நிஜத்தை கனவு காணும் நிதர்சனம்! இது ஒரு உருக்கமான உண்மைக் கதை

சுருள் சுருளான தலைமுடி ஒரு ரிப்பனால் கட்டப்பட்டிருக்க, வெள்ளை நிற சல்வார் அணிந்த, உற்சாகம் ததும்புகிற ஒரு பன்னிரண்டு வயதான சிறுமி
நிஜத்தை கனவு காணும் நிதர்சனம்! இது ஒரு உருக்கமான உண்மைக் கதை

சுருள் சுருளான தலைமுடி ஒரு ரிப்பனால் கட்டப்பட்டிருக்க, வெள்ளை நிற சல்வார் அணிந்த, உற்சாகம் ததும்புகிற ஒரு பன்னிரண்டு வயதான சிறுமி, நாற்காலியில் அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்து புன்னகைத்த போது, அவளோடு சேர்ந்து புன்னகைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. உண்மையான, மகிழ்ச்சியான மற்றும் குழந்தைகளிடம் வெளிப்படுகின்ற கள்ளங்கபடற்ற புன்னகையாக அது இருந்தது. அதன் பிறகு, உரையாடலை நாங்கள்  ஆரம்பித்தபோது, அவளது வாழ்க்கைப் பயணம் குறித்து சிநேகா என்ற அந்த சிறுமி என்னிடம் கூறத்;தொடங்கினாள்.

அவளது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு செங்கற்சூளை முதலாளியிடமிருந்து அவளது பெற்றோர்களான விஜய் மற்றும் பூங்காவனம் தொடக்கத்தில் ரூ. 15,000 என்ற முன்பணத் தொகையை கடனாக வாங்கியிருந்தனர். இதைத் தொடர்ந்து அவளது பெற்றோர்களுடனும் தங்கை சின்னத்தாய் மற்றும் தம்பி முத்துக்குமாரோடு சேர்ந்து சிநேகா என்ற இந்த சிறுமியும் செங்கற்சூளைக்கு வேலைக்காக சென்றனர். அப்போது சிநேகாவுக்கு 4 வயது கூட நிறைவடையவில்லை. வாங்கிய முன்பணத்தை திரும்ப செலுத்துவதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வு ஒழிச்சலின்றி குடும்பமே அங்கு வேலை செய்தது. சிறுமியாக இருந்தபோதிலும், களத்தின் மீது மணலை பரப்புமாறு சிநேகா வேலை செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் களத்திலிருந்து செங்கற்களை அவளது பெற்றோர்கள் வார்க்க முடியும்.

சிநேகா வளரத் தொடங்கியபோது, முதலாளி இன்னும் அதிக வேலையை சிநேகா மீது திணித்தார். செங்கல் செய்வதற்கு களிமண்ணை பெற்றோர்கள் தயார் செய்த போது ஒரு தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றும் வேலை அவள் மீது விழுந்தது. அதன்பிறகு களத்தை சுத்தப்படுத்தி, களத்தை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய தார்ப்பாய் ஷீட்டுகளை மடித்து வைப்பதும், செங்கற்கள் ஒரே மாதிரியாக உலர்வதற்காக அவைகளை முறையாக அடுக்கி வைக்கும் பணியும் அவளுக்கு தரப்பட்டது. சில நேரங்களில், செங்கற்கள் நேர்த்தியாக வெட்டப்படுவதற்காக பிசிறுகளை சரியாக அகற்றவும் அவள் உதவ வேண்டியிருந்தது.

ஒவ்வொருநாளும் அதிகாலையில் 3 மணிக்கு விஜய் மற்றும் அவரது அம்மா பூங்காவனத்தை செங்கற்சூளை முதலாளி எழுப்பிவிடுவார். அவர்களோடு சேர்ந்து சிநேகாவும் கண்விழிப்பதோடு அவளால் முடிந்தவரை அவளது பெற்றோர்களுக்கு அவள் உதவுவாள். தூக்கம் கண்களை அழுத்தும்போது, அவளது பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, செங்கற்களால் ஏற்படுகிற வலியை பொருட்படுத்தாமலேயே அவர்களுக்கு அருகில் களத்திலேயே சிநேகா தூங்கிவிடுவாள்.

களத்துக்கு அருகே குட்டிப்பெண் சிநேகா தூங்குவதை முதலாளி பார்க்கும் போதெல்லாம் வேலை செய்ய அவளை உடனே எழுப்பிவிடுமாறு அவளது தந்தையை பார்த்து கத்துவார். சிநேகா உட்பட குழந்தைகளை, பாத்திரங்களில் தண்ணீரை நிரப்புமாறு அதட்டுவார். தலையிலிருந்து பாதம் வரை அழுக்கும், சகதியும் ஒட்டியிருக்க தண்ணீர் பானையை உறக்க கலக்கத்திலேயே கஷ்டப்பட்டு, தனது சின்னக்குழந்தை சுமந்து வருவதை பார்க்கும் போது அவளது தந்தையின் இதயம் உடைந்துபோகும்.

சிநேகாவுக்கு 5 வயதான போது சூளைக்கு அருகிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் அவளது அப்பா சேர்த்துவிட்டார். இப்போது பள்ளிக்கு போக முடியும் என்பதால் சிநேகாவின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. படிப்பது, சாப்பிடுவது, பிற பிள்ளைகளோடு விளையாடுவது என அவளது குழந்தைப் பருவம் மீண்டும் வந்ததைப்போல அவளுக்கு இருந்தது. பள்ளியில் இருக்கின்ற சில மணி நேரங்களாவது அவளது வாழ்க்கையில் துயரம் நிறைந்த யதார்த்தத்தை அவளால் மறக்கவும் மற்றும் தனது கனவுகளை நிஜத்தில் வாழ்ந்து பார்க்கவும் அவளால் முடிந்தது. ஆனால், அவளது கனவு பள்ளியில் சேர்ந்த பிறகு ஒரு சில வாரங்களுக்கே நீடித்தது. அந்த முதலாளி பள்ளிக்குச் சென்று, படிப்பை நிறுத்திவிட்டு வேலை செய்வதற்காக அழைத்து வந்தார். குழந்தைகள் பெற்றோர்களோடு சேர்ந்து வேலை செய்தால் மட்டுமே அவர்களது பணிச்சுமை குறையும் மற்றும் அவர்களது உற்பத்தியும் அதிகரிக்கும் என்று சிநேகாவின் பெற்றோரிடம் முதலாளி கூறினார்.

சிநேகாவை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்குமாறு அவளது அப்பா முதலாளியிடம் கெஞ்சி பார்த்தார். முதலாளியின் பிள்ளைகள் ஒரு தனியார் பள்ளிக்கு பேருந்தில் சென்று வருகிறபோது இலவச கல்வியை வழங்குகிற அருகிலுள்ள அரசுப்பள்ளியில் படிக்க அனுமதிக்குமாறு தான் கேட்டுக்கொள்வதாக சொல்லிப் பார்த்தார். ஆனால், இருளர் சமுதாயப் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதால் எந்த பயனும் இல்லை என்று சொல்லி அந்த வேண்டுகோளை நிராகரித்து முதலாளி அவளது அப்பாவிடம் கடுமையாக சத்தம் போட்டார். இருளர் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ள முடியும் அல்லது வாழ்க்கையில் எதை சாதிக்க முடியும் என்ற கேள்வியை ஏளனமாக அந்த முதலாளி எழுப்பினார்?

களத்தில் தங்குவதும், அங்கேயே வேலை செய்வதும் சிநேகாவுக்கு சுத்தமாக  பிடிக்கவில்லை பள்ளியில் கழித்த இரண்டு வாரங்களை அவள் ஆசையோடு எண்ணிப் பார்த்தாள். பிற்பாடு வளர்ந்தபிறகு வாழ்க்கையில் தனக்கு ஆதரவளிக்கக் கூடிய கல்வி தனக்கு கிடைக்காத என்ற ஏக்கம் அவளை சூழ்ந்தது. வேலை செய்கிற நேரத்தில் எப்போதாவது அவள் விளையாடுவதை பார்த்து விட்டால் முதலாளி ஒரு குச்சியைக் கொண்டு அடித்து நொறுக்கி விடுவார். இதை தடுக்க அவளது பெற்றோர்கள் குறுக்கிட முன்வருவார்களென்றால் அவர்களைப் பார்த்து திட்டி கூச்சலிடுவார்.

இருப்பினும், 2015-ம் ஆண்டில் சிநேகாவின் கனவுகள் நிஜமாக மாறின. வேலூர் மாவட்ட அரசு நிர்வாகத்தால் அவள் செங்கற்சூளையிலிருந்து மீட்கப்பட்டார். இன்றைக்கு அவள் 6-வது வகுப்பில் படித்து வருகிறாள்.

'நான் இப்போது பள்ளிக்குப் போவதும், ஆங்கிலத்தில் பேச வாய்ப்பும், திறனும் கிடைத்திருப்பதுதான் எனது வாழ்க்கையில் மிகச் சிறப்பான பகுதியாகும். படித்து பிற்காலத்தில் ஒரு டாக்டராக வேண்டுமென்று நான் கனவு காண்கிறேன். இது வெறும் கனவாகவே முடிந்து விடாது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளுக்கு நல்ல சிகிச்சையளிப்பது மூலம் எனது சமூகத்தினருக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன். இப்போது எனது கிராமத்தில் ஏராளமான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் கஷ்டப்படுகின்றனர். நான் பெரியவளாக வளரவும் மற்றும் பல்வேறு வியாதிகளால் கஷ்டப்படுகிற பலருக்கு சிகிச்சையளிக்கவும் நான் விரும்புகிறேன்,’ என்று கூறுகிறாள் சிநேகா. 'நான் ஒருபோதும் செய்ய முடிந்திராத விஷயங்களை இப்போது என்னால் செய்ய முடிகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் விரும்பிய அளவுக்கு என்னால் ஓடவும், துரத்தி பிடிக்கவும், குதிக்கவும், ஸ்கிப்பிங் ஆடவும், விளையாடவும் என்னால் முடியும். இவைகளை செய்யவிடாமல் இனிமேலும் என்னை தடுப்பதற்கு யாருமில்லை’ என்று அவள் மேலும் கூறினாள்.

'உண்மையில் என்னால் இப்போது நன்றாக படிக்க முடிகிறது என்ற உண்மை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. அனைத்து தேர்வுகளிலும் எனது வகுப்பில் நான் இரண்டாவது ரேங்க்-ஐ பெறுகிறேன். கணிதமும், தமிழும் எனக்கு ரொம்ப பிடித்த பாடங்கள்,’ என்று உற்சாகம் பொங்க சிநேகா தெரிவித்தாள்.

குழந்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு உள்ளரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற ‘கிட்டத்தான்’ ஓட்டநிகழ்வில் சிநேகாவும் பங்கேற்றார். 'எனது கனவை நான் இப்போது நிஜத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்காக அடிக்கடி என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்,’ என்று அவள் மேலும் கூறினாள்.

தான் நன்றாக படித்தால் கொத்தடிமையில் வாழ்க்கை என்பது மறக்கப்பட வேண்டிய ஒரு கெட்ட கனவாக மட்டுமே இருக்கும் என்று இன்றைக்கு சிநேகா கூறுகிறாள். கனவு காணவும் மற்றும் நிஜத்தில் அதை சாதிக்கவும், அவளுக்கு இப்போது ஒரு அழகான, பெரிய, சிறப்பான, ஒளிமயமான தைரியமான மற்றும் அதிக ஆனந்தத்தை அள்ளித்தருகிற கனவு இருக்கிறது. அவளது கனவுகள் அனைத்தும் நிஜமாகட்டும், என்று நாங்கள் வாழ்த்துகிறோம்!!!

- கிறிஸ்டி ஸ்வாமிகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com