நாயுடுகாருவின் சந்தர்ப்பவாதம்: தமிழகத்துக்கு நல்லதா?

நவம்பர் மாதம் 1ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணம் உலகின் பார்வையை ஈர்த்தது. டெல்லியில் பரம எதிரி காங்கிரஸ் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்தார். கொள்கைகளையும்,
நாயுடுகாருவின் சந்தர்ப்பவாதம்: தமிழகத்துக்கு நல்லதா?

நவம்பர் மாதம் 1ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணம் உலகின் பார்வையை ஈர்த்தது. டெல்லியில் பரம எதிரி காங்கிரஸ் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்தார். கொள்கைகளையும், வேறுபாடுகளையும் புறம்தள்ளிவிட்டு பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை தொடங்கினார். கிட்டத்தட்ட இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

தன்னுடைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி தரவில்லை என்ற அடிப்படையிலேயே அவர் பாஜக அரசிலிருந்து வெளியே வந்து புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆந்திர மக்கள் பிரச்னையை உணர்வுபூர்வமாக பார்த்தால் நாயுடுகாருவின் இந்த முடிவு மிகச்சரி என்றே சொல்வார்கள். அதே நேரத்தில் மற்ற மாநிலத்தவர்கள் இந்த முடிவை ஏன் ஆதரிக்க வேண்டும்? இதனால் தமிழகத்திற்கு என்ன லாபம்?

ஆந்திராவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு மத்திய அரசை தள்ளியது முந்தைய காங்கிரஸ் அரசு வகுத்த நிதிக் கொள்கைகள். அதனால்தான் மாநிலத்தை பிரித்த காங்கிரஸ் அரசு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி போன்றவற்றை பற்றிய அறிவிப்பு வெளியிடவில்லை. ஒருவேளை இந்த ஆட்சி போய், மீண்டும் காங்கிரஸே ஆட்சியில் அமர்ந்தாலும் இதே நிலைதான் தொடரும். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆகையால், நாயுடுகாருவின் முயற்சி பாஜக மீது அவர் கொண்ட வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறது.

‘நினைத்தது நடக்கவில்லை!' என்பதற்காக மற்றவர்களை ஒன்றுதிரட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால், புதிய ஆட்சிக்கு எதிராகவும் பின்னொரு நாளில் இதே போன்ற ஒன்றுதிரட்டல் தவிர்க்க முடியாததாகிவிடும். இது ஆரோக்கியமான அரசியலல்ல. அடுத்தவரை வீழ்த்துவது மட்டுமே கட்சிகளின் கொள்கையாக மாறுமேயானால், அது நாட்டுக்கு நல்லதல்ல. இரண்டு பேர் ஒரே கருத்தை எப்போதுமே சொல்கிறார்கள் என்றால், அந்த இருவரில் ஒருவர் தேவையற்றவர். இதுதான் யதார்த்தம்.

தெலுங்கு தேசம் கட்சியைப் பொறுத்தவரை எல்லாமே என்.டி.ஆர் தான். மக்களைப் பொறுத்தவரை அவர் கடவுள், “தேவுடுகாரு”. 1982ல் கட்சியை தொடங்கினார். கொள்கைகள், சின்னம் எல்லாமே அவர் ஒருவரின் சிந்தனைக் குழந்தைகள். கட்சி தொடங்கப்பட்டவிதம், வளர்ச்சி, ஆட்சியை பிடித்த வரலாறு ஆகியவற்றை உலகத்தின் எந்த பகுதியிலும் பார்க்கமுடியாது. எந்த ஒரு தனி மனிதரையும் அவர் முன்னோடியாக வைத்துக்கொள்ளவில்லை. அவரின் வெற்றிக்கு உதவியவை இரண்டு. ஒன்று, அவரது வசீகரம். இரண்டாவது, ‘காங்கிரஸ் எதிர்ப்பு'. ஆம்! “காங்கிரஸ் கட்சி ஒழிக்கப்பட வேண்டும்” என்பதுதான் அவரது கொள்கை. ஆனால், தற்போதைய முதல்வர்  சந்திரபாபு நாயுடு அடிப்படையில் காங்கிரஸ்காரர். 1970களில் மாணவ காங்கிரஸில் துடிப்போடு இருந்தவர். காங்கிரஸ் (ஐ) சார்பில் போட்டியிட்டு 1978ல் எம்எல்ஏ ஆனார். பிறகு என்.டி.ஆர் அவர்களின் மகளை திருமணம் செய்துகொண்டார். தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தனது அல்லுடுகாருவான நாயுடுகாருவை முழுமையாக நம்பினார். என்.டி.ஆர். ஒருவரின் நம்பிக்கை பொய்த்துப்போனால் என்னாகும்? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு சாது. பசு ஒன்றை வளர்த்து வந்தார். அது மேய்ச்சலுக்கு சென்றிருந்த நேரம் அதன் கன்று இறந்து போனது. வருத்தமடைந்தார் சாது. அதே நேரத்தில் தாயை இழந்த புலிக்குட்டி ஒன்று சாதுவிடம் தஞ்சமடைந்தது. யோசித்தார் சாது. சட்டென்று சில மந்திரங்களை உச்சரித்தார். உடனே புலிக் குட்டி கன்றாக உருமாறியது. நடந்தது எதுவுமே தெரியாத பசு வழக்கம் போல கன்றுக்கு பாலூட்டியது. சாதுவுக்கு மகிழ்ச்சி, காரணம் புலிக்குட்டி இனி அனாதையல்ல.

நாட்கள் சென்றன. ஒரு நாள் கன்று சாதுவை சந்தித்தது.

‘ஐயா! என்னுடைய குரல் புலியின் குரலாகவே இருக்கிறது. அதை கன்றின் குரலாக மாற்றுங்கள்', என்றது. அது கேட்டுக் கொண்டபடி குரலை மாற்றினார் சாது. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாதுவிடம் வந்தது.

‘ஐயா! மற்ற கன்றுகளைப் போல எனக்கு கொம்புகள் இல்லை. ஆகையால், எனக்கு கொம்பு முளைக்கும்படி செய்யுங்கள்', என்றது கன்று. கேட்டுக் கொண்டபடி வரமளித்தார் சாது.

மகிழ்வோடு சென்ற கன்று தாய்ப் பசுவுடன் கன்று காட்டின் பல பகுதிகளுக்கும் சென்றது. அங்கு வசிக்கும் பசுக்களோடு அன்போடு பழகியது. அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு பசுவாக கொன்று தன் பசியை தீர்த்துக் கொண்டது. சில மாதங்களில் காட்டில் இருந்த எல்லாப் பசுக்களும் கொல்லப்பட்டுவிட்டன. தாய்ப்பசு மட்டுமே மிச்சம். அது சாதுவை சந்தித்தது. வழக்கமாக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சாது அன்று உயரமான மரக்கிளையில் அமர்ந்திருந்தார்.

‘ஐயா! கன்று எல்லோரிடமும் பாசத்தோடு பழகுகிறது. ஆனால், அது எந்தப் பசுவோடு பழகுகிறதோ, அந்தப் பசு சில தினங்களில் இறந்துவிடுகிறது. அது ஏன்', என்று கேட்டது பசு.

‘பசுவே! அது பரமரகசியம். அதைத் தெரிந்து கொள்ள நினைக்காதே!' என்று எச்சரித்தார் சாது.

பசு தொடர்ந்து வற்புறுத்தவே, வேறுவழியில்லாமல் புலிக்குட்டி கன்றாக மாறிய ஃப்ளாஷ் பேக் நிகழ்வை சொல்லி முடித்தார் சாது. அதிர்ந்து போனது பசு.

‘ஐயா! கன்று தினமும் என் பாலை குடித்து வளர்ந்துள்ளது. என் மீது அன்பும் பாசமும் அதிகம். ஆகையால் எனக்கு எந்த பிரச்னையுமில்லை', என்றது பசு.

‘பசுவே! ஒரு உண்மையை தெரிந்துகொள். கன்று முதலில் தன் குரலை மாற்றும்படி கேட்டது. அடுத்ததாக கொம்பு வேண்டும் என்று கேட்டது. ஆனால், ஒருமுறை கூட தன்னை ஒரு முழுமையான கன்றாக மாற்றும்படி அது கேட்கவில்லை. அது கன்று உருவில் வாழும் புலியாகவே இருக்க விரும்புகிறது. காரணம், புலியாக இருந்தால் அங்குமிங்கும் ஓடி, வேட்டையாடி உணவை சாப்பிட வேண்டும். ஆனால், கன்று உருவில் இருந்தால், அந்த கஷ்டமெல்லாம் இல்லை. பசுக்களுடன் பழகலாம், விளையாடலாம். பசிக்கும் போது அவற்றை அடித்து சாப்பிடலாம். அதுமட்டுமில்லாமல், பசுக்களுக்கே உரித்தான பரிவோ, புலிகளுக்கே உரித்தான வீரமோ அதனிடம் கிடையாது. ஆனால், அந்த இரண்டு விலங்குகளைவிட அதிகமான ஆதாயத்தை கன்று உருவில் அது பெறுகிறது. ஏமாற்றுதல், நயவஞ்சகம், நம்பிக்கை துரோகம் ஆகிய எல்லா கெட்ட குணங்களின் மொத்த உருவம்தான் கன்று. நீ கொடுத்த பால் அதற்கு உணவாக மட்டுமே மாறியிருக்கிறது. பாசமாக மாறவில்லை', என்றார் சாது.

பசு நம்பவில்லை. அவரைப் பார்த்து நக்கலாக ஒரு கேள்வி கேட்டது.

‘அது சரி! உங்களை மரத்தடி சாது என்றுதானே எல்லொரும் சொல்லுவார்கள். இப்போது மரக்கிளை சாதுவாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டது.

‘பசுவே! கன்றைப் பற்றிய மற்றொரு உண்மையை தெரிந்துகொள். “யாராவது அதன் ரகசியத்தை தெரிந்து கொண்டாலோ, அல்லது தெரிந்தகொண்ட ரகசியத்தை யாரிடமாவது சொன்னாலோ கன்று அவர்களை கொன்றுவிடும். இதுவும் நான் அதற்கு கொடுத்த வரம். அதனால்தான் நான் மரக்கிளைக்கு இடம்பெயர்ந்து விட்டேன். புலிக்கு மரம் ஏறத் தெரியாது என்பது உனக்கு தெரியுமா?', என்று கேட்டார் சாது.

ஆடிப்போனது பசு.

‘அய்யோ! புலிக்கு மட்டுமல்ல, எனக்கும் மரம் ஏறத் தெரியாது', என்று சொல்லிவிட்டு ஓடத் துவங்கியது பசு. துரத்திக் கொண்டு ஓடியது கன்று. பசு தப்பித்ததா என்பது நமக்குத் தேவையில்லை. அது ஓடட்டும் நாம் தொடர்ந்து படிப்போம்.

இந்தக் கதையில் வரும் கன்றின் சிந்தனைக்கு சற்றும் சளைக்காதவர் நாயுடுகாரு. தன்னை நம்பிய தேவுடுகாருவை துரோகத்தால் சாய்த்தவர். தமிழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்த கூவத்தூர் பார்முலாவை தென்னிந்தியாவிற்கு முதன்முதலில் 1984ம் ஆண்டே அறிமுகப்படுத்தியவர். என்.டி.ஆர் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் பகீரத பிரயத்தனத்தை மேற்கொண்டது. 160 எம்.எல்.ஏக்களை கோல்கொண்டாவில் உள்ள தன்னுடைய ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் தங்க வைத்தார் நாயுடுகாரு. அவர்களுக்கு காவலாக நின்றவர் பாஜகவைச் சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

இதே போன்ற மற்றொரு நிகழ்வு 1995ம் ஆண்டு நடந்தது. இம்முறை அவர் நிகழ்த்தியது காங்கிரஸுக்கு எதிராக அல்ல. தன் சொந்தக் கட்சியின் தலைவரும், தனது மாமனாருமான என்.டி.ஆருக்கு எதிராக. ஆம், தீட்டிய மரத்தில் கூறு பார்த்தார் நாயுடுகாரு. 1995ம் ஆண்டு என்.டி.ஆருக்கு எதிராக 150 எம்.எல்.ஏக்களை ஹைதராபாத்தில் உள்ள வைசிராய் ஹோட்டலில் தங்கவைத்தார் ஹோட்டலின் அலுவலகத்தில் தானே அமர்ந்து நடப்பவற்றை மேற்பார்வை செய்தார். தன் பிடி நழுவுவதை உணர்ந்த என்.டி.ஆர் ஹோட்டல் வாசலுக்கு வந்தார். உரத்த குரலில் தன் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்தார். யாரும் பதிலளிக்கவில்லை. அப்போது அவருக்கு அருகில் ஒற்றை செருப்பு ஒன்று ‘பொத்'தென்று விழுந்தது. மற்றொரு எம்.எல்.ஏ. பக்கத்தில் இருந்த அவரின் மனைவிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். என்.டி.ஆர் இதை எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக நின்றார். பிறகு சோகமாக அங்கிருந்து நகர்ந்தார். அந்த நிகழ்விற்குப் பிறகு வெளியே செல்வதை தவிர்த்தார். ஆனால் செப்டம்பர் 1995ல் நாயுடுகாரு முதலமைச்சராக பதவியேற்றார், கட்சியும் அவர் வசம் சென்றது. நாயுடுகாருவின் துரோகம் என்.டி.ஆரை வாட்டியது. அந்த நினைவிலேயே ஜனவரி 1996ல் மரணமடைந்தார். என்.டி.ஆர் செய்தது சரியோ, தவறோ, கட்சி அவருடையது, மக்கள் வாக்களித்தது அவருக்காக. நாயுடுகாருவின் துரோகம் என்.டி.ஆர் என்ற கோட்டையை சரித்தது என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட துரோக வரலாறு.

ஆந்திராவின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காக காங்கிரஸை சேர்ந்த ப. சிதம்பரம் மாநிலத்தை துண்டாக்கினார் என்றெல்லாம் ஆந்திராவில் உள்ளவர்கள் கொதித்து எழுந்தனர். இப்போது என்னாச்சு? மாநிலத்தை துண்டாடிய காங்கிரஸுடன் கூட்டு வைப்பது எந்த சித்தாந்தத்தின் படி நியாயம். காங்கிரஸ் செய்த தவறுக்கு பாஜக கூண்டில் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? நொங்கு திண்ணவனை விட்டுவிட்டு நோண்டித் திண்ணவனை குறை சொல்வது சரியா?

இன்னொரு நெருடலான விஷயம், தமிழக எதிர்கட்சிகள் நாயுடுகாருவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது.

செம்மரம் வெட்டினார்கள் என்று பன்னிரெண்டு தமிழர்களை சுட்டுக்கொன்றது நாயுடுகாருவின் அரசு. அன்று வானத்திற்கும், பூமிக்கும் குதித்த எதிர்கட்சிகள், இன்று நாயுடுகாருவின் பின்னால் ஏன் அணிவகுக்க வேண்டும்?

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் 23 இடங்களில் தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்த ரூபாய் 42 கோடு ஒதுக்கீடு செய்துள்ளது நாயுடுகாருவின் அரசு. இதனால், ஐந்து மாவட்ட விவசாயம் முற்றிலும் அழிந்து போகுமே! இது எதிர்கட்சிகளுக்கு தெரியாதா? இவருடன் கூட்டு சேர்வது தமிழகத்திற்கு நல்லதா? மோடிக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கு துரோகம் நினைக்கும் நாயுடுகாருவை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் பல முதலீடுகளை கவரும். அதனால் அண்டை மாநிலங்கள் பாதிப்படையும் என்று அன்றைய தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை வலியுறுத்தி தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளின் ஆதரவை ஒருவர் பெறுகிறார் என்றால், தமிழர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் சிறப்பு அந்தஸ்து கோரும் நாயுடுகாருவை ஏன் தமிழக எதிர்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்?

தமிழகம், மத்திய பிரதேசம், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஆனால், கூட்டணி தொடர்பாக நாயுடுகாரு மேற்கு வங்க முதல்வரை சந்திக்கிறார் என்ற செய்தி வருகிறது. இது என்ன அரசியல்? சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை நாயுடுகாரு விட்டுக்கொடுக்க போகிறாரா அல்லது மம்தா பேனர்ஜி ஆந்திரத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போகிறாரா? இந்த இரண்டும் நடக்காதபட்சத்தில் இவர்களிடம் கொள்கைகளோ, கோட்பாடுகளோ எதுவுமில்லை என்று புரிந்துகொள்ள நேரிடும்.

தெலுங்கு தேசம் கட்சி முதலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 1999, 2004 மற்றும் 2014ம் ஆண்டுகளில் பாஜாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 2009ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ‘எல்லா கூட்டணிகளும் காங்கிரஸுக்கு எதிராகத்தான் ஏற்படுத்தப்பட்டது'. ஆனால், தற்போது காங்கிரஸுடன் கூட்டணி என்ற செய்தியை படிக்கும் போது நாயுடுகாருவின் சுய நலனும், சந்தர்ப்பவாதமும் நமக்கு புரிகிறது.

முதுகில் குத்துவது நாயுடுகாருவுக்கு புதிதல்ல. முதலில் என்.டி.ஆர். முதுகில் குத்தினார். பிறகு, பாஜகவின் முதுகில் குத்தினார். பிறகு, டி.ஆர்.எஸ் கட்சியின் முதுகில் குத்தினார், தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் முதுகிலும், ஆந்திர மக்களின் முதுகிலும் குத்தியிருக்கிறார். ஏமாந்தால் தமிழன் முதுகிலும் குத்திவிடுவார். ஆகையால், முதுகும், முதுகெலும்பும் இல்லாதவர்கள் வேண்டுமானால் அவருடன் பயணிக்கட்டும். நாம் பயணிக்க வேண்டாம். தன்னுடைய தலைவன் முதுகிலே குத்திய அல்லுடுகாரு, தமிழன் முதுகிலும் குத்தமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அவருடன் கூட்டு சேர்பவர்களுக்கு வேண்டுமானால் தனிப்பட்ட ஆதாயங்கள் கிடைக்கலாம், தமிழகத்திற்கு அநீதி மட்டுமே மிஞ்சும்.

அல்லுடுகாரு! அரவாடு விப்பு, தேவுடுகாரு விப்புலேது!

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com