராய்ந்து, பாடத்தைப் பிரித்து சொல்லித் தர வேண்டியதாக ஆயிற்று. செய்தேன். அன்றிலிருந்து, எங்கு பாடம் எடுத்தாலும், திருத்துவது உரையாடலாகத்தான்.

இதிலிருந்து, நான் கற்ற சில தகவல்கள்: புதிதாக செய்வதில் கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும், செய்ய முடியும் என்ற முடிவு, ஆசிரியரின் மனத்தில் இருந்தால் அதை செயல்படுத்தும் பொழுது நம்முள் உள்ள தைரியம் பிரகாசிக்கும். இதை மாணவர்களால் உணர முடியும், அதைப் பின்பற்ற முழு முயற்சி எடுப்பார்கள். மாணவர்களிடம் மாற்றம் தெரியும். 

ஆசிரியரான நானும், மாற்றிக் கொள்ள வேண்டியதை மாற்ற, மதிப்பு கூடியது. இணைப்பு வலிமை பெற, வகுப்புக்குப் போவது மிகவும் பிடித்தது. வகுப்பில், மாணவர்களின் பங்கேற்பு, ஆர்வம், கற்றல் நன்றாக முன்னேறியது. அந்தக் காலத்து குருகுலம் வாசத்தில் செய்வதின் ஒரு சாயல் இது என்றும் கூறலாம்.

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் / malathiswami@gmail.com

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com