துள்ளி விளையாடும் குழந்தைகள் இவ்வுலகின் கடவுள்கள், அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது தெய்வத்தை துகிலுரிப்பதற்கு சமம்!

அவர்களைப் பொறுத்தவரை, கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் எல்லாமே புனிதத்தலங்களோ, வழிபாட்டுத் தலங்களோ அல்ல.  அவை வெறும் ‘மறைவிடம்' மட்டுமே.  ஆன்மீகமோ, பக்தியோ, இறையச்சமோ அவர்களிடம் கிடையாது.
துள்ளி விளையாடும் குழந்தைகள் இவ்வுலகின் கடவுள்கள், அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது தெய்வத்தை துகிலுரிப்பதற்கு சமம்!

ஒரு பக்தன். கூடை நிறைய மொட்டுக்களுடன் கோவிலுக்குச் சென்றான்.  

‘கடவுளே! கூடையில் உள்ள மொட்டுகளை மலர்களாக்கி, அதை உங்களுக்கு மாலையாக அணிவிக்க ஆசைப்படுகிறேன்.  ஆனால், மொட்டுக்கள் மலராமல் அப்படியே வாடிவிடுகிறது. உங்கள் படைப்பில் இப்படி ஒரு குறையா?' என்று வருத்தத்தோடு கேட்டான் பக்தன்.

சட்டென்று கடவுள் நேரில் தோன்றினார்.  

‘பக்தனே!  செடிகளை படைப்பதோடு என் பணி முடிந்தது. செடி வளர்வது, பூப்பது, பின் காய்ப்பது ஆகிய எல்லாமே மனித முயற்சியோடு தொடர்புடையது. ஆகையால், என்னுடைய படைப்பில் தவறில்லை', என்றார் கடவுள்.

‘அதெல்லாம் சரி. கூடையில் இருக்கும் மொட்டுக்கள் மலர வேண்டும். அதற்குநான் என்ன செய்ய வேண்டும் அதை மட்டும் சொல்லுங்கள்', என்று எரிச்சலோடு கேட்டான் பக்தன்.

‘பக்தா! ‘எந்த ஜீவராசிகளுக்கும் இல்லாததும், மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஒரு சிறப்பு ‘சிரிப்பு’.  இந்த மொட்டுக்களின் முன் யாராவது ஒருவர் இயல்பாக சிரித்தால், அடுத்த நொடியே இவை மலரும்', என்றார் கடவுள்.

அந்த வழியே ஒரு ஆசிரியர் வந்துகொண்டிருந்தார். அவருக்கு முன் ஒரு மொட்டு வைக்கப்பட்டது. அவர் சிரித்தார்.  மொட்டுகள் மலரவில்லை. ஆசிரியர் நகர்ந்தார்.

‘பக்தனே!  ஆசிரியர் மிகவும் நல்லவர்.  ஆனால், மாணவர்கள் செய்யும் குறும்பு ஆசிரியரை கோபமடையச் செய்கிறது. கோபத்தால் மாணவர்களை அவர் கட்டுப்படுத்துகிறார். அதனால், கோபம் என்ற ஆயுதம் மட்டுமே நம்மை காப்பாற்றும்', என்று அவர் நம்பத் தொடங்கிவிட்டார். அவரின் இயல்பான குணங்கள் கோபத்தின் பின்னால் மறைந்துவிட்டது. அவருடைய சிரிப்பில் உண்மையில்லை. அதனால் மொட்டு மலரவில்லை', என்றார் கடவுள்.

அப்போது அந்த வழியே ஒரு காவலர் வந்தார். அவருக்கு முன் ஒரு மொட்டு வைக்கப்பட்டது. அவர் சிரித்தார். மொட்டு மலரவில்லை.  

‘காவலர் எந்த நேரமும் குற்றவாளிகளுடனும், குற்றங்களுடனும் போராடிப் போராடி, வாழ்க்கையை வெறுத்த நிலையில் இருக்கிறார். அவருடைய இயல்பான குணங்கள் வெறுப்பின் பின்னால் மறைந்து கிடக்கிறது. அதனால் சிரிப்பில் உண்மையில்லை', என்றார் கடவுள்.

அந்த வழியே ஒரு விவசாயி வந்தார். அவர் முன் ஒரு மொட்டு வைக்கப்பட்டது. அடுத்த நொடி கருகிப்போனது.

‘நம் நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளுடைய வாழ்க்கை மிகவும் சோகமானது.  தண்ணீர், உரம், பொருளுக்கான விலை ஆகிய எல்லாவற்றிற்கும் அரசை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.  விளை நிலங்களில் அவர்கள் விதையை விதைத்தாலும், ஏமாற்றத்தை மட்டுமே அறுவடை செய்கிறார்கள்.   ஆகையல், அவர்களுடைய இயல்பான குணம் ஏமாற்றத்தின் பின்னால் மறைந்து கிடக்கிறது.  அந்த ஏமாற்றமே மொட்டை கருகச் செய்தது', என்றார் கடவுள்.

பக்தன் யோசித்தான். சட்டென்று ஒரு மொட்டை எடுத்து கடவுளின் முன் நீட்டினான்.  

கடவுள் சிரித்தார். மொட்டு மலரவில்லை.  

‘கடவுளே! என்ன இது! உங்கள் சிரிப்பிலும் உண்மையில்லையா!' என்று கேட்டான் பக்தன்.

‘பக்தனே!  ஒரே விஷயத்திற்காகவும், ஒரே பொருளுக்காகவும் பலர் என்னிடம் வேண்டுகிறார்கள். அதை யாருக்கு கொடுப்பது என்ற முடிவெடுப்பது சிக்கலான பணி.  ஏதாவது ஒரு முறையில் முடிவெடுத்து ஒருவருக்கு கொடுக்கும் போது, மற்றவர்கள் என்னை வசைபாடுகிறார்கள்.  அதனால், என் இயல்பை பக்தர்களின் பக்தி மறைத்துக் கொண்டிருக்கிறது.  என் சிரிப்பிலும் உண்மையில்லை', என்றார் கடவுள்.

அந்த வழியே கொழுக்மொழுக் சிறுமி,  கையில் புத்தகப் பையுடன் ஓடி வந்தாள்.  அந்தக் குழந்தை பக்தனைப் பார்த்தவுடன் சிரித்தாள்.  சட்டென்று  கூடையில் இருந்த அத்தனை பூக்களும் மலர்ந்தன.  

ஆச்சர்யத்தோடு கடவுளை பார்த்தான் பக்தன்.

‘பக்தனே! குழந்தை மனத்தில் கள்ளம், கபடம் இல்லை.  எந்த கடுமையான விஷயங்களையும் மனத்தில் வைத்துக் கொள்வதில்லை. கோபம், வெறுப்பு, ஏமாற்றம், கடமை, பக்தி என்ற எதுவும் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. மனதில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்ற இரட்டை வாழ்க்கைமுறை அவர்களிடமில்லை.  என் சிரிப்பில் மலராத மொட்டுக்கள், அவள் சிரிப்பில் மலர்ந்திருக்கிறது.  யார் உயர்ந்தவர் என்பதை பூக்களே முடிவு செய்துவிட்டன', என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.  

இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷயம் இதுதான்.  ‘துள்ளி விளையாடும் குழந்தைகளே இவ்வுலகின் கடவுள்கள்'.  கடவுளுக்கும், குழந்தைகளுக்குமிடையே இருக்கும் ஒரே வித்தியாசம், கடவுள் வணங்கத் தக்கவர். குழந்தைகள் ரசிக்கத் தக்கவர்கள்.   

குழந்தையை பார்த்தவுடன், அதனுடன் பேச வேண்டும், அதன் குறும்பு மொழியை கேட்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.  தன் வீட்டு குழந்தையை மட்டும் கொஞ்ச வேண்டும் என்றும் யாரும் நினைப்பதில்லை.  எங்க வீட்டில் குழந்தைகள் இல்லை! யாரைக் கொஞ்சுவது என்றும் யாரும் யோசிப்பதில்லை. அண்டைவீட்டு குழந்தைகளை கொஞ்ச நேரம் கடன் வாங்கியாவது கொஞ்சுகிறோம். அதுவே நம் வீட்டு குழந்தையாக இருந்துவிட்டால்! அவ்வளவுதான், அதன் சின்னஞ்சிறு அசைவுகளையும் பத்திரப்படுத்தி அக்கம்பக்கத்தில் பெருமையோடு பேசித் தீர்ப்போம். குழந்தைப் பருவ சுட்டித்தனமும், குறும்புப் பேச்சும் வாழ்நாள் முழுவதும் நம்மைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். இப்படி ரசித்து நகர்த்த வேண்டிய குழந்தைப் பருவ நாட்களை விஷமாக்குகிறது குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள். அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடந்தது இன்று நாம் வசிக்கும் பகுதிக்கும் வந்துவிட்டது. கடந்த சில வாரங்களாக தினமும் இத்தகைய அத்துமீறல்களை செய்திகளாகப் படிக்கிறோம்.

“ஐந்தாம் வகுப்பு மாணவி, ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை”, என்ற செய்தியை மார்ச் 24 ம் தேதி நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன.  இது நடைபெற்றது அஸ்ஸாம் மாநிலத்தில்.  பள்ளியிலிருந்து திரும்பிய ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது, ஐந்து மனித மிருகங்கள் வீட்டில் நுழைந்து அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதோடு நிற்காமல், அந்தக் குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.  90 சதவீத தீக்காயங்களுடன் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.  தீவிர சிகிச்சை தொடர்ந்தது.

‘அவளை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன்.  அவள் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.  பேசுவதற்கே மிகவும் கஷ்டப்பட்டாள்', என்று நாகோன் நகர எஸ்.பி சொல்லும் போது நம் மனம் செய்கையற்ற ஆத்திரத்தில் கனன்று கனத்துப் போகிறது. 

கடைசியில் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை இறந்து போனாள்.  நாட்டையே சோகத்தில் தள்ளிய இந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயம் என்ன தெரியுமா!  பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் சிறுவர்கள். அவர்களில் ஒருவனுக்கு வயது 10 மற்றொருவனுக்கு வயது 11.    
 
சூரத் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகே ஒன்பது வயது பெண் குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்டது.  உடலெங்கும் 80 இடங்களில் சித்ரவதை செய்த காயங்கள் காணப்பட்டதாகவும், அவை ஏழு நாட்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என்றும், அந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.  

உலகையே உலுக்கிய மற்றொரு சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்தது. எட்டு வயது சிறுமி ஆசிபா காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் இந்த அத்துமீறல் நடந்தது ஒரு இந்து மத வழிபாட்டுத் தலத்தில் என்று சொல்லப்படுகிறது.  சிறுமிக்கு உணவு கூட கொடுக்காமல் மயக்கத்திலேயே வைத்திருந்ததாகவும், ஆசிபாவை  மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால் அவளது இருதயமும், நுரையீரலும் செயலிழந்துள்ளது', என்றும் சொல்லப்படுகிறது.  

அடுத்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில். 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாஜக எம்எல்ஏ மீது குற்றம் சுமத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து முதல்வரின் வீட்டு முன் தன் தந்தையுடன் தீக்குளிக்க முயன்றார் அந்தச் சிறுமி.  அப்போது சிறுமியின் தந்தை எம்எல்ஏ வின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.  இதைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை உயிரிழந்தார்.  நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களை அடுத்து வழக்கு உயிர்பெற்றது. 

இந்தத் தருணத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகியது.  ஒரு மசூதியில் அதன் மெளல்வி நின்று கொண்டிருக்கிறார்.  ஒரு பெண் கையில் குச்சியுடன் அவரை நெருங்குகிறார்.  அங்கிருந்தவர்கள் அந்த மெளல்வியை பிடித்துக் கொள்ள அந்தப் பெண் அவரைத் தாக்குகிறார்.  எதற்காக அந்தப் பெண் மெளல்வியை தாக்குகிறார்?  அந்த மெளல்வி எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தாக்கும் காட்சிதான் வீடியோவாக வைரலாகிக் கொண்டிருந்தது.  சிறுமியுடன் சேர்ந்து அங்கு கூடியிருந்தவர்களும்  மெளல்வியை தாக்குகிறார்கள்.  பல ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை ஷேர் செய்ய, உலகம் முழுவதும் அந்த மெளல்விக்கு எதிராக கண்டன கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பக்கத்தில் உள்ள கேரளத்தில் ஒரு பாதிரியார் பதினேழு வயது பெண்ணிடம் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு அந்தப் பெண்ணை ஒரு குழந்தைக்கு தாயாக்கினார். பின் அந்த குழந்தையையும், அந்தப் பெண்ணையும் ஒரு அனாதை இல்லத்தில் தங்க வைத்தார். காவல்துறைக்கு விஷயம் தெரிந்ததும் கனடா நாட்டிற்கு தப்பிக்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? அந்த பாதிரியார் சில நாட்களுக்கு முன் குழைந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வீரமுழக்கம் செய்தவர்.  

இவையெல்லாம் மற்ற மாநிலங்களில் நடக்கிறது.  நம்ம ஊர்ல அப்படியெல்லாம் நடக்காது', என்று பெருமைப்பட வேண்டாம்.  சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையின் சொந்த பூமியாகவே மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஜலகண்டபுரத்தில் ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   ஓமலூரில் மட்டும் கடந்த பத்து நாட்களில் மூன்று சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக இத்தகைய அத்துமீறல்களுக்கு  அரசியல் சாயம் பூசும் முயற்சியையும் பார்க்கிறோம். அந்தக் கட்சிக்காரர்கள் மோசம்.  அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே அதிக தவறில் ஈடுபடுகிறார்கள்.  தவறு நடந்த இடம் அந்த மதத்து வழிபாட்டுத் தலத்தில், என்று பலாத்காரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சொந்தமாக்கி அதில் குளிர்காய நினைக்கிறார்கள் போட்டி அரசியல்வாதிகளும், மதவாதிகளும்.

ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.  இத்தகைய அத்துமீறல்களுக்கு ஜாதி, மதம், மொழி, கட்சி என்ற பாகுபாடுகள் கிடையாது.  அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரிடமும் காணப்படும் ஒரே விஷயம் ‘மிருகத்தனம்'.  அவர்களைப் பொறுத்தவரை, கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் எல்லாமே புனிதத்தலங்களோ, வழிபாட்டுத் தலங்களோ அல்ல.  அவை வெறும் ‘மறைவிடம்' மட்டுமே.  ஆன்மீகமோ, பக்தியோ, இறையச்சமோ அவர்களிடம் கிடையாது.

‘இவனுங்களையெல்லாம் கோர்ட், கேஸ்ன்னு அலையவிடக்கூடாது. இழுத்தடிக்கக்கூடாது. பார்த்த இடத்திலேயே சுட்டுத்தள்ளனும்', என்று பேசினாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லையே! ஜனநாயகத்தில் அதற்கெல்லாம் இடமில்லையே!  இந்திய ஜனநாயகத்தின் பலனை அதிகம் அனுபவிப்பவர்கள் குற்றவாளிகளும், அரசியல்வாதிகளும், பணக்காரர்களுமே.  

சில நாட்களுக்கு முன் அப்கானிஸ்தானில் நடந்ததாக ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு வீடியோ வாட்ஸ் ஆப்பில் வந்தது.  ஒரு இளைஞனின் கண்கள் கட்டப்பட்டிருந்தது.  அவன் முழங்காலிட்டு அமர வைக்கப்பட்டான்.  அவனைச் சுற்றி தரையில் ரத்த சேறு.  அந்த இளைஞனை குனியச் சொல்கிறார்கள்.  குனிகிறான்.  பக்கத்தில் இருந்த முரட்டு ஆசாமி தன் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவன் கழுத்தில் ‘ஒரே வெட்டு', ரத்தம் பீய்ச்சியடிக்கிறது.  தலையற்ற உடல் மண்ணில் சரிகிறது.  கத்தியில் ஒட்டியிருந்த ரத்தத்தை இறந்தவனின் ஆடையில் துடைக்கிறான்.  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆப்கானிஸ்தான் காட்டும் மரணப்பாதை இதுதான். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும், வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று முழங்கிய பலர், இந்த வீடியோவைப் பார்த்தவுடன் அமைதியாகிப்போனார்கள்.  நம் மனது எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களை பார்த்து பரிதாபப்படும்.  நாம் வளர்ந்த சூழல் அப்படி. நம்மைச் சுற்றி நடக்கும் பலாத்கர நிகழ்வுகளைப் பார்க்கும் போது, நம் பரிதாப சிந்தனைகளை மூட்டை கட்டி வைக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது என்பது நமக்குப் புரிகிறது.  

‘இதுக்கெல்லாம் பாழாய்போன அந்த செல்போனும், இன்டெர் நெட்டும்தான் காரணம்.  வீட்டில இருக்கிற பிஞ்சுகளை பழுக்க வைத்ததுதான் அவை செய்த சாதனை', என்று பலரை புலம்ப வைத்துவிட்டன இத்தகைய சம்பவங்கள்.     

இது சமூகச் சீர்கேடா?  தனிப்பட்ட மனிதர்களின் தவறா?  உணர்வுகளைத் தூண்டும் உணவுப் பழக்கங்களா?  கண்களில் புகுந்து கருத்தை நாசம் செய்யும் சினிமா காட்சிகளா?  குரூர சிந்தனைகளை வீட்டு கூடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் சின்னத் திரை சீரியல்களா?  எது எப்படியோ, இந்தக் கொடூரங்கள் நம்மைச் சுற்றி பரவிக்கொண்டிருக்கிறது.  வேறுவழியில்லை, இந்தத் தவறுகளுக்கு நாமும் பொறுப்பேற்க வேண்டியதுதான்.     

இது போன்ற செய்திகளை படிக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியும், மனவேதனையும் செய்தித்தாளை மடித்து வைத்தவுடன் மறைந்து போகிறது. அடுத்த சில நிமிடங்களில் வழக்கமான பணிக்கு திரும்புகிறோம். இந்த சராசரி சிந்தனையால் அதிகம் ஆதாயமடைவது தவறில் ஈடுபட்டவர்கள்.     

சமீபகாலமாக இத்தகைய சம்பவங்களை அதிகமாக ஊடகங்களில் பார்க்கிறோம்.   குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமானதை இது காட்டுகிறதா? அல்லது  இது போன்ற சம்பவங்கள் தற்போதுதான் ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறதா?  

குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை ஏதோ இன்டெர்நெட் யுகத்தில் முளைத்த விஷச்செடி என்று நினைக்க வேண்டாம்.  எல்லாக் காலங்களிலும் இத்தகைய அத்துமீறல்கள் இருந்திருக்கின்றன.  தற்போது அதிகம் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன,  துணிச்சலாக வழக்குகளும் பதியப்படுகின்றன.  

நம்மில் எத்தனை பேருக்கு திருமதி டெய்ஸி இராணியைத் தெரியும்!  1957ம் வருஷம் தமிழில் “யார் பையன்” என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்.  பாலிவுட்டிலும் குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை தொடங்கி பெரிய நடிகையாக வளர்ந்தவர்.   சமீபத்தில் தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.  

‘அப்போது எனக்கு வயது ஆறு.  மதராஸில் ‘ஹம் பன்ச்சி ஏக் தால் கே' எனும் பாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.  எனது அம்மாவின் நம்பிக்கைக்குரிய ஒருவன் எனக்கு கார்டியனாக இருந்தான்.  அப்படத்தின் ஷுட்டிங் போது நான் தங்கியிருந்த ஹோட்டலில், ஒரு இரவில் அவன் என்னிடம் அத்துமீறினான். பாலியல் பலாத்காரம் செய்தான்.   பெல்ட்டால் அடித்தான்.   ‘யாரிடமாவது இதைச் சொன்னா உன்னை கொன்னுடுவேன்', என்று மிரட்டினான். அவன் பெயர் நாசர்.  இப்போது அவன் உயிரோடு இல்லை. இத்தனை வருடங்கள் கழித்து ஏன் இப்போது இதைச் சொல்கிறேன் என்றால், குழந்தை நட்சத்திரமாக இருப்பது ரொம்ப கஷ்டம். அவர்கள் மீது பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக்கணும். சில குழந்தை நட்சத்திரங்களின் வாழ்க்கை மட்டுமே  இனிமையாக இருக்கிறது.  பலருக்கு அப்படி அமைவதில்லை. அதில் நானும் ஒருத்தி', என்று உருக்கமாகப் பேசினார் டெய்ஸி.

கிட்டத்தட்ட 60 வருடங்களுக்குப் பிறகு இந்த தகவலை பகிர்ந்துகொண்டார் டெய்ஸி.  அவர் குறிப்பிட்ட மனித மிருகம் நாசர் அதன் பின் எத்தனை சிறுமிகளை நாசம் செய்தான் என்பது யாருக்கும் தெரியாது.  ஒருவேளை டெய்ஸி அன்றே இதை வெளியே சொல்லியிருந்தால், அந்த மிருகம் தனது வாழ்நாளை சிறையிலேயே கழித்திருக்கும்.  வருடங்கள் பல கழிந்தாலும், டெய்ஸியின் இந்தப் பேட்டி, பெற்றோர்களுக்கு விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.  டெய்ஸியைப் போல பலர் தான் கடந்துவந்த அவமானப் பாதையை வெளியே சொல்வதில்லை.  

மகிழ்சி, குறும்புத்தனம், விளையாட்டு ஆகியவற்றில் கழிக்க வேண்டிய குழந்தைப் பருவம் அச்சத்தாலும், அவமானத்தாலும் இருட்டில் தள்ளப்படுவது கொடுமையானது.  இந்தச் சம்பவங்கள் நமக்குச் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், “நம்மைச் சுற்றி மனித மிருகங்கள் நடமாடுகின்றன”, என்ற எச்சரிக்கையைத்தான்.  

Image courtesy: India.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com