திறப்பு விழாக் காணாமலேயே கஜாவுக்கு இரையான ஆசியாவின் பெரிய தானியக் கிடங்கு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாக் காணாமலேயே ஆசியாவின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு கஜா புயலுக்கு இரையானது.
திறப்பு விழாக் காணாமலேயே கஜாவுக்கு இரையான ஆசியாவின் பெரிய தானியக் கிடங்கு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாக் காணாமலேயே ஆசியாவின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு கஜா புயலுக்கு இரையானது.

வேதாரண்யம் வட்டம், கோவில்பத்து கிராமத்தில் ரூ.144 கோடி மதிப்பீட்டில் இந்த கிடங்கு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 

கோவில்பத்து கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்காக 175 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டப் பணியாக 60 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்ட வளாகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 144 கோடியில் தானியக் கிடங்கு அமைக்கப்பட்டது.

இந்த வளாகத்தில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் சேமிக்கும் வசதியுடைய ஒரு சேமிப்புக் கிடங்கும், தலா 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் 15 சேமிப்புக் கிடங்குகளும் கட்டப்பட்டிருந்தன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்காக 4 மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்குத் தயாராக இருந்த நிலையில் கஜா புயலால் தானியக் கிடங்கின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றிருப்பது வேதனை தரும் காட்சியாக உள்ளது.

சேமிப்புக் கிடங்கு முழுவதும் சுற்றுச் சுவர்களில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் கூட காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, மேற்கூரை முழுவதும் பறந்து போன நிலையில் கஜா புயலால் சேமிப்புக் கிடங்கு எலும்புக் கூடாகக் காட்சியளிக்கிறது.

டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்புக் கிடங்காக இருக்க வேண்டியது, இன்று உருகுலைந்து நிற்கிறது.

பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே சேமிப்புக் கிடங்குகள் இருந்தபோதிலும், ஒரே இடத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளைச் சேமித்து வைக்கும் அளவிலான கிடங்கு வசதி வேறு எங்கும் இல்லாத நிலையில் தற்போது அமைய இருந்தது. விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று கருதியிருந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்தக் கிடங்கை பேரிடர் காலத்தில் மக்களின் பாதுகாப்பு மையமாகவும் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்று கருதி வந்த நிலையில், அந்த சேமிப்புக் கிடங்கே புயலுக்கு பலியாகியுள்ளது.

ஒருவேளை இந்த கிடங்கு திறப்புவிழாக் கண்டு, தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தால், தானியங்களும் சேர்ந்து கஜா புயலால் சேதமடைந்திருக்கக் கூடுமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com