சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில் அது வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞர் கையில் மட்டுமே இருக்கிறது!

சிறுமி ராஜலட்சுமி கொலைக்கான நீதி கிடைக்க வேண்டுமானால் அது அவ்வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞரின் கையில் தான் இருக்கிறது. 
சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில் அது வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞர் கையில் மட்டுமே இருக்கிறது!

சேலம் சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் குற்றவாளி தினேஷை மனநலமற்றவராகக் கருதி வழக்கின் போக்கு மாற்றப்படக் கூடாது எனும் வாதம் தற்போது வலுத்து வருகிறது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உயிரிழந்த சிறுமி ராஜலட்சுமியின் பெற்றோரைச் சென்று சந்தித்து திரும்பியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசுகையில் சிறுமி ராஜலட்சுமியின் தாய் தெரிவித்தது என்னவென்றால், 

‘சம்பவத்தன்று தினேஷ் கையில் அரிவாளுடன் தன் வீட்டுக்குள் நுழைந்த போது தானும் தன் மகளும் பூக்கட்டிக் கொண்டு இருந்ததாகவும், அப்போது ஆத்திரத்துடன் வீட்டினுள் நுழைந்த தினேஷ், தன் மகள் ராஜலட்சுமியை நெஞ்சில் எட்டி உதைத்து ஜாதி ரீதியிலான கடும் வசைச் சொற்களுடன் அவளை வெட்டக் கையை ஓங்கிஒய நேரத்தில், சிறுமி பயத்தில் மிரண்டு கண்ணீருடன்... ஐயோ நான் என்ன தவறு செய்தேன்... என்னை ஏன் அண்ணா வெட்டப் பார்க்கிறீர்கள்? என்று கதறினாள். ஆனாலும் தினேஷ் மனமிரங்காது அவளைத் துரத்திச் சென்று பின் கழுத்தில் அரிவாளால் வெட்டியதில் தலை தனியாகத் தொய்ந்து விழுந்தது. தலையில்லாத உடல் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டபோது என் பெற்ற மனம் தாங்கவில்லை. அவளது உடலை மடியில் கிடத்தி கதறிக் கொண்டிருந்தேன். என் மகளை ஈவு இரக்கமின்றி வெட்டியதோடு அவளது தலையைக் கையிலேந்திக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றிருக்கிறான் அந்த தினேஷ். அவன் வந்த கோலத்தைக் கண்டு அவனது மனைவி, இந்தத் தலையை ஏன் கையிலேந்திக் கொண்டு வந்திருக்கிறாய், அதை அங்கேயே வீசி விட்டு வருவதற்கென்ன? என்று கண்டித்து விட்டு அப்படியே கணவனோடு, தன் சகோதரனையும் அழைத்துக் கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் ஏறி காவல்நிலையம் சென்றனர்.

காவல்நிலையத்தில் , தினேஷின் மனைவி, தன் கணவருக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதாகச் சொல்லி குற்றத்தை ஒப்புக் கொண்டு கணவரைச் சரணடையச் செய்திருக்கிறாள். உண்மையில் தினேஷ் மனநலம் சரியில்லாதவன் அல்ல, அவன் தன் மகள் மேலுள்ள ஆத்திரத்தை ஜாதித் திமிருடன் தணித்துக் கொள்ளவே இப்படி ஒரு காரியத்தை அரங்கேற்றியிருக்கிறான். என் மகள், என் கண்ணெதிரே துடிதுடித்து இறந்ததை தடுக்க இயலாத பாவியாக நான் பதைபதைப்புடன் கதறித் துடித்துக் கொண்டு கண்டதை நினைத்தால் இப்போதும் என் மனம் தாளவில்லை.’ என் மகளது கொலைக்கு நியாயம் கிடைத்தே ஆகவேண்டும்.’ தினேஷை காப்பாற்ற நினைக்கும் அவனது மனைவியின் முயற்சி தோற்க வேண்டும்’ 

என்று சிறுமி ராஜலட்சுமியின் தான் கண்ணீருடன் மன்றாடுகிறார்.

அப்போது உடனிருந்த திருமாவளவன் தெரிவித்தவை;

‘அந்த ஊரில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்த போதிலும், அவர்களெல்லாம் தினேஷ் குடும்பத்தார்கள் அளவுக்கு ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்ல என்கிறார்கள் கிராமத்தார்கள். இந்த ஒரு குடும்பம் மட்டும் தான் இத்தனை அழுத்தமாக தங்களது ஜாதி வெறியை ஊரார் முன்னிலையில் சதா பறைசாற்றும் விதமாக பல நேரங்களில் வெளிப்படையாக ஜாதி துவேஷத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

தினேஷின் பாட்டி பயணம் செய்யும் வாகனத்தில் தனது இருக்கையில் வேறு எவரையும் இதுவரை அமர அனுமதித்ததில்லையாம். அவர் வேற்று ஜாதியினர் கடைகளுக்குச் சென்று ஏதாவது பொருட்கள் வாங்கி வந்தாலும் அந்தப் பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்லும் முன் அவற்றின் மேல் தண்ணீர் தெளித்து சுத்தி செய்து தான் வீட்டுக்குள் எடுத்துச் செல்வாராம்.

அது மட்டுமல்ல, தினேஷின் இரண்டு வயதுக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட சிறுமி ராஜலட்சுமியைத்தான் அழைப்பதுண்டாம். அம்மாதிரியான நேரங்களில் ராஜலட்சுமி, குழந்தையைத் தொட அனுமதியில்லை. எட்டி நின்று கொண்டு அந்தக் குழந்தையை விளையாட வைத்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவார்களாம்.

ஜாதி ரீதியாக இப்படியெல்லாம் நடந்து கொண்டதோடு சிறுமி ராஜலட்சுமிக்கு தினேஷ்  பாலியல் தொல்லையும் கொடுக்கவே அதை அந்தச் சிறுமி, தினேஷின் மனைவியிடம் வெளிப்படுத்தியதால் அவள் மீது தினேஷுக்கு ஆத்திரம் மூண்டிருக்கிறது. தனக்கு நேர்ந்த அவலத்தை தினேஷின் மனைவியிடம் மட்டுமல்ல தனது பெற்றோரிடமும் சிறுமி ராஜலட்சுமி பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார். அதை தட்டிக் கேட்டதற்குத் தான் இப்படியொரு கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் அந்தச் ஜாதி வெறிபிடித்த குடும்பத்தார்.’

- என்று தெரிவித்தார்.

கொலை செய்தது தினேஷ் மட்டுமே... என்ற போதும் மொத்தக் குடும்பத்திற்குமே இதில் தொடர்பு உள்ளது என்று தான் கூற வேண்டும். ஜாதி வேற்றுமைகள் களையப்பட வேண்டும் என்று அரசு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒரு 13 வயதுச் சிறுமி... தனக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தலை வெளியில் சொன்ன காரணத்துக்காக துள்ளத் துடிக்க பெற்றவளின் கண் முன்னே தன் சொந்த வீட்டில் வைத்து கொலை செய்யப் படுவாள் எனில் இது மிக மோசமான முன்னுதாரணம்.

கொலை நிகழ்ந்து விட்டதோடு... குற்றவாளி தன்னை மனநலம் குன்றியவன் எனக்காட்டி செய்த கொலைக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பது அதைக்காட்டிலும் கொடூரமான செயல்.

சிறுமியைக் கொன்ற ஜாதி வெறியன் நிச்சயம் தண்டனைக்குள்ளாக வேண்டும். ஜாதிப்பற்று என்பது வேறு. ஜாதி வெறி வேறு. தினேஷின் கொடூரச் செயலில் வெளிப்பட்டது ஜாதி வெறி  மட்டுமல்ல, தான் ஆண், எனும் திமிரும் தான். அது மட்டுமல்ல, தான் சார்ந்திருக்கும் ஜாதியின் காரணமாக, தான் செய்த கொடூரச் செயலில் இருந்து தப்பித்து குற்றமற்றவனாகத் தன்னால் மீள முடியும் எனும் நம்பிக்கையும் வேறு அவரது சரணடைதலில் தொனிக்கிறது. இதைக் காவல்துறை மட்டுமல்ல இந்தச் சமூகமும் அனுமதிக்கவோ, அங்கீகரிக்கவோ கூடாது.

சிறுமியைக் கொன்றவன் தண்டிக்கப்பட வேண்டும்.

சிறுமி ராஜலட்சுமி கொலைக்கான நீதி கிடைக்க வேண்டுமானால் அது அவ்வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞரின் கையில் தான் இருக்கிறது. 

இந்த வழக்கை ஏற்று நடத்தவிருக்கும் வழக்குரைஞர் திறமை மிகுந்த வழக்குரைஞராக இருந்தால் மட்டும் போதாது. சமூக அமைப்பு ரீதியாக, ஜாதி ரீதியாக நடுநிலைமை பேணக்கூடியவராக, ஒரு அப்பாவிச் சிறுமியின் கொலைக்கான நீதியைப் பெற்றுத்தரும் அளவுக்கு மனிதாபிமானம் கொண்டவராக இருந்தால் மட்டுமே இந்த வழக்கில் உறுதியாக நீதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com