சிறார் வன்கொடுமையில் உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் எதெல்லாம் பலாத்காரம் எனத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு குழந்தை பெற்றோரிடம் ஒருவரைப் பற்றி முறையிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் பெற்றோர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.  
சிறார் வன்கொடுமையில் உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் எதெல்லாம் பலாத்காரம் எனத் தெரிந்து கொள்ளுங்கள்!

குழந்தைகளிடம் ஏற்படுத்தும் உடல் ரீதியான பாதிப்புகள் மட்டுமே பாலியல் வன்கொடுமை என்று நினைக்க வேண்டாம். மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தினால்கூட அதுவும் பலாத்காரம்தான்.   ஆகையால், எவையெல்லாம் பலாத்காரம் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

உடல் ரீதியாக ஏற்படுத்தப்படும் பாதிப்புகளைப் பற்றி நமக்குத் தெரியும். அதையும் தாண்டி, வேறு எந்தவகை பாதிப்புகளை பலாத்காரமாக சட்டம் வரையறுத்துள்ளது என்பதை பார்போம்.  

  • தவறான எண்ணத்தில் குழந்தையின் அந்தரங்க உடல் பாகங்களை தொடுதல்.
  • குழந்தையின் ஆடையை அகற்றச் சொல்லுதல்.
  • குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது.
  • கேமராவிற்கு முன்பாக குழந்தைகளை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தல்.
  • குழந்தைகளுக்கு முன்பாக பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
  • குழந்தைகளிடம் ஆபாச படக்களை காட்டுதல்.

இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்', என்பது நம் எல்லோருடைய கருத்து. ஆனால், தண்டனைகளின் கடுமை அதிகரிக்கப்பட்டால், குற்றங்கள் குறைந்துவிடும் என்பது தவறான சித்தாந்தம் என்பதை காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.  

இரண்டு வாரங்களுக்கு முன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அதில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை பார்ப்போம்:

  • பதினாறு வயதுக்குட்பட்ட சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில், தற்போது பத்து அண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.  இது இருபது ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.  அது மேலும் நீட்டிக்கப்பட்டு, குற்றவாளி, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.
  • பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தற்போது இருபது ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அது, ஆயுள் தண்டனையாகவோ அல்லது தூக்கு தண்டனையாக உயர்த்தப்படுகிறது.  
  • சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்குகளை அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும். மேல் முறையீட்டு மனுக்களை, ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பதினாறு வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, முன் ஜாமீன் கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டவர், ஜாமீனுக்கு விண்ணப்பித்தால், அதுபற்றி முடிவெடுப்பதற்கு முன், அரசு வழக்கறிஞருக்கும், பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஒருவருக்கும் ‘நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்.
  • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் சிறார் குற்றவாளியாக இருந்தால் அவர்களுக்கு இந்த சட்டத் திருத்தத்தின் கீழ் தண்டனை வழக்கப்படுமா என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை.  
  • மாநில அரசு மற்றும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்து ஆலோசித்து, விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். அரசு வழக்கறிஞர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்படும்.
  • இந்த வழக்குகளுக்காகவே அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும்.
  • வழக்கை விரைவில் முடிக்கும் நோக்கில், சட்ட உதவிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பாலியல் பலாத்கார வாழக்குகளுக்காகவே, சிறப்பு தடயவியல் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும்.
     

இந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் எல்லாம் குற்றம், அதைத் தொடர்ந்து வழக்கு, விசாரணை, தண்டனை ஆகியவற்றைப் பற்றியே இருப்பது நமக்கு புரிகிறது.   

தவறு செய்தவனை முச்சந்தியில் நிற்க வைத்து தலையை வெட்டும் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா?  ‘இல்லை', என்கிறது புள்ளிவிவரங்கள். அந்த நாடுகளில், அளிக்கப்படும் தண்டனை, பாதிக்கப்பட்டவரின் பழியுணர்ச்சிக்கு அளிக்கப்படும் மருந்தாக மட்டுமே இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு  தண்டனையின் கொடுமை தெரியாதா? தெரிந்தும் அவர்கள் தவறில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களது சிந்தனையில் நிரம்பியிருக்கும் மூர்க்கத்தனத்தையும், மிருகத்தனத்தையுமே இது காட்டுகிறது. ஆகையால், தண்டனைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக குற்ற சிந்தனையிலிருப்பவர்களை அதிலிருந்து வெளிக்கொணர முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதாவது, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை.  குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு மனமாற்றம்.  

பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் தவறை வெளியில் சொல்வதில்லை. அப்படியே குழந்தை பெற்றோர்களிடம் சொன்னாலும், அதை பெற்றோர்கள் வெளியே சொல்வதில்லை. சில குழந்தைகள் தன் வயதைத் தாண்டி அதிகம் சிந்திக்கும். தன் வயதைத் தாண்டி அதிகம் பேசும். அப்படிப்பட்ட குழந்தைகள் பேசும் பேச்சை பெரும்பாலும் பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதே போல குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம், இதை கேட்கும் குழந்தைகள், சாதாரண தொடுதலுக்கும், பலாத்கார தொடுதலுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல், யார் மீதாவது குற்றம் சுமத்தும் வாய்ப்பு இருக்கிறது.  குழந்தை சொல்வதை முற்றிலும் தவறு என்று ஒதுக்குவதும் தவறு, குழந்தை சொல்வதை முழுவதுமாக நம்புவதும் தவறு. இந்த விஷயத்தில் பெற்றோர்களின் மனமுதிர்ச்சியே கைகொடுக்கும்.

ஒரு குழந்தை பெற்றோரிடம் ஒருவரைப் பற்றி முறையிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் பெற்றோர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.  

  • ‘அவ எல்லா விஷயத்தையும் நிஜமா நடந்த மாதிரியே பேசுவா. சரி சரின்னு கேட்டுங்க. அவ பேச்சையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க', என்று சொல்லும் பெற்றோர்களை பார்க்கிறோம். இது தவறானது. குழந்தை சொல்லும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் வார்த்தைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வது அவசியம்.  
  • குற்றம் சுமத்திய குழந்தையின் மீதே பெற்றோர்கள் பழியை தூக்கிப் போடுவார்கள், இது தவிர்க்கப்படவேண்டும்.   
  • பல நேரங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள். அதனால், பிரச்னையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவார்கள்.  இது தவறு.  இது உளவியல் ரீதியாக குழந்தையை பாதிக்கும், அதே வேளையில், தவறை செய்தவன் மற்றொரு இடத்தில் இதே தவறை தொடர்வதற்கு வாய்ப்பளித்துவிடும். காவல்துறையிடம் முறையிடுவது மட்டுமே மிகச் சரியான நடவடிக்கையாக இருக்கும்.  
  • குற்றம் நடந்த பின் குழந்தையிடம் அன்பான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். ‘இந்த தவறுக்கு நீ காரணமல்ல. உன் மீது கோபமோ, வருத்தமோ இல்லை', என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லலாம்.
  • ‘பலாத்காரம் நடந்துவிட்டதால், குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது.  இதனால் பெற்றோர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு குறைந்துவிடும் என்று குழந்தைகள் நினைக்கின்றன. இந்த பயத்தை போக்கும் விதத்தில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை குழந்தைகளிடம் பேசுவது அவசியம்.  
  • குழந்தைகளுக்கு தைரியம் அளிப்பது பெற்றோர்களின் கடமை. இது போன்ற தவறு நடக்காமால் பத்திரமாக நான் பார்த்துக் கொள்கிறேன்.  இதுதான் இனி என்னுடைய முதல் பணி', என்றெல்லாம் நம்பிக்கையூட்டலாம்.  
  • தவறைச் செய்தவன் மீண்டும் தவறை தொடர்வானோ? என்ற பயம் பெற்றோர்களுக்கு இருக்கும். இது தவிர்க்க முடியாது என்றாலும், பயம் கொஞ்சம் அதிகமாகி, அதுவே குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் முடக்கிவிடும் அபாயம் இருக்கிறது.   இது குழந்தையின் எதிர்காலத்தை  நாசமாக்கிவிடும்.  அதே போல் நடந்து முடிந்த தவறுக்காக அதிகம் வருத்தப்படுவது, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பது ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கும்.  

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்னை அன்றோடு முடிவதில்லை. உடல் ரீதியான பிரச்னைகளை உடனடியாக சரி செய்தாலும், மன ரீதியான பிரச்னைகள் தீர்க்க முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது.  சில குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் அதே எண்ணத்தில் முடங்கிக்கிடக்கும். அவர்களின் அடிப்படை குணங்கள் அடிபட்டுப்போய், கோபம், வெறுப்பு மற்றும் மனிதாபிமானமற்ற எந்திரமாக வாழ்க்கையை நகர்த்தும் நிலை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள்  பின்னாளில் சந்திக்கும் பிரச்னைகளை பார்ப்போம்:

  • அதிக கோபம், பதட்டம் ஆகியவை அவர்களின் அடிப்படை குணங்களாகிறது.  
  • தாழ்வு மனப்பான்மையுடனும், தன்னம்பிக்கை இல்லாமலும் நாட்களை நகர்த்துகிறார்கள்.
  • போதைப் பொருட்களுக்கும், குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள்.
  • சில நேரங்களில் உடல் ரீதியான பிரச்னைகள் தீர்க்க முடியாமல் போகிறது.  
  • தவறு நடந்த சில நாட்களில் எல்லோரும் அனுதாபப்பட்டாலும், அந்த அனுதாபம் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை.  குறிப்பாக உறவினர்கள் அந்தக் குழந்தையை அதிகம் தவிர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவை அன்பும், அரவணைப்பும்.  இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  
  • படிப்பில் கவனம் செலுத்தாமல், நாட்டமில்லாமல் பாதியிலேயே கைவிடுதல்.  
  • மனத்தில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தத் தெரியாமல் திணறுதல்.
  • சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், குழந்தைப் பருவத்தில் பலாத்காரத்திற்கு உள்ளானவர்களே என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

கடைசியாக சில விஷயங்களை மனதில் கொள்வோம்:

தொடுபவர்களின் உண்மையான எண்ணத்தை குழந்தைகளுக்கு புரியவைக்கலாம்.  எவை ‘குட் டச்', எவை ‘பேட் டச்' போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம். அதுவும் வேண்டாம், இதுவும் வேண்டாம், ‘டோண்ட் டச்' என்பது மகா உத்தமம்.

ஒன்பது வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதி மன்றம் எல்லா பள்ளிகளிலும் சிசிடிவி கேமராவை பொறுத்தும்படி ஆணையிட்டது. ஆனால், முப்பது நாட்களுக்கு மேல் பதிவுகளை வைத்துக் கொள்ளும் வசதி இல்லை என்பதால், பலர் அந்த முயற்சியை கைவிட்டனர்.  மனிதனுக்கும், சட்டத்துக்கும் பயப்படாத இன்றைய குற்றச் சமூகம்  காட்டிக்கொடுக்கும் கேமராவிற்காவது பயப்படுகிறது. ஆகையால், பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும்.

போக்ஸோ இ-பாக்ஸ் ஒன்று சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் புகார் செய்யும் போது நேரடியாக NCPCR (National commission for protection of child rights) ஐச் சென்றடைகிறது.  இதில் பதியப்படும் பிரச்னைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  

பெரும்பாலான குற்றங்கள் குடிப்பழக்கத்துடன் தொடர்புடையது. குடித்துவிட்டால் எல்லாத் தவறுமே கையெட்டும் தூரத்தில்.  ஆகையால், குடிப்பழக்கம் உள்ளவர்களுடன் குழந்தைகள் பழகுவதை தடுக்கலாம். இதே கருத்தை குழந்தைகளிடமும் அறிவுறுத்தலாம்.    

குழந்தைகளை பார்த்தவுடன் பாலியல் சிந்தனை வருவது ஒரு குறைபாடு. இத்தகைய குறைபாடு உடையவர்களை கண்டுபிடித்து கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கலாம். மனத்தில் தவறான எண்ணம் முதல் முறை தோன்றும் போதே அதை தவிர்க்கும் முறையில் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்படுமானால், உளவியல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.  இத்தகைய ஆலோசனைகளையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

பள்ளிகளில் உளவியல் வல்லுனர்களை வைத்து நீதி போதனை வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யலாம்.  

அனைவரும் பொது வெளியில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நமது ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்தவர்களின் உணர்வுகளை தூண்டிவிடுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  

பெற்றோர்களின் மீது இருக்கும் பயத்தால் குழந்தைகள் தவறை மறைத்துவிடுவார்கள்.  இதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஆகையால், குழந்தைகளிடம் நண்பனைப் போல பழகுங்கள்.

‘குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது' என்று நீங்கள் நினைத்தால், உடனடியாக காவல்துறையை அணுகுவதுதான் சிறந்த வழி.  சமூக ஆர்வலர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.  

பள்ளிகளில் (Child Protection Committee) குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை அமைக்கலாம். இந்த கமிட்டியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இடம் பெறச் செய்யலாம். பெரும்பாலான பள்ளிகளில் இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.  நிலைமையின் விபரீதம் புரியாமல் ஏதாவது குழந்தைகள் தவறில் ஈடுபடுவார்களேயானால், அதை பார்க்கும் யார் வேண்டுமானாலும் இதன் உறுப்பினர்களிடம் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யலாம்.

ஒரு காலத்தில் ‘நீதி போதனை’ என்றொரு வகுப்பு பள்ளிகளில் நடத்தப்பட்டது. பல்வேறு நீதிகளும், ஒழுக்கங்களும் கதை வடிவில் குழந்தைகளுக்கு போதிக்கப்பட்டது.  தற்போது பெரும்பாலான பள்ளிகள் இந்த வகுப்புகளை கைவிட்டுவிட்டன. ‘மதிப்பெண்'களை நோக்கி மட்டுமே உதைத்து தள்ளப்படும் குழந்தைகள், வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை இழந்ததற்கு நீதிபோதனை வகுப்புகள் ஒழிக்கப்பட்டதும் ஒரு காரணம்.

ஒவ்வொரு வருடமும் குற்ற சதவீதம் அதிகரிக்கிறதே! இது எங்க போய் நிற்கும்னு தெரியலையே! என்று புலம்ப வேண்டாம். இத்தனை காலம் மறைத்து ஒளித்து வைக்கப்படும் தவறுகள் தற்போது தைரியமாக வெளிவரத் தொடங்கியுள்ளன, அவ்வளவுதான். ஆகையால், பீதியடைய வேண்டியதில்லை.  

இறுதியாக ஒரு குட்டிக்கதை.

ஒரு திருடன். முனிவர் ஒருவரின் சாபத்துக்கு ஆளானான்.  

‘இன்று முதல் ஏதாவது ஒரு திருட்டைச் செய்தால் மட்டுமே உனக்கு உணவு கிடைக்கும். அதே சமயம், ஒரு நாள் சாப்பிடாவிட்டாலும் அன்று இரவே நீ மரணமடைவாய்', என்று சபித்தார் முனிவர்.

வருத்தத்தோடு வீடு திரும்பினான் திருடன். முனிவர் கொடுத்த சாபத்தை பரிசோதிக்க விரும்பினான். அடுத்த நாள், திருடுவதற்கு செல்லாமல், வீட்டிலேயே அமர்ந்து கொண்டான். வயிறு பசித்தது.  வழக்கமாக சாப்பிடும் இடங்களுக்கு சென்றான். எங்கும் உணவு கிடைக்கவில்லை.  

‘முனிவரின் சாபம் பலித்துவிட்டது.  இனி திருந்தி யோக்கியனாக வாழவேண்டும் என்று நினைத்தாலும் வாழமுடியாது. திருடாவிட்டால் உணவு கிடைக்காது, அதே நேரத்தில் சாப்பிடாவிட்டால் அன்று இரவே இறந்துவிடுவான். ஆகையால் இனி திருடுவதைத் தவிர வேறுவழியில்லை', என்ற முடிவுக்கு வந்தான். வழக்கம்போல் திருட்டைத் தொடர்ந்தான்.  

நாட்டில் திருட்டு அதிகம் நடப்பதாக அரசனிடம் மக்கள் முறையிட்டனர். ‘அகப்படும் திருடனுக்கு நூறு கசையடி தண்டனை', என்று சட்டம் இயற்றினான் அரசன்.

‘திருடாமல் இருந்தால் உயிர் போகும், திருடினால் கசையடி மட்டுமே கிடைக்கும்.  உயிரை விடுவதைவிட கசையடியே சிறந்தது.  அதுவும் மாட்டிக்கொண்டால்தானே! ஆகையால் திருடுவதை நிறுத்தக்கூடாது', என்று திருடனின் மனம் கணக்குப்போட்டது. திருட்டு தொடர்ந்தது.    

‘அகப்படும் திருடனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை', என்று மீண்டும் சட்டத்தை திருத்தினான் அரசன்.  

‘திருடாமல் இருந்தால் உயிரே போகும். திருடினால் ஐந்து ஆண்டுகள் சிறை மட்டுமே, அதுவும் மாட்டிக்கொண்டல்தானே! ஆகையால் திருட்டை நிறுத்தக்கூடாது', என்று முடிவெடுத்தான் திருடன்.   திருட்டு தொடர்ந்தது.

 ‘அகப்படும் திருடனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்', என்று மீண்டும் சட்டத்தை திருத்தினான் அரசன்.

‘திருடினாலும், திருடாவிட்டாலும் உயிர் போகும்!' என்ன செய்வது என்று யோசித்தான். அப்போது அந்த வழியே ஒரு சாது வந்தார். அவரிடம் சென்று தன்னுடைய பிரச்னையை தெரிவித்தான் திருடன்.

‘சாதுவே! என் நிலை நிலையைப் பாருங்கள். திருட்டை விட்டுவிட நான் விரும்புகிறேன்.  ஆனால், அது என்னை விட மறுக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் என் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்', என்று வேண்டினான்.

திருடனுக்கு உதவ நினைத்தார் சாது. அவனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

‘திருடனே!  இந்த இடத்தில் அனாதைக் குழந்தைகளும், பிள்ளைகளால்  கைவிடப்பட்ட பெற்றோர்களும் தங்கியிருக்கிறார்கள். தினமும் இவர்களுடன் தங்கி பணிவிடை செய்கிறேன்.  இன்று நீயும் என்னுடன் இணைந்து இவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்', என்றார் சாது.

திருடனுக்கு எதுவுமே புரியவில்லை.  இருந்தாலும் சாது சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்பது என்று முடிவெடுத்தான்.  அங்குள்ள குழந்தைகளை குளிப்பாட்டினான், அந்த இடத்தை சுத்தப்படுத்தினான், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தான்.  சோர்ந்து போய் ஓரிடத்தில் அமர்ந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. பரிதாபமாக சாதுவைப் பார்த்தான்.

‘திருடனே!  வா சாப்பிடப் போகலாம்', என்று கூப்பிட்டார் சாது.

‘ஐயா!  எனக்கு சாப்பாடு கிடைக்காது.  இன்று நான் எந்த திருட்டையும் செய்யவில்லை', என்றான் திருடன்.

‘அப்படியா!  அதையும் பார்த்துவிடுவோம்', என்றவாறு திருடனை சாப்பிடும் இடத்துக்கு அழைத்துச் சென்றார் சாது.  திருடனுக்கு முன் இலையில் உணவு பறிமாறப்பட்டது.  திருடனால் நடப்பவற்றை நம்பமுடியவில்லை.  உணவை எடுத்து சாப்பிடத் தொடங்கினான். எந்த பிரச்னையும் இல்லாமல் சாப்பிட்டு முடித்தான்.  ஆச்சர்யத்தோடு சாதுவிடம் பேசினான்.

‘ஐயா!  இதை என்னால் நம்ப முடியவில்லை. முனிவரின் சாபம் பொய்த்துப் போனது எப்படி?' என்று கேட்டான் திருடன்.

‘இல்லை. முனிவரின் சாபத்திற்கு உட்பட்டே எல்லாமே நடக்கிறது.  இத்தனை காலம் பொருட்களை திருடினாய், உனக்கு உணவு மட்டுமே கிடைத்தது.  இன்று, இவர்களின் மனங்களை திருடியிருக்கிறாய், அதனால் உணவோடு இத்தனை உறவுகளும் உனக்கு கிடைத்திருக்கிறார்கள்.  இந்த உறவுத் திருட்டு உன்னை மனிதனாக்கியுள்ளது', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

திருடன் சிந்திக்கத் தொடங்கினான்.  நாமும் சிந்திப்போம்.   

குடிப்பழக்கமும், பலாத்கார சிந்தனையும் முனிவரின் சாபத்துக்கு ஒப்பானது. இது தவிர்க்க முடியாத தவறாக பலரின் சிந்தனையில் அமர்ந்திருக்கிறது.  த்தகையவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள முயலவேண்டும். சிந்தனையை வேறு பக்கம் திருப்புவதுதான் இதற்கு ஒரே வழி. தவறு, தண்டனை ஆகியவற்றிலிருந்து மனித குலத்தை இது காப்பாற்றும். எல்லாவற்றிற்கும் மேலாக, விலங்குகளிடமிருந்து வேறுபட்டு நிற்கும் மனித குணங்களில் மிக முக்கியமானது ‘ஒழுக்கம்'.   ஒழுக்கத்தை கடைபிடிப்போம்.  அதை குழந்தைகளுக்கும் போதிப்போம்.  குற்றம், குறையில்லாத ஒரு உலகத்தை நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்வோம்.


தொடர்புக்கு: saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com