ஒடுக்குமுறை ஒழிய ஒரே வழி இதுதான்! இதையும் பறிக்காதீர்கள்!

பஞ்சமி நிலத்தை ஆதி திராவிடர் அல்லாதோர் வாங்கவோ, அனுபவிக்கவோ, குத்தகைக்கோ பெறவே இயலாது.
ஒடுக்குமுறை ஒழிய ஒரே வழி இதுதான்! இதையும் பறிக்காதீர்கள்!

நிலமுள்ளவர்களாக பிறந்தோம்! கொத்தடிமைகளாக இருக்கிறோம்! நிலமற்றவர்களாக இறக்கப் போகிறோம்!

அடிமைமுறை ஒழிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு நமது நாட்டில் ஏராளமான தலைவர்கள் உயிர்த் தியாகம் செய்து சுதந்திரத்தை மீட்டுத் தந்துள்ளனர். இச்சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்களை பாதுகாக்க தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்தும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரங்கேறும் கொத்தடிமை முறை நவீன இந்தியாவில் இருப்பது அவமான சின்னமாக உள்ளது.

கொத்தடிமைத்தனத்திற்கு முக்கிய காரணியாக இருப்பது – நிலமின்மை.

இந்தியாவின் வரலாற்று பதிவுகளை பின்நோக்கி பார்க்கும்போது பஞ்சமர்களுக்கு (பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்) பஞ்சமி நிலம் இந்திய பிரிட்டிஷ் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலம் என்பது நிலமற்ற ஏழை, பட்டியலின பிரிவு மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892-ம் ஆண்டில் வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்களாகும்.

முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியர் உயர்திரு. ஜேம்ஸ் ட்ரெமென்கீர் எழுதிய 'பறையர்கள் பற்றிய குறிப்புகள்... பறையர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்வை மேம்படுத்த இயலும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். அந்த அறிக்கையை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பஞ்சமி நில சட்டம் 1892-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் 12.5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பட்டியலின மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. இந்த பஞ்சமி நிலங்களை, உரிய ஆதிதிராவிடர் தவிர பிற சமூகத்தினர் உரிமை கோர இயலாது.

பஞ்சமி நிலத்தை ஆதி திராவிடர் அல்லாதோர் வாங்கவோ, அனுபவிக்கவோ, குத்தகைக்கோ பெறவே இயலாது.

ஆனால், தற்போது இந்தியாவில் பஞ்சமி நிலங்கள் பிறரால் அனுபவிக்கப்படுகின்றன. காலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் மற்ற சாதி வகுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது. இதுவே பின் தங்கிய வகுப்பை சார்ந்த குடிமக்கள் கொத்தடிமைத்தனத்தில் சுழன்று தவிப்பதற்கு முக்கிய காரணமாகும்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக கொத்தடிமைத்தனத்தில் காணப்படுவதற்கு நிலமற்றவர்களாக போனது தான் காரணம் என்று வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சாதி பாகுபாடு நிமித்தமாக கொத்தமைக்குட்பட்டு இருக்கிறார்கள் என்று சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஆய்வு மாணவி செல்வி.பிளஸ்ஸியின் ஆய்வுக் குறிப்புகள் எடுத்துரைக்கிறது. மேற்படி இவர்களது வரலாற்று பின்னணியை பார்க்கும்போது முற்காலத்தில் நிலமுள்ளவர்களாக வாழ்ந்தவர்கள், பூர்வ குடிமக்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமைகள் இருப்பதாக இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் மற்றும் தேசிய ஆதிவாசி விடுதலை இயக்கத்தின் ஆய்வு குறிப்பில் தெரிய வந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட கொத்தடிமைகளின் வாழ்வு வளம்பெற மாற்று நிலம், மறுவாழ்வு மற்றும் மாற்று குடியமர்த்தல் செய்து தரப்படவில்லை என்று மீட்கப்பட்ட கொத்தடிமைகளின் சங்கம் எடுத்துரைக்கிறது.

இவ்வாறு மீட்கப்படும் கொத்தடிமைகளின் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க நிலங்கள் இல்லை என்று அரசு நிர்வாகம் காலம் தாழ்த்துகிறது எனவும், பஞ்சமர்களுக்கென்று வழங்கிய பஞ்சமி நிலங்கள் எங்கே என்ற கேள்வியும் அவர்களின் மனத்தில் எழுகிறது. ஆகவே மத்திய, மாநில அரசுகள் பஞ்சமி நிலங்களை மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. இந்திய வரலாற்றில் நலிந்தவர்களுக்கு எதிராக நிலப்பறிப்பு நிகழ்ந்துள்ளது. அதன் காரணமாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாற மீண்டும் பஞ்சமி நிலம் மற்றும் பூமி தான இயக்கத்தின் மூலம் கொடுக்கப்பட்ட நலிந்தவர்களுக்கான நிலங்கள் பஞ்சமர்களுக்கு திரும்ப தரப்பட வேண்டும். அப்போது தான் கொத்தடிமைத்தனமானது இந்தியாவை விட்டு ஒழியும்.

வாழ்வாதாரத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை ஒழிய நில உரிமை இன்றியமையாதது.

- சே. சுதர்சன், உதவி பேராசிரியர், சமூக பணித்துறைப் பிரிவு (நிதியுதவி பெற்றது), சென்னை கிறிஸ்துவ கல்லூரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com