காங்கிரஸ் காலாவதியானதைப் போல திராவிடக் கட்சிகள் காலாவதியாகி தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி நிகழுமா?

தமிழகத்தில் காங்கிரஸின் வீழ்ச்சி அன்று தொடங்கியது. காரணம் மக்களின் எதிர்பார்ப்பை காங்கிரஸ் புரிந்து கொள்ள மறுத்ததால் ஆட்சியில் இருந்தால் தானே உங்களது ஆட்டமெல்லாம் என மக்கள் தங்களது ஓட்டுகளால் வீழ்த்தி
காங்கிரஸ் காலாவதியானதைப் போல திராவிடக் கட்சிகள் காலாவதியாகி தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி நிகழுமா?

60-களில் காங்கிரஸுக்கு மாற்றாக திராவிடக் கட்சிகள் வந்தன. இன்று சீர்கெட்ட திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வரப்போவது யார்?

இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே சென்னை ராஜதானியை 1939 அக்டோபர் முதல் 1967 மார்ச் வரை தொடர்ந்து 28 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆண்டது. அதுவரை தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் வரலாற்றில் இல்லை. 1967-ல் அண்ணாதுரையின் வருகைக்குப் பிறகு சென்னை மாகாண அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது. பெரியாரின் சீடராக திராவிடக் கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த  அண்ணாதுரை அவருடன் கொண்ட கருத்து வேற்றுமை காரணமாக திராவிடக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்தார். ஸ்தாபித்த கையோடு முற்றிலும் இளைஞர்களைக் களம் இறக்கி கட்சி தொடங்கிய 17ஆம் ஆண்டில் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று சென்னை மாகாண முதல்வராகவும் ஆனார். முதல்வர் ஆன கையோடு உடனடியாக சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றமும் செய்தார். 

அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வெற்றிகளுக்கு வலிமையான அடித்தளமாக அமைந்தவை அவர் அறிவித்த பகுத்தறிவு, சமத்துவம், சமூக முன்னேற்றம், பெண்ணுரிமை, நாத்திகம், இட ஒதுக்கீடு, அதிகாரப் பகிர்வு, அனைவருக்கும் இலவசக் கல்வி, தொழில்துறை மேம்பாடு  உள்ளிட்ட கொள்கைகளே! இந்தக் கொள்கைகளை அடைவதற்காக அவர் முன்னெடுத்த போராட்டங்களும் அவற்றை நடத்திக் காட்டுவதில் அவரும் அவருக்குக் கீழ் திரண்டவர்களும் காட்டிய அக்கறையும், கடின உழைப்பும் தான் காங்கிரஸ் எனும் அசைக்க முடியாத ஆட்சி பீடத்தின் நாற்காலியை ஆட்டம் காண வைத்து ஒட்டுமொத்தமாக தமிழக அரசியலில் இருந்து அவர்களை துடைத்தெறிந்தாற் போல வெளியில் தள்ளியது.

தமிழகத்தில் அன்று விட்ட இடத்தை இன்று வரை காங்கிரஸாரால் பிடிக்கவே முடியவில்லை.

இத்தனைக்கும் நாடு விடுதலையான சமீபத்தில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த கட்சி என்ற பெருமிதம் காங்கிரஸுக்கு இருந்ததோ இல்லையோ அதன் மீது மக்களுக்கு இருந்தது. அதனால் தான் தொடர்ந்து 28 ஆண்டுகள் அவர்களையே ஆள அனுமதித்தார்கள் சென்னை மாகாண மக்கள். 28 ஆண்டுகளின் பின் அப்படியென்ன மாற்றம் நிகழ்ந்தது. மக்கள் எந்த விஷயத்தின் மீது வெறுப்பு கொண்டு காங்கிரஸைத் தோற்கடித்தார்கள்? இன்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் ஆசையில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஏன் ஒவ்வொரு பிரபலமும் கூட ரூம் போட்டு உட்கார்ந்து ஆராய வேண்டிய விஷயம் இது.

இன்று ஆளும் திராவிடக் கட்சிகளின் மீது அப்படியான எதிர்ப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கி தமிழக அரசியலில் அவர்களை இல்லாமலாக்க வலிமை வாய்ந்த எதிர்கட்சிகள் எவரேனும் இருக்கிறார்களா? 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரும் இருப்பதற்கான அறிகுறியே காணோம்.

அதனால் தான் விஜய் கூட முதல்வராக ஆசைப்படுகிறார்.

ஆசையில் தவறில்லை. ஆனால் அதை அடைவதற்காக அவர் என்ன செய்து விட்டார் இதுவரை?

துக்க வீட்டில் ஆறுதல் சொல்லப் போனவர்கள் அனைவருக்கும் அரசியலில் நிற்கும் தகுதி வந்துவிட்டது என்பீர்களெனில், விஜய்க்கும் அந்தத் தகுதி வந்திருக்கலாம். 

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை திரைப்பட ரிலீஸ் மற்றும் படையப்பா திரைப்பட ரிலீஸ் சமயங்களில் ரஜினி எனும் மகா நடிகர் தம்மை அரசியலுக்கு அழைத்த ரசிகசிகாமணிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்’, ‘என் வழி தனி வழி’, ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்றெல்லாம் திறன் மிகுந்த வசனகர்த்தாக்கள் எழுதிக் கொடுத்த சக்திவாய்ந்த பஞ்ச் வசனங்களைப் பேசித்திரிந்தார். அந்த பஞ்ச் வசனங்களைப் பேசியது வேண்டுமானால் ரஜினியாக இருக்கலாம், ஆனால், பேசியவரைக் காட்டிலும் அந்தக் காலகட்டத்தில் அதற்கான பலனை அறுவடை செய்தவர்களையன்றோ புத்திசாலிகள் எனலாம். அந்தப் புத்திசாலிகளாக அப்போது இருந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தார். பிறிதொரு சமயத்தில் ரஜினியின் வாய்ஸைப் பயன்படுத்திப் பலன் கண்டவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர். ஆக ரஜினி குரல் கொடுத்தது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்காகவே என்றாலும் அதை சாமர்த்தியமாகத் தங்களுக்கான ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டதை  திராவிடக் கட்சிகளின்  சாமர்த்தியம் என்றும் சொல்லலாம் அல்லது சூழ்ச்சி என்றும் சொல்லலாம்.

இவர்களின் சூழ்ச்சியையும் பிரிவினைவாதத் தூண்டலையும் மீறி வேற்றுக் கட்சிகளால் தமிழகத்தில் அரசியல் அமைத்திட முடியாத நிலையே இங்கு இன்று வரை நீடிக்கிறது.

நடுவில் திமுகவில் இருந்த வைகோ, தலைமை மீதான கருத்து வேறுபாட்டின் காரணமாக மதிமுக எனப் பிரிந்தார். வன்னியர் சங்கம் என்று இயங்கிக்கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி என வளர்ந்தார். ஆரம்ப காலகட்டங்களில் இந்த இரு கட்சிகளுக்கான வரவேற்பு தமிழகத்தில் அதிகமாகவே இருந்தது, ஆனால் இந்த இரு கட்சிகளும் தங்களுக்கான தனித்துவத்தை இழக்கத் துவங்கியது இவர்கள் தேர்தல்கள் தோறும் அமைக்க முற்பட்ட சந்தர்ப்பவாதக் கூட்டணி பேரம் காரணமாகத்தான். இவர்களோடு புதிய அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப்போவதாகக் கருதிக்கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், விஜயகாந்தின் தேமுதிக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம், கார்த்திக்கின் அரசியல் கட்சி (அதன் பெயர் மாற்றப்படவிருக்கிறதாம், இப்போதைக்கு பெயர் இல்லை)சீமானின் நாம் தமிழர், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இத்யாதி...இத்யாதி கட்சிகள் எல்லாம் முளைத்துக் கிளை விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு வங்கிகளை மனதில் கொண்டு இவர்களை தேர்தல் நேரத்தில் மட்டும் நாய்க்கு பிஸ்கட் போடுவதைப் போல ஓரிரு தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்து அவற்றுக்கான அரசியல் எதிர்காலத்தை கேலிக்கூத்தாக்கி வெறும் லெட்டர் பேட் கட்சிகளாக்கி வைத்திருக்கின்றன மேற்கண்ட திராவிடக் கட்சிகள். 

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தோன்றிய காலத்தில் அவை பின்பற்றிய கொள்கைகள் பெருவாரியான மக்களை படையெனத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்டக் கூடிய அளவுக்கு தெளிவானதாகவும், மக்களுக்கான சமூக நீதிகளைப் பெற்றுத்தரக்கூடியவையாகவும் இருந்தன. ஆனால் அதிகார ருசி கண்ட பிறகோ அவர்களின் கொள்கைகள் தேர்தல் லாபங்களை மட்டுமே மனதில் கொண்டு இன்று வெகுவாக நீர்த்துப் போய்விட்டன.

இன்றிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஒரே நோக்கம் மக்கள் நலப்பணிகள் அல்ல.

மக்களுக்கான நலப்பணிகளை தங்களுக்கும், தங்களது சுற்றத்தாருக்கும், குடும்பத்தினருக்கும் லாபகரமானதாக எப்படியெல்லாம் மாற்றி அமைத்து கொள்ளை லாபமடிக்கலாம் என்ற சிந்தனையில்தான் கருத்தூன்றியிருக்கிறது. அதைப்பற்றி மட்டுமே தற்போது இரு கட்சிகளும் அவற்றின் கிளைக்கட்சிகளும் சதா சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகார ருசியை ஆண்டு அனுபவித்து வரும் அவர்களுக்கு சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கக் கூடும் என்று இப்போது கணிக்க இயலாமலாகி விட்டது.

கலைஞர் மீது சுமத்தப்படாத ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது. ஆனாலும், அவரால் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலின் அசைக்க முடியாத அரசியல் மையமாக இருக்க முடிந்ததென்றால் அதற்கான ஒரே காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடுமென முதல்வர் நாற்காலியின் மீது தங்கள் பார்வையை நிலைகுத்தச் செய்திருக்கும் ஒவ்வொருவரும் ஆராய வேண்டும். திராவிடக் கட்சிகளைப் பொருத்தவரை கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் அமைந்த தொண்டர்களைப் போன்ற எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத மாபெரும் தொண்டர்படை இனியொரு அரசியல் தலைமைக்கு அமைவது கடினம். ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆரின் ஓட்டு வங்கி அப்படியே இருந்ததால் அவரது சர்வாதிகாரத் தன்மையையும் ரசனைக்குரியதாகக் கருதி ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தார்கள் தமிழக மக்கள். ஜெயலலிதா கடந்து வந்த அரசியல் அவமானங்களை தமிழக மக்கள் குறிப்பாகப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதினார்கள். என்ன தான் சினிமா மாயக்கவர்ச்சி இருந்த போதும், ஜெ.யின் மீதான தமிழக மக்களின் பாசத்திற்கு காரணம் எம்ஜிஆரின் அரசியல் வாரிசு எனக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் தான். 

இவர்கள் இன்று வரையிலும் தமிழகத்துக்கு ஆற்றிய நற்பணிகள் என்ன என்று அரசியல் ஆர்வம் கொண்ட அரசியல்வாதியாகும் முனைப்பு கொண்ட ஒவ்வொரு மனிதனும் யோசிக்க வேண்டும்.

இவர்கள் ஆற்றிய நன்மைகளைக் காட்டிலும் சில வேளைகளில் தீமைகளே கூட அதிகமிருக்கலாம். அந்தத் தீமைகள் என்ன என்பதையும் அரசியல் ஆர்வம் கொண்டோர் சிந்தித்து அறிந்து தெளிய வேண்டும்.

ஒரு தேர்ந்த அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும்? என்பதோடு எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கும் தெளிவான உதாரணங்கள் இவர்களே!

யோசித்துப் பாருங்கள்...

இன்றுவரையிலும் நாம் அரசியல் நுண்மான் நுழைபுலத்திற்கும், ராஜதந்திரத்துக்கும் அடையாளமாக ஒரே ஒரு ராஜாஜியின் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

முதலமைச்சரின் எளிமைக்கு அடையாளமாக ஏழைப்பங்காளராக கர்மவீரர் காமராஜரையே நினைவுகூர்கிறோம்.

பகுத்தறிவுக்கும், மூட நம்பிக்கைகளைச் சாடுவதற்கும், பெண் விடுதலைக்கும் அடையாளமாக ஒரே ஒரு பெரியாரின் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்ப்பற்றுக்கு, தமிழ்க்காதலுக்கு அண்ணா மற்றும் கலைஞர் பெயர்களைச் சொல்கிறோம்.

தைரியமான, எதேச்சாதிகார முடிவுகளுக்காக ஜெயலலிதாவை நினைவுகூர்கிறோம். இவர்களைத்தாண்டி வேறு யார் வந்து தமிழக மக்கள் மனதில் இனி மாற்றத்தை விதைக்கப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

பழுத்த அரசியல் ஞானம் கொண்ட, ஏழைப் பங்காளரான, ஊழல் கரை படியாத கர்மவீரர் காமராஜரை அவருடைய சொந்தத் தொகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் தோற்கடித்தார் என்கிறது தமிழக அரசியல் வரலாறு. தமிழகத்தில் காங்கிரஸின் வீழ்ச்சி அன்று தொடங்கியது. காரணம் மக்களின் எதிர்பார்ப்பை காங்கிரஸ் புரிந்து கொள்ள மறுத்ததால் ஆட்சியில் இருந்தால் தானே உங்களது ஆட்டமெல்லாம் என மக்கள் தங்களது ஓட்டுகளால் வீழ்த்தினர்.  அன்று காங்கிரஸ் பின்பற்றிய அதே கொள்கைகளைத்தான்தான் தற்போது தமிழகத்திலுள்ள பிரதான மற்றும் சிறு, குறு அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றன. மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டதற்கான பலனை தமிழகத்தில் காங்கிரஸ் இன்று வரை அனுபவித்து வருகிறது. இதே நிலை திராவிடக் கட்சிகளுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை. ஆனால், அந்த மாற்றத்தை உண்டாக்கும் மறுமலர்ச்சிக்கு வித்திடப் போவது யார்?

அதற்காகத்தான் காத்திருக்கிறான் தமிழன்... ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு எனும் கதையாக கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கிறான் தங்கத் தமிழன்.

பட்டியலில் பாஜகவை விட்டுவிட்டீர்களே என்ற சந்தேகம் எவருக்கேனும் இருப்பின், அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம், தமிழகத்தில் பாஜக ஆட்சி பீடத்தில் இதுவரை ஏற்றப்படவில்லை. பாஜகவை சார்ந்த முதலமைச்சர்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனியாவது தமிழகத்தில் தாமரை மலரும் என்ற கனவை விதைக்க நினைப்பவர்களும் கூட அந்தக் கனவை நனவாக்க முயலாமல் யாரோ கல்லூரி மாணவியுடன் விமானப் பயணத்தில் குழாயடிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தான் அரசியல் முதிர்ச்சியா?! 

தமிழன் எதிர்பார்ப்பது மீண்டுமொரு ராஜாஜியையோ, பெரியாரையோ, காமராஜரையோ, அண்ணாவையோ, கலைஞரையோ, எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ அல்ல. அவர்களை ஒத்த தீரம் கொண்ட, மாநில சுய உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுத் தர விரும்பாத துணிச்சல் மிக்க தலைவனை.

வருவானா/ வருவாளா அப்படி ஒரு தலைவன் அல்லது தலைவி?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com