அயோத்தியும் சர்தார் பட்டேலும்.. ஒன்றிணைக்கும் விஹெச்பி..: வரலாறு என்ன சொல்கிறது?

அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட மத்திய அரசு சட்டம் பிறப்பிக்காவிட்டால் சர்தார் பட்டேலின் வழியை தான் பின்பற்ற வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் பிரவீன் தோகாடியா தெரிவித்துள்ளார்.
அயோத்தியும் சர்தார் பட்டேலும்.. ஒன்றிணைக்கும் விஹெச்பி..: வரலாறு என்ன சொல்கிறது?

அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட மத்திய அரசு சட்டம் பிறப்பிக்காவிட்டால் சர்தார் பட்டேலின் வழியை தான் பின்பற்ற வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் பிரவீன் தோகாடியா தெரிவித்துள்ளார். 

அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியது, 

"ராமர் கோயிலை கட்டுவதற்கு ஒரே வழி சர்தார் பட்டேல் காண்பித்த வழியில் செல்வது தான். அவர் இஸ்லாமியர்களிடம் ஆலோசனை நடத்தாமல், அப்போதைய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமல் தாமாக சென்று சோம்நாத் கோயிலை கட்டினார். சர்தாரை பற்றி பேசும் அரசியல்வாதிகள், நடைமுறையில் அவர் சென்ற பாதையில் செல்ல வேண்டும். 

ராமர் கோயிலை கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் பிறப்பிக்க வேண்டும். நமது கனவை நினைவாக்குவதற்கு அது தான் ஒரே வழி. மத்திய அரசு விரைவில் சட்டத்தை பிறப்பிக்காவிட்டால் அயோத்தியாவுக்கு பேரணி செல்ல தயாராகுங்கள். 

சமுதாயத்தில் இருந்து தனிப்பட்டு இல்லாமல் இருக்க தலித் சமூகத்தில் இருந்து ஒருவரிடம் நட்பு வளர்த்துக் கொள்ளுங்கள். 

இஸ்லாமியர்களின் மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. எனக்கு தெரிந்து 95 லட்ச இஸ்லாமிய மாணவர்கள் நமது வரிப்பணத்தில் இலவசமாக படித்து வருகிறார்கள். இதை நிறுத்த சட்டம் பிறப்பிக்க வேண்டும். நான் பிரிவினைவாதம் குறித்து எதுவும் இங்கு பேசவில்லை. இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தும்" என்றார்.  

அவர் அயோத்தி விவகாரத்தில் பட்டேலை காண்பித்த வழியில் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். பட்டேல் காண்பித்த வழி என்பது அவர் எப்படி சோம்நாத் கோயிலை கட்டினார் என்பது. அந்த வரலாற்றை தற்போதைய அயோத்தி பிரச்சனையுடன் ஒப்பிடலாமா என்பதை வரலாற்றை கூர்மையோடு ஆராய்ந்தால் விடை கிடைக்கும். 

சோம்நாத் கோயில் வரலாறு:

குஜராத் கிர் மாவட்டத்தில் பழங்கால சிவன் கோயில் இருந்தது. அதன்பிறகு இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின் போது அந்த கோயில் சிதைக்கப்பட்டது. இதையடுத்து, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அதை சரிசெய்ய முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், அது சரிவர நடைபெறவில்லை. 

அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் அடைந்த பின் இந்த சோம்நாத் கோயிலை திரும்ப கட்ட வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் தான் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆனால், இதற்கு அப்போதைய பிரதமர் நேரு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இது இந்து பழமைவாதத்தை கொண்டு வருவது போல் உள்ளது என்று நேரு உணர்ந்தார்.

ஆனால், வல்லபாய் பட்டேலும், குஜராத் காங்கிரஸ் தலைவர் முன்ஷியும் காந்தியை தில்லியில் சந்தித்து இதற்கான அனுமதியை அவரிடம் பெற்றனர். 

பின்னர், அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்திய நேரு அரசு சார்பாக இதற்கு நிதி ஒதுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதையடுத்து, பட்டேல் மீண்டும் காந்தியிடம் முறையிட்டார். காந்தி நேருவின் முடிவை வரவேற்று மக்கள் நிதியிலேயே சோம்நாத் கோயிலை சீரமைக்க ஆதரவு தெரிவித்தார். 

அதனால், முன்ஷி தலைமையில் அறக்கட்டளை ஒன்றை பட்டேல் நிறுவினார். இதற்கிடையில், காந்தி படுகொலை செய்யப்பட்டார். பின்னர், சோம்நாத் கோயிலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணி முழுவதுமாக முடிவதற்குள் துணை பிரதமரும் நேருவுக்கு நிகரான மனிதருமான பட்டேல் காலமானார். 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நேருவின் ஆதிக்கம் தொடர வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்ஷி மிகவும் திடமாக இருந்தார். பின்னர் ஒரு அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு நேரு முன்ஷியை அழைத்து இது இந்து பழமைவாதத்தை திரும்ப கொண்டுவருவது என்றார். அதற்கு அப்போது எந்த பதிலும் அளிக்காத முன்ஷி அதன்பிறகு ஒரு கடிதத்தில் மிகப் பெரிய விளக்கத்தை தந்தார். இருப்பினும், நேருவால் அதனை ஏற்க முடியவில்லை.  

பின்னர், அதன் நிறுவ விழாவுக்கு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அழைக்கப்பட்டார். அதற்கு நேரு ராஜேந்திர பிரசாத்திடம் இந்த கோயிலை நிறுவுவது இந்திய மதச்சார்பின்மைக்கு விடும் சவால் என்ற அர்த்தத்தில் அறிவுரை வழங்னார். ஆனால், கிறிஸ்துவ தேவலாயம் மற்றும் மசூதிகளுக்கும் இது போன்று அழைப்பு விடுத்தால் நான் அதில் பங்கேற்பேன் என்று ராஜேந்திர பிரசாத் கூறினார். 

பின்னர், மே 11, 1951-இல் ராஜேந்திர பிரசாத் சோம்நாத் கோயிலை நிறுவினார். இது தான் சோம்நாத் கோயில் வரலாறு.

இதில், சோம்நாத் கோயிலையும் அயோத்தி பிரச்சனையும் ஒன்றிணைப்பது சரியாகுமா என்றால் கேள்விக்குறியே. சோம்நாத் கோயில் என்பது பன்னாட்டு இஸ்லாமிய மன்னர்களால் படையெடுக்கப்பட்டு சேதமடைந்த பழமை வாய்ந்த கோயிலை சீரமைத்தல். அந்த கோயில் அங்கேயே அப்படி தான் இருந்தது. 

அது புதியதாக சீரமைத்து தான் கட்டப்பட்டது. ஆனால், அதுவே இந்திய மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கியது. 

அப்படி இருக்கையில், அயோத்தி பிரச்சனை என்பது இரு மதங்களை உள்ளடக்கும் சர்ச்சைக்குரிய பிரச்சனை. அதனால், அயோத்தியுடன் சோம்நாத் கோயிலை ஒப்பிடுவது  என்பதே நிச்சயம் நடைமுறையில் சரியானது ஆகாது. 

அதுமட்டுமின்றி, சோம்நாத் கோயிலை நிறுவ வேண்டும் என்ற பட்டேல் முடிவே இந்தியாவின் மதச்சார்பின்மை கட்டமைப்புக்கு உகந்ததா என்று ஒரு தலைவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இரு மதங்களை உள்ளடக்கிய ஒரு பிரச்சனைக்கு அதே பாணியில் தீர்வு காண்பது என்பது நிச்சயம் இந்திய மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவே முடியும். 

(வரலாறு: இணையதள குறிப்புகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com