இருபது தொகுதி இடைத்தேர்தல்: கட்சிகளும் கணக்குகளும்..! 

நடைபெறவுள்ள பேரவை இடைத் தேர்தல் பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இடைத் தேர்தலோடு அனைத்துத் தேர்தல்களும் முடிவடைந்து விட்டால் விவாதங்களின்றி போய்விடும். ஆனால் அரசியல் சூழ்நிலை... 
இருபது தொகுதி இடைத்தேர்தல்: கட்சிகளும் கணக்குகளும்..! 

நடைபெறவுள்ள பேரவை இடைத் தேர்தல் பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இடைத் தேர்தலோடு அனைத்துத் தேர்தல்களும் முடிவடைந்து விட்டால் விவாதங்களின்றி போய்விடும். ஆனால் அரசியல் சூழ்நிலை அவ்வாறிருக்க விடவில்லை என்றால்  மிகையில்லை. நீண்ட கால அரசியல் மாற்றங்களை இடைத் தேர்தல் ஏற்படுத்தக்கூடும் என்பதே அதனுள் பொதிந்துள்ள அரசியல் சூட்சமம்.

ஒருபுறம் ஆளும்கட்சிக்கு அக்னிப்பரீட்சை என்றால் மற்றொருபுறம் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இது கடும் பரீட்சைக்கான நேரம். இன்னும் சொல்லப்போனால் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் பெற 7-8 இடங்களில் வென்றால் கூடப் போதும். ஆனால் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் 20 இடங்களிலும் வென்றாக வேண்டும். அப்போது கூட 117 இடங்களே கிடைக்கும். பெரும்பான்மைக்கு ஓரிடம் குறைவு. இந்த நிலையில் தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையில், (நிச்சயம் ஜனவரி வரை கிடையாது போலுள்ளது), இப்போதே சில அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. மழைக்காலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது பொருத்தமில்லை என்று கூறும் மாநில அரசு ஜனவரி வரை அதாவது பொங்கல் வரை தேர்தலை நடத்த விரும்பாது என்பது உறுதியாகத் தெரிகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் வேறு நடத்தப்பட வேண்டும் என்பதால் இரண்டையும் இணைத்து ஒரே வாக்குப்பதிவாக நடத்துவதே வசதி.

அது மட்டுமின்றி பொங்கல் விடுமுறை ஏறக்குறைய ஒரு வாரம் முழுவதையும் ஆக்கிரமிக்க உள்ள நிலையில் ஜனவரி 18-20 தேதிகளில் இத்தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது. பொங்கல்  விடுமுறைக்கு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் தரப்பிற்கான வாக்குச்சேகரிப்பை தீவிரமாக்குவர். எனவே வாக்குப்பதிவு 80% தைக் கூடத் தொட நேரிடலாம். தேர்தல்கள் தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் ஆளும் கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியும், புதிதாக களம் காண இருக்கும் அமமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் இறங்குவர். எனவே பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

தினகரனின் எதிர்பார்ப்பு:

பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தது சரி என்று தீர்ப்பு வந்த உடன் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி இரண்டு வாய்ப்புகளையும் முன் வைத்தார். அதாவது, மேல்முறையீடு கூடவே தேர்தலை அறிவித்தால் அதனையும் சந்திப்பது. ஆனால் தேர்தல் ஆணையமோ மேல்முறையீட்டிற்குச் செல்லும் பட்சத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. இப்போது மேல்முறையீட்டிற்குச் செல்வதில்லை என்று அமமுக முடிவு செய்துள்ளது.

இதன் எதிர்பார்ப்பு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கட்டும்; அதனைப் பொறுத்து மேல்முறையீட்டிற்குச் செல்லலாம், என்பதுவே. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டு உச்சநீதிமன்றம் செல்லும் போது தன்னால் நியமிக்கப்பட்ட நீதிபதியின் தீர்ப்பை அது விரைவில் ஏற்கும்பட்சத்திலோ அல்லது தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறும்பட்சத்திலோ நிலைமை மேலும் சிக்கலாகும். உச்ச நீதிமன்றம் சென்றால் மக்கள் மன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்று பிரச்சாரம் செய்யப்படும். மக்கள் மன்றத்திற்கு நேரடியாகச் செல்லும் பட்சத்தில் இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை எனும் கேள்வியும் தவிர்க்கவியலாததாக எழும். பதவி நீக்கத்தை எதிர்த்து மக்கள் மன்றத்தை முதலிலேயே நாடி இருந்தால் ஆர்.கே நகரில் கிடைத்தது போன்றதொரு எதிர்பாராத வெற்றி கூட கிடைத்திருக்கலாம்; இன்று அது கை கூடுமா எனும் கேள்வி தொக்கி நிற்கிறது. 

தினகரனின் கணக்கு முடிந்தவரை இந்த அரசை பெரும்பான்மை அற்றதாக (118 எனும் எண்ணிற்கு கீழே) வைத்திருப்பது எனும் பட்சத்தில் இந்த உத்தி ஒருவேளை பலன் தருவதாக இருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி துவங்கியதன் மூலம் அதிமுக தன்னை
நிலைநிறுத்திக் கொண்டு விட்டது எனும் கருத்தே பரவலாக உறுதிப்படும். இப்புதிய பிரச்சார ஆயுதம் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு செய்துள்ள சாதனைகளைப் பட்டியல் போட்டு பிரச்சாரத்தில் பயன்படுத்துவார்கள். தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நேரத்தில் கிடைத்த வாய்ப்பை அவர்கள் தவற விடமாட்டார்கள். இடைத்தேர்தலைச் சந்திக்கும் தொகுதிகளின் ஒவ்வொரு மூலைக்கும் தங்கள் பரப்புரைகளைக் கொண்டு சேர்க்க அவர்களுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு. ஆகையால் தினகரனைப் பொறுத்தவரை இப்போதும் தாமதிக்காமல், மேல் முறையீட்டிற்கான கால வரம்பு முடிவதற்குள் உச்சநீதிமன்றத்தை அணுகுவது கூடுதலாக கால அவகாசத்தைக் கொடுக்கும். அதற்குள் ஸ்டெர்லைட் போராட்டாம்-துப்பாக்கிச் சூடு போன்றதொரு சர்ச்சை எழுந்தால் அதனைத் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள நல்வாய்ப்பாகும்.

தவிர அதிமுக மறைமுகமாக பாமக, தலித் கட்சிகள் இரண்டுடன் இணக்கமாக முயற்சிப்பதாக கூறப்படுவதையும் காண வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பாமக 51 இடங்களில் அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்ததோடு வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது. அதே போல இடைத் தேர்தலைக் காணவுள்ள ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பொதுத் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் வட மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கியும் முக்கியமானது. இந்தக் கட்சிகளை ஒரு உடன்பாட்டிற்குள் கொண்டு வந்து ஏதேனும் ஒரிரு இடங்களில் நீங்கள் வெற்றிபெற்றுக்கொள்வதற்கு அதிமுக ஒத்துழைக்கும். கைமாறாக இதர இடங்களில் அதிமுக வெற்றிப் பெற உங்கள் ஆதரவு வாக்குகளை கொணர்ந்துச் சேர்க்க வேண்டும் எனும் மறைமுக ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் ஆளும் கட்சிக்கு மிகவும் வசதியான சூழல் கிடைக்கும். இதை அமமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் விடையற்றக் கேள்வியாகவுள்ளது.

திமுகவின் பலமுனைச் சிக்கல்:

தனது சகோதரர் மு.க. அழகிரி எவ்வளவு வாக்குகளைப் பிரிப்பார்; பலமுனைப் போட்டி ஒன்றில் திமுகவின் இப்போதைய பலம், பலவீனம் என்ன என்பதை மு. க. ஸ்டாலின் துல்லியமாக கணக்கிட்டிருக்கலாம். பொதுத் தேர்தலில் 54 இடங்களில் மூன்றாவதாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களால் 89 இடங்களைப் பெற்றது ஒரு பலம் என்றால், இடைத் தேர்தல்களில் அதே போல மக்கள் வாக்களிப்பார்களா அல்லது எப்போதும் போல ஆளும் கட்சிக்கே வாக்குகளை அளிப்பார்களா என்பதுத் தெரியாது. மேலும், சீமான் கட்சி, தேமுதிக, தமாகா, கமல், ரஜினி(?) கட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். இத்துடன் புதிய போட்டியாளராக உருவெடுத்துள்ள அமமுகவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

இது தவிர பாஜகவும் கூட எதிர்பார்க்க இயலாத எதிரிதான். பொதுத் தேர்தலில் 17 இடங்களில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெற்றி வாய்ப்பை பாதித்தக் கட்சியையும் இடைத் தேர்தலில் புறக்கணிக்க முடியாது. ஒரே ஆறுதல் சென்றமுறை மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக, இடதுகள், விசிக ஆகியன இப்போது பழைய கூட்டாளிகளான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்குடன் இணைந்துள்ளதாகும். பொதுத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றி வாய்ப்பை மாற்றியமைத்தது மக்கள் நலக் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுகவின் நிதானம்:

ஆட்சியில் இருப்பதே தங்களுக்கு மிகப் பெரிய அனுகூலம் எனும் உறுதியான நம்பிக்கையில் நிதானமாக காய் நகர்த்தி வருகிறது ஆளும் கட்சி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் 10 பேர் உறுதியான வெற்றியை அதாவது மூன்றாவதாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரின் தயவின்றி பொதுத் தேர்தலில் வென்றுள்ளனர். இது அமமுகவிற்கே சாதகம் எனும் வாதம் இருந்தாலும் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இரட்டை இலையும், ஜெயலலிதாவும் இருந்ததைப் புறக்கணிக்க இயலாது. இரட்டை இலைச் சின்னத்தினைப் பெற கையூட்டு கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் வென்றதால் தினகரன் இரட்டை இலையை இன்று ஒரு பொருட்டாக கருதாமல் இருக்கலாம். இடைத் தேர்தல் காணும் தொகுதிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவை. இரட்டை இலை வாக்குப் பெட்டியில் இருந்தாலே போதும், அதற்கு நேரான நீலப் பொத்தானை அழுத்துவோர் பலர் இருக்கும் போது சின்னத்தைப் பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளால் இருக்க முடியாது. இதுவும் அதிமுகவின் பலம்.

கடைசியாக, முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக பரவிய செய்தியின் அடிப்படையில் 20 தொகுதிகளில் வெல்லாவிட்டாலும் ஆட்சியைக் காத்துக் கொள்ள 7 அல்லது 8 இடங்களில் வென்றாலே போதும் எனும் பலவீனமான நிலையில் அதிமுக இருக்கிறது என்றாலும் கூட, ஆளும் கட்சியைத் தோற்கச் செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் மனநிலையில் மக்கள் உள்ளனரா என்பது கேள்விக்குறியே.

இந்த 20 தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசுவதற்கான வாய்ப்பு அரசியல் ரீதியானது மட்டுமேயாக இருக்கலாம். மற்றபடி, எட்டு வழிச் சாலைப் பிரச்சினையோ, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடோ இங்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது ஐயமே. தொகுதிப் பிரச்சினைகளில் இதுவரை ஆளும் கட்சி பேரவை உறுப்பினர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அக்கறை காட்டினரா என்பதே விவாதப் பொருளாகும். முதல்வரோ அத்தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கின்றன என்கிறார். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு; மக்களின் நம்பிக்கை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com